TNPSC Thervupettagam

அரசியல் முரண் அல்ல, மாநில வளர்ச்சியே முக்கியம்

November 6 , 2023 431 days 416 0
  • சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி காலதாமதம் செய்துவருவதாகக் கூறி, திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. இதேபோல பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனங்களில் தேவையின்றி ஆளுநர் தலையிடுவதாகக் கூறி இன்னொரு ரிட் மனுவையும் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது.
  • தமிழ்நாடு அரசைப் போலவே பஞ்சாப்பை ஆளும் ஆம் ஆத்மி அரசும், கேரளத்தை ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசும் அம்மாநிலங்களின் ஆளுநர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள், அரசின் உத்தரவுகள், கொள்கை முடிவுகள் போன்றவற்றுக்கு ஒப்புதல் வழங்காமல், நீண்ட காலம் கிடப்பில் போட்டுவைத்திருப்பதன் மூலம், அரசமைப்புச் சட்டப்படி ஆற்ற வேண்டிய கடமையை ஆளுநர் ஆற்ற மறுக்கிறார் என்று தனது மனுவில் தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டியிருக்கிறது.
  • அரசுக்குப் போதிய ஒத்துழைப்பு அளிக்காமல் எதிர்மறையாகச் செயல்படுவதால் அரசு நிர்வாகப் பணிகள் ஸ்தம்பித்துப் போயிருப்பதாகவும் மனுவில் தமிழ்நாடு அரசு சுட்டிக்காட்டியுள்ளது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள், அரசாணைகளுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் மனுவில் அரசு கோரியுள்ளது.
  • பல்வேறு சந்தர்ப்பங்களில் அமைச்சரவையின் ஆலோசனைப்படியே ஆளுநர்கள் செயல்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளன. 2023 ஏப்ரல் மாதத்தில் தெலங்கானா அரசு அம்மாநில ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தபோது, ‘மாநில சட்டப்பேரவைகளால் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களின் மீது ‘கூடிய விரைவில்’ முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்.
  • மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதாக இருந்தாலும் கூடுதல் கருத்துக்களுக்காக மசோதாவை அரசுக்குத் திருப்பி அனுப்புவதாக இருந்தாலும், அதை விரைந்து மேற்கொள்ள வேண்டும்’ என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால், நீதிமன்றத்தின் இதுபோன்ற அறிவுறுத்தல்கள் புறந்தள்ளப்படுவது துரதிர்ஷ்டவசமானது.
  • மேலும், எந்தச் சட்டத்தை அரசு இயற்றினாலும் அதனால் ஏற்படும் சாதக, பாதகங்களுக்கு அரசுதான் பொறுப்பாகுமே தவிர, ஆளுநர் பொறுப்பாக மாட்டார். அதேபோல சட்டம் சார்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டாலும், அதற்குப் பதில் சொல்லும் கடமையும் பொறுப்பும் அரசுக்கே இருக்கிறது.
  • நீண்ட காலமாக மசோதாக்கள், அரசாணைகள் கிடப்பில் இருக்கும்போது, அரசு நிர்வாகப் பணிகளில் தேக்கநிலை ஏற்படுவதோடு, மக்கள் நலப் பணிகளிலும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஆளுநர்கள் உணர வேண்டும். ஆளுநர் பதவி என்பது நியமனப் பதவி என்றாலும் அரசமைப்புப் பதவி. எனவே, அந்தப் பதவிக்குரிய மரியாதையை மாநில அரசு தர வேண்டும்.
  • மத்தியில் ஆட்சி செய்யும் கட்சி ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் எழுவதில்லை என்று எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளில் தர்க்கம் உண்டு. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் - அரசுகளுக்கு இடையே மோதல் போக்கு தொடர்வது நல்லதல்ல.
  • இதுபோன்ற சூழலில் உச்ச நீதிமன்றத்தின் தலையீடு அவசியமாகிறது. ஆளுநர்கள், மாநில அரசுகளின் செயல்பாடுகள் மாநிலங்களின் வளர்ச்சி சார்ந்ததாக மட்டுமே இருக்க வேண்டும். இதில் எள்ளளவும் அரசியல் பார்வை இருக்கக் கூடாது. அதை உணர்ந்து இரு தரப்பும் செயல்படுவதுதான் மாநிலங்களுக்கு நன்மை பயக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (06 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories