- ‘வயதான பறவைகள் எங்கே போய் இறக்கின்றன? வானத்திலிருந்து கற்கள் போல நம் மீது அவை விழுகின்றனவா?
- தெருக்களில் நாம் அவற்றின் சடலங்களில் தடுமாறி விழுகிறோமா?
- இந்தப் பூமியில் நம்மைப் படைத்து அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிற சர்வவல்லமையும் உள்ளவர், நம்மை அழைத்துச் செல்ல சரியான ஏற்பாடுகளைச் செய்துள்ளார் என்று நீங்கள் நினைக்கவில்லையா?’
- ‘THE MINISTRY OF UTMOST HAPPINESS’ நாவலில் எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய வரிகள் இவை.
- மரணம் பற்றிய அறியாமையோ, அது குறித்த பயமோ உள்ளவர்களை ‘Death Illiterates’ என்று இப்போது அழைக்கிறார்கள். நவீன உலகில் Death illiterates தொகை பெருகிவிட்டதாக லான்செட் மருத்துவ ஆய்விதழ், 2022ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
- மனித வாழ்வின் ஒரே நிச்சயத் தன்மை மரணம் மட்டுமே. ஏன் மரணம் பற்றிய அச்சமோ, அறியாமையோ கொண்டிருக்கிறோம் என்று கேட்டால் நம்மிடமிருந்து பல பதில்கள் வரக்கூடும். சிலரது பதில்கள் தத்துவார்த்தமாக இருக்கலாம்; சிலருக்கோ பரப்பரப்பான வாழ்க்கையில் மரணம் குறித்துச் சிந்திக்க நேரம் இல்லாமல் இருக்கலாம்.
பெருகும் மருத்துவமனைகள்:
- நம் ஒவ்வொருவர் வீட்டிலும் இப்போது 70 வயதைத் தாண்டிய ஓர் அம்மாவோ, அப்பாவோ, பாட்டியோ அல்லது தாத்தாவோ இருப்பார்கள். கடந்த இருபதாண்டு மருத்துவ முன்னேற்றங்களில் நம் நாட்டின் சராசரி ஆயுள்காலம் எழுபது வயதை நெருங்கிவிட்டது. சர்க்கரை நோயும், இதய நோய்களும் ஒவ்வொரு வீட்டிலும் குடிகொண்டிருக்கின்றன.
- சிறு நகரங்கள், ஊர்களிலும்கூட மருத்துவமனைகளின் எண்ணிக்கை பெருகிவிட்டது. ஊர் வளர்ச்சி அடைந்திருக்கிறதோ இல்லையோ நோயாளிகளின் எண்ணிக்கை வளர்ச்சி அடைந்திருக்கிறது. வீதிக்கு வீதி முன்பெல்லாம் தொலைபேசிக் கூண்டுகள் இருந்ததுபோல் இப்போது மருந்துக்கடைகள் பெருகிவிட்டன.
அதிகரிக்கும் அழுத்தம்:
- நாட்டில் ஏற்பட்டிருக்கும் மருத்துவ அறிவியல் முன்னேற்றங்களால், 70 வயதைத் தாண்டிய முதியோர்களின் எண்ணிக்கை ஐந்து கோடிக்கு மேல் போய்விட்டதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. இனிவரும் காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் பெருகும். முதியோர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக, அதன் சமூகப் பொருளாதார அழுத்தங்கள் அனைத்தும் இளம் தலைமுறை மீதே வந்து சேரும்.
- இப்போதே இளம் தலைமுறைக்கு அது குறித்த புரிதலை நாம் ஏற்படுத்த வேண்டும். சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக முதியோரைக் கையாள்வது இப்போது ஒவ்வொரு வீட்டிலும் ஒரு யுத்தத் தயாரிப்பு போலாகிவிட்டது. அதுவும் அவர்கள் நோயாளியாக இருந்தால் பிரச்சினை இன்னும் பூதாகரமாகிப் போகிறது.
சமூக அந்தஸ்து:
- முன்புபோல இப்போது கூட்டுக் குடும்பம் இல்லை. நோய்வாய்ப்பட்ட முதியோரைக் கவனிக்க நம் வீட்டில் ஆள்கள் யாருமில்லை. வாடகைக்குச் செவிலியர்களை நியமித்துச் சிலர் தங்கள் கடமையை முடித்துக்கொள்கிறோம். வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் இருக்கவே இருக்கிறது தீவிர சிகிச்சைப் பிரிவு. இது ஒரு சர்வரோக நிவாரணி.
- தீவிர சிகிச்சைப் பிரிவில் இறப்பது என்பது இப்போதெல்லாம் ஒரு சமூக அந்தஸ்தாக மாறிப்போய்விட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் கிடைக்கும் வென்டிலேட்டர் உள்ளிட்ட வசதியால் எந்த நட்சத்திரத்தில் மகன்/ மகள் பிறக்கவேண்டும் எனக் குடும்பங்கள் நிர்ணயம் செய்தது போல, எந்த நேரத்தில் தந்தை இறந்துபோக வேண்டும் என்பதை மகனும், மகளும், நிர்வாக வசதிக்காக மருத்துவமனைகளும் முடிவுசெய்து கொள்கின்றன.
மரணத்தின் தேர்வு:
- வளர்ந்த மேலை நாடுகளில் தங்கள் இறப்பு எப்படி இருக்க வேண்டும் என உயில் எழுதி வைக்கும் பழக்கம் அதிகரித்துவருகிறது. அதில் தங்கள் வீடுகளில் இயற்கையாக, அமைதியான முறையில் மரணமடையவே பலர் விரும்புகிறார்கள். மேலை நாடுகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இறப்பவர்கள் 10.3% மட்டுமே. இதுவே இந்தியாவில் உயிர் பிரியும் தருவாயில் 70% பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் நாள்களை நீட்டித்துக் கொண்டிருக்கின்றனர்.
- இனியும் சிசிச்சை கொடுத்துப் பலனில்லை; இனியும் பிழைக்க மாட்டார் என மருத்துவர் அறிவுறுத்திய பிறகும்கூட நாம் நோயாளிகளை வீட்டுக்கு அழைத்துவரத் தயங்கு கிறோம். ஏதாவது நடந்து நம் அன்புக்குரியவர்கள் பிழைத்துவிட மாட்டார்களா என எண்ணுவதே அதற்குக் காரணம்.
- நம்முடைய நோய்ப் பிரச்சினைகள் அனைத்தையும் தீவிர சிகிச்சைப் பிரிவு பார்த்துக்கொள்ளும் என்கிற அதீத நம்பிக்கை நமக்கு இருக்கிறது. இன்னொரு பக்கம், இறக்கும்வரை வீட்டில் இவர்களை யார் பார்த்துக்கொள்வது என எண்ணுபவர்களும் உண்டு. பாப்லோ நெருதாவின் கவிதை ஒன்று உண்டு, ‘பாதங்கள் அற்ற ஒரு செருப்பைப் போல, உடுப்பவன் அற்ற ஓர் உடையைப் போல வரும் இறப்பு’ .
- நெருதாவின் இக்கவிதையைப் போலவே இறப்பானது ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக நிகழ வேண்டும். முன்பு சொந்தங்கள் எல்லாம் ஆறுதலாக இருந்தனர். வீட்டில் முதியவர்களின் இறப்பை நிதானமாகவும் அச்சமின்றியும் எதிர்கொண்டனர். ஆனால், ஒரு தலைமுறை இடைவெளியில் இப்போது நிலைமை மாறிவிட்டது. சில வேதனையான நிகழ்வுகளை நாம் கேள்விப்படுகிறோம். இறந்துபோன பிறகும் தங்கள் சடலங்களை வாங்க ஆள்கள் இல்லாத செல்வந்தர்களும் நம் சமூகத்தில் உண்டு.
- அதே நேரத்தில், முதியவர்கள், குடும்ப உறுப்பினர்கள் நோய்வாய்ப் பட்டிருந்தாலும் அவர்களின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்திசெய்து கொண்டிருக்கிற லட்சக்கணக்கான மனிதர்கள் இந்தச் சமூகத்தில் வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள். இவர்கள்தான் நமக்கு நம்பிக்கையளிப்பவர்கள்.
- இனிக் குணப்படுத்தவே இயலாது என மருத்துவர்களால் கைவிடப்பட்ட நம் தாய் - தந்தையருக்கு, தாத்தா - பாட்டிமாருக்கு எவ்வகையான இறப்பை நாம் அளிக்கப் போகிறோம்? பல மின்னணு சாதனங்களையும் வயர்களையும் இணைத்து, தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கையில் மரண வேதனையை அனுபவித்துத் தன்னந்தனியாகவே இறக்கட்டும் எனக் கைவிடப்போகிறோமா? அல்லது வீடுகளில் அவர்கள் விரும்பியவண்ணம் உறவினர்களும் நண்பர்களும் சூழ்ந்திருக்க, அமைதியாக மரணிக்க அனுமதி அளிக்கப் போகிறோமா?
நன்றி: இந்து தமிழ் திசை (13 – 07 – 2024)