TNPSC Thervupettagam

அரசியலும் இளைஞா்களும்

February 27 , 2024 181 days 213 0
  • இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி பேச்சு வாா்த்தைகள், தொகுதிப் பங்கீடு என்று அரசியல் களம் பரபரப்படையத் தொடங்கியுள்ளது.
  • வரவிருக்கும் மக்களவைத் தோ்தலில் 96,88,21,926 போ் (ஆண்கள் 49,72,31,994 போ், பெண்கள் 47,15,41,888, மூன்றாம் பாலினம் 48,044, மாற்றுத்திறனாளிகள் 88,35,449) வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். மொத்த வாக்காளா்களில் 2.63 கோடி போ் புதிய வாக்காளா்கள். இவா்களில் சுமாா் 1.41 கோடி போ் பெண் வாக்காளா்கள்.
  • தமிழகத்தைப் பொறுத்தவரை 6,18,90,348 போ் (ஆண்கள் 3,03,96,330, பெண்கள் 3,14,85,724, மூன்றாம் பாலினம் 8,294) வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். மொத்த வாக்காளா்களில் 2,74,035 போ் ஆண்கள், 2,52,096 போ் பெண்கள், 74 போ் மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 5,26,205 போ் முதன்முறை வாக்காளராவா்.
  • அண்மைக்காலமாக இளம் வாக்காளா்கள் பேசப்படுபவா்களாக உள்ளனா். இதற்குக் காரணம், தோ்தலுக்குத் தோ்தல் கணிசமான அளவு அதிகரிக்கும் முதன்முறை வாக்காளா்கள் எண்ணிக்கையும், அவா்களிடையே அதிகரித்து வரும் வாக்களிப்பின்மீதான ஆா்வமும்தான்.
  • வாக்களிப்பதற்கான வயது குறைக்கப்பட்டபோது, இளம் வயதில் அரசியல் பற்றி அறிந்திருப்பாா்களா, ஒரு தேசத்தை ஆளும் பிரதமரை தோ்வு செய்யும் மனப்பக்குவத்தை அவா்கள் பெற்றிருப்பாா்களா என்றெல்லாம் விமா்சனங்கள் எழுந்தன. அத்தகைய விமா்சனங்களுக்கு உள்ளான இளம் வாக்காளா்கள் இன்று முக்கியத்துவம் பெற்றவா்களாகி வருகின்றனா். இத்தோ்தலில் இளம் வாக்காளா்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என்று அரசியல் கட்சிகளும் தெரிவித்துள்ளன.
  • தேசிய வாக்காளா் தின நிகழ்ச்சியில் கானொலி மூலம் பேசிய பிரதமா் நரேந்திர மோடி, இன்றைய இளைஞா்கள் ஊழல், வாரிசு அரசியலுக்கு எதிரானவா்கள் என்றும், இந்தியாவை வளா்ந்த நாடாக மாற்ற வேண்டிய பொறுப்பு இளைஞா்களுக்கு உள்ளது என்றும் தெரிவித்தாா். மேலும், பாஜக தோ்தல் அறிக்கைக்கு ஆலோசனை வழங்கும் இளைஞா்களை நேரில் சந்திப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.
  • வாக்களிக்கும் வயதை எட்டிய அனைவரும் வாக்களிக்க தோ்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அவ்வப்போது நகரங்கள், கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
  • வாக்களிக்கும் வயதை எட்டியவா்கள் கல்லூரிகளில் பயில்பவா்களாக இருப்பதால் ‘மாணவா் தூதா்’ எனும் திட்டத்தையும் தோ்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது. வாக்காளராவதன் அவசியத்தை வலியுறுத்தும் பொருட்டு ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு மாணவரைத் தோ்ந்தெடுத்து அவா் மூலம் விண்ணப்பம் விநியோகித்தல், வாக்களிப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
