TNPSC Thervupettagam

அரசியல்... அன்றும் இன்றும்!

March 15 , 2025 1 hrs 0 min 20 0
  • இந்திய நாட்டின் அரசியல் என்பது சுதந்திரப் போராட்டத்திலிருந்து தொடங்குகிறது. அந்தக் காலத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியா மட்டுமல்லாமல், இலங்கை, பர்மா, மலேயா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளைப் பிடித்து ஆளத் தொடங்கியிருந்தனர்.
  • அப்போது இந்தியா ஒன்றாக இல்லை. 56 தேசங்களாகப் பிரிந்து கிடந்தது. வணிகம் செய்ய வந்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி இந்தியர்களின் ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி, அவர்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்யத் தொடங்கினர். குறுநில மன்னர்களும், நிலக்கிழார்களும், ஜமீன்தார்களும் எளிதாக ஆங்கிலேயரிடம் சரணடைந்தனர்.
  • தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்த காந்தியார் ஆங்கிலேயரின் அடக்குமுறைகளைக் கண்டு வெகுண்டெழுந்தார். தாய்நாட்டைக் காக்க இளைஞர்களை அறைகூவி அழைத்தார். அவரது அகிம்சைக் கொள்கையால் கவரப்பட்டு இளைஞர்களும் தம் உடல், பொருள், உயிரை அர்ப்பணித்திட அவர் பின்திரண்டனர்.
  • இதே காலகட்டத்தில் தீவிரவாத இளைஞர்கள் வன்முறைகளில் இறங்கினர். வெள்ளையர்கள் நடத்திய நாடாளுமன்றத்தில் குண்டு வீசிய பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், ஆஷ் துரையைச் சுட்டு வீழ்த்திய வாஞ்சிநாதன் போன்று எண்ணற்ற இளைஞர்களைக் கூறலாம். இவர்களுடைய நோக்கம் பணம், பதவி இல்லை. தேசத்தை விடுவிப்பதே நோக்கமாக இருந்தது. அதற்காக எல்லாவற்றையும் இழக்கத் தயாராக இருந்தனர்.
  • இன்று அரசியல் எப்படி இருக்கிறது? எங்கே சென்றால் பணமும், பதவியும் கிடைக்கும் என்று கணக்குப் போட்டு கட்சியில் சேர்கிறார்கள். அல்லது கட்சியைத் தொடங்குகின்றனர். கட்சியைத் தொடங்கும் போதே முதலமைச்சர் நாற்காலியைத் தவிர, வேறு எதுவும் கண்ணுக்குத் தெரிவது இல்லை.
  • அந்தக் காலத்தில் மக்களுக்குச் சேவை செய்யவே அரசியலுக்கு வந்தனர். மக்களிடம் சென்று, மக்களிடம் கற்றுக் கொண்டு, மக்களுக்குப் பணியாற்றுவதே அரசியல் என்று அரசியல் விற்பன்னர்கள் கூறினர். இப்போது அதையெல்லாம் எடுத்துக் கூற யாரும் இல்லை. சொன்னாலும் கேட்பதற்கு எவரும் இல்லை.
  • இன்றைய அரசியல்வாதிகள் மக்களைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை. மக்களிடம் போவதும் இல்லை; மக்களை மதிப்பதும் இல்லை; தேடிவரும் மக்களைச் சந்திப்பதும் இல்லை. வாக்காளர்களைப் பற்றிக் கவலைப்படாமல் வாக்குகளைப் பெறுவதற்கென வியூகம் வகுத்திட நிபுணர்களை ஏற்பாடு செய்து கொள்கின்றனர். மக்களின் வாக்குகளைப் பெறுவதே இவர்களின் நோக்கமாகும். இவர்களுக்குக் கோடிக்கணக்கில் ஊதியம் வழங்கவும், வாக்காளர்களுக்குப் பணம் செலவு செய்யவும் அரசியல் கட்சிகள் தயாராக இருக்கின்றன.
  • எந்தக் கட்சியும் தனித்து நிற்கும் துணிச்சலைப் பெறவில்லை. கூட்டணிக்காக ரகசியமாக மற்ற கட்சிகளுடன் பேரம் பேசுகின்றனர். இந்தப் பேரத்தில் பணமும், இடங்களும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
  • பெரும்பாலான கட்சிகளுக்கு கொள்கை என்பதே இல்லை. எப்படியாவது வெற்றிபெற வேண்டும். இது ஒன்றே பொதுவான கொள்கையாகும்.
  • மக்களாட்சி என்பது என்ன? "மக்களால் மக்களுக்காக நடத்தப்பெறும் அரசாங்கம்' என்னும் வரைவிலக்கணம் கொண்டது. மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் மக்களாட்சிக்கு வரையறை கூறினார்.
  • உலகில் பெரும்பாலான நாடுகளில் இந்த முறையே செயல்படுத்தப்படுகிறது. பொதுவாக ஒரு நாட்டின் மக்கள் தங்களின் கருத்துகளைத் தேர்தலின் மூலம் பதிவு செய்து தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பர். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ ஆட்சி செய்வர்.
  • பழங்கால கிரேக்க, ரோமானிய அரசுகளில் மக்களாட்சிக் கொள்கை பின்பற்றப்பட்டது. மக்களாட்சி என்பது ஏதென்ஸ் பாரம்பரிய நகரத்தில் உள்ள தத்துவச் சிந்தனையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. ஏதென்ஸ் நகர மக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
  • இடைக்காலத்தில் மக்களாட்சியில் சில இடர்ப்பாடுகள் ஏற்பட்டன. ஆனால் அமெரிக்க விடுதலைப் போர், பிரெஞ்சுப் புரட்சி, ரஷியப் புரட்சி மற்றும் இந்தியச் சுதந்திரப் போர் ஆகியவை மன்னராட்சிக்கு மாற்றாக, மக்களாட்சி என்ற புதிய வடிவத்துக்குச் செயல்வடிவம் கொடுத்தன. இதன் அடிப்படையில் உலகில் பல நாடுகள் மக்களாட்சியை ஏற்றுக் கொண்டன.
  • சோழர்கள் காலத்தில் குடவோலை முறை மூலம் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து நிர்வாகம் செய்யும் ஊராட்சி முறை கி.பி. 9}ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 16-ஆம் நூற்றாண்டு வரை நடைமுறையில் இருந்தது. இதற்கான ஆதாரம் முதலாம் பராந்தக சோழன் கால கல்வெட்டில் இருக்கிறது.
  • உத்திரமேரூர் கல்வெட்டில் இந்தக் குடவோலை முறை பற்றி அறிய முடிகிறது. இதில் ஒருவர் வேட்பாளராக நிற்பதற்குப் பல தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். கிராமத்தில் பகுதி வாரியாக மக்கள் கூடி தகுதியான உறுப்பினர்களின் பெயர்களை ஓலைச் சுவடிகளில் எழுதுவார்கள். பிறகு அதை மொத்தமாகக் கட்டி ஒரு பானையில் இட்டுக் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பார்கள்.
  • இந்திய வரலாற்றில் முதன் முதலில் குடியுரிமை மற்றும் வாக்குச் சீட்டு ஆகியவற்றை அறிமுகம் செய்தவன் முதலாம் பராந்தக சோழன் ஆவான். சோழர் காலத்தில் மக்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுத்த முறை, இன்றைய மக்களாட்சி முறைக்கு முன்னோடி என்று சொல்லலாம்.
  • கிராமங்கள் பல வாரியங்களாகப் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டன. சம்வத்சர வாரியம், தோட்ட வாரியம், ஏரி வாரியம், பஞ்ச வாரியம், பொன் வாரியம் எனப் பிரிக்கப்பட்டிருந்தன. இந்தக் குழுவில் ஒருவர் ஏதேனும் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டால் அவர் உடனடியாக நீக்கப்படுவார்.
  • சோழ மன்னர்களின் ஆட்சிச் சிறப்புக்கும், நாட்டு மக்கள் பயன்பெற்று அமைதியாக வாழ்ந்தமைக்கும் முதற்காரணம், அக்காலத்தில் ஊர்தோறும் நிலைபெற்றிருந்த ஊராட்சி மன்றங்களின் தன்னலமற்ற தொண்டுதான். ஊர் சபைகள் பொறுப்புடன் அறநெறி பிறழாமல் நடுநிலைமையுடன் கடமையை நிறைவேற்றி வந்ததால், அச்சபைகள் மீது மக்கள் பெருமதிப்பும், நம்பிக்கையும் வைத்து அவற்றின் முடிவுகளை ஏற்றுக் கொண்டு கீழ்ப்படிந்து நடந்து வந்தனர் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
  • மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் மக்கள் அடங்கிக் கிடந்தனர். காரணம், மன்னர்களைக் கடவுளின் அவதாரமாக எண்ணியிருந்தனர். அதனால்தான், "மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்' என்று புலவர்கள் பாடினர். அரசர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டியே "மக்களாட்சி' உருவாக்கப்பட்டது.
  • ஆனால், காலம் செல்லச் செல்ல மக்களாட்சியில் அமைச்சர்களே அரசர்களைப் போல ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டனர். இப்போது மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் "இருதலைக் கொள்ளி எறும்பாகத்' தவிக்கின்றனர். மக்கள் மேலும் மேலும் ஏழையாகிக் கொண்டிருக்கின்றனர். அரசியல்வாதிகள் நாள்தோறும் மாளிகைவாசியாக மாறிக் கொண்டிருக்கின்றனர்.
  • "விதையில்லாமல் புல் முளைக்கிறது. வேர் இல்லாமல் ரோமம் முளைக்கிறது. விதையும், வேரும் இல்லாமலேயே அரசியல் முளைக்கிறது' என்றார் கவிஞர் கண்ணதாசன்.
  • எந்த மூலதனமும் இல்லாமல் கோடி கோடியாக சம்பாதிக்கும் தொழிலாக அரசியல் மாறிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் போட்டியும் அதிகமாக இருக்கிறது. இனிமேல் சாதாரண மனிதர்கள் அரசியலில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சட்டமன்றமும், நாடாளுமன்றமும் கோடீஸ்வரர்களின் கூடாரமாகி விட்டது என்பது தேர்தல் வல்லுநர்களின் கணிப்பாகும்.
  • ""உலகத்தில் மிகவும் உயர்வானது அறிவோடு கூடிய கட்டுப்படுத்தப்பட்ட மக்களாட்சி. வெறுப்பும், அறியாமையும், மூடநம்பிக்கையும் கொண்ட மக்களாட்சி, குழப்பத்தில் கொண்டு போய் விடுவதோடு, தன்னைத் தானே அழித்துக் கொண்டு விடும்'' என்று காந்தியடிகள் கூறினார்.
  • அரசாங்கத்தின் அரியணையில் அமர்வது என்பது புலியின் மேல் சவாரி செய்வது போன்றது. அதிகாரபீடத்தில் இருப்பவர்களுக்கு ஓய்வும் இல்லை, உல்லாச வேளையும் இல்லை என்று கூறிய அன்றைய அரசியல் மறைந்து விட்டது.
  • நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தியாகிகள் இப்போது இல்லை. நாட்டுக்காகத் துரும்பைக் கூட அசைக்காதவர்கள் தான் அரியணைக்காக அடித்துக் கொள்ளுகின்றனர். மக்களும் யாரைத் தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் "நோட்டா'வை நோக்கி கைநீட்டுகின்றனர்.
  • ""அரசாங்கம் மக்கள் சேவைக்காக ஏற்படுத்தப்படுவது. ஆனால் அது அமைக்கப்பட்டவுடன், பொது மக்களை எதிரிகளாக நினைக்கத் தொடங்கி விடுகிறது'' என்றார் அறிஞர் அட்கின்சன். அது எவ்வளவு உண்மை என்பது இப்போது நடைமுறையில் தெரிகிறது.
  • எதிர்க்கட்சியாக இருக்கும்போதெல்லாம் மக்கள் பிரச்னைகளைப் பேசும் அரசியல் கட்சிகள், ஆளும் கட்சியானதும் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை மறந்து விடுகின்றனர். அமைக்கப்படும் அரசாங்கம் அனைவருக்கும் பொது என்பது மாறி, தங்கள் கட்சிக்காரர்களுக்கு மட்டுமே சேவை செய்வது என்பது வழக்கமாகி விட்டது. இது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கும், மக்களாட்சியின் மாண்புக்கும், எடுத்த உறுதிமொழிக்கும் எதிரானது என்பதை யார் எடுத்துக் கூறுவது? இது எழுதப்படாத சட்டமாகி விட்டது. அன்றைய அரசியலுக்கும், இன்றைய அரசியலுக்கும் உள்ள வேறுபாடு இதுதான்.

நன்றி: தினமணி (15 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories