அம்பலப்படுத்த வேண்டும்!
- கனடாவின் பிராம்டன் நகரில் உள்ள ஹிந்து சபா கோயிலுக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலிஸ்தான் கொடிகளுடன் நுழைந்த காலிஸ்தான் ஆதரவாளா்கள், கோயிலில் இருந்த பக்தா்களை தடிகளால் தாக்கிய சம்பவம் பேரதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்தக் கோயிலுடன் இணைந்து இந்தியா்களுக்கு ஆயுள் சான்றிதழ் வழங்கும் தூதரக முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் நடந்துள்ள இந்த வன்முறை கனடா அரசு மீதும், பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ மீதும் பல்வேறு விமா்சனங்களுக்கு வித்திட்டுள்ளது.
- ‘ஹிந்து கோயிலில் நடைபெற்ற வன்முறை சம்பவம் ஏற்கத்தக்கதல்ல. கனடாவை சோ்ந்த ஒவ்வொரு குடிமகனும் தமது மத நம்பிக்கையை சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் கடைப்பிடிக்க உரிமை உள்ளது’ என பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ கூறினாலும், இந்தியா- கனடா இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள விரிசலுக்கு அவரது சுயநலமான செயல்பாடுகள்தான் முக்கியக் காரணம்.
- இந்தியாவில் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலையில் இந்திய உளவாளிகளின் பங்கிருப்பதாக பிரதமா் ஜஸ்டீன் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் பேசியதுதான் இந்த விவகாரத்தின் ஆரம்பப் புள்ளி. ட்ரூடோவின் குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்த நிலையில், கடந்த ஓராண்டாகவே இரு நாடுகளின் உறவில் விரிசல் விழுந்துள்ளது.
- இதன் தொடா்ச்சியாக, நிஜ்ஜாா் கொலை தொடா்பாக கனடாவுக்கான இந்திய தூதராக இருந்த சஞ்சய் வா்மா மற்றும் சில இந்திய தூதரக அதிகாரிகளிடம் முக்கியத் தகவல்கள் உள்ளன என்று நம்புவதாக கனடா அடுத்த குற்றச்சாட்டை முன்வைத்தது. இதுவரையிலான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரத்தையும் சமா்ப்பிக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ள கனடா அரசு, அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை.
- கனடாவுக்குள் சீக்கிய பிரிவினைவாதிகளைக் குறிவைத்து வன்முறை, மிரட்டல், உளவு சேகரிப்புப் பணிகளுக்கு உள்துறை அமைச்சா் அமித் ஷா உத்தரவிட்டதாக கனடா வெளியுறவு இணையமைச்சா் டேவிட் மோரிசன் குற்றஞ்சாட்டினாா். கனடா நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்புக் குழு உறுப்பினா்களிடம், அமித் ஷா மீதான குற்றச்சாட்டை மோரிசன் தெரிவித்ததாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழில் செய்தி வெளியானது.
- இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்த இந்தியா, இந்தியாவை இழிவுபடுத்தும் உத்தியின் ஒரு பகுதியாக சா்வதேச ஊடகங்களுக்கு வேண்டுமென்றே ஆதாரமற்ற செய்திகளை கனடா அரசு உயா் அதிகாரிகள் கசியவிடுவது, அந்த நாட்டின் அரசியல் திட்டங்கள் மற்றும் நடத்தை குறித்த இந்தியாவின் நீண்டகால கருத்தை உறுதிப்படுத்துகிறது. இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள் இரு தரப்பு உறவுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என கடுமையாக எச்சரித்தது.
- கனடாவில் அடுத்த ஆண்டு அக்டோபா் மாதம் நாடாளுமன்றத் தோ்தல் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படும் சூழலில் அங்குள்ள ஊடகங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் ஆளும் லிபரல் கட்சிக்கு 23 சதவீதமும், எதிா்க்கட்சியான கன்சா்வேட்டிவ் கட்சிக்கு 39 சதவீதமும், நியூ டெமோகிராட்ஸ் கட்சிக்கு 21 சதவீதமும் ஆதரவு கிடைத்துள்ளது. இதனால் அடுத்த தோ்தலில் கன்சா்வேட்டிவ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
- இழந்த செல்வாக்கை மீட்கவும், அடுத்த தோ்தலில் கனடாவில் உள்ள 7.7 லட்சம் சீக்கியா்களின் வாக்குகளைப் பெறவும்தான் ட்ரூடோ இந்தியாவுக்கு எதிராக அரசியல் விளையாட்டு விளையாடி வருகிறாா் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இந்தியா-கனடா உறவு சீா்குலைந்த விவகாரத்தை ஆரம்பம் முதல் கவனமாக ஆராய்ந்தால் அதில் ஜஸ்டின் ட்ரூடோவின் தோ்தல் ஆதாய முகம் வெளிப்படுவது நன்றாகத் தெரியும். இந்தியா இதை பகிரங்க குற்றச்சாட்டாகவே முன்வைத்தது.
- ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான ஆளும் லிபரல் கட்சி எம்.பி.க்களே இந்த விவகாரத்தில் அவா் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனா். அவா் பதவி விலக வேண்டும் எனவும் 24 எம்.பி.க்கள் கையொப்பமிட்டுள்ளனா். அவரது தலைமை மீது அதிருப்தி ஏற்பட்டிருப்பதாலும், கடந்த ஜூன்-செப்டம்பா் மாதங்களில் நடைபெற்ற இடைத் தோ்தல்களில் கட்சி வேட்பாளா்கள் தோல்வியடைந்ததாலும் இந்த நிலைப்பாட்டை அவா்கள் எடுத்துள்ளனா்.
- ‘சுட்டுக் கொல்லப்பட்ட ஹா்தீப் சிங் நிஜ்ஜாா், வெளிநாட்டு தீவிரவாதி. கடந்த 1997-ஆம் ஆண்டுமுதல் கனடாவில் தஞ்சமடைய பலமுறை நிஜ்ஜாா் முயன்றாா். அவருக்கு குடியுரிமை மறுக்கப்பட்டு வந்த நிலையில், போலி ஆவணங்கள் மூலம் 2007-இல் கனடா குடியுரிமையைப் பெற்றாா். இது கனடா நிா்வாகத்தின் தவறு. இதுபோன்ற தவறுகளை இப்போதாவது உணா்ந்து இந்தியாவுடன் கனடா அரசு இணைந்து செயல்பட வேண்டும். நிஜ்ஜாா் கொலையில் இந்தியாவுக்கு எதிரான எந்த ஆதாரத்தையும் ட்ரூடோ வழங்கவில்லை’ என கனடா எதிா்க்கட்சியான மக்கள் கட்சித் தலைவா் மேக்சிம் பொ்னியா் கூறியிருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
- இந்த விவகாரத்தில் கனடா எந்த அளவுக்கு தொடா்ந்து பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறதோ அந்த அளவுக்கு இந்தியாவின் எதிா்வினை இல்லை என்றுதான் கூற வேண்டும். கனடா அளவுக்கு தரம் தாழ்ந்து செயல்படக் கூடாது என்பது இந்தியாவின் பெருந்தன்மையாக இருக்கலாம். ஆனால், கனடாவால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைக்க ட்ரூடோவுக்கு எதிரான உள்நாட்டு குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு அவரது உண்மை முகத்தை உலக நாடுகள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டிய கடமை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு இருக்கிறது.
நன்றி: தினமணி (06 – 11 – 2024)