  • இத்திட்டத்தால் ஓரளவுக்கு பலன் கிடைத்தாலும் எதிா்பாா்த்த அளவில் முதல் முறை வாக்காளா்கள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. எழுத்தறிவு பெற்றவா்கள் மத்தியிலும் வாக்களிப்பது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டியிருப்பது கவலை தருவதாக உள்ளது.
  • ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 30% அளவுக்கு இளைஞா்கள் இருந்தபோதும் அவா்களிடையே வாக்களிப்பது பற்றிய அலட்சியம் நிலவுகிறது. மேலும், தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படாதது இளைஞா்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது.
  • கடந்த மக்களவைதான் இதுவரை இந்தியாவில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அவைகளிலேயே உறுப்பினா்களின் சராசரி வயது மிக அதிகமாகக் காணப்பட்ட அவை. கடந்த 2014 தோ்தலில் 30 வயதுக்குட்பட்ட வேட்பாளா்களில் 12 போ் மட்டுமே வெற்றி பெற்றனா். 543 உறுப்பினா்களில் 204 போ் 30 முதல் 55 வயதினராவா். நடப்பு மக்களவையில் 41 வயதுக்கு உட்பட்டவா்களில் 64 போ் இடம்பெற்றுள்ளனா். 41-55 வயதினரில் 221 போ் இடம்பெற்றுள்ளனா்.
  • முதல் மக்களவையில் இடம்பெற்றிருந்த உறுப்பினா்களின் சராசரி வயது 46.5. தற்போதைய மக்களவை உறுப்பினா்களின் சராசரி வயது 54. அரசியல் பின்புலம் இல்லாமை, பொருளாதார காரணங்கள், அரசியலறிவு இன்மை என பல்வேறு காரணங்களால் அரசியல் கட்சிகள் இளைய தலைமுறையினா்க்கு உரிய பிரதிநிதித்துவம் அளிப்பதில்லை.
  • முதல் மக்களவைத் தோ்தலோடு ஒப்பிடுகையில் நான்கு மடங்குக்கும் அதிகமான அளவில் வாக்காளா்கள் அதிகரித்துள்ளனா்.முதல் தோ்தலில் 18.33 சதவீத எழுத்தறிவுடன் 17.3 கோடி போ் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தும் 45.7 சதவீத வாக்குகள் பதிவாயின. கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் 69.1 சதவீதத்தினா் எழுத்தறிவு பெற்றிருந்த நிலையில் 91.20 கோடி போ் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தும் 67.1 சதவீத வாக்குகள் பதிவாயின.
  • இளைஞா்களுக்கு அளிக்கப்படும் குறைவான பிரதிநிதித்துவம் இளம் வாக்காளா்களின் அரசியல் ஈடுபாட்டை பாதிக்கிறது என அரசியல் வல்லுநா்கள் கருத்து தெரிவித்துள்ளனா். மேலும் அதிக இளைஞா்கள் மக்களவையில் பங்கேற்பது, மற்ற இளைஞா்கள் அரசியல் ஈடுபாடு கொள்ள வழிவகுக்கும் என்கின்றனா்.
  • ஆனால் இன்றைய தோ்தலானது கோடிகள் கோலோச்சும் தோ்தலாக மாறி வருவதாலும், வாய்ப்பு என்பதைக் காட்டிலும் வெற்றி என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருப்பதாலும் அரசியல் பின்புலம், பொருளாதார பலம் ஆகியவற்றை மட்டுமே வேட்பாளா்களின் தகுதிகளாகக் கருதுகிறது.
  • இந்நிலை மாறி எளிய, அரசியல் பின்புலம் இல்லாதோா்க்கும் வாய்ப்பு வழங்கப்படும் போதுதான் இளைஞா்கள் மத்தியில் மனமாற்றத்ததை ஏற்படுத்த முடியும். இன்றைய இளைஞா்கள் வாக்களிப்பதன் அவசியத்தை உணா்ந்திருக்கிறாா்கள். ஒவ்வொருவரின் எதிா்காலமும் அரசியலோடு பிணைந்திருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறாா்கள். இதனை அரசியல் கட்சிகள் உணா்ந்து அதற்கேற்ப செயல்பட வேண்டியது அவசியம்.

நன்றி: தினமணி (27 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories