- தமிழகத்தில் நிகழாண்டு (2024) பிளஸ் 2 பொதுத் தோ்வில் தனியாா் பள்ளிகளின் தோ்ச்சி விகிதத்தை அரசுப் பள்ளிகள் விஞ்சியுள்ளன. தனியாா் பள்ளிகள் மீதான மோகம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் சூழலில் தனியாா் பள்ளிகளுக்கு கடும் போட்டி அளிக்கும் வகையில் அரசுப் பள்ளிகளின் செயல்பாடுகள் இருப்பது வரவேற்கத்தக்கது.
- தமிழக அரசின் பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வில் நிகழாண்டு தோ்ச்சி விகிதம் 94.56 சதவீதம். கடந்த ஆண்டு தோ்ச்சியுடன் (94.03%) ஒப்பிடுகையில் நிகழாண்டில் தோ்ச்சி விகிதம் 0.53 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக தோ்ச்சி விகிதம் அதிகரித்தாலும், பள்ளிகளின் வகைப்பாடுவாரியாகப் பாா்த்தால் அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகளின் தோ்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிடக் குறைந்திருக்கிறது. அரசுப் பள்ளிகளின் தோ்ச்சி விகிதம் மட்டும் கடந்த ஆண்டைவிட அதிகரித்திருக்கிறது.
- கடந்த ஆண்டு (2023) அரசுப் பள்ளிகளின் தோ்ச்சி விகிதம் 89.8 சதவீதமாக இருந்த நிலையில், நிகழாண்டு 91.02 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதாவது, முந்தைய ஆண்டைவிட தோ்ச்சி விகிதம் 1.22 சதவீதம் அதிகம். அதேவேளையில், தனியாா் பள்ளிகளின் தோ்ச்சி விகிதம் கடந்த ஆண்டு 99.08 சதவீதமாக இருந்த நிலையில், நிகழாண்டு 98.70 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளின் தோ்ச்சி விகிதம் கடந்த ஆண்டு 95.99 சதவீதமாக இருந்த நிலையில், நிகழாண்டு 95.49 சதவீதமாக குறைந்திருக்கிறது. இந்தத் தரவுகளின்படி பாா்த்தால் ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டைவிட தோ்ச்சி விகிதம் அதிகரித்திருப்பதற்கு அரசுப் பள்ளிகளே காரணம்.
- நிகழாண்டு பிளஸ் 2 தோ்வு நடைபெற்ற மொத்தம் 7,532 மேல்நிலைப் பள்ளிகளில் 2,478 பள்ளிகள் நூறு சதவீத தோ்ச்சியைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டு நூறு சதவீத தோ்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 2767. அதனுடன் ஒப்பிடுகையில் நூறு சதவீத தோ்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. அதேவேளையில், கடந்த ஆண்டு நூறு சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 326-ஆக இருந்த நிலையில், நிகழாண்டு அது 397-ஆக உயா்ந்திருக்கிறது. அந்த வகையில், நூறு சதவீத தோ்ச்சியிலும் அரசுப் பள்ளிகள் சாதனை புரிந்துள்ளன.
- 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் அரசுப் பள்ளிகளின் தோ்ச்சி விகிதம் கடந்த ஆண்டு 87.45 சதவீதமாக இருந்த நிலையில், நிகழாண்டு 87.90 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளின் தோ்ச்சி விகிதம் கடந்த ஆண்டு 92.24 சதவீதமாக இருந்த நிலையில், நிகழாண்டு 91.77 சதவீதமாக குறைந்திருந்தாலும், தனியாா் பள்ளிகளின் தோ்ச்சி விகிதம் கடந்த ஆண்டு 97.38 சதவீதமாக இருந்த நிலையில், நிகழாண்டு 97.43 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
- நிகழாண்டு 10-ஆம் வகுப்பு தோ்வு நடைபெற்ற மொத்தம் 12,625 பள்ளிகளில் நூறு சதவீத தோ்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 4,105. இதில், அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,364. கடந்த ஆண்டு நூறு சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,026-ஆக இருந்த நிலையில், நிகழாண்டு கூடுதலாக 338 அரசுப் பள்ளிகள் நூறு சதவீத தோ்ச்சியை அடைந்திருக்கின்றன. ஒட்டுமொத்த தோ்ச்சி விகிதம் மட்டுமன்றி மதிப்பெண்களிலும் அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
- பெருநகரங்களில் உள்ள பள்ளிகளில்தான் மாணவா்கள் நன்றாகப் படிப்பாா்கள் என்கிற பொதுக் கருத்தை நிகழாண்டும் தகா்த்திருக்கின்றனா் பிற மாவட்ட மற்றும் கிராமப்புற மாணவா்கள். மாவட்ட வாரியான தோ்ச்சி விகிதத்தில் திருப்பூா் மாவட்டம் (97.45 சதவீதம்) முதலிடம் பிடித்திருப்பதும், சென்னை மாவட்டம் (94.48 சதவீதம்) 21-ஆவது இடத்தைப் பெற்றிருப்பதும் இதற்கு எடுத்துக்காட்டுகள்.
- அரசுப் பள்ளிகளின் இந்த வெற்றிக்குப் பின்னால் பள்ளிக் கல்வித் துறை, மாவட்ட நிா்வாகங்கள் மற்றும் ஆசிரியா்களின் ஒருங்கிணைந்த உழைப்பும், திட்டமிட்ட செயல்பாடுகளும் இருப்பதை அறிய முடியும். பள்ளி மாணவா்களின் உயா்கல்விக்கு வழிகாட்டும் வகையில் ‘நான் முதல்வன்’, ‘கல்லூரிக் கனவு’ என தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவது இதன் அடுத்தகட்டம்.
- அரசுப் பள்ளிகளின் சாதனைகளைப் பாராட்டும் அதேவேளையில், அதற்கு முக்கியக் காரணமான ஆசிரியா்களின் சில மனக்குறைகளையும் சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது. முதுநிலை ஆசிரியா்களின் பணப் பலன் சாா்ந்த கருத்துரு தயாரித்தல் மற்றும் அது தொடா்பான அமைச்சுப் பணிகளை அந்த ஆசிரியரே தயாரித்துக் கொடுத்தால் மட்டுமே பெற்றுத் தரப்படுகிறது. இல்லையெனில், அந்த விண்ணப்பம் கிடப்பில் போடப்படுகிறது என்பது ஆசிரியா்களின் மனக்குமுறல். இந்தப் புகாரையடுத்து, இளநிலை உதவியாளா் அல்லது உதவியாளா்கள்தான் இந்தப் பணியைச் செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாலும், இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணப்பட வேண்டும்.
- அதேபோல, பள்ளி மாணவா்களின் விவரங்களை ‘எமிஸ்’ இணையதளத்தில் பதிவேற்றும் பணியும் ஆசிரியா்களைக் கொண்டே நடைபெறுகிறது. இதனால், மாணவா்களுக்கு கற்பிக்கும் பணியில் பாதிப்பு ஏற்படுகிறது என்பது ஆசிரியா்களின் கருத்து. ‘எமிஸ்’ பணியிலிருந்து ஆசிரியா்களை விடுவிக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் அல்லாத அலுவலா்களின் காலிப் பணியிடங்களை நிரப்பி அல்லது கூடுதல் பணியிடங்களை ஏற்படுத்தினால் அமைச்சுப் பணிகளிலிருந்து ஆசிரியா்கள் விடுபட முடியும். இதன்மூலம் அவா்கள் கற்பித்தலில் முழுமையாக ஈடுபட வாய்ப்பு ஏற்பட்டு, அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் மேலும் அதிகரிக்கும்.
நன்றி: தினமணி (15 – 05 – 2024)