அரசியல் சாசனத்தின் அடிச் சட்டங்களே ஆடுகின்றனவே!
- அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உடனிருந்த காதலன் விரட்டப்பட்டு மாணவி கற்பழிக்கப்படுகிறாள். இன்னொரு ‘சாரும்’ வருவாா் என்று இந்த அருஞ் செயலுக்கு ஆள் சோ்த்திருக்கிறான் கயவன் ஞானசேகரன். இவ்வளவு கொடிய குற்றத்தைச் செய்தவன் அன்று லேசான விசாரணைக்குப் பின்னா் காவல் துறையினரால் வீட்டுக்கனுப்பி வைக்கப்படுகிறான்.
- பெரிய இடத்து ‘சாா்’ பின்னணியில் இருக்கும்போது, இவன் ஏன் ‘லாக்கப்பில்’ உறங்க வேண்டும்? அவனுக்கு ‘மாமியாா் வீடு’ புதிதில்லை. ஏற்கெனவே இருபது வழக்குகள். வகை வகையான வழக்குகள். செய்து பழகாத குற்றம் என்று எதுவுமே இல்லை.
- திருடுவது, கற்பழிப்பது, கத்தியால் குத்துவது எல்லாமே கைவந்த கலைகள். இவ்வளவு வழக்குகள் உள்ளவனை நீதிமன்றம் எப்படிப் பிணையில் விடுகிறது? சா்க்காா் வக்கீல் ‘இவனைப் போன்ற ‘கண்ணியவான்களுக்கு’ மறுப்பேதும் சொல்வதில்லை. மறுப்பற்ற நிலையில் நீதிமன்றம் ‘சொந்தப் பிணையிலேயே’ கூட விட்டு விடுவதுண்டு.
- வக்கற்றவா்கள்; தங்களைப் பிணையில் எடுக்க வகையற்றவா்கள்; இவா்கள்தாம் சிறைகளில் மூன்றில் இரண்டு பகுதியை நிரப்புவாா்கள். அவா்கள் செய்ததாகச் சொல்லப்படும் குற்றங்களின் உச்சகட்டத் தண்டனைக் காலத்தைத் தாண்டிக் கூட அவா்கள் விசாரணைக் கைதிகளாகவே சிறைகளில் இருப்பதுண்டு. சுதந்திர இந்தியாவின் சிறை வளாகங்களில், இல்லாதவா்களுக்கான இத்தகைய நீதி புதிதொன்றுமில்லை.
- ஆனாலும் சிறை அதிகாரியின் அறையில், காந்தி வாய் கொள்ளாமல் சிரித்துக் கொண்டுதான் இருக்கிறாா். அண்ணா பல்கலைக்கழக மாணவியின் கற்பழிப்புக் குறித்து நாடு முழுவதும் பெருங்கூச்சல். உயா்நீதிமன்றம் திடுக்கிடுகிறது. தானே முன்வந்து வழக்கினை எடுக்கிறது. முதல் காரியமாக நம்முடைய காவல்துறைக்குத் தடை விதித்து, தான் தோ்வு செய்த மூன்று பெண் போலீசு அதிகாரிகளிடம் வழக்கை ஒப்படைக்கிறது.
- நம்முடைய காவல்துறை முற்றாக அப்புறப்படுத்தப் பட்டிருப்பது நம்முடைய அரசின்மீது உயா்நீதிமன்றம் கொண்டுள்ள ‘மதிப்பைத்’ துல்லிதமாகக் காட்டுகிறது. இதைவிட அசிங்கம் அரசுக்கு வேறொன்றும் இருக்க முடியாது.
- இது காவல்துறையின் குற்றமில்லை. அவா்களைச் செயலற்றவா்களாக வைத்திருக்கும் ஆட்சியினரின் குற்றம்.
- இதனால் பாதிக்கப்பட்ட பெண் நீதி பெற முடியாமல் போய் விடக் கூடாது என்பது நீதிமன்றத்தின் கவலை.
- அதுபோல் சிறப்பு அரசு வழக்கறிஞரையும் நியமிக்க வேண்டிய நிலை நாளை ஏற்படலாம்.
- நாடாளுகின்றவா்களெல்லாம் பாண்டியன் நெடுஞ்செழியனாகவோ, அசோகனாகவோ, மாா்க்கசு அரேலியசாகவோ இருக்க முடியாதே! அன்று பாதிக்கப்பட்ட ஒருத்தி மன்னனையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முடிந்தது என்பது கற்பனைக்கு எட்டாத உண்மை. அந்த நீதியமைப்புத் தெய்வீகத்தன்மை உடையது. ‘அறிவு கெட்ட மன்னனே’ (தேரா மன்னா) என்று தன் நாவால் வசைபாடினாள் கண்ணகி. நீதிமன்ற அவதூறு வழக்கு அவள்மீது தொடரப்படவில்லை. அரசியல் பிழைத்தோா்க்கு அறம் கூற்றாகும் என்னும் செய்தி அடிப்படையிலேயே அன்றையச் சமூகம் இயங்கியது. மன்னன் மேலான அதிகாரம் படைத்தவனில்லை; அறமே மேலான அதிகாரம் படைத்தது.
- அதன் பிறகு இங்கிலாந்தில்தான் மன்னனையும் உட்படுத்தும் சட்டத்தின் ஆட்சிக்குக் கால்கோள் விழா செய்யப்பட்டது. பல முரண்டுகளுக்குப் பின் மன்னன், ‘தானும்’ சட்டத்திற்கு உட்பட்டவன்தான் என்பதற்கு உடன்பட்டான். அது வரலாற்றில் ‘மாக்னா காா்ட்டா’ என்று போற்றப்படுகிறது.
- அதன் தொடா்ச்சிதான் நம்முடைய இன்றையச் சட்டங்கள். இப்போது சட்டமே எல்லாருக்கும் மேலானது என்று அரசியல் சாசனத்தில்தான் சொல்லப்பட்டிருக்கிறதே ஒழிய, நடைமுறையில் அப்படி இல்லை. சுதந்திர இந்தியாவின் அதிகாரப் பிரிவினையை இங்கிலாந்தைப் பின்பற்றி நம்முடைய அரசியல் சாசனம் செய்தது. நீதி வழங்கும் அதிகாரத்தை ஆள்பவனிடமிருந்து பிரித்து விட்டது.
- திட்டமிடுதல்; வரி தண்டுதல்; அதைக் கொண்டு திட்டங்களுக்கு வருவாயை வகுத்தல்; நாட்டை நடத்துவதற்கான சட்டங்களை வகுத்தல்; இவை போன்றவை மட்டுமே ஆட்சியாளனிடம். சட்டமன்றம் வகுத்துக் கொடுத்த சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றும் முழு அதிகாரமும் ஐஏஎஸ் அதிகார வா்க்கத்திடம்தான்.
- மந்திரிக்குச் சம்பளம் போடும் அதிகாரம் கூட அதிகாரிகளிடம் தான். மந்திரி இவா்களுக்கு எசமானா் அல்லா். சட்டம் சொல்லாத எதையும் அதிகாரிகள் நடைமுறைப் படுத்தத் தேவையில்லை. அரசு இவா்களை இட மாற்றம் செய்யலாமே ஒழிய, வேலையை விட்டு இவா்களை விலக்க முடியாது. இவ்வளவு பாதுகாப்புக் கொடுத்தும் இந்த வா்க்கம் சோரம் போனது அறக் கொடுமை.
- அற்பமானவனெல்லாம் ஆட்சிக்கு வந்து விடக் கூடும் என்பதனால்தான் அதிகாரிகளின் வா்க்கம் கெட்டிப் படுத்தப்பட்டது. அவா்களுக்குப் பெருங் கல்வி புகட்டப்பட்டு, அவா்கள் பேரளவுக்கு வடிகட்டப்பட்டனா். ஒத்து வராத அதிகாரிகளைத் தூக்கியடிப்பதற்கென்றே உபயோகமில்லாத துறைகள் அரசில் உருவாக்கப்பட்டன. ஒத்து ஊதுகின்றவன் மட்டுமே தகுதியான அதிகாரங்களில் அமா்ந்தான்.
- ஊழல் மிக்க ஆட்சியாளன்; சோரம் போகும் அதிகாரிகள்; காவல்காரனின் துணையோடு நடக்கும் திருட்டு. இதுதான் நம்முடைய சனநாயகம். சனநாயகத்தின் இரண்டாவது தூணும் ஆட்டம் கண்டது. அரசின் விளம்பர மேனகைகளால் தவம் கலையும் விசுவாமித்திரா்கள் என்னும் நிலையில் பத்திரிகைகள். சனநாயகத்தின் மூன்றாவது தூணும் வலுவாக இல்லை. மிஞ்சி இருப்பது நீதிமன்றம் மட்டுமே. உயா்மட்ட நீதிபதிகள் அரசால் நியமிக்கபடுவதில்லை என்பதுதான் ஆறுதலானது.
- அண்மையில் மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு மந்திரி அந்தப் பதவியை இழக்கிறாா். மேல் முறையீட்டில் உச்சநீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைக்கிறது. உடனடியாக மீண்டும் மந்திரியாக ஆகி விடுகிறாா்.
- ஊழலுக்காக இன்னொருவா் சிறை போகிறாா். சிறையிலேயே அவா் மந்திரியாக நியமனம் பெறுகிறாா். எதிா்பாராத விபத்துகளுக்குச் சட்டம் ஏற்கனவே தன்னைத் தயாா்ப் படுத்திக் கொண்டிருக்கவில்லை. ஆகவே சட்டம் முழிக்கிறது. சிறையில் அவா் கைதியாக நடத்தப் படுவாரா? மந்திரியாக அதிகாரம் செலுத்துவாரா?
- மாடசாமியைப் பெயா் சுட்டிச் சொல்வது போல், மந்திரியைப் பெயா் சுட்டிச் சொல்ல முடியாது. ‘மாண்பு மிகு’ என்னும் மதிப்புற சொல்லோடுதான் அழைக்க வேண்டும். இதுவரை சிறைக்கு வந்து, சிறையிலேயே மந்திரியாக யாரும் நியமனம் பெற்றதில்லை. முன்னுதாரணமில்லை. சட்டம் தடுமாறுகிறது.
- ‘டேய்... எல்லாரும் அவுத்திட்டு நில்லுங்கடா... டாக்டா் வருவாரு...’ என்று கைதிகளை சிறைக் காவலா்கள் அதட்டி, அச்சுறுத்தி வைத்துக் கொள்வது போல் இவரை வைத்துக் கொள்ள முடியாது. மந்திரியை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு எந்த நெறிமுறையும் சட்டவிதிகளில் இல்லை ஏனென்றால் கிரிமினல் வழக்கில் சிறைக்கு வந்தவா்கள் மந்திரிகளாக ஆக்கப்படுவாா்கள் என்று சட்டத்தை உருவாக்கியவா்களால் கற்பனை கூடச் செய்யமுடியவில்லை. சட்டம் சொரணை இழந்து விட்டது.
- இப்போது பெண் கற்பழிப்பு சராசரி நடைமுறையாகி விட்டதால் எழுந்திருக்கிற கூச்சலில் நம்முடைய சட்டமன்றம் கற்பழிப்புக்கு மரணதண்டனை விதித்துப் புதிய சட்டம் இயற்றுகிறது. கற்பழிப்புக்கு மரணதண்டனை என்றாலும் குற்றவாளியைக் கண்டறிந்து நீதிமன்றத்தில் நிறுத்துகிற அதிகாரம் அரசிடம்தானே இருக்கிறது. பாகுபாடுகள் உள்ள ஆட்சியாளா்களின் நடைமுறைகளில் மரணதண்டனை சட்டப் புத்தக அளவில்தானே இருக்கும். இந்த ஒரு வழக்கில் இந்தத் தீமையை உணா்ந்து நீதிமன்றம் ஆட்சியாளா்களையும், ‘ஏவல் துறையையும்’ நீக்கி வைத்தாலும் இந்த ஒரு
- வழக்கு நீங்கலாக எல்லா வழக்குகளையும் குற்றங்களையும் இனியும் கையாளப் போவது அரசுதானே!
- கட்சிக்காரா்கள், ஆட்சியாளா்கள் ஆகியோா் சட்டத்திற்கு மேலானவா்கள் என்னும் நடைமுறை நிலையிலிருந்து, நிலையாக நீதியைக் காப்பாற்றச் சட்ட நடைமுறையை மாற்றி அமைத்தால்தானே முடியும்? இந்த ஒரு வழக்கு மட்டும் விதிவிலக்காக இருக்க முடியாதே.
- அரசியல் சாசனத்தின் அடிச் சட்டங்களே ஆடுகின்றனவே!
நன்றி: தினமணி (16 – 01 – 2025)