TNPSC Thervupettagam

அம்பேத்கரின் இறுதி நாள்

December 6 , 2023 406 days 249 0
  • அம்பேத்கரின் இரண்டாவது மனைவியும் அவருடைய இறுதிக் காலத்தில் உற்ற துணையாக அவருக்கு இருந்தவருமான  சவிதா அம்பேத்கரின் சுயசரிதையான 'பாபாசாஹேப்: டாக்டர் அம்பேத்கருடன் என் வாழ்க்கை' தமிழில் வெளியாகியுள்ளது. அம்பேத்கரின் அரசியல் வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் முக்கியத்துவம் வாய்ந்த அவருடைய இறுதிக் காலகட்டத்தை நுட்பமாக விவரிக்கும் புத்தகம் இது. இந்தக் காலகட்டத்தில்தான் இந்திய அரசமைப்பு வரைவை உருவாக்கும் மிகப் பெரும் பணியை அம்பேத்கர் மேற்கொண்டிருந்தார்.
  • நாக்பூரில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மதமாற்றம், ‘புத்தரும் அவர் தம்மமும்’ உள்ளிட்ட சாதனைப் புத்தகங்கள் உள்ளிட்ட அரும்பணிகள் யாவும் இக்காலகட்டத்திலேயே நடந்தன. எத்தகைய உடல்நலிவுக்கு மத்தியில் இப்பணிகளை அவர் மேற்கொண்டார் என்பதை விவரிக்கும் இந்நூல் அம்பேத்கரின் அன்றாட வாழ்க்கையையும் நாம் அறிந்துகொள்ள உதவும் அரிய ஆவணம்.
  • டிசம்பர் 5. எப்போதும்போல் காலை எழுந்து தோட்டத்தைச் சுற்றிவந்தேன். தோட்டக்காரரின் வீட்டுக்குச் சென்று, அவருடைய உடல்நலம் குறித்து விசாரித்தேன். அவருடைய மனைவி எனக்குக் கடுங்காபி கொடுத்தார். அதைக் குடித்துவிட்டு, எட்டரை மணிபோல் தேநீர் எடுத்துக்கொண்டு சாஹேபை எழுப்பச்சென்றேன். இருவரும் ஒன்றாகத் தேநீர் அருந்தினோம். ரட்டு விடைபெறுவதற்காக சாஹேபிடம் வந்தபோது அவருக்கும் தேநீர் கொடுத்தோம். பிறகு, அவர் அலுவலகம் சென்றார்.
  • சாஹேபின் காலைக்கடன்களுக்கு உதவினேன். பிறகு, சாப்பிடுவதற்காக அவரை உணவு மேஜைக்கு அழைத்துச்சென்றேன். சாஹேப், டாக்டர் மால்வன்கர், நான் மூவரும் ஒன்றாக உணவருந்தினோம். பிறகு, அரட்டையடிப்பதற்காகப் புல்வெளி சென்றோம். நாளிதழ்களைப் புரட்டிக்கொண்டிருந்தார் சாஹேப். அதை முடித்ததும் அவருக்கு மருந்துகளும் இன்சுலினும் கொடுத்துவிட்டு, உணவு தயாரிப்பதைக் கவனிப்பதற்காக நான் கிளம்பிச்சென்றேன். சாஹேபும் டாக்டர் மால்வன்கரும் தங்கள் உரையாடலைத் தொடர்ந்தார்கள்.
  • நண்பகல் வாக்கில் சாஹேபைச் சாப்பிட அழைக்கச்சென்றபோது அவர் நூலகத்தில் வாசிப்பும் எழுத்தும் என மும்முரமாக இருந்தார். பம்பாயில் சித்தார்த் கல்லூரி முதல்வர் சாந்தாராம் ரெகேவின் மேற்பார்வையில், ‘புத்தரும் அவர் தம்மமும்’ புத்தகத்தின் அச்சிடும் பணி ஏறக்குறைய முடிவடையும் தறுவாயில் இருந்தது. அதனால்தான், புத்தகத்துக்கு முன்னுரை எழுதிக்கொடுக்கும்படி சாஹேபை ரெகே தொந்தரவுபடுத்தினார். உள்ளபடியாக, மார்ச் மாதத்திலேயே அந்த முன்னுரையை சாஹேப் எழுதியிருந்தார். 6 ஏப்ரல் 1956 அன்று அதில் சில திருத்தங்கள் செய்தார். ஆனாலும், அதற்கு இன்னும் இறுதி வாசிப்பு கொடுக்கப்பட வேண்டியிருந்தது.
  • புத்தகம் சரியாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதற்கு அவர் மற்ற இரண்டு புத்தகங்களான ‘புரட்சியும் எதிர்ப்புரட்சியும்’, ‘புத்தரும் கார்ல் மார்க்ஸும்’ ஆகியவற்றையும் கொண்டுவந்தார். அந்தப் புத்தகங்களும் முடிவடையும் நிலையில் இருந்தன. இந்த மூன்று புத்தகங்களும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியிடப்பட வேண்டும் என்பதில் அவர் கறாராக இருந்தார். ஒரு புத்தகம் - ‘புத்தரும் அவர் தம்மமும்’ - தயாராகிவிட்டது. சாஹேபை அழைத்துவர நூலகம் சென்றேன். இருவரும் ஒன்றாகச் சாப்பிட்டோம். அதன் பிறகு, அவர் தூங்குவதற்கான ஏற்பாடுகளில் இறங்கினேன்.
  • டெல்லி சென்றதிலிருந்து, உணவுப் பொருள்கள் உள்பட வீட்டுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் வாங்குவது என்னுடைய வழக்கமாயிற்று. ஆமாம், நான் தனியாகத்தான் செல்வேன். எப்படியிருந்தாலும், அவருடைய உடல்நலம் காரணமாகவும் பிற ஈடுபாடுகள் காரணமாகவும் சாஹேப் என்னுடன் வருவதற்கு வாய்ப்பில்லை. புத்தகங்கள், துணிமணிகள், அணிகலன்கள் வாங்கச்செல்லும்போது பெரும்பாலும் சாஹேப் உடன் வருவார். சில நேரத்தில் நான் கனாட் ப்ளேஸ் சென்று புத்தக விற்பனையாளரிடம் சாஹேபின் தேர்வுக்காகக் குறிப்பிட்ட புத்தகங்களை அனுப்பிவைக்குமாறு கூறுவேன். சாஹேப் எந்தப் புத்தகத்தையும் திருப்பி அனுப்ப மாட்டார். உள்ளபடியாக, என்னுடைய தேர்வுக்காகப் பாராட்டுவார். நாடாளுமன்றத்தில் சாஹேப் இருக்கும்போது அல்லது மதியவேளை ஓய்வில் இருக்கும்போது நான் பொருள்கள் வாங்கிவருவேன்.
  • காய்கறிகளும் வீட்டுக்குத் தேவையான வேறு சில பொருள்களும் வாங்குவதற்காக நான் எப்போதும்போல் சந்தைக்குச் செல்ல வேண்டியிருந்தது. அப்போது டாக்டர் மால்வன்கர் என்னுடன் இருந்தார். அவர் மாலை விமானத்தில் பம்பாய் செல்லவிருந்த நிலையில் சந்தையிலிருந்து சில பொருள்களை வாங்க நினைத்தார். அதனால், அவர் என்னுடன் வந்தார். சாஹேப் உறங்கிக்கொண்டிருந்ததால் சந்தைக்கு வரும்போது அவரிடம் சொல்லிக்கொள்ளவில்லை. எப்படியிருந்தாலும், அது என்னுடைய அன்றாட வழக்கமாக இருந்ததால் இது பொருட்டல்லதான். ஆக, இரண்டரை மணிபோல நான் சந்தைக்குச் சென்றேன்.
  • நான் எனக்கு வேண்டியவற்றை வாங்கிக்கொண்டேன், டாக்டர் மால்வன்கர் தனக்கான பொருள்களை (பெரும்பாலும் கம்பளிகள், கூடவே சில ஃபான்ஸி பொருள்கள்) வாங்கினார். ஐந்தரை மணிவாக்கில் நாங்கள் திரும்பியபோது சாஹேப் சினமுற்றிருப்பதைப் பார்த்தேன். சாஹேபின் கோபத்தில் அசாதாரணமாக ஏதும் இருக்காது. தான் தேடிய இடத்தில் புத்தகத்தைப் பார்க்க முடியவில்லை என்றால், பேனாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் வீட்டைத் தலைகீழாக்கிவிடுவார். அவர் விருப்பப்படியும் எதிர்பார்ப்பின்படியும் வேலை நடக்கவில்லை என்றால் சட்டென்று சூடாகிவிடுவார்.
  • கடந்துசெல்லும் இடியைப் போன்றதுதான் அவருடைய கோபம். சாஹேபின் கோபத்துக்கு அஞ்சியே யஷ்வந்த் எங்களுடன் டெல்லியில் தங்குவதற்கு மறுத்துவிட்டான். எங்களுடன் தங்கும்படி நான் அவ்வப்போது அவனிடம் கெஞ்சியிருக்கிறேன். அவன், “அவர் எரிச்சல்படுகிறார். அவரைப் பார்த்தால் எனக்கு அச்சமாக இருக்கிறது” என்பான். அவன் எங்களுடன் டெல்லியில் தங்காததற்கு நிச்சயமாக வேறு காரணங்களும் இருக்கின்றனதான். சாஹேபின் கோபம் எப்போதும் அந்தந்தக் கணத்துக்கானதாகவே இருந்திருக்கிறது. அவர் தன்னுடைய புத்தகத்தை அல்லது நோட்டுப் புத்தகத்தை அல்லது காகிதத்தைக் கண்டறிந்த கணத்தில் அவருடைய கோபம் கரைந்துபோய்விடும். நான் எப்போதும் அவரிடம் சொல்வேன்: “நீங்கள் ஜமதக்னியின் அவதாரம்.” தன்னுடைய கோபம் அன்புக் கோபம் என்றும், அது கணநேரம்தான் இருக்கும் என்றும் சிரித்துக்கொண்டே சொல்வார்.
  • அவர் சீக்கிரம் எழுந்து என்னுடைய கரங்களால் காபி எதிர்பார்த்திருக்கலாம் அல்லது எழுந்த பிறகு நான் இல்லாமல் இருப்பதைக் கண்டு சலிப்படைந்திருக்கலாம் என்பதைப் புரிந்துகொண்டேன். எனவே, நான் வாங்கிவந்த பொருள்களைச் சமையலறைக்குக் கொண்டுசெல்வதற்கு முன்பாகப் படுக்கையறைக்குள் நுழைந்தேன். என்னைக் கூர்மையாகப் பார்த்தவர், “எவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டிருக்கிறாய்! உனக்காக நான் எவ்வளவு நேரம் காத்துக்கொண்டிருந்தேன் என்று தெரியவில்லை!” என்றார். நான் அவரைச் சமாதானப்படுத்திவிட்டு, சமையலறையில் மும்முரமானேன்.
  • அந்த மாலையில், ஒரு சமண முனிவரும் பிரதிநிதிகள் குழுவும் சாஹேபை நேரில் பார்க்க வந்து, கூடத்தில் அமர்ந்து பௌத்தம், சமணம் தொடர்பாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். விமானத்துக்கான நேரம் வந்ததும் டாக்டர் மால்வன்கர் தன்னுடைய உடைமைகளை எடுத்துக்கொண்டு, சாஹேபிடம் விடைபெற்றுவிட்டு, விமான நிலையம் புறப்பட்டுச்சென்றார். சமண முனிவர்களுடனும் தூதுக் குழுவுடனுமான விவாதமும் உரிய நேரத்தில் முடிந்தது. அவர்களும் புறப்பட்டுச்சென்றார்கள்.
  • சிறிது நேரத்தில், சாஹேபின் கனிவான, இனிமையான குரலில் பகவானின் பிரார்த்தனைப் பாடலான ‘புத்தம் சரணம் கச்சாமி’ (புத்த பகவானிடம் நான் தஞ்சமடைகிறேன்) கூடத்திலிருந்து மிதந்துவந்தது. அவர் எப்போதெல்லாம் அமைதியான, மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கிறாரோ அப்போதெல்லாம் இந்தப் பிரார்த்தனைப் பாடலையும் சில கபீர் பாடல்களையும் பாடுவார். நான் கூடத்தை எட்டிப்பார்த்தபோது, சாஹேப் நீளிருக்கை மீது கண்கள் மூடிய நிலையில், விரல்களால் தாளமிட்டுக்கொண்டு, முழுக் கவனத்துடன் ஒரு ஸ்வரம் பிசகாமல் பிரார்த்தனையைப் பாடியபடி, தன்னுடைய இதயத்தையும் ஆன்மாவையும் பிரார்த்தனையில் செலுத்தியவாறு இருப்பதைப் பார்த்தேன். பின்னர், இந்தப் பிரார்த்தனைப் பாடலை கிராமஃபோனில் ஒலிக்கவிடச்சொல்லி ரட்டுவிடம் கேட்டுக்கொண்டார். அதனுடன் சேர்ந்து உரத்த குரலில் பாடத் தொடங்கினார். இந்த நடத்தை அவருடைய மகிழ்ச்சியான, உற்சாகமான இதயத்தின் அறிகுறி அல்லவா?
  • இரவு உணவுக்கான நேரம் வந்தது. அவருக்குச் சுடச்சுடப் பரிமாறுவதுதான் பிடிக்கும் என்பதால் நான் உணவைச் சூடாக்குவதில் மும்முரமானேன். சுதாமாவை அனுப்பி சாஹேபைக் கூட்டிவரச்சொன்னேன். நாங்கள் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினோம். அவர் கொஞ்சம்தான் சாப்பிட்டார். எல்லா நேரமும் புத்தரின் பிரார்த்தனையை முணுமுணுத்துக்கொண்டிருந்தார். நான் எப்படியோ அவருடைய உணவில் கவனத்தைத் திருப்பிச் சாப்பிடவைத்தேன்.
  • நான் சாப்பிட்டு முடிக்கும்வரை அவர் அங்கேயே இருந்தார். சீக்கிரமே அவர் கபீரின் ‘சலோ கபீர் தேரா பவசாகர் தேரா’ (கடந்துசெல்லுங்கள் கபீர், இது உங்களுடைய தற்காலிக உறைவிடம்) பாடலை மிகுந்த காதலுடனும் லயத்துடனும் பாடத் தொடங்கினார். அவர் மிகுந்த மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் காணப்பட்டார். முதலில் பிரார்த்தனை, பிறகு கபீர் பாடல்: இரண்டும் அவர் மகிழ்ச்சியான, உற்சாகமான மனநிலையில் இருக்கிறார் என்பதைச் சொல்லின. அவர் அந்தப் பாடலுடன் முழுமையாக ஒன்றிப்போய், அந்த கபீர் பாடலைப் பாடியபடியே படுக்கையறைக்கு நடந்தார். ஒரு கையில் தடி, இன்னொரு கையில் புத்தகம்.
  • புத்தரும் அவர் தம்மமும்’ புத்தகத்தை அச்சிடுவதற்காக அதன் முன்னுரையை பம்பாய்க்கு அனுப்புவது மிகவும் முக்கியம். எனவே, முன்னுரையின் ஒரு பிரதியையும், சம்யுக்த் மஹாராஷ்டிர சமிதியின் தலைவர் எஸ்.எம்.ஜோஷிக்கும் ஆச்சார்ய அத்ரேவுக்கும் எழுதிய கடிதங்களின் பிரதியையும் மேஜையில் வைக்கும்படி ரட்டுவிடம் சாஹேப் கூறினார். சமையலறையைக் கவனிப்பதில் நான் மும்முரமானேன்.
  • படுக்கையறைக்குச் சென்ற சாஹேப் அந்த முன்னுரைக்கு இறுதி வடிவம் கொடுப்பதில் மும்முரமானார். தட்டச்சு செய்யப்பட்ட பிரதியில் அவர் தன் கரங்களால் சில திருத்தங்களை மேற்கொண்டார்: எனக்கும் டாக்டர் மால்வன்கருக்கும் அவர் கடன்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டு, அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க புத்தகத்தை எழுதிமுடிக்கும் மகத்தான பணி என்னுடைய ஆதரவால்தான் சாத்தியமாயிற்று என்பதைத் தெளிவாகவும் நன்றியுடனும் பதிவுசெய்தார். ஆனால், சாஹேபின் மறைவுக்குப் பிறகு இந்தப் புத்தகத்தை வெளியிட்ட சுயநலமிக்க அற்பமான தலைவர்கள் சிலர் தங்களுடைய சொந்த அரசியல் ஆதாயங்களுக்காகவும் தங்களுடைய சுயநலத்துக்காகவும் இன்றுவரை அந்த முன்னுரையை அச்சிடாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானதும் வெட்கக்கேடானதுமாகும். கையால் திருத்தப்பட்ட இந்த முன்னுரையை 6 டிசம்பர் 1956 அன்று நான் பிரதமர் நேருவிடம் காட்டினேன்.
  • டாக்டர் பதந்த் ஆனந்த் கௌசல்யாயன், டிசம்பர் 6 அன்று கடைசியாகப் பார்க்கச்சென்றபோது அந்தத் திருத்தப்பட்ட முன்னுரையில் மை உலர்ந்திருக்கவில்லை என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த முன்னுரை இதர எல்லா ஆவணங்களுடன் மக்கள் கல்விச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அது இன்றும் அவர்களின் வசம் உள்ளது. தட்டச்சுப் பிரதியின் கூடுதல் நகல் ரட்டுவின் சேகரிப்பிலும் இருக்கிறது.
  • அதேபோல், ‘டாக்டர் அம்பேத்கர் எழுதிய அரிய முன்னுரைகள்’ என்ற தலைப்பில் டாக்டர் எல்.ஆர்.பாலி வெளியிட்ட புத்தகத்தை வழக்கறிஞர் பக்வான் தாஸ் தொகுத்தார். அதில் டிசம்பர் 5 இரவில் சாஹேப் செய்திருந்த திருத்தங்கள் அந்தப் புத்தகத்தில் இருக்காது என்பது வெளிப்படையானதுதான். ஏனெனில், அன்றிரவு தன்னுடைய மேஜையில் வைக்கும்படி சாஹேப் கேட்ட ஒரே பிரதி அதுதான். சாஹேபின் வாழ்க்கையில் எனக்குரிய முக்கியத்துவத்தை நிலைநாட்டுவதற்கான மிகப் பெரிய சான்று அது. டாக்டர் சாஹேப், 5 டிசம்பர் 1956 இரவு, அதாவது அவர் இறந்துபோவதற்குச் சிறிது நேரம் முன்பாக, இந்தச் சான்றிதழை எனக்கு வழங்கினார்.
  • சாஹேப் இரவு நீண்டநேரம் உட்கார்ந்து வாசிக்கவும் எழுதவும் செய்வார். அவர் உள்ளே இறங்கிவிட்டார் என்றால் பிறகு இரவு முழுவதும் மீள மாட்டார். ஆனால், 5 டிசம்பர் 1956 அன்று ‘புத்தரும் அவர் தம்மமும்’ புத்தகத்துக்கான முன்னுரையில் சாஹேப் சில திருத்தங்கள் மேற்கொண்டார். அதோடு, எஸ்.எம்.ஜோஷி, அத்ரே மற்றும் பர்மிய அரசாங்கத்துக்கு அனுப்ப வேண்டிய கடிதங்களையும் இறுதிப் பார்வை பார்த்துவிட்டு, வழக்கத்துக்கு மாறாக அன்றிரவு சீக்கிரமே உறங்கச்சென்றுவிட்டார். அதாவது, பதினொன்றரைபோல. டிசம்பர் 5ஆம் தேதி இரவு அவருடைய கடைசி இரவாக மாறிவிட்டது. டிசம்பர் 5 குறித்த தன்னுடைய விவரிப்பில், புகழ்பெற்ற வாழ்க்கை வரலாற்றாசிரியர் தனஞ்செய் கீர் இப்படி எழுதுகிறார்: ‘டாக்டர் அம்பேத்கரின் படுக்கைக்குப் பின்னால் மரணம் ஒளிந்துகிடக்கிறது என்ற லேசான உள்ளுணர்வுகூட முந்தைய ஆண்டுகளில் டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கையைப் பார்த்துக்கொண்ட அவருடைய மனைவிக்கோ அவர்களுடைய வேலைக்காரர்களுக்கோ இல்லை.’
  • டிசம்பர் 6 அன்று, நான் எப்போதும்போல் சீக்கிரமாக எழுந்துவிட்டேன். என்னுடைய வழக்கப்படி, தோட்டத்தைச் சுற்றிவந்துவிட்டு, எங்கள் தோட்டக்காரரைப் பார்க்கச்சென்று அவருடைய உடல்நலம் பற்றி விசாரித்தேன். பிறகு, என்னுடைய காலைப் பணிகளை முடித்துவிட்டு, முகத்தைக் கழுவிக்கொண்டு தேநீருடன் சாஹேபை எழுப்பச்சென்றேன். அப்போது ஏழு ஏழரை இருக்கும். அவருடைய கால்களில் ஒன்று தலையணை மீது கிடப்பதைப் பார்த்தேன்.
  • ஒன்றிரண்டு முறை கூப்பிட்டுப்பார்த்தேன். அவரிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை என்றவுடன் அவர் நல்ல உறக்கத்தில் இருப்பதாக நினைத்துவிட்டேன். பிறகு, அவரை உலுப்பி எழுப்ப முயன்றேன்... அப்போதுதான் நான் பெரும் அதிர்ச்சியை உணர்ந்தேன். அவர் தூக்கத்திலேயே இறந்துபோயிருந்தார். அந்த ஒட்டுமொத்த பங்களாவிலும் என்னையும் சுதாமாவையும் தவிர வேறு யாருமே இல்லை.
  • நான் மருத்துவராக இருந்தாலும், எல்லாவற்றுக்கும் மேலாக நான் ஒரு பெண். நான் அப்போது என்ன செய்ய வேண்டும் என்றே எனக்குப் புரியவில்லை. நான் உரத்த குரலில் ஒப்பாரிவைத்தபடி சுதாமாவைச் சத்தம்போட்டுக் கூப்பிட்டேன். என்னுடைய வாயிலிருந்து வார்த்தையே வரவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்? நான் யாரை அழைக்க வேண்டும்? என்னுடைய மூளை மரத்துப்போனது. முற்றிலும் குழப்பமான, கலக்கமூட்டும் மனநிலையில் டாக்டர் மால்வன்கரை அழைத்து ஆலோசனை கேட்டேன். அவருக்கும் அதிர்ச்சி. அவர் என்னை அமைதிப்படுத்த முயன்றார். பிறகு, அவருக்கு கோரமைன் ஊசிபோடச் சொல்லிப் பரிந்துரைத்தார். ஆனால், அவர் இறந்து சில மணிநேரம் ஆகியிருக்கும். அதனால், ஊசிபோட முடியவில்லை. நானக் சந்த் ரட்டுவை உடனடியாகக் கூட்டிவரச்சொல்லி சுதாமாவை அனுப்பினேன்.
  • நானக் சந்தைக் கூட்டிவர சுதாமா கார் எடுத்துச்சென்றார். கொஞ்ச நேரத்தில் வந்துசேர்ந்தவர் திகைத்துப்போனார். அவரைப் பார்த்ததும் என் கட்டுப்பாடுகளையெல்லாம் இழந்து துண்டுதுண்டாக உடைந்துபோனேன். “சாஹேப் நம்மைவிட்டுப் போய்விட்டார், ரட்டு!” என்று சொல்லிக் கதறினேன். வேறு ஒரு வார்த்தையும் என்னிடமிருந்து வரவில்லை; அப்படியே நீளிருக்கையில் சரிந்தேன். ரட்டுவும் புலம்பியழத் தொடங்கினார். கொஞ்ச நேரம் இப்படிப் போனது. பிறகு, நாங்கள் சாஹேபின் உடலுக்குச் சூடேற்ற முயன்றோம். மூச்சுவிடவைக்க முயன்றோம்.
  • அதனால், எந்தப் பயனும் இல்லை. சாஹேப் எங்களை விட்டு நிரந்தரமாகப் பிரிந்துபோனார். பின்னர், சாஹேபின் இறப்பு குறித்த செய்தியை எல்லோருக்கும் சொல்ல முடிவெடுத்தோம். ஒரு பெண்ணாக எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இருப்பினும், நானக் சந்த் எங்களுடைய நெருங்கிய நண்பர்கள், அரசுத் துறைகள், பி.டி.ஐ. (பிரஸ் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா), யு.என்.ஐ. (யுனைட்டட் நியூஸ் ஆஃப் இந்தியா), ஆகாஷவாணி ஆகியோருக்குத் தொலைபேசியில் அழைத்து இந்தச் சோகச் செய்தியைச் சொல்லிக்கொண்டிருந்தார்.
  • காட்டுத்தீபோல இந்தச் செய்தி எட்டுத்திக்கும் பரவியது. துக்கம் தாக்கிய ஆயிரக்கணக்கான தொண்டர்கள் 26, அலீப்பூர் சாலையை நோக்கி வரத் தொடங்கினார்கள். அதற்குள், சுதாமா மற்றும் ரட்டுவின் உதவியுடன் சாஹேபின் உடலைக் கடைசி தரிசனத்துக்காகக் கூடத்தில் வைக்க முடிந்தது. சாஹேபைக் கடைசியாகப் பார்ப்பதற்காக, துயரத்தில் ஆழ்ந்த லட்சக்கணக்கான மக்கள் அங்கே திரண்டிருந்தனர்.
  • பம்பாயில் சாஹேபின் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. இந்த இறுதிச் சடங்குகள் டெல்லியில் அல்லது சார்நாத்தில் நடக்க வேண்டும் என்று சிலர் அபிப்ராயம் கொண்டிருந்தார்கள். ஆனால், பம்பாய்தான் அவர் களமாடிய நிலம் என்பதால் இறுதிச் சடங்குகள் இங்கேதான் நடக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம்.
  • நேரு அமைச்சரவைக் குழுவின் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் என எல்லோரும் சாஹேபைக் கடைசியாகப் பார்த்துவிட்டுப்போக வரிசையாக வரத் தொடங்கினார்கள். நேரு வந்தார். எனக்கு ஆறுதல் கூறினார். அவருடைய வயது, உடல்நிலை, நோய், எப்போது எப்படி இறந்தார் என்பன போன்ற பல கேள்விகளை மிகுந்த நாகரிகத்துடன் கேட்டார்.
  • அவர் சமண முனிவர்களுடன் உரையாடிவிட்டு, போதிய இரவு உணவு எடுத்துக்கொண்டதாகவும், ‘புத்தரும் அவர் தம்மமும்’ புத்தகத்துக்கான முன்னுரையை அவர் கரங்களாலேயே திருத்தியதாகவும் அவரிடம் கூறினேன். திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட காகிதங்களை அவரிடம் காட்டினேன். அவர் தன்னுடைய முக்கியமான புத்தகத்துடன் தன் பங்கை முடித்துவிட்டு வாழ்க்கையில் தன்னுடைய பணியையும் முடித்துக்கொண்டார் என்றும் சொன்னேன்.
  • பாபு ஜக்ஜீவன்ராம் வந்தார். இறுதிச் சடங்குகளை எங்கே நடத்துவது என்று கேட்டார். பம்பாய்தான் என்று சொல்லவும், உடலை வான்வழியில் கொண்டுசெல்வதற்கான வழிமுறைகளை வகுத்துத்தருவதாக அவர் உறுதியளித்தார். பாதிக் கட்டணத்தில் வான்கலத்தை வாடகைக்கு எடுக்கவும் ஏற்பாடு செய்தார்.
  • சாஹேபின் உடல் மாலை 6 மணிவரை கடைசி தரிசனத்துக்காக வைக்கப்பட்டிருந்தது. பிறகு, ஒரு சுமையுந்து ஏற்பாடானது. அதில் மலர் தூவிய உடல் வைக்கப்பட்டு, சஃப்தர்ஜங் விமான நிலையத்தின் திசையில் டெல்லியின் முக்கியமான சாலைகளில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. சாஹேப் இறந்தபோது டெல்லியில்தான் பதந்த் ஆனந்த் கௌசல்யாயன் இருந்தார். அவரை அழைத்துவரும்படி ரட்டுவை அனுப்பினேன். பிறகு, அவர் எங்களுடன் இருந்தார்.
  • பதந்த் ஆனந்த் கௌசல்யாயன், சோஹன்லால் சாஸ்திரி, சங்கரானந்த், நான், இன்னும் கொஞ்சம் பேர் சாஹேபின் உடலைச் சுற்றி உட்கார்ந்துகொண்டோம். இரவு 10.30 மணிக்கு வான்கலம் புறப்படுவதாக இருந்தது. நாடாளுமன்ற மாளிகையை அடைந்தபோது, லட்சக்கணக்கான மக்கள் சோகத்துடன் பின்தொடர்ந்துவந்தனர்.
  • ஏற்கெனவே இரவு 10 மணி ஆகியிருந்தது. இரவு 10.30 மணிக்கு வான்கலம் பறந்தாக வேண்டும் என்று, அந்தத் துக்கம்கொண்ட மக்களிடம் எடுத்துச்சொன்னோம். எனவே, அவர்கள் இப்போது திரும்பிப்போக வேண்டும். அப்போதுதான் கொஞ்சம் வேகப்படுத்த முடியும். சஃப்தர்ஜங் விமான நிலையம் சென்றதும், சுமையுந்திலிருந்து வான்கலத்துக்கு உடல் மாற்றப்பட்டது. தங்களுடைய தலைவரைக் கடைசியாகப் பார்ப்பதற்காக, விமான நிலையத்தைச் சுற்றி மாபெரும் மானுடக் கடல் திரண்டிருந்தது.
  • சாஹேபின் உடலை பம்பாய்க்குக் கொண்டுசென்றபோது வான்கலத்தில் பதினொன்று அல்லது பன்னிரண்டு பேர் இருந்தார்கள். எங்கள் சமையல்காரர் சுதாமா, சோஹன்லால் சாஸ்திரி, சங்கரானந்த் சாஸ்திரி, நானக் சந்த் ரட்டு, பதந்த் ஆனந்த் கௌசல்யாயன், டி.பி.போஸ்லே (பொறியாளர்), ராய்சிங், துலாதாஸ், நான், இன்னும் சிலர்.
  • அதிகாலை 3 மணியளவில் சான்டாக்ரூஸ் விமான நிலையத்தில் நாங்கள் இறங்கி, சாஹேபின் உடலுடன் ராஜ்கிரஹா சென்றோம். சாஹேபின் உடலை எதிர்பார்த்து, முந்தைய நாளிலிருந்தே ஆயிரக்கணக்கானவர்கள் அங்கே காத்திருந்தனர். விமான நிலையத்திலிருந்து ராஜ்கிரஹாவரை வரிசையாகத் தெருவின் இருபுறங்களும் துக்கம்நிறைந்த மக்கள்திரளால் நிறைந்திருந்தன.
  • ராஜ்கிரஹாவைச் சுற்றியிருக்கும் கூட்டம் லட்சக்கணக்கில் இருந்தது. அவர்களின் பதைபதைப்பு எல்லாக் கட்டுப்பாடுகளையும் தகர்த்தெறிந்தது. ராஜ்கிரஹாவின் தாழ்வாரத்தில் மக்களின் பார்வைக்காக சாஹேபின் உடல் வைக்கப்பட்டது. முந்தைய நாளிலிருந்து காத்திருக்கும், சோர்வும் பசியும் வெறுமையும் கொண்டிருக்கும் மக்கள் இப்போது சாஹேபின் உடலைக் கடைசியாகப் பார்ப்பதற்காக வரிசையில் நின்றுகொண்டிருந்தனர்.

நன்றி: அருஞ்சொல் (06 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories