TNPSC Thervupettagam

அரசமைப்பின் நோக்கத்துக்கு எதிர்த் திசையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறோமா?

December 6 , 2019 1816 days 918 0
  • இந்திய நிலப்பரப்பில் உருவாகப்போகும் புதிய தேசம் ஒன்றின் அரசமைப்புச் சட்டவரைவை விவாதிக்கக் கூடியிருந்த அந்த அவையில், “உருவாகப்போகும் இந்த தேசத்தின் அரசமைப்பு, தன் ஆன்ம நிலையில் இந்தியா என்ற இந்த நிலப்பரப்பின் ஒவ்வொரு குடிமகனும் அவனது சுதந்திரத்தை உணர்வதோடு, சக மனிதனுடனான சகோதரத்துவத்தையும், அனைவருக்கும் சம வாய்ப்பை அளிக்கும் உணர்நிலையையும் கொண்டு, இந்த நிலப்பரப்பின் மொழி, மதம், பண்பாடு என்ற பன்மைத்துவத்தைப் பேணும் ஜனநாயக இறைமையை லட்சிய விழுமியமாகக் கொண்டிருக்க வேண்டும்” என்ற ஜவாஹர்லால் நேருவின் முன்வரைவுத் தீர்மானம் ஒருமனதாக ஏற்கப்பட்டு, பின்னாட்களில் இன்று நடைமுறையில் இருக்கும் நமது அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையாக மாண்புடன் அமர்ந்தது.
  • அரசமைப்பு விவாத அவை, இயற்றப்படவிருக்கும் அரசமைப்புச் சட்டம் எந்த வகையிலும் ஒற்றைப்படையாக அதிகாரம் குவிக்கப்படும் ஒரு நிலையை அடைந்துவிடக் கூடாத தன்மை குறித்தே அதிகம் விவாதித்தது. குவிமையப்படுத்தப்படும் அதிகாரத்தை வரலாறு நெடுகிலும் இந்த நிலப்பரப்பு ஏதோவொரு பண்பாட்டுச் சமநிலையில் சரிசெய்தபடியே தன்னை ஒரு வல்லாதிக்க நிலையிலிருந்து காத்துக்கொண்டுள்ளது.
  • இதை உணர்ந்துகொண்டிருந்த அரசமைப்பு விவாத அவை, ஏதாவது ஓரிடத்தில் முழு அதிகாரத்தையும் குவிக்கப்பட முடியாத நாடாளுமன்ற மக்களாட்சி நடைமுறையைப் பரிந்துரைத்தது. இன்னமும் ஆழ்ந்து நோக்குகையில் நம் அரசமைப்புக்குள் இருக்கும் அதிகபட்ச மக்களியத் தன்மையை உணர முடியும்.
  • ஆம், ஒரு நிலையில் சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட நாடாளுமன்றம் அதிகாரமிக்கதாகத் தோன்றும், இன்னொரு நிலையில் அந்தச் சட்டத்தை மறுஆய்வு செய்யச்சொல்லும் உச்ச நீதிமன்றம் அதிகாரம் மிக்கதாகத் தோன்றும். குடியரசுத் தலைவரும், நடுவண் அமைச்சரவைக் குழுத் தலைவரான பிரதமரும் தனித்து எந்த அதிகாரமுமற்று நாடாளுமன்ற அவைகளின் பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டவர்கள். இப்படி எங்கும் அதிகாரம் குவிக்கப்படா தன்மை கொண்ட நெகிழ்வுதான் இந்திய அரசமைப்பின் சிறப்புக்கூறு. இந்தச் சிறப்புத் தன்மையே கடந்த 70 ஆண்டு காலமாக இந்த தேசத்தின் அரசியல் ஜனநாயகத்தைக் காப்பாற்றிவந்திருக்கிறது.

சமூக ஜனநாயகம்

  • இந்திய அரசமைப்புச் சட்டவரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அம்பேத்கர் பேசுகையில், “பெரும் முயற்சிகளுக்கும் சோதனைகளுக்கும் பிறகு இன்றைய உலகில் இருப்பதிலேயே ஆகச் சிறந்த சட்டவரைவை உருவாக்கிக்கொண்டுவிட்டோம். இது ஓரளவுக்கு இந்தத் தேசத்தை, அரசியலை ஜனநாயகப் பாதையில் வழிநடந்த நிச்சயமாக உதவக்கூடும். ஆனால், இன்னும் நுணுக்கமான தளத்தில், இந்த அரசமைப்பு உண்மையில் உறுதிப்படுத்த விழையும் அனைவருக்கும் சமவாய்ப்பு, சமூக ஜனநாயகம் என்ற லட்சியத்தை உருவாக்க நாம் இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டும்.
  • ஏனெனில், நாம் இன்னும் இந்த நாட்டின் கல்வியில், பொருளாதாரத்தில், சமூகத்தில் செயல்படும் உரிமையில் சக மனிதனைத் தனக்குக் கீழானவனாக, தம்முடன் சமமாக இருக்க முடியாதவனாக நம்பிக்கொண்டிருக்கும் பெருவாரி சமூக மனநிலைகள் குறித்து இந்த அரசமைப்பில் பேச முயலவேயில்லை. இது சமூக மட்டத்தில் சமவாய்ப்பின் அடிப்படையில் நிகழ வேண்டிய அதிகாரப் பரவலாக்கத்தைத் தடுத்து, நம் அரசமைப்பு பேசும் உண்மையான ஜனநாயகத்தை அடைய முடியாமல் செய்துவிடும். மேலும், இந்திய அரசமைப்பு ஓரளவேனும் கொண்டிருக்கும், இந்த அரசியல் ஜனநாயகம்கூட அதைச் செயல்படுத்தும் கைகளின் நேர்மையிலே அடங்கியிருக்கப்போகிறது” என்று சுட்டிக்காட்டினார்.
  • ஒரு நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் இருப்பும் நீடிப்பும் அதன் செயல்பாட்டு மதிப்பும் அந்நாட்டின் அன்றைய நிலையின் பெருவாரித்திரள் மனங்களின் சமூக நம்பிக்கையிலேயே நிலைகொண்டுள்ளது. தங்களின் அரசியல் நம்பிக்கை சார்ந்து இந்தத் திரள்மனவெளியைப் போலியாய் உற்பத்திசெய்து நீட்டிப்பதன் வழி, தங்கள் அரசியல் இருப்பை ஆள்வோர் காத்துக்கொள்கிறார்கள். இன்று, ‘மதச்சார்பற்ற சோஷலிஸ சமூகநீதி மக்களியக் குடியரசு’ என்று தன் முகவுரையைக் கொண்டுள்ள அரசமைப்பை ஏந்தியபடியே இந்தத் தேசம் ஒற்றைப்படுத்துதலை நோக்கிச் செலுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.

சமவாய்ப்புக் கற்பிதம்

  • இந்திய அரசமைப்பின் முகவுரையில் மிகமிக முக்கியமான ஒரு வார்த்தை, ‘சமத்துவம்’. மத, இன, மொழி, சாதி, பாலியல் பாகுபாடற்று அனைவருக்கும் தேர்தல் களத்தில் ஒரு வாக்கு என்பதாக அரசியல் தளத்தில் விளக்கப்பட்டு, இதன்வழி இந்தியா அனைவருக்கும் சமவாய்ப்பை வழங்கும் சமத்துவம் கொண்ட நாடு என்ற கட்டமைப்பு பெருவாரியான மனங்களில் நம்பவைக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் இங்கு நம்பப்படும் சமத்துவம் சமூகத் தளத்தில் சாத்தியப்பட்டுள்ளதா என்பதை அம்பேத்கர் பேசும் சமூக ஜனநாயகம் என்ற நோக்குநிலையில் நின்று விளங்கிக்கொள்ள முயல்வோம்.
  • உதாரணமாக, அனைவருக்கும் ஆரம்பக்கல்வி கட்டாயம் என்பது நம் அரசமைப்பு உருவாக்கித் தந்திருக்கும் சமவாய்ப்பு. ஆனால், குளிரூட்டப்பட்ட அறைகளில் உறங்கி எழுந்த மனநிலையில் பள்ளி செல்லும் ஒரு குழந்தையும்; உணவு, நீர் உடை, உறைவிடம் என அனைத்து வாழ்க்கைத் தேவைகளும் மறுக்கப்பட்ட உளநிலையில் பள்ளி செல்லும் ஒரு குழந்தையும் ஒன்றல்லவே. இதைப் போலவே மொழி, வழிபாடு, உணவு, உடை, பண்பாடு என அனைத்துத் தளங்களிலும் சமவாய்ப்பு என்ற கற்பிதம் குறித்து விரித்து விவாதிக்க முடியும்.
  • எந்த அரசமைப்புச் சட்ட வழிகாட்டலும் பாதுகாப்பும் தேவைப்படாமல் இயல்பிலேயே பெரும்பான்மைகளைக் கொண்ட திரள்மனம் அதிகாரம் கொண்டதாக, எளிதில் வாய்ப்புகளைக் கைப்பற்றிக்கொள்ளக்கூடியதாகவே இருக்கும். இந்தப் பெரும்பான்மைத் திரள்மனம் எனும் சமூக வெளிக்குள் செயல்பட வேண்டிய சிறுபான்மைக் குரல்களின் வாய்ப்புகளை உறுதிசெய்யவே அரசமைப்பு வழிகாட்டலும் பாதுகாப்பும் அத்தியாவசியத் தேவையாய் இருக்கிறது. இந்த மொழி, இன, சாதி என சிறுபான்மை மனங்களுக்குள் இருக்கும் வாழ்வுரிமை குறித்த அச்சம் கலைக்கப்படுகையில் அவர்கள் தாமாகவே தேசத்தின் ஒருங்கிணைவுக்குள் நுழைந்து, உண்மையான வளர்ச்சியை மிக எளிமையாகச் சாத்தியப்படுத்துவார்கள்.

செயலிழக்கும் அரசமைப்பு

  • இதை உணர்ந்ததாலேயே உண்மையான சமவாய்ப்பைச் சாத்தியப்படுத்தும் வகையில் அதிகாரத்தைப் பரவலாக்கிட மாநில அரசின் உரிமைகளையும், தேர்தல் ஆணையம், திட்டக்குழு, புலனாய்வு போன்ற அமைப்புகளையும், மத்திய பொதுத் துறைக் கட்டமைப்புகளில் நடுவண் அரசின் தலையீடற்ற தன்னாட்சி உரிமை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு போன்ற சிறப்புக் கூறுகளையும் அரசமைப்பு விவாத அவையில் தீவிரமாக விவாதித்து அரசமைப்புச் சட்டவரைவை உருவாக்கினார்கள்.
  • ஆனால், வெளியரசியல் பார்வையில் கண்ணுக்குப் புலப்படாத ஆளும் வர்க்கம் என்ற அதிகாரமும் இயங்குகிறது. கவனம் செலுத்த வேண்டிய எத்தனையோ வேலைவாய்ப்பு, சூழலியல் பிரச்சினைகள் முன்னிருக்க, ஆளும் வர்க்கமோ நாடு முழுமைக்குமான ஒரே கல்விக் கொள்கை, ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே குடும்ப அட்டை என்று திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டம் இன்று சட்டபூர்வமாகவே செயலிழக்கச் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது!
  • அதிகார பலமிக்க இந்த ஆளும் வர்க்கக் கட்டமைப்புக்குள் இடஒதுக்கீட்டின் வழி கொஞ்சமேனும் நிகழ்ந்த அதிகாரப் பரவலாக்கமே அதன் பலனை அனுபவித்துவந்தவர்களைத் தொந்தரவடையச் செய்கிறது. அதனாலேயே பொதுத் துறைக் கட்டமைப்புகளின் தன்னாட்சி அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன.
  • முன்னெப்போதும் இல்லாத அளவில் பொதுத் துறை நிறுவனக் கட்டமைப்பைத் தனியார்மயப்படுத்த விரைகிறார்கள். ‘மதச்சார்பற்ற சமூகநீதி மக்களியக் குடியரசு’ என்று தேசம் கொண்டிருக்கும் அனைவருக்கும் சமவாய்ப்பு, ஒருங்கிணைந்த வளர்ச்சி என்ற உண்மையான ஜனநாயகத்தை விழுமியமாக வலியுறுத்தும் இந்திய அரசமைப்பைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையிடம் கொண்டுசேர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (06-12-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories