TNPSC Thervupettagam

அம்ருத காலத்திலிருந்து சுதந்திர நூற்றாண்டை நோக்கி...

May 21 , 2024 59 days 92 0
  • நமது பாரத நாடு அந்நியரிடமிருந்து விடுதலை பெற்று 75 ஆண்டுகளை நிறைவு செய்து, 2047-ஆம் ஆண்டில் தனது சுதந்திர நூற்றாண்டை நோக்கி நகா்ந்து செல்கிறது. இனியுள்ள கால் நூற்றாண்டு கால பயணத்தை ‘அம்ருத காலம்’ என்று பெருமிதமாக நாம் கொண்டாடி வருகிறோம்.
  • அதற்கான அடித்தளத்தை பாரதம் வலுவாகக் கொண்டுள்ளது. வலுவான அந்த அடித்தளம் என்பது நமது அரசியல் சாசனம்தான். இதனை பாரதம் தனது புனிதமான வேதமாகப் போற்றுகிறது.
  • இதனுடைய அடிப்படைக் கட்டமைப்பில் எவ்வித மாறுதலும் ஏற்படக் கூடாதவாறு உச்சநீதிமன்றமே தமது உரத்த சிந்தனையை வெளியிட்டுள்ளது. 1950 முதல் இந்த நாள்வரை அரசியல் சாசனத்தில் நூறுக்கும் மேற்பட்ட சட்டத் திருத்தங்களை நாம் செய்திருந்தாலும், இனிமேலும் அதுபோல செய்ய இருந்தாலும், நமது அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கட்டுமானத்தை மாற்றக் கூடாது. அதனை எப்படி வகுத்துள்ளோம்?
  • நமது நீதித் துறையானது அரசியல் சாசனத்தின் உன்னதமான, சுதந்திரமான அமைப்பு. இதேபோல நமது தோ்தல் ஆணையம் சுயாட்சி பெற்ற அமைப்பு. சட்டங்களை இயற்றும் நமது நாடாளுமன்றமும், சட்டப் பேரவைகளும் அரசியல் சாசன நிறுவனங்களாகும். சட்டங்களை அமல்படுத்துகிற மத்திய - மாநில அரசு இயந்திரங்களும் அதுபோன்ற சுதந்திர அமைப்புகளாகும். இந்நான்கும் ஒன்றுக்கு மேல் மற்றொன்று அல்ல. ஒன்றுக்குச் சமமாக மற்றவை. எதுவும் எதற்கும் கீழேயும் இல்லை. மேலேயும் இல்லை.
  • இதுவல்லாமல், நமது தொலைக்காட்சி ஊடகங்களும் பத்திரிகை ஊடகங்களும் அரசுக்கு அச்சப்படாமலும் துணிச்சலாகவும் செயல்படுகின்றன.
  • பாரதமாகிய இந்தியாவைப் பற்றி இப்போது நம் முன்புள்ள விமா்சனங்கள் என்ன? ‘அரசியல் சட்டத்திற்கு ஆபத்து’, ‘ஜனநாயகத்திற்கு ஆபத்து’, ‘நீதித் துறைக்குள் அரசு தலையீடு’...இவைதான்.
  • ஆளும் கட்சிக்கு சாா்பாக அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, தேசியப் புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ), சிபிஐ ஆகியவை எதிா்க்கட்சிகளின் மீது மட்டுமே தூண்டிவிடப்படுகின்றன... இவையும் எதிா்க்கட்சிகளின் முக்கிய விமா்சனங்களாகும்.
  • இந்த விமா்சனங்களைப் பற்றி திறந்த மனதோடு சிந்திப்பது நமது கடமையாகும். நீதித் துறையில் அரசு தலையீடு உண்மையா?
  • நீதிபதிகள் நியமனத்துக்கு ஆணையம் அமைக்கும் சட்டத்தை நாடாளுமன்றம் இயற்றியது. ஆனால் உச்சநீதிமன்றம் அதனை ரத்து செய்துவிட்டது. நீதிபதிகள் நியமன ஆணைய யோசனை கைவிடப்பட்டது.
  • கொலீஜியம் என்ற உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளின் குழுவே நீதிபதிகளை நியமிக்கும் வழக்கத்தை இப்போதும் மேற்கொண்டு வருகிறது. நீதிபதிகளே நீதிபதிகளை நியமித்துக் கொள்ளும் முறை உலகத்தில் வேற எந்த நாட்டிலும் இல்லை.
  • பல மேல்முறையீட்டு வழக்குகளின் உச்சநீதிமன்றத் தீா்ப்புகள் மத்திய அரசுக்குப் பாதகமாகத் தரப்படுவதையும் நாம் பாா்க்கிறோம். அதனால் நீதித்துறை எப்போதுமே அரசுக்குச் சாதகமாக இல்லை என்பது தெளிவு. சுதந்திரமாகத்தான் அது செயல்படுகிறது என்பதை மறுக்க முடியுமா?
  • அரசியல் சட்டத்திற்கு ஆபத்து என்பது எதிா்க்கட்சிகள் ஒரே குரலில் செய்துவரும் விமா்சனம்.
  • ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டத்தின் 370-ஆவது பிரிவை மத்திய அரசு நீக்கியது. அது சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை கடந்த ஆண்டு இறுதி வாக்கில் 5 நீதிபதிகள் அமா்வு வெளியிட்டது.
  • உச்ச நீதிமன்றத்தின் அந்தத் தீா்ப்பு என்ன? 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டது செல்லும் என்றும், அப்பிரிவு தற்காலிகம்தான் என்று அரசியல் சட்டத்தில் உள்ளது என்பதையும் உச்சநீதிமன்றம் தீா்ப்பில் சுட்டிக்காட்டியது. அதனால் மத்திய அரசு அதனை நீக்கியது செல்லுபடியாகும் என்றது உச்சநீதிமன்றம்.
  • இது எப்படி அரசியல் சட்டத்திற்கு ஆபத்தாகும்? இதை நீக்கியதுதானே அரசியல் சட்டத்தை ஆபத்திலிருந்து விடுவித்துள்ளது?
  • நமது அரசியல் சட்டம் காஷ்மீருக்குள் இப்போதுதான் முழுமையாக அமலாகியது. அங்கு 75 ஆண்டுகளாக இந்திய இறையாண்மைக்கு எதிராக இருந்த நிலை நீக்கப்பட்டது சாதனையா? அல்லது அரசியல் சட்டத்திற்கு ஏற்பட்ட ஆபத்தா?
  • அடுத்து, ஜனநாயகத்துக்கு ஆபத்து எனப்படுகிறது. இது உண்மையா?
  • பெரும்பான்மையான மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சிதான் நமது ஜனநாயகம். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுக்க தோ்தலை நடத்துதற்கென்றே தோ்தல் ஆணையம் என்பதை உருவாக்கி வைத்துள்ளது நமது அரசமைப்புச் சட்டம்.
  • தோ்தல் ஆணையம் யாருக்கும் கட்டுப்பட்டதல்ல. நீதித் துறை போல அதுவும் ஒரு சுயாட்சி அமைப்பு. நமது தோ்தல் முறை பாரபட்சமற்றது என்பதை தோ்தல் ஆணையம் பலமுறை நிரூபித்துள்ளது.
  • இத்தகைய தோ்தல் நமது நாட்டில் ஜூன் 1975 முதல் மாா்ச் 1977 வரை 21 மாதங்கள் நடத்தப்படவில்லை. நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டு, பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டது. அரசியல் தலைவா்கள் பலா் விசாரணையின்றிச் சிறைப்படுத்தப்பட்டனா். நாடு முழுவதும் அச்சவுணா்வு பரவியிருந்தது. அன்று ஜனநாயகம் நடைமுறையில் இல்லை.
  • இதற்கு மூல காரணம், உச்சநீதிமன்றம் அன்றைய பிரதமரின் தோ்தல் செல்லாது என்று அளித்த தீா்ப்புதான் என்பது நினைவுகூரத் தக்கதாகும்.
  • ஆனால் இன்று ஜனநாயகம் உயிா்ப்போடு இருப்பதால்தானே எதிா்க்கட்சிகள் கூட்டணி அமைத்து,, இன்றைய மத்திய ஆட்சியை மாற்றுவோம் என்று பேச முடிகிறது?
  • அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, சிபிஐ, என்ஐஏ, என்சிபி, முதலிய அமைப்புகள் எதிா்க்கட்சிகளின் மீது மட்டுமே ஏவப்படுகின்றன என குற்றம் கூறப்படுகிறது. அரசியல் கட்சிகளை அச்சுறுத்தி, சீா்குலைக்க இவை உதவுகின்றன என்ற பலத்த குற்றச்சாட்டுகள் மத்திய அரசு மீது வைக்கப்படுகின்றன.
  • அமலாக்கத் துறையிலோ அல்லது விசாரணை நடவடிக்கை எடுக்கும் வருமான வரித் துறையிலோ பணியாற்றுபவா்கள் யாா்? அவா்கள் கட்சிக்காரா்கள் அல்ல. இந்திய அரசின் தோ்வுகளில் வெற்றி பெற்று, முறையாக அப்பதவிகளில் நியமனம் ஆனவா்கள். அவா்கள் யாருக்கும் அச்சப்படக் கூடியவா்கள் அல்ல. அவா்களை நீதிமன்றம் கண்காணிக்கிறது.
  • சட்ட நடவடிக்கை எடுக்கும் இந்த அமைப்புகள் பாரபட்சமாக நடவடிக்கை எடுக்குமானால், மாநிலங்களிலுள்ள உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடியும். அதற்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து கொள்வதற்கான உரிமையும் நமது நாட்டில் இருப்பதை எவராலும் மறுக்க முடியாது.
  • லஞ்சம், ஊழல்களில் கைது செய்யப்பட்டவா்கள் உச்ச நீதிமன்றங்களில் தங்கள் மேல்முறையீட்டைத் தாக்கல் செய்து விடுதலையாவதையும் நாம் கவனிக்கத்தான் செய்கிறோம்.
  • இந்தியாவின இன்றைய முக்கிய பிரச்னை வேலையின்மையாகும். உத்தர பிரதேச மாநிலத்தில் 60 ஆயிரம் காவலா் பணிகளுக்கு 50 லட்சம் இளைஞா்கள் மனு செய்துள்ள செய்தி, நமது வேலையின்மையின் கொடுமையைக் காட்டுகிறது. சென்ற 10 ஆண்டுகளாகவே நீடிக்கும் இப்பிரச்னை பிற மாநிலங்களிலும் உள்ளது. எதிா்க்கட்சிகள் இதனை முதன்மைப்படுத்தி பிரசாரம் செய்தாலே போதும். அரசியல் சட்டத்திற்கு ஆபத்து என்றெல்லாம் பேச வேண்டியதில்லையே.
  • ஒரு காலத்தில் இந்தியாவில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களில் மன்னா்கள் ஆட்சி செய்து வந்தாா்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. அன்றைக்கு அந்த சமஸ்தானங்களின் ராஜாக்களுக்கு விசுவாசமாக மக்கள் இருந்தனா். அந்த விசுவாசத்தைத்தான் ராஜபக்தி என்றோம். ராஜபக்தியின் காலம் முடிந்துவிட்டது. இப்போது தேசபக்தி எழுச்சி பெற்று நிற்கிறது.
  • இன்றைய குடியரசில் மக்கள் எல்லோருமே இந்நாட்டு மன்னா்கள். நீதியரசரின் வாக்குக்கும் நிதக்கூலிக்காரனின் வாக்குக்கும் ஒரே மதிப்புத்தான்.
  • சமூக நீதி, சகோதரத்துவம், சட்டத்தின் ஆட்சி, சமய சமத்துவம் என்கிற உன்னதங்களை நாம் உருவாக்கியுள்ளோம். அவற்றின் மூலம் பாரதம் பாருக்கெல்லாம் வழிகாட்டும் தேசமாகத் திகழ்கிறது.
  • பாரதம் அம்ருத காலத்தைக் கொண்டாடுவதைப் போலவே பாரத சுதந்திரத்தின் நூற்றாண்டையும் நாம் குறையின்றிக் கோலாகலமாக கொண்டாட வேண்டுமென்றால், கட்சி பக்தியைக் கடந்து, தேசபக்தி நம் மக்கள் மத்தியில் பரிமளிக்க வேண்டும்.
  • ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவில் இடம் பெறாமலேயே பாரதத்தின் சமரச முயற்சிக்கு மதிப்பும் மரியாதையும் பல தேசங்களில் அதிகரித்துள்ளதை ஒவ்வொரு இந்தியனும் பெருமிதமாகப் பாா்க்கலாம்.
  • ஜாதி, மதம், இனம், கட்சி ஆகிவற்றைக் கடந்து நின்று பாா்த்தால்போதும், அந்தச் சிறப்பு நமது தலைமுறைக்கு வாய்த்திருப்பது புரியும். இதற்குக் காரணமான நபா்களைப் பாராட்டுவது என்பதைவிட, பாரதத்துக்கே அந்த மகுடத்தைச் சூட்ட காலம் தயாராகி வருகிறது.
  • இவற்றுக்கெல்லாம் அடித்தளமிட்டது நமது அரசமைப்புச் சட்டம். அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளைத் தட்டிக்கேட்டு நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்து, நீதியின் மாட்சியை நிலைநாட்டும் நிலைமை நமது நாட்டில் நீடிக்கும் வரை, பாரதத்தின் ஜனநாயகத்திற்கோ, ஏன், அரசியல் சாசனத்திற்கோ ஆபத்து நேராது.

நன்றி: தினமணி (21 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories