TNPSC Thervupettagam

அமெரிக்க அதிபர்கள்: படுகொலைகளும், கொலைமுயற்சிகளும்!

July 14 , 2024 2 days 13 0
  • அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது நேற்று (ஜூலை 13) நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் அவர் காதில் குண்டு பட்டு காயமடைந்துள்ளார். துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படும் நபரை அமெரிக்க சிறப்புப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
  • நவம்பரில் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள டிரம்ப், பென்சில்வேனியாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் மர்ம நபர் ஒருவரால் இந்தத் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது.
  • அமெரிக்கா ஒரு தேசமாக உருவானதிலிருந்து இதுவரை அமெரிக்க அதிபர்கள் மற்றும் அதிபர் வேட்பாளர்கள் மீது நிகழத்தப்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்த ஒரு அலசல்:

படுகொலை செய்யப்பட்ட அதிபர்கள்:

ஆபிரகாம் லிங்கன் (16-வது அதிபர்)

  • ஆபிரகாம் லிங்கன், அமெரிக்க அதிபர்கள் வரலாற்றில் படுகொலை செய்யப்பட்ட முதல் அதிபராவார். ஏப்ரல் 14, 1865 அன்று லிங்கன் தனது மனைவி மேரி டோட் லிங்கனுடன் வாஷிங்டனிலுள்ள ஃபோர்ட் திரையரங்கில் சிறப்பு நகைச்சுவை நாடகம் ஒன்றினைக் காணச் சென்றபோது ஜான் வில்கிஸ் பூத் எனும் மேடை நாடக நடிகரால் தலையில் சுடப்பட்டு இறந்தார்.
  • சுடப்பட்டதும் அரங்கின் அருகேயுள்ள வீட்டில் மருத்துவ உதவிகளுக்காக அழைத்துச் செல்லப்பட்ட லிங்கன் மறுநாள் காலை உயிரிழந்தார்.
  • கொல்லப்படுவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு அடிமைத்தனத்திற்கு எதிரான உள்நாட்டுப் போரில் அடிமைகளுக்கு சுதந்திரம் வழங்கி விடுதலைப் பிரகடனத்தை வெளியிட்டார் லிங்கன். அவர் கருப்பின மக்களின் உரிமைகளுக்கு ஆதாரவாக இருந்தது கொலைக்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டது.
  • லிங்கனைக் கொலை செய்த பூத் ஏப்ரல் 26, 1865 அன்று விர்ஜீனியாவில் தலைமறைவாக இருந்தபோது பிடிபட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.
  • லிங்கனுக்குப் பிறகு துணை அதிபர் ஆண்ட்ரூ ஜான்சன் அதிபராகப் பதவியேற்றார்.

ஜேம்ஸ் கார்ஃபீல்டு (20-வது அதிபர்)

  • ஜேம்ஸ் கார்ஃபீல்டு அதிபராகப் பதவியேற்ற ஆறு மாதங்களில் படுகொலை செய்யப்பட்டார்.
  • ஜூலை 2, 1881 அன்று வாஷிங்டனிலிருந்து நியூ இங்கிலாந்து செல்லும் தொடர்வண்டியைப் பிடிக்கச் செல்கையில் சார்லஸ் கைட்டோ என்பவரால் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
  • தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம்பெல் அமெரிக்க அதிபருக்கென பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட சாதனத்தைக் கொண்டு அவரது மார்பில் துளைத்த குண்டினை அகற்ற முயன்று தோற்றார்.
  • படுகாயமடைந்து வெள்ளை மாளிகையில் பல வாரங்கள் படுக்கையில் கிடந்த அதிபர் கார்ஃபீல்டு, செப்டம்பரில் நியூ ஜெர்சி கடற்கரைக்கு அழைத்துச் சென்றபோது மரணமடைந்தார்.
  • கார்ஃபீல்டுக்குப் பிறகு துணை அதிபர் செஸ்தர் ஆர்தர் அதிபராகப் பதவியேற்றார்.
  • குற்றவாளி சார்லஸ் கைட்டோ குற்றம் நிரூபிக்கப்பட்டு ஜூன் மாதம் 1882-ல் தூக்கிலிடப்பட்டார்.
  • துப்பாக்கிச் சூட்டில் டொனால்ட் டிரம்ப் காயம்!

வில்லியம் மெக்கின்லி (25-வது அதிபர்)

  • வில்லியம் மெக்கின்லி செப்டம்பர் 6, 1901 அன்று நியூயார்க்கில் உரையாற்றிய பிறகு மக்களுடன் கைகுலுக்கிக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த நபரால் இருமுறை மார்பில் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
  • மருத்துவர்கள் மெக்கின்லியைக் காப்பாற்றப் போராடியபோதும் ரத்த ஓட்டம் குறைந்ததால் செப்டம்பர் 6, 1901 அன்று பலியானார். இரண்டாவது முறை அதிபராகப் பதவியேற்று 6 மாதங்கள் ஆகியிருந்த நிலையில் மெக்கின்லி இறந்து போனார்.
  • அவருக்குப் பின் துணை அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட் அதிபராகப் பதவியேற்றார்.
  • குற்றவாளி லியோன்.எஃப்.சோல்கோஸ் குற்றத்தை ஒப்புக்கொண்ட பின் அக்டோபர் 29, 1901 அன்று மின்சார நாற்காலியில் அமரவைத்துக் கொல்லப்பட்டார்.

ஜான்.எஃப்.கென்னடி (35-வது அதிபர்)

  • அமெரிக்க அதிபர் கென்னடி தனது மனைவி ஜாக்குலின் கென்னடியுடன் 22 நவம்பர் 1963 அன்று டல்லாஸ் பகுதியில் நடந்த வாகன அணிவகுப்பில் கலந்துகொண்டபோது அங்கு மறைந்திருந்த மர்மநபர் உயர்ரக துப்பாக்கியால் சுட்டதில் கென்னடி பலியானார்.
  • துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சிறிது நேரத்தில் லீ ஹார்வே ஆஸ்வால்ட் என்ற குற்றவாளியை அருகிலிருந்த கட்டடத்தில் வைத்து போலீஸார் கைது செய்தனர். இரு நாள்களுக்குப் பிறகு, குற்றவாளியை ஜெயிலில் அடைக்கக் கூட்டிச் சென்றபோது டல்லாஸ் பகுதியின் இரவுவிடுதி உரிமையாளர் ஜாக் ரூபி குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
  • துணை அதிபர் லிண்டன்.பி.ஜான்சன் என்பவர் கென்னடிக்கு பின் அதிபராகப் பதவியேற்றார். விமானத்தில் பதவிப் பிரமாணம் செய்த ஒரே அதிபர் இவரே.

ராபர்ட்.எஃப்.கென்னடி (அதிபர் வேட்பாளர்)

  • கென்னடி அமெரிக்காவின் நியூயார்க் மேலவை உறுப்பினராக பணியாற்றியவர். இவர், சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் அதிபர் ஜான்.எஃப்.கென்னடியின் சகோதரராவார்
  • அமெரிக்கக் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக இருந்த கென்னடி 1968-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சலிஸில் உள்ள ஹோட்டலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • ஐந்து நபர்கள் அந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தனர்.
  • 1967-ல் நடந்த போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக கென்னடி குரல் கொடுத்ததற்காக 24 வயதான சிர்ஹான் என்கிற பாலஸ்தீனரால் சுட்டுக் கொல்லப்பட்டார். சிர்ஹானுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. கடந்தாண்டு, விடுதலை செய்வதற்கான மனு நிராகரிக்கப்பட்டு சிர்ஹான் சிறையில் உள்ளார்.

படுகொலை முயற்சியில் தப்பித்த அதிபர்கள்:

ஃபிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் (32-வது அதிபர்)

  • அமெரிக்காவில் இருமுறைக்கு மேல் அதிபராக இருந்த இவர், நீண்ட காலம் பதவி வகித்த ஒரே அதிபராவார்.
  • மியாமி நகரில் 1944-ல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வில் பேசுகையில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. ஆனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
  • அதற்கு முன்னர் 1933-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் சிகாகோ மேயர் ஆண்டன் செர்மாக் கொல்லப்பட, ரூஸ்வெல்ட் காயங்களின்றி தப்பித்தார்.
  • இதில், குற்றவாளி குசிப்பே ஸங்காரா தூக்கிலிடப்பட்டார்.

ஹாரி.எஸ்.ட்ரூமேன் (33-வது அதிபர்)

  • 1950-ம் ஆண்டு நவம்பரில் ட்ரூமேன் வெள்ளை மாளிகையின் எதிரே உள்ள பிளேர் ஹவுசில் தங்கியிருந்த போது இரண்டு நபர்கள் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்தனர்.
  • அவர்களுக்கும் வெள்ளை மாளிகை போலீஸாருக்கும் நடைபெற்றத் துப்பாக்கிச் சூட்டில் போலீஸ்காரர் ஒருவரும், தாக்குதலில் ஈடுபட்ட நபர்களில் ஒருவரும் கொல்லப்பட்டனர். மேலும், இரு போலீஸார் படுகாயமடைந்தனர். அதிபர் ட்ரூமேன் காயங்களின்றி உயிர்தப்பினார்.
  • ஆஸ்கர் காலஸோ என்கிற மற்றொரு குற்றவாளி கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1952-ல் ட்ரூமேன் அந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தார். பின்னர், 1979-ல் ஜிம்மி கார்டர் அதிபரானபோது குற்றவாளியை விடுதலை செய்தார்.
  • டிரம்பை சுட்டது 20 வயது இளைஞரா? - என்ன நடந்தது!

ஜெரால்ட் ஃபோர்ட் (38-வது அதிபர்)

  • ஜெரால்ட் ஃபோர்ட் மீது 1975-ம் ஆண்டில் ஒரே மாதத்திற்குள் இருமுறை கொலைமுயற்சி நடந்து, இரு முறையும் காயங்களின்றி தப்பித்தார்.
  • முதல் முயற்சியில், கலிஃபோர்னியா ஆளுநரைச் சந்திக்கச் சென்றபோது சார்லஸ் மேன்சனின் விசுவாசி ஒருவர் கூட்டத்திலிருந்து துப்பாக்கியால் ஃபோர்டைச் சுடுவதற்கு முற்பட துப்பாக்கி வேலை செய்யாததால் பாதிப்பு ஏற்படவில்லை.
  • சுட முயன்ற ஃப்ரோம்மி என்ற நபர் சிறைவாசத்திற்குப் பின் விடுவிக்கப்பட்டார்.
  • அந்தச் சம்பவம் நடந்து 17 நாள்களுக்குப் பின், சாரா ஜேன் மூர் என்றா பெண் சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள ஹோட்டலின் வாசலில் அதிபர் ஃபோர்டை மறித்துத் துப்பாக்கியால் சுட முயன்றபோது தப்பித்துவிட்டார். பாதுகாவலர்கள் அந்தப் பெண்னை சுற்றிப் பிடிக்கையில் இரண்டாவது குண்டு சுடப்பட்டு அதுவும் அதிபரின் மேல் தாக்கவில்லை.
  • துப்பாக்கியால் சுட்ட பெண்மணி சிறையில் அடைக்கப்பட்டு 2007-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.

ரொனால்ட் ரீகன் (40-வது அதிபர்)

  • ரொனால்ட் ரீகன் மார்ச் 30, 1981 அன்று வாஷிங்டனில் மக்கள் கூட்டத்தில் பேசிமுடித்து தனது வாகனம் நோக்கி நடந்து செல்கையில் கூட்டத்திலிருந்த ஜான் ஹின்க்ளி என்ற நபரால் சுடப்பட்டார். அவருடன் சேர்த்து அவரது செயலாளர் ஜேம்ஸ் பிராடி உள்பட மூன்று பேர் சுடப்பட்டனர்.
  • அந்தத் தாக்குதலில் இருந்து ரீகன் மீண்டுவந்தார்.
  • துப்பாக்கியால் சுட்ட நபரான ஹின்க்ளி கைது செய்யப்பட்டு மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் மனநல மருத்துவமனையில் அடைக்குமாறு உத்தரவிடப்பட்டது. பின்னர், 2022-ம் ஆண்டு அவருக்கு மற்றவர்களால் ஆபத்து நேராது என்று முடிவு செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

ஜார்ஜ் புஷ் (43-வது அதிபர்)

  • ஜார்ஜ் புஷ் கடந்த 2005-ம் ஆண்டு ஜார்ஜியாவில் அந்த நாட்டு அதிபர் மிகைல் சாகஷ்விலியுடன் பேரணியில் கலந்துகொண்டபோது அவரை நோக்கி கையெறி குண்டு வீசப்பட்டது.
  • அதிபர்கள் இருவரும் குண்டு துளைக்காதத் தடுப்புக்குப் பின் இருந்தனர். அந்த குண்டு 100 அடி தூரத்தில் வீசப்பட்டு வெடிக்காமல் போனதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
  • குற்றவாளி விளாதிமர் அருத்யுனியன் என்பவர் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

தியோடர் ரூஸ்வெல்ட் (அதிபர் வேட்பாளர்)

  • முன்னாள் அமெரிக்க அதிபரான ரூஸ்வெல்ட் 1912-ம் ஆண்டு பிரசாரம் முடிந்து வெள்ளை மாளிகைக்குத் திரும்பும்போது சுடப்பட்டார்.
  • இருமுறை அதிபராக இருந்த ரூஸ்வெல்ட் மூன்றாவது முறையாக மூன்றாம் தரப்பு வேட்பாளராகப் போட்டியிட்டார்.
  • ரூஸ்வெல்ட்டின்ன் பாக்கெட்டில் இருந்த மடிக்கப்பட்ட காகிதங்களும், கண்ணாடிப் பெட்டியும் இருந்ததால் அவருக்கு கடுமையாகக் காயங்கள் ஏற்படவில்லை.
  • இந்தச் சம்பவத்தில் ஜான் ஷ்ராங் என்பவர் கைது செய்யப்பட்டு மனநலக் காப்பகத்தில் தன் வாழ்நாளைக் கழித்தார்.

ஜார்ஜ் சி வாலஸ் (அதிபர் வேட்பாளர்)

  • வாலஸ் குடியரசு கட்சியின் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்ட பின் நடந்த பிரசாரத்தில் கடந்த 1972-ம் ஆண்டு மர்மநபரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். இந்தத் தாக்குதலால் அவரது இடுப்புக்கிக் கீழுள்ள பகுதி செயலிழந்தது.
  • அலபாமா பகுதி ஆளுநரான ஜார்ஜ் வாலஸ் பிரிவினைவாதக் கருத்துகளுக்குப் பெயர்பெற்றவர். பிற்காலத்தில், அதனை மாற்றிக் கொண்டார்.
  • இந்தச் சம்பவத்தில் ஆர்தர் பிரேமர் என்ற குற்றவாளி கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், 2007-ல் அவர் விடுவிக்கப்பட்டார்.

நன்றி: தினமணி (14 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories