TNPSC Thervupettagam

அம்பேத்கர் எனும் முன்னுதாரணர்!

December 6 , 2019 1868 days 1626 0
  • இரண்டு பெரிய சமூகக் குழுக்கள் சமூகரீதியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டவை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ளது. முதலாவது குழுவினர், தாழ்த்தப்பட்டவர்கள் - தலித்துகள் என்று அன்றாட வழக்கில் குறிப்பிடப்படுபவர்கள். இரண்டாவது குழுவினர், பழங்குடியினர் - ஆதிவாசிகள் என்று அறியப்பட்டவர்கள். இவ்விரு குழுக்களுமே அசாதாரணமான முறையில் பல்வேறுபட்ட குணாம்சங்களைக் கொண்டவை. மொழி, சாதி, குலம், மதம், வாழ்முறை ஆகியவற்றால் வித்தியாசமானவர்கள்.
  • ஆந்திர பிரதேசத்தில் வாழும் மடிகா, உத்தர பிரதேசத்தின் ஜாதவ் என்ற இரு பிரிவினருக்கும் இடையில் பொதுவான அம்சம் ஏதும் கிடையாது, அரசு வேலைக்கு ‘பட்டியல் இனத்தவர்’ என்ற பிரிவில் விண்ணப்பிக்க முடியும் என்பதைத் தவிர. தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இருளர்களுக்கும் மத்திய பிரதேசத்தின் மகாதேவ மலைக் குன்றுகளில் வாழும் கோண்ட் சமூகத்துக்கும் எதுவும் பொதுவில்லை, அவ்விருவரும் ‘பழங்குடி’ என்று அரசால் வகைப்படுத்தப்பட்டிருப்பதைத் தவிர.

அம்பேத்கர்

  • இந்தியா முழுவதிலும் இருக்கும் தலித்துகள் ஒரேயொரு விஷயத்தில் ஒற்றுமைப்படுகிறார்கள். அவர்கள் கேரளம், கர்நாடகம், பஞ்சாப் அல்லது வங்கம் என்று எந்த மாநிலத்தில் வாழ்ந்தாலும் அவர்களுடைய ஆதர்ச புருஷராகத் திகழ்கிறார் பாபா சாஹேப் பீம்ராவ் அம்பேத்கர். அவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தும், சுதந்திர இந்தியாவின் அரசில் மிகப் பெரிய பதவிகளை வகித்தும் அவர் வாழ்ந்த காலத்தில் மகாராஷ்டிரத்தில் தான் சார்ந்த மஹர் சமூக மக்களிடையே மட்டுமே சமூகத் தலைவராகக் கொண்டாடப்பட்டார்.
  • மறைவுக்குப் பிறகு, அவருடைய அறிவுத்திறனும் ஆளுமையும் உணரப்பட்டதால் நாடு முழுவதிலும் உள்ள தலித்துகள் போற்றிக் கொண்டாட வேண்டிய தலைவராக உயர்ந்து நிற்கிறார். அம்பேத்கருடன் ஒப்பிடும்போது பழங்குடிகளுக்கு, அப்படியொரு தேசியத் தலைவர் முன்னரும் இல்லை, இப்போதும் இல்லை. நாட்டின் எல்லாப் பிராந்தியங்களிலும் எல்லா மொழிப் பகுதிகளிலும் செல்வாக்கு மிக்கவராக ஒரு பழங்குடித் தலைவர் உருவாகவில்லை.

அம்பேத்கரை வாசித்த அவத்

  • தலித்துகளிடையே அம்பேத்கருக்கு இருக்கும் செல்வாக்கு அபரிமிதமானது. ஏக்நாத் அவத் எழுதிய சுயசரிதையைப் படிக்கும்போது இந்த நினைவுகள் மீண்டும் என்னுள் பசுமைபூத்துக் குலுங்குகிறது. மராத்தி மொழியில் அவத் எழுதிய இந்நூலை ஜெர்ரி பின்டோ அருமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். மகாராஷ்டிர மாநிலத்தின் மராத்வாடா பகுதியில் மாங் என்ற பழங்குடிகள் பிரிவில் பிறந்தவர் ஏக்நாத் அவத்.
  • கல்வி கற்று முன்னேறிவிட வேண்டும் என்ற ஆவல் அவருக்கு இளம் வயதிலேயே ஏற்பட்டுவிட்டதால், அவருடைய உறவினர்கள் அவரை ‘மஹார்ச்சா அவுலத்’ என்று செல்லமாகக் கூப்பிடத் தொடங்கினார். அப்படியென்றால், ‘மஹர்களின் புதல்வன்’ என்று பொருள். மஹர் பிரிவு சமூகத்தில் பிறந்த அம்பேத்கர், “கல்வி என்பது புலிப் பாலைப் போன்றது. அதைக் குடித்த எவராலும் புலியைப் போல உறுமுவதைத் தவிர, அடங்கி நடந்துவிட முடியாது” என்பார்.
  • உயர்நிலைப் பள்ளி மாணவராக இருந்தபோதே அம்பேத்கர் பற்றி நிறையப் படித்தார் ஏக்நாத் அவத். சோஷலிஸ்ட் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாத் பாய் நிகழ்த்திய பொதுக்கூட்ட உரைகளையும் ஆர்வமாகக் கேட்பார். ஒருகாலத்தில், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம் ஊட்டிய நாத் பாய், இப்போதைய தலைமுறையால் மறக்கப்பட்டுவிட்டது துரதிர்ஷ்டவசமானது.
  • 1970-களின் தொடக்கத்தில் செயல்பட்ட தலித் பேந்தர்ஸ் கட்சி, ஏக்நாத் அவத்துக்கு மிகுந்த உத்வேகத்தை அளித்தது. மராத்வாடா பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கர் பெயரைச் சூட்ட வேண்டும் என்று பெரிய போராட்டத்தை அந்தக் கட்சி நடத்தியது.
  • “பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கர் பெயரை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாபெரும் ஊர்வலம் முதல் நாள் நடந்தால், வைக்கக் கூடாது என்று வலியுறுத்தி எதிர்ப்பாளர்களால் அடுத்த நாள் இன்னொரு பெரிய ஊர்வலம் நடைபெறும்.
  • இப்படித் தொடர்ச்சியாக ஆதரித்தும் எதிர்த்தும் ஊர்வலங்கள் நடந்தபடி இருந்தன. மராத்வாடா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக் கூடாது என்று சிவசேனை எதிர்ப்புத் தெரிவித்தது. அப்போது சமூகத்தின் எல்லாத் தரப்பிலும் இதனால் எதிரெதிர் கருத்துகள் உருவாயின. மாணவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் தொடங்கி கிராமவாசிகள் வரை மக்கள் இரு கட்சிகளாகப் பிரிந்துவிட்டார்கள்” என்று எழுதுகிறார் ஏக்நாத் அவத்.

மேல் சாதியினரின் ஒடுக்குமுறை

  • இந்த இயக்கத்தால் எரிச்சல் அடைந்த மேல் சாதியினர், கோரிக்கையை ஆதரிப்பவர்களைக் கடுமையாக ஒடுக்க முற்பட்டனர். மஹர்களின் வீடுகளும் உடைமைகளும் திட்டமிட்டுத் தீ வைத்து எரிக்கப்பட்டன. மராத்வாடா பகுதியில் 180 கிராமங்களில் தீயிடல் சம்பவங்கள் நடந்தன. 10 நாட்களுக்கும் மேல் கலவரம் நீடித்தது. தலித் வீடுகள் ஆயிரத்துக்கும் மேல் எரிக்கப்பட்டன.
  • இந்தக் கலவரங்கள் கல்லூரி மாணவனாக இருந்த என்னை மிகவும் பாதித்தது. தலித்துகள் தாக்கப்படுகிறார்கள் என்ற தகவல்கள் வரவர எனக்குள் கோபம் கொப்பளிக்கும். உணர்ச்சிவசப்படுவேன். எனது எதிர்ப்பை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று முற்படுவேன். எங்களுடைய கிராமத்திலேயே பலரும் என்னால் கோபம் அடைந்ததால் என்னுடைய பாதுகாப்பு குறித்து என் அன்னை மிகவும் அச்சப்படுவார்.
  • “வறுமைக்கு எதிராகவும் சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் போராடினேன். மனித உரிமைகளும் மற்றவர்களுக்குள்ள சலுகைகளும் மறுக்கப்படுவது மகிழ்ச்சிகரமான விஷயமல்ல. வாழ்நாள் முழுவதும் அவமதிப்பும் அவமரியாதையும்தான் கிடைக்கும் என்றால் அந்த வாழ்க்கை நிச்சயம் மகிழ்ச்சிகரமானதாக இருக்க முடியாது. வாழ்க்கையில் தனக்கேற்பட்ட சூழலிலிருந்து விடுபட முற்படும்போதும், அநீதிக்கு எதிராக ஆயுதம் ஏந்தும்போதும் வாழ்க்கை வேறொரு வடிவில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
  • இந்தப் போராட்டமே என்னுடைய ஆத்திரத்தையும் கோபத்தையும் குறைத்துவிடுகிறது. இது எனக்குப் பழக்கமாகவே மாறிவிட்டது. 1970-களிலும் 1980-களிலும் தலித்துகள் என்றாலே விஷம் தோய்ந்த அணுகுமுறைகளையே கையாண்டன சிவசேனையும் காங்கிரஸ் கட்சியும். மும்பை மாநகரைத் தளமாகக் கொண்ட சிவசேனை மராத்தாக்களுடைய உரிமைகளை வலியுறுத்தும் கட்சியாகப் பெயரெடுத்தது. கிராமங்களிலோ இந்து சாதியவாதத்தைத் தூக்கிப் பிடிக்கும் கட்சியாகத் திகழ்ந்தது” என்று எழுதியிருக்கிறார் ஏக்நாத் அவத்.

ஆதிவாசிகளுடன் சமூகப் பணி

  • கல்லூரியில் பி.ஏ., முடித்த பிறகு, சமூகப் பணிப் பிரிவில் எம்.ஏ., பட்டம் பெற்றார் அவத். சோஷலிஸ சித்தாந்தம் கொண்ட மேல் சாதி தம்பதியினருடன் இணைந்து, ஆதிவாசிகளின் மேம்பாட்டுக்காக உழைக்கத் தொடங்கினார். இந்திய சமூகத்திலேயே அதிகம் சுரண்டப்பட்ட சமூகம் பழங்குடியினர்தான். ஆதிவாசிகளுக்கும் தலித்துகளுக்கும் என்ன வேறுபாடு என்று தன்னுடைய அனுபவங்களிலிருந்து எழுதுகிறார் அவத். “எவ்வளவு துயரம் என்றாலும் ஆதிவாசிகள் தாங்கிக்கொள்வார்கள்; எவ்வளவு பெரிய போராட்டம் என்றாலும் தயாராக இருப்பார்கள் தலித்துகள். எந்தவித சமூக இயக்கத்திலும் புரட்சியிலும் இதர சமூகக் குழுக்களையோ அல்லது தலைவர்களையோ பின்பற்றுகிறவர்
  • களாகவே பழங்குடிகள் இருக்கின்றனர். அவர்களுக்கென்று ஒரு தலைவர் இல்லை. இன்றும்கூடப் பழங்குடிகளுக்கிடையே சிலர்தான் தலைவர்கள் என்ற நிலையில் இருக்கின்றனர். அம்பேத்கரின் மஹர் பிரிவு மக்களைவிட, நான் பிறந்த மாங் சமூகத்தவர் மற்றவர்களுக்கு அதிகம் அடிபணிந்துபோகிறவர்களாக இருக்கின்றனர். இந்நிலை மாற, பாரம்பரியமாக நாம் செய்யும் தொழிலைக் கைவிட்டு, நவீனக் கல்வி பெறுவதில் முனைப்புக் காட்ட வேண்டும் என்று பழங்குடிகளிடையே பிரச்சாரம் செய்கிறேன்” என்று நூலில் எழுதியிருக்கிறார் அவத்.
  • தான் பங்கேற்ற பல போராட்டங்களைப் பற்றி நூலில் விவரித்திருக்கிறார் அவத். அவற்றில் சிலவற்றில் அவருக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. “தொடர்ச்சியாக வெவ்வேறுவிதமான போராட்டங்களிலேயே காலத்தைக் கழித்தேன். கெரோ, ஊர்வலம், தர்ணா, உண்ணாவிரதப் போராட்டம் என்று அவற்றின் வடிவங்கள் பல. அந்நாட்களில் பெரும் பகுதியைக் காவல் நிலையங்களிலும் அரசு அலுவலகங்களிலும்தான் கழிப்பேன். சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி நியாயம் கேட்பேன். இதனால், எல்லா கிராமங்களிலும் எனக்கு எதிரிகள் ஏற்படலாயினர். கொலை மிரட்டல்கள் என்னைத் தொடர்ந்தன” என்று அவற்றைக் குறிப்பிடுகிறார் ஏக்நாத் அவத்.

மாற்றாந்தாய் மனநிலை

  • ஏக்நாத் அவத் எழுதிய புத்தகம் ‘ஸ்டிரைக் எ ப்ளோ டு சேஞ்ச் தி வேர்ல்ட்’ (Strike a Blow to Change the World) என்ற தலைப்பில் வெளிவந்திருக்கிறது. நாட்டின் சமூகவியலைத் தெளிவாகப் புரி்ந்துகொள்ள உதவும் இந்நூல், இலக்கியத் தரத்திலும் இருக்கிறது. தன்னுடன் கிளர்ச்சிகளில் பங்கேற்றவர்கள், மனைவி உள்ளிட்ட உறவினர்கள் பற்றி மிகவும் நெகிழ்ச்சியாகப் பல தகவல்களைத் தந்திருக்கிறார்.
  • சமூக நீதிக்குத் தடையாக உள்ள சக்திகளையும் - உதவும் சக்திகளையும் விரிவாக அடையாளம் காட்டியிருக்கிறார். தலித்துகளுக்குச் சோறு கொடுத்து,, காங்கிரீட்டில் சில வீடுகளைக் கட்டிக்கொடுப்பதாலேயே தீண்டாமை ஒழிந்துவிடாது; அவர்களுக்குள்ள சுயமரியாதை உணர்வைத் தட்டி எழுப்பினால்தான் தீர்வு கிட்டும் என்கிறார்.
  • தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைவாங்கும் மாங் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரே மனிதாபிமானமற்றவராக மாறிவிட்டதைச் சுட்டிக்காட்டி எழுதியுள்ளார். “ஒருவருடைய சாதி எப்படிப்பட்டதாக இருந்தாலும், கையில் கொஞ்சம் அதிகாரம் கிடைத்துவிட்டால், கரும்பு வெட்டும் தொழிலாளியானாலும் அவரை அடக்கி ஒடுக்கும் அளவுக்கு ஆணவத்தைப் பெற்றுவிடுகிறார்கள்” என்று வருந்துகிறார்.
  • “சமூகத் தொண்டனாக நான் அடியெடுத்து வைத்தபோது மாங் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால், தலித்துகளுக்கான பெரிய கட்சியைச் சேர்ந்தவர்கள் என்னை மாற்றாந்தாய் மனப்போக்கிலேயே நடத்தினார்கள். பாபா சாஹேப்பின் பெயரை உச்சரிக்கத் தங்களுக்கு மட்டுமே உரிமை என்பதைப் போல என்னிடம் நடந்துகொண்டார்கள்.
  • அவருடைய பெயரை ஒரு சாதியினருக்கு மட்டுமே சொந்தமாகக் குறுக்கிவிட முடியாது” என்கிறார் அவத். அம்பேத்கரின் சாதனைகளை அனைத்து மக்களிடையேயும் பரப்புவதில் அவத் பெரும் பங்காற்றியிருக்கிறார். மஹர்களைப் போலவே மாங் சமூகத்தவருக்கும் உத்வேகம் ஊட்ட அவரை அடையாளச் சின்னமாக்கியிருக்கிறார். அவர்கள் மட்டுமல்ல, உயர் சாதியைச் சேர்ந்த பல தனிநபர்களும் பாபா சாஹேப்பின் பெயரால் உத்வேகம் அடையக் காரணமாக இருந்திருக்கிறார்.

1970-களில்....

  • 1970-களில் மராத்வாடா பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கர் பெயரைச் சூட்ட உயர் சாதிக்காரர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததை மாணவராக இருந்த ஏக்நாத் நேரிலேயே பார்த்தவர். பல ஆண்டுகளுக்குப் பிறகு அம்பேத்கரின் துணைவியார் ரமா பாய் பெயரில் கூட்டுறவுச் சங்கம் ஒன்றை துவக்கிய ஏக்நாத், அதை மிகவும் வெற்றிகரமாக நிர்வகித்தார்.
  • மீனவர்கள், கால்நடை வளர்ப்போர், வளையல் செய்வோர் என்று பலதரப்பட்ட தொழில்களைச் செய்வோரும் அந்தக் கூட்டுறவுச் சங்கத்திலிருந்து குறைந்த வட்டிக்குக் கடன் பெற்று, சிறப்பாகத் தொழில்செய்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்தனர். அதிக வட்டி வாங்கும் ஈட்டிக்காரர்களிடமும் அதிகாரத் தரகர்களிடமும் சிக்கிக்கொள்ளாமல் நிம்மதியாகத் தொழில் செய்தனர். 2010-ல் இந்தக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பயன் பெறுவோர் எண்ணிக்கை 20 லட்சம் குடும்பங்களாக உயர்ந்தது.
  • இதைப் பற்றி நியாயமான பெருமித உணர்வோடு ஏக்நாத் அவத் பின்வரும் செய்தியைப் பதிவுசெய்கிறார்: “மராத்வாடா பல்கலைக்கழகத்துக்கு பாபா சாஹேப் அம்பேத்கர் பெயரை வைக்க வேண்டும் என்று நான் வாதாடியபோது, என்னை எதிரியாகப் பார்த்த உயர் சாதி கிராமவாசிகள், அம்பேத்கரின் மனைவி பெயரில் இருந்தும் கூட்டுறவு சங்கத்தைத் தங்களுடையதாகப் பாவித்து, சிறு கடன்களைப் பெற்று முன்னேற்றம் பெறுகின்றனர்.

கல்வி

  • இதைவிட எனக்கு மகிழ்ச்சி வேறு என்ன வேண்டும்! மிகவும் பின்தங்கிய இந்த மாவட்டத்தில் அம்பேத்கரின் பிறந்தநாள் நூற்றாண்டை உயர் சாதியினர் கொண்டாடுகின்றனர். இப்படியெல்லாம் நடக்கும் என்று யாராவது முன்னர் கற்பனை செய்திருப்பார்களா? இப்போது இது ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா!” என்கிறார்.
  • அம்பேத்கர் இறந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இந்தியா முழுவதும் உள்ள தலித்துகள் கல்வி கற்கவும், ஒன்றுசேரவும், தங்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடவும் உந்துசக்தியாகத் திகழ்கிறார். சாதிய ஒடுக்குமுறைகளைத் திணித்தால் அவற்றை எதிர்த்துப் போராடும் ஆற்றலைப் பெற்றுள்ளனர். அம்பேத்கரின் பெயருக்குள்ள மகத்துவத்தையும் அவருடைய ஆதரவாளர்களின் இயக்கத்துக்குள்ள வலிமையையும் உயர் சாதிக்காரர்களும் உணர்ந்து இன்று மதிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
  • இது நீண்ட காலத்துக்குப் பிறகு நிகழ்ந்ததாக இருக்கலாம், இப்படி நடக்க அவர்களில் பலர் மனதளவில் தயாராக இல்லாமல் முணுமுணுத்திருக்கலாம், இனியும் அவருடைய செல்வாக்கை அங்கீகரிக்காமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு அவர்கள் வந்துவிட்டனர். தன்னுடைய மறைவுக்கும் பின்னால், நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு தார்மீக நிலையில், அரசியல் களத்தில், அறிவுத் தளத்தில் தலித்துகள் உத்வேகம் பெற ஆதார சக்தியாகத் திகழ்கிறார் அம்பேத்கர். துரதிர்ஷ்டவசமாகப் பழங்குடிகளுக்குக் கண்ணியத்தையும் சுயமரியாதையையும் ஊட்ட அப்படியொரு தலைவர் இல்லை.

நன்றி: இந்து தமிழ் திசை (06-12-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories