TNPSC Thervupettagam

அரசமைப்பால் உயர்ந்து நிற்கும் தேசம்!

January 24 , 2025 6 hrs 0 min 26 0

அரசமைப்பால் உயர்ந்து நிற்கும் தேசம்!

  • “இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டால், அதிகாரத்துக்காக இந்தியர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்வார்கள்; அரசியல் சச்சரவுகளில் சிக்கி இந்தியா சீர்குலைந்துவிடும்” என்று பிரிட்டன் நாடாளுமன்றத்தின் மக்களவையில் அன்றைய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் இறுமாப்புடன் பேசினார். அவரைப் போலவே மேற்கத்திய நாடுகளைச் சார்ந்த பலரும் பேசியும் எழுதியும் வந்தனர்.
  • ஆனால், அந்தக் கணிப்புகளை முறியடித்தது சுதந்திர இந்தியா! எண்ணற்ற சவால்கள், பலவீனங்​களைக் கடந்து, இறையாண்​மைமிக்க, சோஷலிச, மதச்சார்​பற்ற, ஜனநாயகக் குடியரசாக சுதந்திர இந்தியா சீராக முன்னேறிவரு​கிறது. இதற்கு அடித்​தளமாக இந்திய அரசமைப்பு திகழ்ந்​து​வரு​கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 75ஆவது ஆண்டு நிறைவுறும் வரலாற்றுச் சிறப்பு​மிக்க தருணம் இது.

அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மா:

  • சுதந்திர இந்தியாவின் முதன்​மையான சமூக ஆவணமாக, சட்ட ஆவணமாக இந்திய அரசமைப்புச் சட்டம் உள்ளது. சமூக மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான அல்லது அத்தகையதொரு சமூக மாற்றத்தை வென்றெடுப்​ப​தற்கு உகந்த சூழலை உருவாக்கு​வதற்கான எண்ணற்ற பிரிவுகளை அரசமைப்புச் சட்டம் உள்ளடக்​க​மாகக் கொண்டிருக்​கிறது.
  • குறிப்பாக, சமூக, அரசியல்​-பொருளாதார விடுதலையை முன்னிறுத்தும் சமூக மாற்றத்தை அடைவதற்கான லட்சிய முழக்​கங்களை உள்ளடக்கிய பகுதிகளாக அரசமைப்புச் சட்டத்தின் பகுதி 3 (அடிப்படை உரிமைகள் - Fundamental Rights), பகுதி 4 (அரசுக் கொள்கைக்கான வழிகாட்டும் கோட்பாடுகள் - Directive Principles of State Policy) ஆகியவை ஒளிரு​கின்றன.
  • குடிமக்​களுக்கான அடிப்படை உரிமைகள், அரசுக் கொள்கைகளுக்கான வழிகாட்டும் கோட்பாடுகள் ஆகிய இரண்டு பகுதி​களையும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மா என்று அறிஞர்கள் சுட்டிக்​காட்​டி​யிருக்​கிறார்கள். விடுதலைப் போராட்டக் காலத்​தின்போது எழுப்​பப்பட்ட லட்சிய முழக்​கங்​களின் சாரம்தான் அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமை​களாக, அரசுக் கொள்கைகளுக்கான வழிகாட்டும் கோட்பாடு​களாகப் பிரதிபலிக்​கின்றன. வருங்​காலத்​தில், முழுமையான விடுதலை (சமூக-பொருளாதார விடுதலை) மலர வேண்டும் என்கிற தொலைநோக்குப் பார்வை​யுடன்தான் அரசமைப்புச் சட்டத்தில் இவை சேர்க்​கப்​பட்டன.

அடிப்படை உரிமைகள்:

  • மக்களின் சுதந்​திரத்தை, அதாவது தனிநபர் சுதந்​திரத்தை அரசின் யதேச்​ச​தி​காரப் போக்கு ஆக்கிரமித்து​விடக் கூடாது என்கிற நோக்கத்​துடன் அரசமைப்புச் சட்டத்தின் மூன்றாவது கூறில் (பிரிவுகள் 12 முதல் 35 வரை) குடிநபர்​களுக்கான அடிப்படை உரிமைகள் உத்தர​வாதப்​படுத்​தப்​பட்​டிருக்​கின்றன.
  • சட்டத்தின் முன் அனைவரும் சமம், கருத்துச் சுதந்​திரம், கண்ணியமான முறையில் வாழ்வதற்கான உரிமை, மதம் - வழிபாட்டு உரிமை, கல்வி - கலாச்சார உரிமை, உரிமைகள் மறுக்​கப்பட்ட நிலையில் அவற்றைச் சட்டப்​படியான வழிமுறை​களின் மூலம் பெறுவதற்கான உரிமை (Right to Constitutional Remedies - பிரிவு 32) என்று நுட்பமான பல்வேறு உரிமைகள் குறித்து மிக விரிவாகவே அரசமைப்புச் சட்டத்தில் கூறப்​பட்​டிருக்​கிறது. தனிநபர் சுதந்​திரமும் உரிமை​களும் செல்வாக்​குமிக்க வெகு சிலருக்கு மட்டுமே உரித்​தானவை அல்ல; அவை அனைத்தும் குடிமக்​களாகிய அனைவருக்கும் உரித்​தானவை என்கிற மகத்தான செய்தியை அரசமைப்புச் சட்டம் பிரகடனப்​படுத்​தி​யிருக்​கிறது.

வழிகாட்டும் கோட்பாடுகள்:

  • இந்தியச் சமூக அமைப்பில் பல நூற்றாண்​டுகளாக மிக மோசமான நிலையில் இருந்த கோடிக்​கணக்கான மக்களுக்குச் சமூக, பொருளாதார விடுதலை சாத்தி​யப்பட வேண்டும் என்கிற நோக்கத்​துடன் அரசமைப்புச் சட்டத்தின் பகுதி நான்கில் (பிரிவுகள் 36 முதல் 51 வரை) அரசுக் கொள்கைகளுக்கான வழிகாட்டும் கோட்பாடுகள் கட்டமைக்​கப்​பட்​டுள்ளன. அதன் சாரம், பிரிவு 38இல் நிலைநிறுத்​தப்​பட்​டுள்ளது.
  • இந்திய அரசு, மக்கள் நல அரசாகச் செயல்பட வேண்டும் என்று நமது தேசத் தலைவர்கள் விரும்​பி​னார்கள். எனவே, சுதந்திர இந்தியாவில் மத்திய - மாநில அரசுகள் சட்டங்களை இயற்றும்​போது, இந்தக் கோட்பாடுகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தின் மூலமாக வலியுறுத்​தப்​படு​கிறது.
  • சமூக வளங்கள் அனைத்தும் பொதுநலன் கருதி அரசின் கட்டுப்​பாட்டில் இருந்திட வேண்டும் என்றும், சமூக முன்னேற்​றத்​துக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செல்வ வளங்கள், உற்பத்திக் கருவி​களின் குவிப்பு ஏற்படக் கூடாது என்றும், அதற்கேற்பப் பொருளாதார முறை இயக்கப்பட வேண்டும் என்றும் பிரிவு 39 வழிகாட்டு​கிறது.
  • கல்வி உரிமை, வேலை பெறும் உரிமை, வேலையில்லாக் காலத்​துக்கான நிவாரணம், மூத்த குடிநபர் நலன் (ஓய்வூ​தியம் போன்றவை) ஆகியவற்றை நடைமுறைப்​படுத்து​வதற்கு ஏற்ப அரசு செயல்பட வேண்டும் என்று பிரிவு 41 அறிவுறுத்து​கிறது. இப்படியாக, சமூக மாற்றத்​துக்கான ஒரு கொள்கை அறிக்கையாக அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டும் கோட்பாடுகள் திகழ்​கின்றன.

விடுதலை இயக்கத்தின் தாக்கம்:

  • குடிநபர்​களுக்கான அடிப்படை உரிமைகள் தொடர்பான கோரிக்கை​யானது, தேசிய விடுதலை இயக்கத்தின் ஆரம்பக் காலக்​கட்​டத்​திலேயே எழுப்​பப்​பட்டது. ‘சுயராஜ்ய சட்ட மசோதா’ (The Constitution of India Bill, 1895) பிரிவு 16இல் பேச்சுரிமை, சொத்துரிமை, சட்டத்தின் முன் அனைவரும் சமம், கட்டணமில்லாக் கல்வி, இன்ன பிற உரிமைகள் என்று தனிநபர் உரிமை​களுக்கான கோரிக்கைகள் வெளிப்​படையாக முன்வைக்​கப்​பட்டன.
  • ஆங்கிலேயர்​களுக்கு இணையாக இந்திய மக்களுக்கும் சிவில் உரிமைகள் உறுதிப்​படுத்​தப்பட வேண்டும் என்று கோரி 1917 முதல் 1919 வரையிலான காலக்​கட்​டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்​கத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்​றப்​பட்டன.
  • முதல் உலகப் போர் உண்டாக்கிய தாக்கம், சோவியத் புரட்சி, மாண்டேகு-செல்ம்​ஸ்​போர்டு சீர்திருத்​தங்கள் (1919) மூலம் ஏற்பட்ட ஏமாற்றம், இந்திய விடுதலைப் போராட்​டத்தில் காந்தி​யடிகளின் வருகை ஆகியவை காரணமாக, மக்களின் தேவைகள், விருப்​பங்கள் குறித்த புதிய விழிப்பு​ணர்வை, உத்வேகத்தை 1920களின் மத்தியில் நமது தேசத் தலைவர்கள் பெற்றார்கள்.
  • தனிநபர் சுதந்​திரம், ஆரம்பக் கல்விக்கான உரிமை, கருத்துகளை வெளிப்​படுத்து​வதற்கான உரிமை, ஒன்றுகூடு​வதற்கான உரிமை, பாலினச் சமத்துவம், இன்ன பிற உரிமைகள் ‘The Commonwealth of India Bill 1925’ சட்ட மசோதாவில் இடம்பெற்றன. 1928இல் அமைக்​கப்பட்ட மோதிலால் நேரு குழு அறிக்கை​யிலும் அடிப்படை உரிமைகள் பற்றிய ஒரு விரிவான பகுதி இடம்பெற்றிருந்தது. இந்த அறிக்கையின் ஏராளமான பிரிவுகள் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள், அரசுக் கொள்கைகளுக்கான வழிகாட்டும் கோட்பாடுகள் பகுதி​களில் நிலைபெற்று ஒளிரு​கின்றன.
  • இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்​கத்தின் 1931 கராச்சி மாநாட்டுத் தீர்மானமும் இங்கு முக்கி​யத்துவம் பெறுகிறது. “அரசியல் விடுதலை என்பது, பட்டினிக் கொடுமையில் உழன்று​கொண்​டிருக்கும் கோடிக்​கணக்கான மக்களின் உண்மையான பொருளாதார விடுதலை​யையும் உள்ளடக்​கியதாக இருந்திட வேண்டும்” என்கிற மையக் கருத்து இந்தத் தீர்மானத்தின் அடிநாத​மாகத் திகழ்ந்தது.
  • அடிப்படை உரிமைகள் குறித்த இந்தத் தீர்மானத்​தின்மீது மகாத்மா காந்தியும் இம்மா​நாட்டில் பேசியுள்​ளார். முக்கியத் தொழில்​-சேவைத் துறை, கனிம வளங்கள், ரயில்வே துறை, நீர்நிலைகள், கப்பல் - இதரப் பொதுப் போக்கு​வரத்துத் துறை ஆகியவை அரசின் கட்டுப்​பாட்டில் இருந்திட வேண்டும் என்றும் கராச்சி மாநாட்டுத் தீர்மானம் வலியுறுத்​தியது.

அரசமைப்பைக் கொண்டாடுவோம்:

  • இதுவரையிலான நமது தேசிய வாழ்வுக்கான கலங்கரை விளக்கமாக நிலைபெற்று, அரசமைப்புச் சட்டம் வழிகாட்​டிவரு​கிறது. கடந்த 75 ஆண்டு கால அனுபவத்தின் அடிப்​படையில் புதிய மதிப்​பீடுகள் உருவாக வேண்டும். இந்திய அரசமைப்பு குறித்த மேம்பட்ட புரிதலைப் பெண்கள், இளைஞர்கள், மாணவர்​களிடையே பரவலாக்க வேண்டும். அரசமைப்புச் சட்டம் பற்றிய விழிப்பு​ணர்வை மக்களிடையே பரப்பு​வதில் அரசியல் கட்​சிகளும் குடிமைச் சமூக அமைப்​புகளும் தொடர்​ந்து ஈடுபட வேண்​டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories