TNPSC Thervupettagam

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2.0 - இந்திய பொருளாதாரத்துக்கு சாதகமா, பாதகமா?

November 11 , 2024 66 days 87 0

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2.0 - இந்திய பொருளாதாரத்துக்கு சாதகமா, பாதகமா?

  • கல்வி, பொருளாதாரம், ஆயுத பலம், நேச நாடுகள் (நேட்டோ), யு.எஸ்.டாலரின் உலக செல்வாக்கு என பலவற்றிலும் முன்னணியில் இருக்கும் 34 கோடி மக்கள் தொகையைக் கொண்ட அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் 2-வது முறையாக வெற்றி பெற்றுள்ள 78 வயது டொனால்டு ட்ரம்ப் அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்க உள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின்போது, ட்ரம்ப் மீது கொலை முயற்சித் தாக்குதல் நடைபெற்றது. ட்ரம்ப்பும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸும் ஒருவர் மீது ஒருவர் தனிநபர் விமர்சனத்தை முன்வைத்தனர்.
  • ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால்..’ என்று முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வரிக்குறைப்பு, இலவசம் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டனர். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் நல்ல வேளையாக தெளிவான முடிவைக் கொடுத்து, முடிந்திருக்கிறது அதிபர் தேர்தல். ட்ரம்ப் வெற்றியைத் தொடர்ந்து அமெரிக்க பங்குச்சந்தைகள் உற்சாகம் அடைந்துள்ளன. பிட்காயின் விலை உயர்வு, தங்கம், வெள்ளி விலையும் மறுவினையாற்றி இருக்கின்றன.
  • இதனிடையே, ட்ரம்ப் 2.0 காலகட்டத்தில் அமெரிக்கா இந்தியா இடையிலான உறவு எப்படி இருக்கும்? அது வர்த்தகத்தில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும்? என்பன போன்ற கேள்விகள் இந்தியர்கள் மனதில் எழுந்துள்ளன. தற்போது அமெரிக்காவில் மட்டும் 2 லட்சத்து 70 ஆயிரம் இந்திய மாணவர்கள் உயர்படிப்பு படிக்கிறார்கள். வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்.
  • இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை அமெரிக்காவுக்கு அனுப்பி, அந்நாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான பணிகளைச் செய்து கொடுக்கின்றன. வியாபாரங்கள் வளரவளர, இதன் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இவற்றுக்கான H1B ‘விசா’க்களை அமெரிக்க அரசு கெடுபிடி காட்டாமல் வழங்க வேண்டும்.
  • இந்தியா ஆண்டுக்கு 75 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்கிறது. அதன் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டால் ஏற்றுமதியைக் குறைக்கும். இறக்குமதி 50 பில்லியன் டாலர். அவற்றியில் முக்கிய ஆய்வுகளுக்குத் தேவைப்படுவனவும் உண்டு. அவை தொடர்ந்து கிடைக்க வேண்டும். அமெரிக்க முதலீட்டு நிறுவனங்கள் இந்திய தொழில் துறையிலும் பங்கு மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்கின்றன. அவையும் தொடர வேண்டும்.
  • இரண்டும் பெரும் மக்களாட்சி நாடுகள். ட்ரம்ப் முதல் முறை அதிபராக இருந்த 2017-2021 காலகட்டத்தில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவு நன்றாக இருந்தது. அப்போது ‘ஹவ்டி மோடி’ என்று ஹுஸ்டன் நகரில் பிரதமர் மோடிக்காக ஒரு பெரும் விழா எடுக்கப்பட்டது. அதைப்போல ‘நமஸ்தே ட்ரம்ப்’ என்ற பெயரில் டெல்லியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
  • ஆனால், பிறகு தடையை மீறி, ஈரானிலிருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்தது அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை. மற்ற நாடுகளுக்கு விதித்தது போலவே இந்திய இரும்பு மற்றும் அலுமினியம் உள்ளிட்ட சில பொருட்களின் மீது இறக்குமதி வரி விதித்தது அமெரிக்கா. பதிலுக்கு அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு இறக்குமதி தீர்வை விதித்தது இந்தியா. காகிதம், ஹார்லே டேவிட்சென் பைக்குகள் மீதான வரி குறித்து ‘பிஃக்… டாரிப்ஸ்’ என்று இந்தியாவை விமர்சித்தார் ட்ரம்ப்.
  • பிறகு 2021-ல் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் அதிபரானார். அமெரிக்க விதித்த தடைகளை மீறி ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கியது. பைடன் தலைமையிலான ஜனநாயக கட்சியின் ஆட்சியில் வங்கதேசம், மியான்மர் ஆகிய நாடுகள் குறித்த அமெரிக்காவின் அணுமுறை இந்தியாவுக்கு சாதகமாக இல்லை. அந்த விதத்தில் ட்ரம்பின் வெற்றி அரசியலில் இந்தியாவுக்கு நன்மையே.
  • ஜனவரி 2025-ல் டொனால்டு ட்ரம்ப் 2-வது முறையாக அதிபராக பதவி ஏற்க உள்ளார். அவர் அமெரிக்காவுக்குள் வரும் அத்தனை இறக்குமதி மீதும் 20% வரி, இறக்குமதியாகும் கார்கள் மீது 200 சதவீத வரி விதிக்கப்படும்; மேலும் சட்டவிரோதமாக குடியேறிய லட்சக்கணக்கானவர்கள் அதிரடியாக உடனடியாக வெளியேற்றப்படுவார்கள்; பல்வேறு வரி குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.
  • இவை எல்லாவற்றையும் அவரால் உடனடியாக நிறைவேற்ற முடியுமா? என்ற கேள்வி எழுகிறது. இந்த முறை ட்ரம்புக்கு நாடாளுமன்ற செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை (House of Representatives) ஆகியவற்றில் பெரும்பான்மை கிடைத்துள்ளது. எனவே, எதிர்க்கட்சியினரின் ஆதரவின்றி புதிய சட்டங்களை நிறைவேற்ற முடியும் என்பது உண்மைதான். ஆனால், உடனடியாக அனைத்தையும் ஒன்றாகச் செய்ய முடியாது. காரணம், தற்போதைய அமெரிக்க பொருளாதார நிலையும் அதற்கு காரணமான அரசின் 33 லட்சம் கோடி டாலர் கடனும்தான்.
  • இவற்றை சரிசெய்ய குறுகிய காலத்தில் அமெரிக்க பொருளாதாரம் வேகமாக வளர வேண்டும். அதற்கு வியாபார வாய்ப்புகளை கெடுத்துக் கொள்ளமுடியாது. எந்த தேசமும் தமக்கு நன்மை தரும் விதமாகவே முடிவுகளை எடுக்கும். அமெரிக்கா விதிவிலக்காக இருக்க முடியாது.

சீனாவுக்கு கடிவாளம் போட..

  • அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றிருந்தாலும் சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் அணுகுமுறையில் மாற்றம் இருக்காது. அந்த விதத்தில் சீனாவுக்கு அருகிலேயே இருக்கும், நீண்ட, கடுமையான எல்லையை பகிர்ந்து கொள்ளும், உற்பத்தி, ஏற்றுமதி என பலவற்றிலும் சீனாவுடன் போட்டி போடும், வேகமான பொருளாதார வளர்ச்சி காணும் இந்தியாவுக்கு அமெரிக்கா முக்கியத்துவம் கொடுக்கும். முக்கியமாக அமெரிக்காவுக்கு பல்வேறு விதங்களில் சீனா எதிரி நாடு. அந்த விதத்தில் சீனாவுக்கு கடிவாளம் போட, உலக அரசியல், வர்த்தகம் பொருளாதாரம் என பல்வேறு விஷயங்களில் அமெரிக்காவுக்கு இந்தியாவின் நட்பு தேவை.
  • 'சுழன்றும் ஏர்பின்னது உலகம்’ என்றார் வள்ளுவர். இப்போது உலகம் சுழல் வது வியாபாரங்களுக்காக. வளர்ந்த நாடுகளுக்கு கடுமையான உற்பத்தி வேலைகளை செய்து வாங்க மற்ற நாடுகளின் உதவி தேவை. அந்த விதத்திலும் சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க நிறுவனங்களுக்கு அடைக்கலம் கொடுக்க தைவான், வங்கதேசம், மெக்சிகோ போன்றவை மட்டும் போதாது. தொழில் துறையை வரவேற்கும் இந்தியாவையும் அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ளவே செய்யும்.
  • மொத்த அமெரிக்க மக்கள் தொகையில் 1.35% (அரைக் கோடி) பேர் இந்திய வம்சாவளியினர். இதுதவிர, இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக விளங்குகிறது. பர்சேஸ் பவர் பேரிட்டி என்கிற PPPல் உலக அளவில் 2-வது இடம். அமெரிக்காவின் வெளிநாட்டு வர்த்தகத்தில் ஆண்டுக்கு 75 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்யும், 50 பில்லியன் டாலர் இறக்குமதி செய்துகொள்ளும் நாடு இந்தியா.
  • அதிக எண்ணிக்கையில் மாணவர்களை கல்வி கற்க அனுப்புகிற நாடு. தகவல் தொழில்நுட்ப சேவையில் முதலிடம் வகிக்கிற நாடு. ஆசியாவில் சீனாவுக்கு மாற்றாக, உற்பத்தி துறையில் வளர்ந்து வரும், உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான இளம் வயதினர் இருக்கிற, பல நாடுகளும் தடுமாறிக் கொண்டிருக்கையில் ஆண்டுக்கு 7% க்கும் அதிக வளர்ச்சி காண்கிற பெரும் பொருளாதாரம் கொண்ட நாடு இந்தியா.

இருதரப்பினருடனும் நட்பு..

  • அமெரிக்காவின் நேச நாடுகள், அமெரிக்காவுக்கு எதிரான நாடுகள் என பலவற்றிலும் பிரிந்து செயல்படுகிற உலகில், இரு தரப்பினரோடும் உரையாடக்கூடிய, வியாபாரமும் செய்யக்கூடிய தேசமாக இருக்கும் இந்தியாவை அரசியல் பொருளாதாரம் வியாபாரம் என பலவற்றிலும் கூட்டு சேர்த்து கொள்ளவே அமெரிக்கா, ரஷ்யா ஆகிய இரு வல்லரசுகளும் விரும்பும்.
  • நமது பிரதமர் மோடியும் தனது எக்ஸ் தளத்தில், ‘நண்பரே’ என்று ட்ரம்பை விளித்து, ‘‘இந்திய அமெரிக்காவுக்கு இடையேயான உலக அளவிலான யுக்தி கூட்டுறவை மேலும் வலுப்படுத்தும் வாய்ப்பை எதிர்நோக்குகிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ட்ரம்ப் தலைமையில் அமையவிருக்கும் புதிய அமெரிக்க அரசு, இந்தியாவுக்கு எதிரான பெரிய முடிவுகளை எடுக்காது என்றே தோன்றுகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (11 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories