- ‘அயோத்தியில் ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நடந்த ஜனவரி 22 நம்முடைய தேச நாள்காட்டியில் இனி முக்கியமான நாளாக இருக்காது’ என்று வாதிடுவது மாயையாக மட்டுமே இருக்க முடியும்.
- எந்தச் சமூகத்திலும் அரசியல் நடவடிக்கைகள் என்பது இல்லாமலேயே போகாது. அயோத்தியில் நடந்த ராமராஜ்ய காலத்திலேயே அரசியல் இருந்தது என்றால், 21வது நூற்றாண்டு ஜனநாயகத்தில் – அது எவ்வளவுதான் வலுவிழந்ததாகக் கருதினாலும் - எப்படி இல்லாமல் போய்விடும்?
பாஜகவிடம் இருந்து ஒரு பாடம்
- அயோத்தி ராமர் கோயில் திறப்புக்குப் பிறகு யாருமே எதிர்பார்த்திராத ஒரு விளைவு என்னவென்றால், மோடி அரசையும் பாரதிய ஜனதா கட்சியின் சித்தாந்தங்களையும் இதுவரை பலமாக எதிர்த்த பலரும், மீள முடியாமல் தோற்றுவிட்டதைப் போல புலம்புவதுதான். ‘குடியரசே மாண்டுவிட்டது’ என்று சிலர் கூறுகின்றனர், தங்களால் மிகவும் போற்றப்படும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட இந்தியக் குடியரசு, சிறுவயது முதலே தங்கள் வளர்ச்சியுடன் இணைந்து வளர்ந்த குடியரசு, இப்போது இல்லை என்று கூறுகின்றனர்.
- இந்தக் கூற்றில் ஓரளவுக்கு உண்மையும் இருக்கலாம், ஆனால் அதுதான் ஜனநாயகத்தின் பண்புமாகும். மக்களிடையே செல்வாக்குப் பெறும் தலைவர், நாட்டின் தன்மையையும் அது செல்லும் பாதையையும் தனக்கேற்ப மாற்றுவார். இதை ஒப்புக்கொள்ள மறுப்பதாலேயே குடியரசு மாண்டதாகிவிடாது. நெருக்கடிக் கால அமலின்போது இந்திரா காந்தி வைத்த அக்னிப் பரீட்சையில் புடம்போடப்பட்டதுதான் இந்தக் குடியரசு.
- இந்திரா காந்தியால், விசாரணை ஏதுமின்றி வெஞ்சிறையில் 21 மாதங்கள் அடைக்கப்பட்ட அரசியலர்களில் பலர் வெளிவந்து அஞ்சா நெஞ்சுடன் தேர்தலில் போட்டியிட்டு மீட்டதுதான் இந்தக் குடியரசு. அவர்களில் சிலரும் - அவர்களுடைய சட்டப்பூர்வ வாரிசுகளும் சேர்ந்துதான் இப்போது அதே குடியரசின் சில அடிப்படையான கொள்கைகளைத் திருத்தவும், வேறுவிதமாக மாற்றவும் முயற்சி செய்கின்றனர். ஆற்றல் மிக்க இந்திரா காந்தியை 1970களில் அன்றைய எதிர்க்கட்சிகள் எதிர்த்து அரசியல் செய்ததைப் போல, இப்போதும் செய்ய முடியும்.
- ஐயோ இப்படியாகிவிட்டதே, அப்படி மாறிவிட்டதே என்று அரற்றுவதைவிட அவற்றையெல்லாம் எதிர்த்து அரசியல் செய்யக்கூடிய துணிவுள்ளவர்கள்தான் இன்றைக்குத் தேவை. தோல்வியிலிருந்து எப்படி மீள்வது, எதுவுமே சாதகமாக இல்லை என்ற நிலையிலிருந்து மக்களுடைய ஆதரவை அமோகமாகப் பெறுவது எப்படி என்று பாஜகவின் அனுபவங்களிலிருந்தே அனைவரும் பாடம் கற்கலாம். மிகவும் சக்தி வாய்ந்த ஓர் அரசியல் இயக்கத்தை (காங்கிரஸ்) எப்படித் தோற்கடிக்கலாம், சூன்யத்திலிருந்து உச்சத்துக்கு எப்படி வரலாம் (பாஜக) என்ற பாடத்தை அரசியல் களத்திலிருந்தே படிக்கலாம்.
பாஜகவின் தொடக்கம்
- நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு அதன் தொடக்க காலத்திலிருந்த உறுப்பினர்கள் எண்ணிக்கையுடன், இப்போதுள்ள எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பாருங்கள். 1980 ஜனவரியில் நடந்த பொதுத் தேர்தலில் வென்று இந்திரா காந்தி மீண்டும் பிரதமரான பிறகு, ஏப்ரலில் தொடங்கப்பட்டதுதான் பாரதிய ஜனதா கட்சி. பாரதிய ஜனசங்கமாக முன்னர் இருந்த கட்சிக்கு இது புதிய பெயர்.
- 1984இல் பாஜக சந்தித்த முதல் மக்களவை பொதுத் தேர்தலில் இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே வென்றது. 1989இல் 85, 1991இல் 120, 1996இல் 161, 1998இல் 182, 1999இல் மீண்டும் 182 இடங்களில் வென்றது. 1998, 1999 தேர்தல் வெற்றிகளால் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் ஆறு ஆண்டுகள் பதவியிலும் இருந்தது.
- இப்படிப் படிப்படியாக வளர்ந்த காலத்தில் அது தன்னுடைய அடிப்படைக் கொள்கைகளை விட்டுவிடாமல், அதேசமயம் அதைப் பிடிவாதமாக வலியுறுத்தாமல் - பிற கட்சிகளுடன் சேர்ந்து நெகிழ்வுத்தன்மையுடன்தான் செயல்பட்டது அனைவரும் கவனிக்க வேண்டிய அம்சம்.
- பாஜகவை உருவாக்கிய அதன் தலைவர்கள் புத்திசாலிகள்; கூட்டணி ஆட்சிக்குத் தலைமை வகித்தபோதும் தேவைக்கேற்ப மட்டுமே தங்களுடைய சித்தாந்தங்களைச் சிறிது சிறிதாக அமல்படுத்தினார்கள்.
- மனதுக்கு மிகவும் நெருக்கமான கொள்கைகளை, சொந்த பலத்திலேயே நிறைவேற்றிக்கொள்ள காலம் கனியட்டும் என்று காந்திருந்தார்கள்.
வெளியிலிருந்து ஆதரவு ஏன்
- கொள்கையை நிறைவேற்ற எவ்வளவு தந்திரங்களும் பொறுமையும் அவசியம் என்பதை பாஜகவிடம் கற்றுக்கொள்ள வேண்டும். மக்களவைக்கு 1989இல் நடந்த தேர்தலில் பாஜகவுக்கு 85 இடங்கள் கிடைத்தது; வி.பி.சிங் தலைமையில் அப்போது பதவியேற்ற தேசிய கூட்டணி அரசில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி கேட்டிருக்க முடியும், ஆனால் கேட்கவில்லை.
- சித்தாந்தத்தில் தங்களுக்கு நேரெதிரான அன்றைய இடதுசாரி முன்னணியைப் போல, ‘வெளியிலிருந்து ஆதரவு’ என்ற முடிவை பாஜக எடுத்தது. இடதுசாரிகள் ஆதரிக்கும் அரசை நாமும் ஆதரிப்பதா என்று பாஜக தயங்கவில்லை, அந்த முடிவுக்காக வெட்கப்படவும் இல்லை. சில காரணங்களுக்காக அப்படி ஆதரித்தது.
- முதலாவது காரணம், காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து விலக்கிவைப்பது; இரண்டாவது காரணம் மூன்றாவது அணியால் அமைக்கப்படும் அரசு நிலையற்றதாகவும் வலுவற்றதாகவும் இருக்கும்போது, வலிமையான தேசியக் கட்சியால்தான் நிலையான ஆட்சியை அமைக்க முடியும் என்பதை மக்கள் உணர வேண்டும் என்பது; மூன்றாவது காரணம், அந்தத் தேசியக் கட்சி காங்கிரஸாக மட்டும்தான் இருக்க வேண்டும் என்பதில்லை, அது பாஜகவாகவும் இருக்கலாம் என்று மக்களை ஏற்க வைப்பது.
- அப்படி வி.பி.சிங்கை ஆட்சியில் அமர்த்திவிட்டு பாஜக சும்மா இருக்கவில்லை, அமைப்புரீதியாக தன்னை வலுப்படுத்திக்கொண்டதுடன் எல்லா மாநிலங்களிலும் கிளைகளைப் பரப்பியது, அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை மக்களிடம் பிரச்சாரம் செய்து ஆதரவைத் திரட்டியது.
- இப்படி ஆட்சிக்கு வந்த பாஜக 2004 மக்களவைப் பொதுத் தேர்தலில் ஆட்சியை இழந்த பிறகு, அடுத்த பத்தாண்டுகளுக்கு விரக்தியிலோ வேதனையிலோ ஆழ்ந்து செயலற்றுக் கிடக்கவில்லை. நூறு தொகுதிகளுக்குக் குறையாமல் தன்னுடைய செல்வாக்கைத் தக்கவைத்துக்கொண்டது. ஆறாண்டுகள் நிலையான ஆட்சி தந்ததாலும் அந்த ஆட்சியும் மக்களுடைய நன்மைக்காக பல சேவைகளைச் செய்ததாலும் கட்சி மீது நம்பகத்தன்மை அதிகரித்தது.
- ஆட்சியில் இல்லாத காலத்தில் கட்சிக்குள் அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்கி கட்சியை மேலும் வலுப்படுத்தியது, அதன் உச்சம்தான் நரேந்திர மோடி பிரதமர் பதவிக்கான வேட்பாளரானது.
மோடி விஸ்வரூபம்
- இந்திரா காந்தியுடன் பிற்காலத்தில் ஒப்பிடும் அளவுக்கு, தேசிய அரசியலில் எப்படி மோடி விஸ்வரூபம் எடுத்தார்?
- 1990களில் குஜராத் மாநில அரசு நிர்வாகத்தில் முதல்வர் கேசுபாய் படேலின் முதுமை காரணமாக ஏற்பட்ட தொய்வை சரிசெய்ய கட்சித் தலைமையால் அனுப்பப்பட்ட ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர்தான் மோடி. பதவி மூப்பு காரணமாகவோ, குடும்ப வாரிசு என்பதாலோ, கட்சித் தலைவருக்கு வேண்டப்பட்டவர் என்பதாலோ, யாருடைய கட்டாய ஆணைப்படியோ அந்தப் பதவிக்கு மோடி வரவில்லை.
- பாஜகவுக்குள் போட்டிகளுக்கிடையேதான் திறமையை வெளிப்படுத்தி, மேலிடத் தலைவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி, பிறகு அந்த இடத்துக்கு வந்தார். அமெரிக்கா போன்ற நாடுகளில் காணப்படும் வாக்காளர் மன்றங்களைப் போல (பிரைமரி) கட்சிக்குள் பல சோதனைகளில் வென்றுதான் முன்னுக்கு வந்தார். அந்தப் பதவிக்கு வருவதற்கு முன்னதாக பல முன்னாள் – இந்நாள் கட்சித் தலைவர்களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
- இதில் 2004, 2009 மக்களவை பொதுத் தேர்தலின்போது பாரதிய ஜனதாவுக்குத் தலைமை தாங்கிய தேசியத் தலைவர்கள் தோல்விக்குப் பிறகு அந்தப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டனர், கட்சித் தலைமை மட்டுமல்ல – தொண்டர்களும் அவர்கள் நீக்கப்படுவதை ஆதரித்தனர். பாஜகவை எதிர்க்கும் பிற தேசியக் கட்சிகளில், 2014 முதல் உள்ள நிலையை இந்த அம்சத்தில் ஒப்பிட்டுப் பாருங்கள்.
- அரசமைப்புச் சட்டப்படி நடக்கும் நிலையான அரசுகளைக் கொண்ட ஜனநாயகத்தில் ஓரிரவில் புரட்சிகள் ஏற்பட்டுவிடாது; ஆட்சி மாற்றம் அல்லது தலைமை மாற்றம் என்பதற்கு ஒரு தலைமுறைக் காலம்வரையும் காத்திருக்கத்தான் வேண்டும். 1984 தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றி, 2014இல் ஆட்சி என்ற நிலை வரும்வரை முப்பதாண்டுகளில் பாஜகவினர் கடுமையாக பல சோதனைகளை எதிர்கொண்டனர், தோல்விகளைத் தாங்கினர், துரோகங்களைச் சகித்தனர், தோழமை உறவுக்காக எவ்வளவோ விட்டுக்கொடுத்தனர்.
- நெருக்கடிநிலைக்குப் பிறகு நடந்த பொதுத் தேர்தலில் மீண்டும் இந்திரா காந்தியே (529 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 353இல் வெற்றி) மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றினார். ‘அவ்வளவுதான் இந்த நாடு இனி உருப்படாது, மக்களுக்கு ஜனநாயகத்தின் அருமையெல்லாம் புரியவில்லை, குடியரசு செத்துவிட்டது’ என்று கூறி பாஜகவினரும் அன்றே மூட்டையைக் கட்டிக்கொண்டு அரசியலிலிருந்து சன்னியாசம் வாங்கிக்கொண்டிருக்கலாம். ‘அவ்வளவு பெரிய நெருக்கடியைக் கொண்டுவந்த இந்திரா காந்தியையே மீண்டும் இவ்வளவு விரைவாக ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்களே, இவர்களுக்கு ஜனநாயகம் அவசியம்தானா?’ என்றுகூட ஆத்திரப்பட்டு கேட்டிருக்கலாம்.
மாற்று திசையை யோசிக்க வேண்டும்
- குடியரசு மாண்டுவிட்டது, சுதந்திரச் சிந்தனைகளுக்கும் தடை ஏற்பட்டுவிட்டது என்றெல்லாம் பேசுவது தோல்வியைத் தாங்க முடியாமல் கோபத்திலும் விரக்தியிலும் பொருமுவதாகும்.
- ஜனநாயக அரசியல் என்பது கருத்துகளோடு கருத்துகளையும் சித்தாந்தங்களோடு சித்தாந்தங்களையும் மோதவிடுவதுதான். அரசமைப்புச் சட்டப்படி உருவாக்கப்படும் குடியரசுகள் மாண்டுவிடாது, அதன் தலைவர்கள், அதில் ஏற்படும் கட்சிகள், அவர்கள் ஆதரிக்கும் கருத்துகள் வேண்டுமானால் மறைந்துபோகலாம். சுதந்திரவாதக் கருத்துகளை ஊக்குவித்த பழைய சுதந்திரா கட்சி இப்போது எங்கே? 1967 பொதுத் தேர்தலில் மக்களவையில் இந்திரா காங்கிரஸுக்கு அடுத்து 44 இடங்களை வென்ற சுதந்திரா கட்சி, 35 இடங்களில் வென்ற பாரதிய ஜனசங்கத்தைவிட பெரிய கட்சியாக இருந்தது.
- தோல்வி மனப்பான்மையின் அடுத்த கட்டமாக, மோடியைப் பற்றி பலவிதமான கற்பிதங்களைப் பேசுகின்றனர். “அரசமைப்புச் சட்டத்தையே ரத்துசெய்துவிடும் ஆற்றல் அவருக்கு இருக்கிறது, புதிய அரசமைப்புச் சட்டத்தையே இயற்றுவார், இந்தியாவின் ஜனநாயகத்தையே ‘அதிபர் ஆட்சி’ பாணியாக மாற்றிவிடுவார், இந்தியாவில் இதுதான் கடைசி நாடாளுமன்றத் தேர்தலாக இருக்கும்” என்றெல்லாம் கூறுகின்றனர். இதில் எதையுமே அவர் செய்ய மாட்டார்.
- தனக்கு வேண்டிய அதிகாரங்களை இப்போதிருக்கும் அரசமைப்புச் சட்டத்திலிருந்தே எடுத்துக்கொள்கிறார், தேவைப்பட்ட சட்டங்களை இப்போதுள்ள நாடாளுமன்ற முறையிலேயே இயற்றிக்கொள்கிறார், நாடாளுமன்றத்தில் தனக்குத் தேவைப்படும் வலிமையை இப்போதைய தேர்தல் முறையிலேயே பெறுகிறார், இப்போதுள்ள ஏற்பாட்டிலேயே, முறைமையிலேயே இதையெல்லாம் செய்ய முடியும்போது இவற்றை ஏன் மாற்ற வேண்டும்?
- இதே ஜனநாயக முறைமையில், இதே அரசமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டு, இதே அரசியல் களத்தில் அவரைத் தோற்கடிக்க எதிர்க்கட்சிகள்தான் அரசியல் உத்திகளைத் தயாரிக்க வேண்டும், மூளையைக் கசக்கிச் சிந்திக்க வேண்டும், தார்மிக நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டும், மோடி செலுத்தும் திசையிலிருந்து வேறு திசையில் குடியரசு பயணிக்க, அவர்கள்தான் மாற்று திட்டங்களுடன் களமிறங்கி வேலை செய்ய வேண்டும்.
நன்றி: அருஞ்சொல் (31 – 01 – 2024)