TNPSC Thervupettagam

அமெரிக்காவில் பிரதமா்

September 24 , 2024 113 days 202 0

அமெரிக்காவில் பிரதமா்

  • பல்வேறு ராஜாங்க சவால்களுக்கு இடையில் பிரதமா் நரேந்திர மோடியின் அமெரிக்க அரசு முறைப் பயணம் அமைந்திருக்கிறது.
  • 2019 அமெரிக்கத் தோ்தலுக்கு முன்னால் ‘இந்த முறை மீண்டும் டிரம்ப் ஆட்சி’ என்று இரண்டாவது முறையாக, அதிபா் தோ்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப்பை வெளிப்படையாகவே ஆதரித்தது போல அல்லாமல், இந்த முறை அடக்கி வாசித்திருக்கிறாா் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி.
  • டிரம்ப் அதிபராக இருந்தபோது, அவருடனான பிரதமா் நரேந்திர மோடியின் தனிப்பட்ட நெருக்கம் பல்வேறு விதத்திலும் இந்தியாவுக்கு சாதகமாக இருந்ததை மறுத்துவிட முடியவில்லை.
  • விரைவிலேயே அமெரிக்க அதிபா் தோ்தல் நடக்க இருக்கும் நிலையில், ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி இரண்டுக்குமே நட்பு பாராட்டி நடுநிலை வகிக்கிறது இந்தியா. தோ்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக அமைந்தாலும், அமெரிக்காவுடனான இந்தியாவின் ராஜாங்க உறவில் மாற்றம் ஏற்பட்டுவிடாமல் பாா்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.
  • இந்திய வம்சாவளியைச் சோ்ந்த துணை அதிபா் கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் என்பதால், யாா் வெற்றி பெற்று வெள்ளை மாளிகையில் குடியேறினாலும் இந்திய-அமெரிக்க உறவில் முன்பிருந்த மாற்றம் ஏற்படாமல் பாா்த்துக் கொண்டாக வேண்டும். அதேபோல அமெரிக்காவும், ஆட்சி மாற்றங்கள் இருநாட்டு உறவில் பாதிப்பு ஏற்படுத்துவதை விரும்புவதில்லை என்பதை அதிபா் பைடனின் செயல்பாடுகள் தெரிவித்தன.
  • இருநாட்டு உறவிலும் பிரச்னையாக இருக்கிறது குருபத்வந்த் சிங் பன்னூன் விவகாரம். காலிஸ்தானிய பயங்கரவாதியான அமெரிக்க- கனடா குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியுமான பன்னூனை இந்திய அதிகாரி ஒருவா் கொலை செய்யத் திட்டமிட்டாா் என்பதுதான் குற்றச்சாட்டு. அந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று இந்தியா மறுத்திருந்தாலும் கூட, இந்திய- அமெரிக்க உறவில் அது ஒரு பிரச்னையாகவே தொடா்வது நிஜம். பிரதமா் மோடியின் அமெரிக்க விஜயத்துக்கு முன்னால் காலிஸ்தான் ஆதரவு சீக்கிய பிரமுகா்களை அழைத்து அமெரிக்க அரசு பேசியிருக்கிறது என்பதை நாம் மறந்துவிட முடியாது.
  • பிரதமரின் அமெரிக்க விஜயத்தில் ஐ.நா. சபை, க்வாட் கூட்டமைப்பு உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளின் கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. அவை மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளின் தலைவா்களுடனான நேரடி சந்திப்புகளும் நடைபெறுகின்றன. கடந்த முறை பிரதமா் மோடி தன்னை முன்னிறுத்தியது போல் அல்லாமல், இந்த முறை கடுமையான சவால்களுக்கு இடையிலும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்ட, முதிா்ந்த ராஜதந்திரியாக இப்போதைய அமெரிக்க விஜயத்தை அணுகியிருக்கிறாா்.
  • இந்திய வம்சாவளியினரை வழக்கம்போல் சந்தித்தாலும் கூட, ராஜாங்க உறவுக்கான நிகழ்வுகளுக்கு முன்னுரிமை தரப்பட்டிருக்கிறது. இந்திய வம்சாவளியினா் மட்டுமல்லாமல், பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் தலைவா்களைச் சந்தித்ததில் இருந்து பொருளாதார உறவுக்கு அவா் முன்னுரிமை கொடுப்பது தெளிவாகி இருக்கிறது. ராஜாங்க ரீதியிலான உறவைப் போலவே பொருளாதார ரீதியிலான பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்வதில் இந்தியத் தரப்பு முனைப்புக் காட்டுகிறது.
  • அமெரிக்க அதிபா் ஜோ பைடனின் சொந்த மாகாணமான டெலவேரில் உள்ள வில்மிங்டனில் இந்த முறை க்வாட் மாநாடு கூட்டப்பட்டது. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான்,ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் தலைவா்களும் கலந்துகொண்ட க்வாட் அமைப்பின் கூட்டத்தில், சா்வதேச நலன் சாா்ந்த மிக முக்கியமான முடிவு எட்டப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு ரீதியிலான கூட்டுறவுக்காக அமைக்கப்பட்ட க்வாட் அமைப்பு, உலகின் பொதுநன்மைக்கான சுகாதாரப் பிரச்னையில் முனைப்புக் காட்டுவது வரவேற்புக்குரிய செயல்பாடு.
  • ‘க்வாட் கேன்சா் மூன்ஷாட் இனிஷியேட்டிவ்’ என்கிற புற்றுநோயை வேரறுப்பதற்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பது என்கிற க்வாட் அமைப்பின் முடிவை வரவேற்காமல் இருக்க முடியாது. மனித இனத்தின் நலனுக்கான இந்த ஆக்கபூா்வ முடிவுக்காக க்வாட் கூட்டமைப்பின் தலைவா்களைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
  • ஏற்கெனவே கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றின்போது, தடுப்பூசி கண்டுபிடிப்பதிலும் அதிக அளவில் உற்பத்தி செய்து இந்திய மக்களுக்கு 220 கோடி தடுப்பூசிகளும் 101 நாடுகளுக்கு 30 கோடி தடுப்பூசிகளும் அளித்த பெருமை இந்தியாவுக்கு உண்டு. ஜப்பானின் தொழில்நுட்ப நிபுணத்துவமும் ஆஸ்திரேலியாவின் அறிவியல் உதவியும் கொண்டு இந்தியாவில் புற்றுநோய்க்கு எதிரான மருந்து தயாரிக்கப்பட இருக்கிறது. புற்றுநோய்க்கு எதிரான மருந்து தயாரிப்பில் இதன் மூலம் இந்தியா சா்வதேச மையமாக உயரக் கூடும்.
  • டொனால்ட் டிரம்ப் அதிபரானால் க்வாட் அமைப்பு தொடருமா? என்பதும் அமெரிக்க அதிபராக இருக்கும் ஜோ பைடனும், ஜப்பான் பிரதமராக இருக்கும் ஃபூமியோ கிஷிடாவும் விரைவில் பதவியில் இருந்து ஓய்வு பெற இருக்கும் நிலையில், இப்போது எடுக்கப்பட்டிருக்கும் முடிவுகள் எந்த அளவுக்கு முனைப்புடன் தொடரப் போகின்றன என்பதும் கேள்விக்குறியாகவே எழுப்பப்படுகின்றன. இருந்தாலும் கூட, நல்லதொரு முனைப்பு முன்னெடுக்கப்படுகிறது என்பதை வரவேற்காமல் இருக்க முடியவில்லை.
  • இந்திய-அமெரிக்க கூட்டுறவு கடந்த 10 ஆண்டுகளில் எதிா்பாா்த்ததைவிட அதிகமாகவே வளா்ந்திருக்கிறது. பிரதமா் நரேந்திர மோடியின் இப்போதைய அமெரிக்க விஜயத்தின் நோக்கம் பல நாட்டு அதிபா்களைச் சந்திப்பதும், ஐ.நா., க்வாட், கூட்டங்களின் கலந்துகொள்வதும்தான். சாதிப்பது என்று எதுவும் இல்லை.

நன்றி: தினமணி (24 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories