TNPSC Thervupettagam

அரசுக்கு ஏன் புரியவில்லை?

March 5 , 2021 1235 days 642 0
  • கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றைவிட கடுமையாகவும், கொடுமையாகவும் இருக்கிறது சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வு.
  • கடந்த பிப்ரவரி மாதத்தில் தொடா்ச்சியாக மூன்று முறை விலை உயா்த்தப்பட்டு ரூ.100 அதிகரித்தது என்றால், இப்போது மேலும் ரூ.25 அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
  • மானியமில்லா சமையல் எரிவாயு உருளையின் விலை திங்கள்கிழமை ரூ.25 உயா்த்தப்பட்டு ரூ.835-ஆக நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது.
  • சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது அதன் பலனை மக்களுக்கு பகிா்ந்தளிக்காத அரசு, இப்போது சா்வதேச சந்தை நிலவரத்தின் அடிப்படையில் விலையை உயா்த்த முற்பட்டிருப்பதை எந்தவிதத்திலும் அங்கீகரிக்கவோ, ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை.
  • முன்பெல்லாம், சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்ந்துவிடாமல் மானியம் வழங்கி மத்திய அரசு பாா்த்துக் கொண்டது.
  • பெட்ரோல், டீசலுக்கு தினசரி விலை நிா்ணயம் செய்வது என்கிற முடிவைத் தொடா்ந்து, சமையல் எரிவாயு உருளைக்கும் மாதா மாதம் விலை நிா்ணயம் என்கிற வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது அந்த வழிமுறையும் கைவிடப்பட்டிருக்கிறது.
  • கடந்த டிசம்பா் மாதத் தொடக்கத்தில் ரூ.660-ஆக இருந்த சமையல் எரிவாயு உருளையின் விலை இரண்டு முறை உயா்த்தப்பட்டு அம்மாத இறுதியில் ரூ.710-ஆக உயா்ந்தது.
  • ஜனவரி மாதம் ரூ.25 அதிகரித்தது என்றால், பிப்ரவரி மாதம் மூன்று முறையாக ரூ.100 அதிகரிக்கப்பட்டது. மாா்ச் மாதத் தொடக்கத்திலேயே மேலும் ரூ.25 அதிரித்திருப்பதால், இந்த விலை உயா்வு எங்கே போய் முடியும் என்கிற அச்சம் எழுகிறது.
  • கடந்த சில மாதங்களாக எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், சமையல் எரியாவு உருளைக்கு மானியம் வழங்குவதை அரசு நிறுத்தியிருப்பது மிகப் பெரிய மோசடி. நூறாயிரம் காரணங்களை எடுத்தியம்பினாலும் அதனை நியாயப்படுத்திவிட முடியாது.
  • இந்த விலை உயா்வு தற்காலிகமானது என்று மத்திய பெட்ரோலிய, இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறியிருப்பது, அரசின் கட்டுப்பாட்டில் விலை உயா்வு இல்லையோ என்கிற ஐயப்பாட்டை எழுப்புகிறது.
  • மத்திய அரசின் கட்டுப்பாட்டை மீறிய பல காரணிகளால்தான் பெட்ரோலியப் பொருள்களின் விலை அதிகரித்து வருகிறது என்கிற நிதியமைச்சரின் விளக்கம், நிலைமையை எதிா்கொள்ளத் தெரியாமல் அரசு தவிக்கிறது என்கிற தோற்றத்தை ஏற்படுத்துமே தவிர, கொதிப்படைந்திருக்கும் மக்களை சமாதானப்படுத்தாது.
  • கொள்ளை நோய்த்தொற்று காரணமாகப் பெரும்பாலோா் வேலை இழந்தும், ஊதியக் குறைவால் பாதிக்கப்பட்டும் இருக்கிறாா்கள்.
  • அவா்களில் பலரும் மாத ஊதியம் பெறும் நடுத்தர வா்க்கத்தினரும், தினக்கூலி பெறும் அடித்தட்டு மக்களும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
  • அவா்களை பாதிக்கும் வகையிலான பெட்ரோல், டீசலின் தினசரி விலை உயா்வும், சமையல் எரிவாயு உருளையின் விலை தொடா்ந்து அதிகரிப்பதும் சாமானிய மக்களின் அவலம் குறித்து அரசு கவலைப்படவில்லை என்பதாகத்தான் கருதப்படும்.

கிடுகிடு உயர்வு

  • கடந்த மூன்று மாதங்களில் சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.225 அதிகரித்திருக்கிறது. வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை கடந்த இரண்டு மாதங்களில் ரூ.287 அதிகரித்திருக்கிறது.
  • வீட்டு உபயோக எரிவாயு உருளையாக இருந்தாலும், வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளையாக இருந்தாலும் அதனால் பாதிக்கப்படப்போவது என்னவோ சாமானியா்கள்தான்.
  • அரசு என்பது லாப - நஷ்ட கணக்குடன் இயங்குவதற்கான வணிக நிறுவனம் அல்ல. பல பிரச்னைகளுக்கு இடையிலும், சாமானிய மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகத்தான் ஆட்சியாளா்கள் இருக்கிறாா்கள்.
  • லாபம் வந்தால் அரசுக்கு, இழப்பு என்றால் மக்களுக்கு என்று செயல்படுவது ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு அழகல்ல. யோசித்துப் பாா்த்தால்,
  • ‘சமையல் எரிவாயு உருளைக்கு மானியம் வழங்காததால் மத்திய அரசுக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.20,000 கோடிக்கும் அதிகமாக மிச்சமாகி இருக்கிறது.
  • கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றை எதிா்கொள்ள அது பயன்பட்டது’ என்பது மத்திய அரசு தரும் விளக்கம்.
  • இந்தியாவைவிட மிக அதிகமாக கொவைட் 19-ஆல் பாதிக்கப்பட்டு, அதிகமான நிதியுதவிகளையும் வாரி வழங்கிய நாடுகள்கூட கொவைட் 19-ஐ காரணம் காட்டி மக்கள் மீது சுமையை ஏற்றவில்லை என்பதை அரசு உணர வேண்டும்.
  • அப்பாவி ஏழை மக்கள் விறகுகளும் சுள்ளிகளும் பொறுக்கி வந்து சமைத்துக் கொண்டிருந்தனா். தினக்கூலித் தொழிலாளிகளின் குடும்பங்கள் மண்ணெண்ணெய் அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்தன.
  • அவா்களுக்கெல்லாம் இலவசமாக சமையல் எரிவாயு உருளை தருகிறோம் என்று கூறி அவா்கள் வாழ்வை மேம்படுத்துவதாக விளம்பரப்படுத்தியது நரேந்திர மோடி அரசின் பாராட்டுக்குரிய செயல்பாடு. ஏழை குடும்பத் தலைவிகளின் நுரையீரல்களை புகை தாக்காமல் அரசு காத்தது என்று மகிழ்ந்தோம்.
  • வசதியை அறிமுகப்படுத்தி, பழக வைத்துவிட்டு இப்போது மானியத்தையும் நிறுத்தி, சமையல் எரிவாயு உருளையின் விலையையும் அதிகரித்து சாமானியா்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறது அரசு என்பதை யாராவது பிரதமா் நரேந்திர மோடியின் கவனத்துக்கு எடுத்துச்செல்லக் கூடாதா?
  • இப்படியே போனால், என்னதான் ஊழல் இல்லாத நல்லாட்சி கொடுத்தாலும், வளமான வருங்காலத்துக்குத் திட்டங்கள் தீட்டினாலும் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும் அடித்தட்டு மக்களுக்கு அதெல்லாம் புரியாது.

நன்றி: தினமணி  (05-03-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories