TNPSC Thervupettagam

அம்பேத்கர்: எல்லோருக்குமான தலைவர்

January 9 , 2024 380 days 393 0
  • தமிழ்நாடு கண்ட சிறந்த ..எஸ். அதிகாரிகள் என்று ஒரு பட்டியல் தயாரித்தால் கே. அஷோக் வர்தன் ஷெட்டியின் பெயர் நிச்சயம் இருக்கும். கலைஞர் மு.கருணாநிதியின் கடைசி ஆட்சிக் காலத்தில், முதல்வர் அலுவலகப் பணியில் இருந்தார். நிர்வாகத்துக்கு இணையாக அவருக்குப் பெரும் ஆர்வம் உள்ள இன்னொரு களம் கல்வி. சென்னையிலுள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றியவர். சென்னை வருமான வரி மாளிகையான ஆய்கர் பவனில் சமீபத்தில் நடந்த பி.ஆர்.அம்பேத்கர் நினைவு நாள் கருத்தரங்கில் அசோக் வர்தன் ஷெட்டி உரையாற்றினார். செறிவான அந்த உரையின் முக்கியத்துவம் கருதிஅருஞ்சொல்அதன் எழுத்து வடிவத்தை வாசகர்களுக்காக இங்கே தருகிறது. - ஆசிரியர் 

வில்லியம் ஷேக்ஸ்பியரின் இந்த வாசகத்தை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் என நான் நம்புகிறேன்

  • சிலர் சான்றோராகப் பிறக்கின்றனர், சிலர் சான்றோர் நிலையை அடைகின்றனர், சிலர் சான்றோர் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.” இத்துடன் மேலும் ஒன்றைச் சேர்க்க விரும்புகிறேன். அதாவது, சிலரின் உண்மையான பெருமையோ அவர்களின் மறைவுக்குப் பின்னர் நீண்ட காலம் கழித்து அறிந்துணரப்பட்டு, நாளுக்கு நாள் அப்பெருமை ஓங்கி வளர்கிறது. பாபாசாகேப் என்று அழைக்கப்படும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இந்த நான்காவது வகையைச் சேர்ந்த பெருமகனார் ஆவார்.

இரு ஆளுமைகள் ஓர் ஒற்றுமை

  • தாமஸ் பெய்ன் மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோரின் வாழ்விற்கிடையே குறிப்பிடத்தக்க ஓர் ஒற்றுமையை நான் காண்கிறேன். “அவரது பெயரை விட்டுவிட்டு சுதந்திரத்தின் வரலாற்றை எழுத இயலாதுஎன்பது தாமஸ் பெய்ன் பற்றிய கூற்றாகும்.
  • ஓர் ஆங்கிலேயரான அவர் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்து, அமெரிக்க சுதந்திரப் போர் மற்றும் பிரெஞ்சு புரட்சி என்னும் இருவேறு புரட்சிகளில் பங்குபெற்ற தனிச் சிறப்பு மிக்கவராகத் திகழ்ந்தார். அமெரிக்காவை நிறுவியவர்களில் ஒருவரான அவர், புரட்சிமிகு பிரான்ஸின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், பெரும்பாலான மக்கள் அவரைப் பற்றி கேள்விப்பட்டிருப்பது குறைவே.
  • இதன் காரணம் என்னவெனில், 1794ஆம் ஆண்டில் தாமஸ் பெய்ன்பகுத்தறிவின் காலம்’ (Age of Reason) என்ற நூலை எழுதினார், இந்நூல் பைபிள் மற்றும் கிறிஸ்தவம் குறித்து கடுமையாக விமர்சித்தது. இது அவரை மிகவும் சர்ச்சைக்குள்ளாக்கி அவரின் பெருமை குன்றச் செய்தது. இதன் விளைவாக 1809இல் அவரது இறுதிச் சடங்கில் ஆறு பேர் மட்டுமே கலந்துகொண்டனர். ஓர் அமெரிக்க செய்தித்தாள் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “அவர் நீண்ட காலம் வாழ்ந்தார், சில நன்மைகளையும் பல தீமைகளையும் செய்தார்என்று தெரிவித்திருந்தது.
  • இது அவரது மரணத்திற்குப் பிறகும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வரலாற்றின் தீர்ப்பாக இருந்தது. அமெரிக்க வரலாற்றிலிருந்து அவரது பெயரை அழிக்க திட்டமிட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இந்நிலை மாறி, 1952இல் அமெரிக்கப் புகழ் மன்றத்தில் (US Hall of Fame) அவரது மார்பளவு சிலை வைக்கப்பட்டது. தாமஸ் பெய்ன் தற்போது, ‘ஆங்கில வால்டேர்’ (the English Voltaire) என்றும், சுதந்திரத்தின் உண்மையான வாகையராகவும் பின்தங்கியவர்களின் பாதுகாவலராகவும் கருதப்படுகிறார்.
  • ராபர்ட் கிரீன் இங்கர்சால் தாமஸ் பெயினுக்கு அளித்த, நினைந்து போற்றத்தக்க புகழுரை, அம்பேத்கருக்கும் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது: “அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்... அவர் பிறந்த நாட்டில் குடிமக்கள் உண்மையான சுதந்திரம் என்னவென்று அறியாது, அவர்களுக்கும், அவர்களின் உடைமைகளுக்கும் பாதுகாப்பின்றி, அடிமைச் சங்கிலிகளால் கட்டுண்டு அத்தகைய வகுப்பினர்களுக்கான சலுகைகள் எல்லையில்லா விரோத மனப்பான்மை உடையவரால் மறுக்கப்பட்டு, தனிநபரின் உரிமைகள், மதகுருமார்கள் மற்றும் உயர்குடியைச் சேர்ந்த பிரபுக்களின் காலடியில் நசுக்கப்பட்டிருந்தது. நீதிக்காக வாதாடுவது தேசத் துரோகமாக கருதப்பட்டிருந்தது. அவர் ஒவ்வொரு நிலையிலும் அடக்குமுறையையும், எங்கும் அநீதியையும், வழிபாட்டுத்தலத்தில் கபட நாடகத்தையும், அவையில் பணப் பேராசை கொண்டோரையும், அரியாசனத்தில் கொடுங்கோலரையும் கண்டார். மேலும் வலிமையானவர்களுக்கு எதிராக பலவீனமானவர்களுக்கும், உயர்குடி மதிப்புடைய சிலருக்கு எதிராக அடிமைப்படுத்தப்பட்டோருக்கும் உற்ற துணையாகத் திகழ்ந்தார்.”
  • இப்புகழுரை அம்பேத்கருக்கு முற்றிலும் பொருந்தும். ஆனால், ஒரு வகையில் அம்பேத்கர் மிகச் சிறந்த புரட்சியாளர். தாமஸ் பெய்ன் அரசியல் கொடுங்கோன்மைக்கு எதிராகப் போராடினார். அதேநேரத்தில், அம்பேத்கர் சமுதாயத்தில் நிலவும் கொடுங்கோன்மைக்கு எதிராகப் போராடினார். அவர் கூறியதுபோல், “சமூகக் கொடுங்கோன்மையுடன் ஒப்பிடும்போது  அரசியல் கொடுங்கோன்மை என்பது ஒன்றுமில்லை. மேலும், சமூகத்தில் நிலவும் கொடுமைகளை எதிர்த்து நிற்கும் சீர்திருத்தர், அரசை வழிநடத்தும் அரசியலரைவிடத் தைரியமானவர்என்பது தெளிவாகிறது.
  • இந்து சாதி அமைப்பு மற்றும் தீண்டாமையின் அடக்குமுறைக்கு எதிரான அம்பேத்கரின் புரட்சி, ‘நான் இந்துவாக பிறந்தாலும் இந்துவாக இறக்க மாட்டேன்என்று வெளிப்படையாக அறிவித்தது. இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு 5 லட்சம் ஆதரவாளர்களுடன் புத்த மதத்திற்கு மாறியது அவரைப் பெரும் சர்ச்சைக்குள்ளாக்கியது. அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் தனஞ்சய் கீர் 1956இல்இந்தியாவின் மிகவும் வெறுக்கப்பட்ட மனிதர்என்று அவரை விவரித்தார். அம்பேத்கர் இறந்தபோது, பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒரு சுருக்கமான இரங்கல் செய்தியை வெளியிட்டார். அதில் அவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்இந்திய அரசியலின் மிகவும் சர்ச்சைக்குரிய நபர்என்று  குறிப்பிட்டார்.

நினைவுகளின் புத்துயிர்ப்பு

  • இதில் 1956ஆம் ஆண்டு மற்றும் 1990ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலங்களில், அம்பேத்கரின் பெயரைப் பொதுமக்களின் நினைவிலிருந்து அழிக்க மறைமுகமாக கூட்டுச் சதி நடைபெற்றது. பள்ளிப் பாடப்புத்தகங்களில் அவரின் பெயர் குறிப்பிடப்படாமல் அல்லது போகிறபோக்கில் கடமைக்குக் குறிப்பிடப்பட்டது. பொருளாதாரம், சமூகவியல், அரசியல் அறிவியல் மற்றும் சட்டம் ஆகியவற்றில் அவர் மிகவும் கருத்தாழமிக்க நூல்களை எழுதியிருந்தாலும், கல்லூரிப் பாடப்புத்தகங்களில் அவருடைய கருத்துகள் குறித்து விவாதிக்கப்படவில்லை.
  • ஆனால், தாமஸ் பெயினுக்கு நடந்த நிகழ்வைப் போன்றே, இந்நிலை தலைகீழாக மாறியது. 1990ஆம் ஆண்டிலிருந்து அம்பேத்கரின் புகழ் மீண்டும் புத்துயிர் பெற்றது.
  • நாடு முழுவதும் உள்ள பட்டியல் சாதியினரின் அரசியல் ஒருங்கிணைப்பு காரணமாகவும், அறிவார்ந்த பட்டியல் இனத்தவரின் எழுச்சி காரணமாகவும், பாபாசாகேப்பின் கருத்துக்கள் குறித்து எழுதப்பட்ட புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் இந்த மறுமலர்ச்சி ஏற்பட்டது. அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் அவருக்கும், அவரது கருத்துக்களுக்கு மிகவும் எதிராகவும் இருந்த அரசியல் கட்சிகள்கூட இப்போது அவரைத் தங்கள் பக்கத்தில் காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றன. பொருளாதார வல்லுநர்கள் - இடது மற்றும் வலதுசாரி கோட்பாடுடையவர்கள், தங்களின் கருத்துகளுக்கு ஆதரவாக, அவரது படைப்புகளை மேற்கோள் காட்ட முயற்சிக்கின்றனர்.

பாரத ரத்னா அரசியல்

  • இந்தப் பெயர்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா - பகவான் தாஸ், கோபிந்த் பல்லப் பந்த், டி.கே.கார்வே, டாக்டர் பி.சி.ராய், புருஷோத்தம் தாஸ் டாண்டன் மற்றும் பி.வி.காணே?
  • ஆம் எனில், அவர்கள் எதற்காகப் புகழ்பெற்றார்கள் என்பதைக் கூற முடியுமா? இந்த மகத்தான மனிதர்கள் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினர். ஆனால், அம்பேத்கருடன் ஒப்பிடும்போது அவர்களின் பங்களிப்பு சிறியது. இருப்பினும், பகவான் தாஸுக்கு 1955இல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
  • ஜி.பி.பந்த்துக்கு 1957, டி.கே.கார்வேவுக்கு 1958, டாக்டர் பி.சி.ராய் மற்றும் பி.டி.டாண்டன் ஆகியோருக்கு 1961, பி.வி.காணேவுக்கு 1964இல் பாரத ரத்னா வழங்கப்பட்டது. பாகிஸ்தானின் கான் அப்துல் கஃபர் கான்கூட 1987இல் பாரத ரத்னா விருது பெற்றார், நம் எம்.ஜி.ஆருக்கு 1988இல் பாரத ரத்னா வழங்கப்பட்டது. ஆனால், அம்பேத்கருக்கு அவர் இறந்து 34 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
  • 1990இல் மண்டல் ஆணையத்தின் பரிந்துரையை அமல்படுத்தி, ஏனைய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) பொதுத் துறையில் 27% வேலைவாய்ப்பினை ஒதுக்கீடு செய்ததற்காகவும் வி.பி.சிங்கை நாம் நினைவுகூர்கிறோம். 1990இல் அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்கியதற்காகவும் வி.பி.சிங்கிற்கு நாம் நன்றி கூற வேண்டும். ஒருபோதும் செய்யாமால் இருப்பதைக் காட்டிலும் தாமதமாகச் செய்வது மேலானது.
  • 1979இல் மராட்டிய மாநிலத்தின் முதல்வராக இருந்தபோது, அம்பேத்கரின் கட்டுரைகளையும் உரைகளையும் தொகுக்க ஒரு குழுவை அமைத்து, அவற்றை 17 தொகுதிகளாக, ஆயிரக்கணக்கான பக்கங்களில், மராட்டிய அரசின் கல்வித் துறை வாயிலாக வெளியிடச் செய்த சரத் பவாருக்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும். அவர்களின் இந்த வெளியீடு, இந்தியா உருவாக்கிய மிகச் சிறந்த அறிவார்ந்த மனிதர் ஒருவரின் மனதை அறிந்துகொள்ள உதவியது.
  • தாமஸ் பெய்ன்ஆங்கில வால்டேர்என்றால், பி.ஆர்.அம்பேத்கர்இந்திய வால்டேர்ஆவார். 1944இல்இந்தியா மீதான தீர்ப்புஎன்ற தலைப்பிலான புத்தகத்தில், பிரபல பிரிட்டிஷ் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பெவர்லி நிக்கோல்ஸ், அம்பேத்கரைஉலகின் ஆறு தலைசிறந்த அறிவாளிகளில் இவரும் ஒருவர்என்று குறிப்பிட்டார்.

பிராட்மேன் தரம்

  • எனக்கு நேர்ந்த நிகழ்வொன்றைக் கூறுகிறேன். 1983இல் என்னுடன் இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்த அனைத்து அலுவலர்களும் உள்ள வாட்ஸப் குழு (WhatsApp group) ஒன்று இருக்கிறது. ஒருமுறை எங்களது வாட்ஸப் குழுவில், 20ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மிகச் சிறந்த அசல் சிந்தனையாளர் மற்றும் எழுத்தாளர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் என நான் குறிப்பிட்டிருந்தேன்.
  • புலமை, சுயமாகச் சிந்திக்கும் தன்மை, எழுத்துகளின் அகலம் மற்றும் ஆழம் ஆகியவற்றின் அடிப்படையில், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணன், சி.ராஜகோபாலாச்சாரி, ஆரோபிந்தோ கோஷ் ஆகியோரைக் காட்டிலும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்தான் சிறந்தவர்என நான் கூறினேன். “இது விவாதத்திற்குரியதுஎன்று எங்களது அணியிலிருந்த ஒருவர் பதிலளித்தார். “சரி, அதுகுறித்து விவாதிப்போம்என நான் சொன்னேன்.
  • நான் அவரிடம் கேட்டேன், “பாபாசாகேப்பின் 17 தொகுதிகள் என்னிடம் உள்ளன. மேலும், முதல் 11 தொகுதிகளின் பெரும் பகுதிகளை நான் படித்திருக்கிறேன். நீங்கள் அம்பேத்கர் எழுதிய எத்தனை படைப்புகளைப் படித்திருக்கிறீர்?” அவர் எதையும் படித்ததில்லை எனக் கூறினார். “நல்லது. அம்பேத்கரின் ஒரு படைப்பைக்கூட நீங்கள் படிக்கவில்லை, ஆனாலும் இதுபோன்ற கருத்தைத் தெரிவிக்கிறீர்கள். உங்கள் சாதிப் பாகுபாடு அல்லவா இவ்வாறு பேசுகிறது?” என்று நான் அவரிடம் கேட்டேன். அவர் பதிலளிக்கவில்லை.
  • சீனிவாசன் ராமானுஜனின் கணிதத் திறமையைக் கண்டறிந்து, அவரை கேம்பிரிட்ஜுக்கு வரவழைத்து, அவரது திறனை வளர்த்தெடுத்த ஆங்கிலேயக் கணிதவியலாளரான ஜி.எச்.ஹார்டி, ஒரு கிரிக்கெட் ஆர்வலர். ‘பிராட்மேன் தரம்என்ற வகைப்பாடு ஒன்றை அவர் உருவாக்கினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 99.94 என்னும் சராசரி பேட்டிங் எண்ணிக்கையுடன் ஓய்வுபெற்ற சர் டொனால்ட் பிராட்மேனைப் பற்றி நீங்கள் அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.
  • தற்காலத் திறன்மிகு விளையாட்டு வீரர்களான சுனில் கவாஸ்கர், விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், குமார் சங்கக்காரா, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் விராட் கோலி ஆகியோரின் சராசரி பேட்டிங் எண்ணிக்கை 50 முதல் 60 வரை உள்ளது. பிராட்மேனுக்கு அருகில்கூட யாரும் வரவில்லை. மற்றவர்களைக் காட்டிலும் சிறந்தவராகவும், மிக மிக உயர்ந்தவராகவும் இருக்கும் ஒருவரைபிராட்மேன் தரத்தில் இருப்பவர் என ஜி.எச்.ஹார்டி கூறுவார்.
  • புலமை, சுயமாகச் சிந்திக்கும் தன்மை, எழுத்துகளின் அகலம் மற்றும் ஆழம் ஆகியவற்றின் அடிப்படையில், அம்பேத்கர், அவரது சமகாலத்தவர்களைக் காட்டிலும் உயர்ந்தவராக, ‘பிராட்மேன் தரத்தில்  இருந்தார்என நான் கருதுவதாக எங்களின் வாட்ஸப் குழுவில் தெரிவித்தேன். இம்முறை என் கருத்தை யாரும் மறுக்கவில்லை!

அரசமைப்பு உருவாக்கத்தில் அம்பேத்கரின் பங்களிப்பு என்ன

  • ஏறத்தாழ 3 மாதங்களுக்கு முன்னர், அம்பேத்கரையும் தாழ்த்தப்பட்ட சாதியினரையும் பற்றி மிக இழிவான கருத்துகளைக் கூறியதற்காக ஒரு நபர் சென்னையில் கைதுசெய்யப்பட்டார். “அம்பேத்கர் இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர் அல்லர்; அரசமைப்பு நிர்ணய சபையில் விவாதிக்கப்பட்டதைக் குறிப்பெடுத்த ஒரு சாதாரண சுருக்கெழுத்தர் அவர்என அந்நபர் கூறியிருந்தார்.
  • அவர் தனது சாதிப் பாகுபாட்டைப் பொதுவில் வெளிப்படுத்தும் அளவிற்கு முட்டாளாக இருந்தாலும், இதுபோன்ற கருத்துகளைத் தனிப்பட்ட முறையில் சிலர் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். எனவே, அம்பேத்கரின் எழுத்துகளைக் குறைத்து மதிப்பிடும் இத்தகைய மறைமுக முயற்சிக்கு விரிவான மறுப்புரை வழங்க வேண்டும் என நான் எண்ணுகிறேன்.
  • இந்திய அரசமைப்பு 389 உறுப்பினர்களைக் கொண்ட அரசமைப்பு நிர்ணய சபையால் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. ஆனால், இந்தச் சபை ஒரு வெற்றிடத்திலிருந்து அரசமைப்பை உருவாக்கவில்லை. வரைவுக் குழுவின் தலைவராக, டாக்டர். பி.ஆர்.அம்பேத்கரின் பொறுப்பு வருமாறு:
  • உலகெங்கிலும் உள்ள ஏனைய அரசமைப்புகளில் உள்ள இதே போன்ற விதிகளைப் படித்த பின்னர், அரசமைப்பின் ஒவ்வொரு சட்டப் பிரிவுக்கும் பின்னணிக் குறிப்பு தயாரிப்பது.
  • சட்டத்திற்கான வரைவுச் சொற்களைப் பரிந்துரைப்பது.
  • அரசமைப்பு நிர்ணய சபையில் சட்டப் பிரிவு பற்றிய விவாதத்தை முன்னெடுத்து நடத்துவது.
  • சட்டப் பிரிவு பற்றி ஏனைய உறுப்பினர்கள் எழுப்பிய கருத்துகளுக்குப் பதிலளிப்பது.
  • விவாதங்கள் மற்றும் ஏனையவற்றின் அடிப்படையில் சட்டப் பிரிவின் சொற்களை மறுவரைவு செய்வது.
  • அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் பாபாசாகேப்பின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை அரசமைப்பு நிர்ணய சபை விவாதங்களைப் படித்த அனைவருக்கும் தெரியும். அரசமைப்பு நிர்ணய சபையில் 250க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வழக்கறிஞர்கள் ஆவர். ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல், இராஜேந்திர பிரசாத், சி.ராஜகோபாலாச்சாரி ஆகியோர் வழக்கறிஞர்கள் ஆவர். அவர்களில் ஒருவரை ஏன் வரைவுக் குழுவின் தலைவராக்கவில்லை?
  • அம்பேத்கர் தவிர, வரைவுக் குழுவில் 6 சிறந்த சட்ட மேதைகள் இருந்தனர் - அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், என்.கோபால்சுவாமி அய்யங்கார், கே.எம்.முன்ஷி, முகமது சாதுல்லா, பி.எல்.மிட்டர், மற்றும் டி.பி.கைதான். அவர்களில் ஒருவரை ஏன் வரைவுக் குழுவின் தலைவராக்கவில்லை? ஏனென்றால், பாபாசாகேப் இந்த வேலைக்கு மிகவும் பொருத்தமானவர் என்பதை மகாத்மா காந்தி முதல் அவருக்கு கீழுள்ள அனைவருக்கும் தெரியும். காந்தி, நேரு, படேல் மற்றும் அரசியல் நிர்ணய சபையின் ஏனைய உறுப்பினர்கள் டாக்டர். பி.ஆர்.அம்பேத்கருடன் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு, அவரது தகுதியை அங்கீகரித்து, அவரை வரைவுக் குழுவின் தலைவராக்கினர்.

தலைவர்களின் பாராட்டுரைகள்

  • இந்திய அரசமைப்புச் சட்டம் 26.11.1949இல் இயற்றப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், அரசமைப்பு நிர்ணய சபையின் தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத், அம்பேத்கருக்கு இந்தச் சிறப்பான பாராட்டுகளை வழங்கினார்: “வரைவுக் குழுவின் உறுப்பினர்களும் குறிப்பாக அதன் தலைவரான டாக்டர். அம்பேத்கர் அவர்களும், தன்னுடைய மோசமான உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் எந்த அளவிற்குப் பற்றார்வத்துடன் பணியாற்றினார்கள் என்பதை மற்றவர்களைக் காட்டிலும் நான் நன்கறிந்துகொண்டேன். அவரை வரைவுக் குழுவில் சேர்த்து அதன் தலைவராக்கியது போன்ற மிகச் சிறப்பான முடிவை நாங்கள் இதற்கு முன் ஒருபோதும் எடுத்ததில்லை. அவர் தனது தெரிவை நியாயப்படுத்தியது மட்டுமின்றி, அவர் செய்த பணிக்கும்  சிறப்புச்  சேர்த்துள்ளார்.”
  • வரைவுக் குழு உறுப்பினர்களில் ஒருவரான அல்லாடி கிருஷ்ணசுவாமி ஐயரின் பாராட்டு இது: “எனதருமை நண்பர் மாண்புமிகு டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசமைப்பை உருவாக்கும் பணியை முன் நின்று எடுத்துச் சென்ற அவரின் திறனையும், செயல்திறத்தையும், வரைவுக் குழுவின் தலைவராக அவர் ஆற்றிய அயராத உழைப்புக்கும் எனது மேலான பாராட்டுகளைத் தெரிவிக்கவில்லை என்றால், நான் கடமை தவறியவனாவேன்.”
  • வரைவுக் குழுவின் மற்றொரு உறுப்பினரான கே.எம் முன்ஷி, பாபாசாகேப்பின் சேவைகளைப் பின்வருமாறு பாராட்டினார்: “தாழ்த்தப்பட்ட வகுப்பினரில் ஒருவரான அம்பேத்கரை, ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் தலைவர் என்றே பெரும்பாலானோருக்குத் தெரியும். வெகு சிலரே, அவரின் தோழமை உணர்வு, இன்முகத்தன்மை, மனித குல நட்புணர்வு மற்றும் வாய்மை போன்றவற்றை உணர்ந்து களித்திருக்கிறார்கள். ஒரு தலைச்சிறந்த சட்ட மேதையாக... நம் அரசமைப்பின் பரிணாம வளர்ச்சிக்கும்வரைவுக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு, அவரின் வாழ்க்கையின் மிகவும் ஆக்கபூர்வமான பகுதியாகும்.”
  • எனவே, அரசமைப்பு நிர்ணய சபையில் விவாதிக்கப்பட்ட கருத்துகளைக் குறிப்பெடுக்கும் சாதாரண ஒரு சுருக்கெழுத்துத் தட்டச்சர்தான் அம்பேத்கர் என்று அறியாமையில் தோய்ந்த காழ்ப்புணர்ச்சி கொண்ட நபர் மட்டுமே அவ்வாறு கூறுவர்.

காந்தி – அம்பேத்கர் முரண்

  • உண்மையான அறிவுஜீவியின் தனிச் சிறப்பு என்னவென்றால், அவருடைய கருத்துகள், காலங்கடந்து நிலைத்திருப்பதும், தற்போதைய சூழலிலும் வழக்கொழிந்து போகாதிருப்பதுமே ஆகும். இவ்விடத்தில்தான் காந்தி தோற்றுப்போகிறார். அம்பேத்கர் வெல்கிறார். காந்தி, சாதி அமைப்பினை உறுதியாக ஆதரிப்பவர்.
  • முதலாளிகள் மற்றும் நிலக்கிழார்களிடம் கனிவாகப் பேசி ஏழைகளுக்கு அறங்காவலர்களாக அவர்களைச் செயல்பட வைக்கலாம் என நம்புகிறவர். இந்த ஒவ்வொரு விவகாரங்களிலும் அம்பேத்கரின் கருத்துகள் காந்தியின் கருத்துக்கு முற்றிலும் முரணாக  உள்ளன. பொதுவாக அனைத்துப் பொருண்மைகளிலும், அம்பேத்கரின் சொன்னது சரிதான் என்பது எனது கருத்தாகும்.
  • காந்தியும் அம்பேத்கரின் முரண்பட்டிருந்த ஒரு விவகாரம் குறித்து நான் விரிவாகக் கூற விரும்புகிறேன். காந்தி கிராம ஊராட்சிகளைப் பெருமளவில் ஆதரித்தார். கிராம ஊராட்சிகள், தன்னிறைவு அடைந்தாகவும்சுயாட்சி மிகுந்தும் இருக்கின்ற கிராமத்திற்கென சட்டமன்றம், நீதித் துறை மற்றும் நிருவாகத்தைக் கொண்டிருக்கிறசிறிய குடியரசுஎன்றே அவர் கருதினார்.
  • ஆனால், “இந்தக் கிராமக் குடியரசுகள் இந்தியாவின் அழிவுஎன்று அம்பேத்கர் நம்பினார். “வட்டார மனப்பான்மை மற்றும் வகுப்புவாதத்தை எதிர்ப்பவர்கள் கிராமத்தின் வெற்றியாளர்களாக உருவாவது தனக்கு வியப்பளிப்பதாகவும், கிராமம் என்பது ஊர் பற்று, அறியாமை, குறுகிய மனப்பான்மை மற்றும் வகுப்புவாதத்தில் திளைத்த ஒன்றேயன்றி வேறல்ல என்றும் அவர் கூறினார்.
  • அம்பேத்கரின் எண்ணம் சரியானது என்பதும், காந்தியின் எண்ணம் பிழையானது என்பதும், இந்திய ஆட்சிப் பணியாளராக என்னுடைய தனிப்பட்ட அனுபவமாகும்.

ஒடுக்கப்பட்டோருக்கான அநீதி

  • இதில் 1996ஆம் ஆண்டு, மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகிலுள்ள மேலவளவு கிராம ஊராட்சியின் பட்டியலினத் தலைவர், பட்டியலின வார்டு உறுப்பினர்கள் இருவர் மற்றும் ஏனைய மூன்று பட்டியலினத்தவர் ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தும், அவர்கள் போட்டியிடத் துணிந்ததால், இனவாத இந்துக்களால் ஓடும் பேருந்தில் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
  • ஆச்சரியப்படும் வகையில், அம்பேத்கர் 1931இல் மேலூருக்குச் சென்றதையும், அப்பகுதி பட்டியலினத்தவருக்கு எதிரான கொடுமைகளுக்காக அவப்பெயர் பெற்றிருந்ததையும்  தன்னுடைய நூலொன்றில் விவரித்திருந்தார்
  • மதுரை மாவட்டத்தில், உள்ள பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி  நாட்டார்மங்கலம் ஆகிய 3 கிராம ஊராட்சிகளில் பட்டியலினத்தவருக்குத் தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதை இனவாத இந்துகள் ஏற்க மறுத்ததால், 1996 முதல் 2006 வரையில் தேர்தல் நடத்த இயலவில்லைஊராட்சி மன்றத் தேர்தலைப் புறக்கணித்து, வேட்புமனு தாக்கல் செய்யக் கூடாது என்றும் பட்டியலினத்தவரை மிரட்டினர். விருதுநகர் மாவட்டம், கொட்டகாட்சியேந்தல் கிராம ஊராட்சியில் 2001 முதல் 2006ஆம் ஆண்டு வரை இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்தது.
  • இனவாத இந்துகளுக்குச் சொந்தமாக நிலங்கள் இருந்ததாலும், பட்டியலினத்தவர் பெரும்பாலும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களாக இருந்ததாலும், அவர்கள் பணிவுடன் விட்டுக் கொடுத்தனர். ஒரு சில சூழ்நிலைகளில், ஒரு பட்டியலின வேட்பாளர் வேட்புமனுவை தாக்கல் செய்தபோது, அதைத் திரும்பப் பெறுமாறும் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டபோது, உடனடியாக ராஜிநாமா செய்யுமாறும் கட்டாயப்படுத்தப்பட்டார்.
  • பல ஆண்டுகளாக இந்தக் கூத்து நடைபெற்றுவந்தது. 2004இல், அப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா, சாதிய இந்துகளிடம் பேசி  இணங்கச் செய்வதற்காக .பன்னீர்செல்வம் தலைமையில் 4 அமைச்சர்களைக் கொண்ட குழு ஒன்றை அனுப்பினார். ஆனால், அவர்கள் அதற்கு இசையவில்லை. இந்த 4 கிராம ஊராட்சிகளிலும் ஊராட்சித் தேர்தலை நடத்த 17 முறை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன.    
  • பிறகு, 2006இல் கலைஞர் கருணாநிதி முதல்வரானார். நான் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் செயலராக நியமிக்கப்பட்டேன். மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்துவெகுமதி மற்றும் தண்டனைமுறை (carrot and stick method) வாயிலாக இறுதியாக 18வது முயற்சியில் வெற்றிபெற்று இந்த 4 கிராம ஊராட்சிகளுக்கும் சுமூகமாக தேர்தல் நடத்தப்பட்டது.
  • இருப்பினும், இனவாத இந்துகள் பட்டியலினத் தலைவர்களை அவமானப்படுத்தி அவர்களை ராஜிநாமா செய்ய வைக்கக்கூடும் என்று நான் கவலைப்பட்டேன். எனவே, சென்னையில் நான் ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றில், இந்த 4 கிராம ஊராட்சிகளின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களை முதல்வர் மு.கருணாநிதி பாராட்டினார். இதுபோன்ற ஒரு விழாவில் கலந்துகொண்ட பட்டியலினத் தலைவர்களை ராஜிநாமா செய்யும்படி இனவாத இந்துக்கள் வற்புறுத்த மாட்டார்கள் என்று நான் நம்பினேன்.
  • இந்த 4 கிராம பஞ்சாயத்துகளின் கூட்டங்களில் முதல் 6 மாதங்களுக்குப்பார்வையாளர்களாக உள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டாட்சியர் கலந்துகொள்ள வேண்டும் என்று ஆணை பிறப்பித்தேன். இனவாத இந்துகள் அலுவலர்களின் முன்னிலையில் பட்டியலினத் தலைவர்களை அவமானப்படுத்தத் துணிய மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும். இறுதியில் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டது.

எனது நடவடிக்கை

  • மற்ற மாவட்டங்களில், பட்டியலினத் தலைவர்களை மற்றும் வார்டு உறுப்பினர்களைத் தரையில் அமர வைப்பது அல்லது பஞ்சாயத்துக் கூட்டம் நடைபெறும்போது, கூட்ட அறைக்கு வெளியே காத்திருக்கச் செய்து, கூட்டம் முடிந்த பின்னர் கூட்டக் குறிப்பில் கையெழுத்திட வருமாறு கூறுவது போன்ற பல புகார்கள் வரப்பெற்றன. பட்டியலினத்தைச் சேர்ந்த கிராம ஊராட்சித் தலைவர்களுடன் ஒரு கூட்டம் நடத்தி, அவர்கள் இவ்வகையில் அவமானப்படுத்தப்படுகிறார்களா என்று கேட்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு நான் அறிவுறுத்தினேன்.
  • பட்டியலினத் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களை மோசமாக நடத்தும் இனவாத இந்து துணைத் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு எதிராக எச்சரிக்கை குறிப்பாணைகள் வழங்கச் செய்தேன். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடந்தால் கைதுசெய்துவிடுவோம் என்றும் ஆட்சியர்கள் மிரட்டினர். பிரச்சினைகள் ஓய்ந்தன.
  • கிரேக்க புராணங்களில் சிசிபஸின் கதையை நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். தெய்வங்கள் சிசிபஸை ஒரு மலை உச்சி வரை ஒரு பாறாங்கல் உருட்டும்படி கட்டளையிட்டு தண்டித்தார்கள். ஒவ்வொரு முறையும் பாறாங்கல் மலையின் உச்சியை அடையும்போது, அது மீண்டும் கீழ் நோக்கி உருண்டு வரும், சிசிபஸ் மீண்டும் மீண்டும் தொடங்க வேண்டும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளைத் துன்புறுத்துவதும் இதைப் போன்றதுதான். அண்மையில், 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், கடலூர் மாவட்டத்தில் பஞ்சாயத்துக் கூட்டத்தில் துணைத் தலைவரும் வார்டு உறுப்பினர்களும் மேசையில் அமர்ந்திருந்த நிலையில், பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் கிராம பஞ்சாயத்து தலைவர் ஒருவர் தரையில் அமர வைக்கப்பட்டிருந்தார்.

தலித்துக்களுக்கு மட்டுமே தலைவரா அம்பேத்கர்

  • கற்பனை செய்துபாருங்கள், 21ஆம் நூற்றாண்டிலேயே இவ்வளவு மோசமான நிகழ்வுகள் நடைபெறுகின்றன எனில், இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில் எவ்வளவு மோசமாக நிகழ்ந்திருக்கும்? தமிழ்நாடு போன்ற முற்போக்கான மாநிலத்திலேயே நிலைமை இவ்வளவு மோசமாக இருந்தால், நாட்டின் மற்ற பகுதிகளில் எவ்வளவு மோசமாக இருக்கும்? மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளையே இப்படி மோசமாக நடத்தினால், நமது கிராமங்களில் சாதாரண பட்டியலின மக்கள் எவ்வளவு மோசமாக நடத்தப்படுவார்கள்?
  • அம்பேத்கர் ஒருமுறை கூறினார், “மக்களாட்சி என்பது வெறும் அரசாங்கத்தின் வடிவம் அன்று. உண்மையில் இது ஒருங்கிணைந்த வாழ்க்கைமுறையின் ஒரு வடிவமாகும்.… இது சக மனிதர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அளிக்கின்ற இன்றியமையாத ஓர் அணுகுமுறை ஆகும். சாதி அமைப்பு தேசிய ஒற்றுமையைக் குலைப்பது மட்டுமன்றி, உண்மையான மக்களாட்சியை நிறுவுவதைச் சாத்தியமற்றதாக்குகிறது!” 
  • காந்தி குறிப்பிட்டவாறு, சாதிவாரியாக படிநிலையில் பிரிந்துள்ள இச்சமூகத்தில், கிராம ஊராட்சிகளுக்குச் சட்டம், நீதி மற்றும் நிர்வாக அதிகாரங்களை வழங்கி அவற்றை தன்னாட்சி கொண்ட கிராமக் குடியரசுகளாக்குவது ஆபத்தானது என்பதுடன் சாதி ஒடுக்குமுறையை அதிகரிக்கும்.
  • அரசுத் துறைகளிலேயேகூட பல சமயங்களில் அம்பேத்கரைப் போற்றும் நிகழ்ச்சிகள் அங்குள்ள பட்டியலின மற்றும் பழங்குடியின பணியாளர் சங்கத்தால் நடத்தப்படும்போது எனக்கு எழும் முதல் கேள்வி இதுதான்: “ஏன் இந்த நிகழ்ச்சிகள் அனைத்து பணியாளர்களையும் உள்ளடக்கிய பொது ஊழியர் அமைப்புகளால் நடத்தப்படுவதில்லை?”
  • அம்பேத்கரின் சொற்பொழிவுகளையும், நூல்களையும் நீங்கள் படித்திருந்தால், அவர் பட்டியலினத்தவர்களின் முன்னேற்றத்திற்காக மட்டுமே எழுதவோ உழைக்கவோ இல்லை என்பது உங்களுக்குப் புரியும். அவர் தொழிலாளர்கள், பெண்கள், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் சிறுபான்மையினரின் முன்னேற்றத்திற்காகவும் அவர் எழுதியுள்ளார், பாடுபட்டுள்ளார். இந்தப் பிரிவினரின் நலனைப் பாதுகாக்கிற பல்வேறு விதித் துறைகளை இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சேர்ப்பதில் இவர் முக்கியப் பங்காற்றினார். எனவே, அம்பேத்கரை ஒரு தலித் தலைவராக மட்டும் கருதுவது அவருடைய மாண்பைக் குலைப்பதுடன், அவரின் புகழுக்கும் களங்கம் விளைவிப்பதாகவும் அமையும்.

மூன்று எடுத்துக்காட்டுகள்

  • முக்கியமாக, மூன்று எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்!
  • முதலாவதாக, தொழிலாளர்கள். வேளாண் மற்றும் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக அம்பேத்கர் 1936ஆம் ஆண்டில் சுதந்திர தொழிலாளர் கட்சியை நிறுவினார். 1942 முதல் 1946 வரையிலான காலகட்டத்தில் அரசுப் பிரதிநிதியின் செயற்குழுவின் தொழிலாளர் உறுப்பினராக, தொழிலாளர்களின் வேலை நேரத்தை 10 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரமாக குறைப்பது உட்பட பல தொழிலாளர் சீர்திருத்தங்களை அவர் கொண்டுவந்தார்.
  • இரண்டாவதாக, பெண்கள். “ஒரு சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் அடைந்த முன்னற்றத்தைக் கொண்டு அந்தச் சமூகம் அடைந்த முன்னேற்றத்தைக் கணக்கிடலாம்என்னும் அவரது மேற்கோளிலிருந்து பாலினச் சமத்துவம் தொடர்பான அவருடைய பற்றினை அறியலாம். பெண்கள் முன்னேற்றத்திற்காக கல்வி, திருமணத்திற்கான குறைந்தளவு வயதை உயர்த்துதல், குடும்பக் கட்டுப்பாடு, ஆண்களுடன் இணைந்து அரசியல், சமூக போராட்டங்களில் ஈடுபடுதல் ஆகியவற்றை அவர் பரிந்துரைத்தார்.
  • நேருவின் அமைச்சரவையின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றி, இந்து விதிக்கோவை சட்ட முன்வடிவை அவர் இயற்றி அதனைக் அறிமுகம் செய்து, பலதார மணத்தை தடைசெய்தல், விவகாரத்து முறையை அறிமுகம் செய்தல், பெண்களுக்குச் சொத்துரிமை அளித்தல் ஆகியவற்றைக் கொண்டுவந்து, பாரம்பரிய இந்துச் சட்டத்தில் சீர்திருத்தங்களை மேற்கொண்டார். சனாதன இந்துக்களின் தீவிர எதிர்ப்பால் இந்து விதிக்கோவை சட்ட முன்வடிவு நிறைவேற்றப்படவில்லை. இதனால்  அம்பேத்கர், 1951ஆம் ஆண்டு செப்டம்பரில் அமைச்சரவையிலிருந்து பதவி விலகியதை நாம் அறிவோம். இருப்பினும், பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்து விதிக்கோவையை 4 தனித்தனிச் சட்டங்களாக நிறைவேற்றினார். இது அம்பேத்கர் வழி கிடைத்த வெற்றி.
  • மூன்றாவது, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் (OBCs). பி.ஆர்.அம்பேத்கர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களின் தலைவர்களை இந்திய அரசமைப்பு நடைமுறைக்கு வந்த நாளான 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாளன்று அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பை உருவாக்க ஊக்கப்படுத்தினார்.
  • அமைச்சரவையிலிருந்து விலகுவதான தனது ராஜிநாமா கடிதத்தில் அம்பேத்கர் கூறியது இது: “அரசாங்கத்தின் மீது எனக்கு அதிருப்தி ஏற்படுத்திய மற்றொரு விவகாரம் குறித்து நான் இப்போது குறிப்பிட விழைகிறேன். இது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நடத்தப்படும் விதம் தொடர்பானதாகும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான யாதொரு பாதுகாப்பையும் அரசமைப்புச் சட்டம் கொண்டிருக்கவில்லை என்பதை எண்ணி நான் மிகவும் வருந்தினேன். குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், செயல் அதிகாரம் கொண்ட அரசால் அவை நிறைவேற்றப்பட வேண்டும். நாம் அரசமைப்பை நிறைவேற்றி ஓராண்டிற்கு மேலாகிறது. ஆனால், ஆணையத்தை நியமிப்பது பற்றி அரசு சிந்திக்கவே இல்லை.” பாபாசாகேப் ஏனைய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலன்கள் (OBCs) மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் என்பதை இது காட்டுகிறது.
  • எனவே, அம்பேத்கர் பட்டியலினத்தவர்களின் தலைவர் மட்டுமே எனக் கருதுவதை நாம் நிறுத்துவோம். தாமஸ் பெய்னைப் போலவே, அவர் அனைத்து ஒடுக்கப்பட்ட வகுப்பினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் நலன்களை ஆதரித்து உண்மையான சுதந்திர வெற்றியாளராக இருந்தார்.
  • அம்பேத்கரைப் போற்றுவது அவரை நாம் பெருமைப்படுத்த அல்ல; இந்தச் சாதிய சமூகத்தில் நம்மை நாமே சுத்திகரித்துக்கொள்ளும் ஒரு கடப்பாடு

நன்றி: அருஞ்சொல் (09 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories