- இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 355வது கூறு சொல்கிறது: “அயல்நாட்டுப் படையெடுப்புகள், ஆக்கிரமிப்புகளிலிருந்து ஒவ்வொரு மாநிலத்தையும் பாதுகாக்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை; உள்நாட்டுக் கலவரங்கள் மூண்டாலும் அரசமைப்புச் சட்டப்படி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அந்தந்த மாநில அரசுகளின் கடமை.”
- இந்தச் சட்டக்கூறு பல வகைகளிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒன்றிய அரசு (மத்திய அரசு) அனைத்து மாநிலங்களையும் காக்க கடமைப்பட்டுள்ளது; மாநிலங்களை வலிமையற்றதாக்கவோ, அழிக்கவோ அல்ல. அரசமைப்புச் சட்டப்படி ஒவ்வொரு மாநிலமும் நிர்வகிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டியதும் ஒன்றிய அரசின் கடமை. ஒரு மாநிலம் முறையற்ற வகையில் நிர்வகிக்கப்படும்போதோ அல்லது நிர்வாகமே இல்லாமல் நிலைகுத்திய நிலையில் இருக்கும்போதோ ஒன்றிய அரசு வெறும் பார்வையாளரைப் போல வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது என்பதை நினைவூட்டுவது இந்தக் கூறுதான். இந்த இரண்டும் வெவ்வேறான கடமைகள்.
- ஒன்றிய அரசு என்பது அரசமைப்புச் சட்டத்தின் கருத்துரு. ஒன்றிய அரசின் சார்பில் ஆண்களும் பெண்களும் செயல்படுகிறார்கள், பேசுகிறார்கள் என்பதுதான் இதன் இறுதியான அம்சம். அப்படி ஆண்களும் பெண்களும் உறுப்பினர்களாக உள்ள அந்த உயரிய அமைப்புதான் ஒன்றிய அரசின் அமைச்சரவை; அத்தகைய அமைச்சர்கள் பேரவையின் அச்சாணியாகச் செயல்பட வேண்டியவர்தான் பிரதமர்.
இரட்டைக் கடமை
- மணிப்பூர் மாநில விவகாரத்தில் இரண்டு கடமைகளுமே 2023 மே 3 முதல் நிறைவேற்றப்படாமல் மீறப்படுகின்றன. அரசமைப்புச் சட்டத்தின் 355வது கூறு விதித்துள்ள கடமையை நிறைவேற்றாமல், ஒன்றிய அரசு (மத்திய அமைச்சரவையும் பிரதமரும்) அரசமைப்புச் சட்டத்தை மீறி வருகிறது. மணிப்பூர் குறித்து மே 3 முதல், பிரதமர் நரேந்திர மோடி ஒரு வார்த்தைகூட பொதுவெளியில் பேசவில்லை, அமைதி காக்குமாறு அந்த மாநில மக்களுக்கு வெளிப்படையாக ஒரு வேண்டுகோள்கூட விடுக்கவில்லை. மணிப்பூருக்குச் சென்று நிலைமையை நேரில் பார்க்க வேண்டும் என்றுகூட அவர் நினைக்கவில்லை. இதற்கிடையே 120க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
- இது ஏதோ பித்துக்குளித்தனத்தால்தான் இப்படி நடக்கிறது என்று விமர்சகர்கள் நினைத்தால், இதற்கான காரணம் என்னவாக இருக்க முடியும் என்றும் ஆராய வேண்டும். இவையெல்லாம் காரணமாக இருக்கக்கூடும் என்று நான் கருதுகிறேன்:
- மணிப்பூர் மாநிலத்தை ஆள்வதும் பாரதிய ஜனதா கட்சி அரசுதான், எனவே அந்த மாநிலத்தைக் கண்டிப்பதோ, பதவியிலிருந்து அகற்றுவதோ தனக்குத்தானே அரசியல்ரீதியாக காயப்படுத்திக்கொள்வதைப் போல. அப்படியானால், “என்னுடைய கட்சியைவிட நாடு பெரியது” என்று பீற்றிக்கொள்வது உண்மையல்ல என்று புரிந்துகொள்ள வேண்டும்.
- மக்களிடையே செல்வாக்கு இழந்துவிட்ட மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங்குடனான உறவை துண்டித்துக்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி விரும்பக்கூடும். அப்படியானால், “மத்தியிலும் – மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால்தான் நிர்வாகம் சிறப்பாக இருக்கும்” என்ற பசப்புகள் உண்மையல்ல என்பது புரிய வேண்டும்.
- மணிப்பூர் மாநிலம் நாட்டின் வட கிழக்கில் எங்கோ வெகு தொலைவில் இருக்கிறது. அங்கு என்ன நடந்தாலும் நாட்டின் பிற பகுதிகளில் சிறு அதிர்வுகள்கூட எதிர்வினையாக ஏற்பட்டு விடாது. அப்படியானால், “கிழக்கு நோக்கிய (ஒன்றிய) அரசின் பார்வை”க்கு அர்த்தம்தான் என்ன?
- மணிப்பூரின் மெய்தி சமூகமும் குகி இனமும் அடித்துக்கொள்ளட்டும்; மெய்தியின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில அரசின் உதவியுடனும், பெரும்பாலும் மெய்திகளால் நிரம்பிய பாஜகவாலும் ஆதரிக்கப்படுவதால் இறுதியாக மெய்திகள்தான் வெற்றிபெறுவார்கள். அப்படியானால் “அனைத்து தரப்பினரும் தோழர்கள், அனைத்து தரப்பினருக்காகவும் முன்னேற்றம், அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பு” என்பதெல்லாம் போலி நடிப்பு.
- மேலே சொன்னவற்றில் ஒன்றோ அல்லது அதற்கும் மேலான எண்ணவோட்டங்களோதான் ஒன்றிய அரசின் இப்போதைய செயலற்ற தன்மைக்குக் காரணம் என்றால், இந்த அரசு சுயநலமும் அக்கறையின்மையும் கொண்ட இழிவான கலவை.
மீண்டும் கறுப்பு நாள்
- மணிப்பூர் மாநிலத்தின் வரலாற்றில் மே 3 கறுப்பு தினம். முப்பதாண்டுகளுக்கு முன்னால் 1993 மே 3இல் மெய்தி சமூக இந்துக்களும் மெய்தி சமூக முஸ்லிம்களும் (பங்கால்கள்) இதேபோல மோதிக் கொண்டதில் 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். அதே வரலாறுதான் 2023 மே 3 அன்றும் திரும்பியிருக்கிறது. இந்த முறை மோதல்கள், மெய்திகளுக்கும் குகிக்களுக்கும் இடையில். இந்த மோதலைத் தூண்டிவிட்டது மணிப்பூர் மாநில உயர் நீதிமன்றத்தின் - தவறான ஆலோசனையின் பேரில் - பிறப்பிக்கப்பட்ட ஆணை.
- மெய்தி சமூகமானது வெகு காலமாகவே தங்களைப் பழங்குடி இனப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்திவருகிறது. அடுத்தடுத்து அங்கு ஆட்சிக்கு வந்த மாநில அரசுகள் அந்த கோரிக்கையை ஏற்று அமல்படுத்த முன்வராமலேயே தவிர்த்துவருகின்றன; மெய்திகள், குகிக்கள், நாகர்களைக் கொண்ட அந்த மாநிலத்தில் இந்த கோரிக்கை ஏற்கப்பட்டால் அது மூன்று சமூகங்களுக்கிடையில் மோதலையும், விரும்பத்தகாத விளைவுகளையும் ஏற்படுத்தி விடும் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்துள்ளனர்.
- அடுத்தடுத்து பதவிக்கு வந்த எல்லா மாநில அரசுகளுமே இந்த விவகாரத்தில் முடிவெடுக்காமல் தயங்குவதாக மெய்திகள் குற்றஞ்சாட்டினாலும், அப்படி முடிவெடுக்காமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வருவதற்குத் தகுந்த காரணங்கள் இருக்கின்றன. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னால் மெய்திகளும் பழங்குடிகளாகவே பட்டியலில் இருந்தனர். ஆனால் அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட 1950இல் (பட்டியல் இனப் பழங்குடிகளில்) மெய்திகள் சேர்க்கப்படவில்லை. இப்போது பெரும்பாலான மெய்திகள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளனர், இது சுமார் 17%.
- அரசியல்ரீதியில் இந்த மூன்று சமூகத்தவர் இடையிலான ‘சமபலநிலை’ மிகவும் நுட்பமானது. மாநிலத்தின் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மெய்திகள் 40 தொகுதிகளில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். குகிக்கள் 10 தொகுதிகளிலும் நாகர்கள் 10 தொகுதிகளிலும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். குகிக்களும் நாகர்களும், பழங்குடிகள் என்று பட்டியலில் உள்ள 36 சமூகங்களில் இடம்பெற்றுவிட்டனர். மெய்திகளையும் பழங்குடிகள் பட்டியலில் சேர்த்தால் தேர்தல் களத்தில் பெரிய மாறுதல் ஏற்பட்டுவிடாது. ஆனால் பழங்குடிகள் பிரதேசம் என்று மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு நில உரிமை கோருவதிலும் அரசு வேலை வாய்ப்புகளிலும் மெய்திகளுக்குக் கூடுதல் ஆதிக்கம் ஏற்பட்டுவிடும்.
தவறான வழிகாட்டல்
- இந்த நிலையில்தான், மணிப்பூர் மாநிலத்தின் தாற்காலிகத் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற நீதிபதி முரளீதரன் பிறப்பித்த ஆணை, மோதல்களுக்குக் காரணமாகிவிட்டது. தங்களுடைய சமூகத்தைப் பழங்குடிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மெய்திகள் கடந்த பத்தாண்டுகளாக வலியுறுத்திவந்தும் மாநில அரசு நடவடிக்கை எடுக்காததால், இது தொடர்பான ஆலோசனைகளுடன் மாநில அரசின் பரிந்துரையையும் அடுத்த நான்கு வாரங்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
- பழங்குடி அந்தஸ்து தொடர்பாக மெய்தியின் கோரிக்கைகளிலும் அதை எதிர்க்கும் பிற சமூகங்களின் கோரிக்கைகளிலும் நன்மை, தீமைகள் பல இருக்கலாம், ஆனால் அவற்றையெல்லாம் தலையிட்டு தீர்க்க வேண்டியது நீதித் துறை அல்ல. பழங்குடிகளுக்கான தேசிய ஆணையமும் மாநில சட்டப்பேரவையும் இந்த கோரிக்கைகளைப் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று பொறுப்பை, அவற்றிடம் நீதித் துறை விட்டிருக்க வேண்டும்.
- மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமரைச் சந்திக்க பாரதிய ஜனதாவை சேர்ந்த 30 பேரவை உறுப்பினர்கள் அனுமதி கோரியும் பிரதமர் அனுமதிக்கவில்லை. மணிப்பூரின் முன்னாள் முதல்வர் இபோபி சிங் தலைமையில் இதே விவகாரம் தொடர்பாக பிரதமரைச் சந்திக்க பத்து கட்சிகள் கோரிக்கை விடுத்தபோதும் அவர்களையும் சந்திக்க பிரதமர் அனுமதிக்கவில்லை.
- மணிப்பூர் மாநிலம் பற்றி எரியட்டும் என்று மாண்புமிகு பிரதமர் விட்டுவிட்டார். திறமையற்ற நிர்வாகம், அலட்சியம், அரசியல் லாபம் கருதும் கட்சி அடிப்படையிலான கண்ணோட்டம் ஆகியவை தான் பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசின் அடையாளம். இப்போது அந்த மாநிலத்தின் கோரிக்கையைக்கூட கேட்க விருப்பம் இல்லாமல் சந்திக்க மறுத்து அவமதித்திருக்கிறார் பிரதமர்.
- மணிப்பூரில் இரட்டை என்ஜினில் ஒன்று (மாநில அரசு) எரிபொருள் இல்லாமல் அணைந்து விட்டது; இன்னொரு என்ஜினோ அதைக் கழற்றிவிட்டுவிட்டு எங்கோ போய் மறைந்துகொள்ள முடிவு செய்து விட்டது. இரட்டை என்ஜின்களைப் பெற்றதால், கொதிக்கும் கொப்பரைபோல கொந்தளித்துக்கொண்டிருக்கிறது மணிப்பூர். ஓ, என் பிரிய தேசமே - இப்படிப்பட்ட அரசுகளுக்காக கண்ணீர்விடு!
நன்றி: அருஞ்சொல் (26 – 06 – 2023)