- வளைகுடா நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பதற்றமான சூழல் உலகையே அச்சுறுத்துகிறது. சவூதி அரேபியாவில் இரண்டு முக்கியமான எண்ணெய்க் கிணறுகளின் மீது கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்டிருக்கும் ஆளில்லா விமானத் தாக்குதலால், அந்த நாட்டின் தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தி சரிபாதியாகக் குறைந்திருக்கிறது.
- சனிக்கிழமை நடந்த தாக்குதலால், சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 5% அளவிலான துண்டு விழுந்திருக்கிறது.
- கச்சா எண்ணெயின் விலை 20% அதிகரித்து, பேரல் ஒன்றுக்கு 71 டாலர் வரை அதிகரித்திருக்கிறது. 1990-இல் குவைத்தின் மீது சதாம் உசேன் படையெடுத்தபோது ஏற்பட்ட திடீர் விலையேற்றத்துக்கு அடுத்தபடியாக, இப்போதுதான் ஒரே நாளில் கச்சா எண்ணெயின் விலை இந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது.
இந்தியாவின் நிலை
- கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பும், ஏற்றுமதியில் தடையும் ஏற்படும்போது அதனால் மிக அதிகமாகப் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நமது மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 80% அளவுக்கு நாம் இறக்குமதியை நம்பித்தான் இருக்கிறோம். அதனால்தான், கடும் எதிர்ப்புக்கும் போராட்டத்துக்கும் இடையிலும் நெடுவாசல் போன்ற பகுதிகளில் எண்ணெய் வளம் எடுக்கும் முயற்சியில் மத்திய அரசு பிடிவாதம் காட்டுகிறது.
- கடந்த நிதியாண்டில் நமது மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 19% சவூதி அரேபியாவிலிருந்துதான் நாம் பெற்றோம். ஏற்கெனவே ஒப்பந்தம் இருப்பதால், சவூதி அரேபியாவிலிருந்து பெறும் கச்சா எண்ணெய் அளவில் உடனடியாகக் குறைவு ஏற்பட வழியில்லை.
- சவூதி அரேபியக் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால் அதை எதிர்கொள்ளும் நிலையில் நமது பொருளாதாரம் இப்போது இல்லை என்பதுதான் கவலையளிக்கிறது.
- கடந்த ஐந்து ஆண்டுகளாக, எத்தனையோ பொருளாதாரப் பிரச்னைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் இடையிலும்கூட, உணவுப் பொருள்களின் விலையில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்படாமல் இருந்திருப்பது நரேந்திர மோடி அரசின் சாதனை என்றுதான் கூற வேண்டும்.
- விலைவாசி உயர்வை மோடி அரசு கட்டுக்குள் வைத்திருப்பதன் ரகசியம், கச்சா எண்ணெய் விலை குறைந்து காணப்பட்டதும், பெரிய அளவில் அதிகரிக்காமல் இருந்ததாலும்தான்.
சவால்கள்
- மேற்கு ஆசியாவில் பிரச்னைகள் அதிகரித்து, கச்சா எண்ணெயின் விலை அதிகரித்தால், இந்தியப் பொருளாதாரம் நிலைதடுமாறத் தொடங்கும்.
- கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு ஒரு டாலர் அதிகரித்தால், நமது வருடாந்திர இறக்குமதிச் செலவு ரூ.10,700 கோடி அதிகரிக்கும். கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியின் அளவு 11,190 கோடி டாலர் (சுமார் ரூ.8 லட்சம் கோடி). இப்போது கச்சா எண்ணெயின் விலை 50 டாலர் முதல் 60 டாலர் என்கிற வரைமுறைக்குள் இருக்கிறது. இதுவே, மேற்கு ஆசியப் பிரச்னை கடுமையானால் 100 டாலர் வரை உயரக்கூடும்.
- அந்த அளவில் இல்லாவிட்டாலும், 60 டாலருக்கும் அதிகமானாலேகூட, நமது பொருளாதாரம் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். ஏற்கெனவே மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளதுடன், உற்பத்தியிலும் சுணக்கம் காணப்படுகிறது.
- வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருவதுடன், வேலையிழப்பும் காணப்படுகிறது.
பொருளாதார மந்த நிலை
- பொருளாதார மந்த நிலையை அகற்ற நிதியமைச்சர் பல்வேறு சலுகைகளை அறிவித்து, உற்பத்தியை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், கச்சா எண்ணெய் தட்டுப்பாடோ, விலை ஏற்றமோ ஏற்பட்டால், அவரது நடவடிக்கைகள் அனைத்துமே பயனளிக்காமல் போகும் ஆபத்து காத்திருக்கிறது.
- மேற்கு ஆசியாவில் காணப்படும் இந்தப் பதற்றத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்தான் மூல காரணம். அவரது ஈரான் கொள்கையில் காணப்படும் நிலையற்ற தன்மையின் விளைவைத்தான் உலகம் எதிர்கொள்கிறது. இஸ்ரேலுடனும், சவூதி அரேபியாவுடனுமான அமெரிக்க நெருக்கமும் நட்பும், அந்த இரண்டு நாடுகளின் பொறுப்பற்ற நடவடிக்கைகளுக்கு வழிகோலியிருக்கின்றன.
- மேற்கு ஆசியாவில் காணப்படும் பதற்றத்துக்கு சவூதி அரேபிய இளவரசர் முகமது பின் சுல்தானின் நடவடிக்கைகள் முக்கியமான காரணங்கள். கத்தார் மீது தடை விதித்தது, லெபனான் பிரதமரைக் கடத்தியது, யேமன் நாட்டின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியது என்று சவூதி இளவரசரின் பல நடவடிக்கைகளுக்கும் அமெரிக்காவின் ஆதரவு பின்னணியாக இருந்து வருகிறது.
- ஈரானின் துணையுடன் போராடிவரும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது சவூதி அரேபியா நடத்திய விமானத் தாக்குதல்களால், யேமன் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது ஊடக வெளிச்சம் பெறவில்லை.
- சவூதி அரேபிய எண்ணெய்க் கிணறுகளின் மீது தாக்குதல் நடத்தியது நாங்கள்தான் என்று ஹூதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்திருக்கிறார்கள். அவர்கள் நேரடியாகத் தாக்குதல் நடத்தினார்களா இல்லை, ஈரானின் துணையோடு நடத்தினார்களா என்பது தெரியவில்லை.
- மேற்கு ஆசியாவில் பதற்றமான சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரமே பாதிக்கப்பட்டிருக்கிறது.
- ஈரானைப் பொருத்தவரை நிலையான கொள்கை எதையும் அமெரிக்கா பின்பற்றுவதாகத் தெரியவில்லை. இராக்கின் மீது தாக்குதல் நடத்தியதுபோல அமெரிக்காவால் ஈரானை அடக்கியாள முடியாது.
- அமெரிக்காவின் ராணுவத் தளங்களும், வளைகுடா நாடுகளும் ஈரானின் அணு ஆயுதத் தாக்குதல் வரம்பில் இருக்கின்றன என்பதை மறந்துவிடக் கூடாது.
- மேற்கு ஆசியப் பனிப்போருக்கு முற்றுப்புள்ளி விழுந்தாக வேண்டும். இந்தியாவுக்கு மட்டுமல்ல, அமெரிக்காவுக்குமே அது அவசியம்!
நன்றி : தினமணி (20-09-2019)