- தரமான கல்வி எதிர்காலக் குடிமக்களின் வாழ்வை வடிவமைப்பதற்கும் கல்வி சார் கொள்கை முடிவுகளை வகுப்பதற்கும் மைல்கல் ஆகும். இன்று வழங்கப்படும் கல்வியின் தரம் மாணவர்களின் நாளைய நல்வாழ்விற்கு அடித்தளமாக அமைகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு அரசு அனைவருக்கும் சமமான, தரமான ஒருங்கிணைந்த, ஒட்டுமொத்த வளர்ச்சியை உள்ளடக்கிய கல்விக்கு முக்கியத்துவம் வழங்குகிறது.
- ஜூன் மாதத்தில் நடைபெற்ற சட்டப் பேரவை கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப் பட்ட பள்ளிக் கல்வி மானிய கோரிக்கை அறிக்கையில் அரசின் நோக்கம் குறித்து மேற்கண்டவாறு விளக்கப்பட்டுள் ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற திமுக அரசு பள்ளிக்கல் வியை மேம்படுத்த தொடர்ச்சியாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காலைஉணவுத்திட்டம் அரசுப்பள்ளிக ளில் துவங்கி 15.07.2024 முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் அமலாக்கப்படுகி றது. கரோனா காலத்தில் ஏற்பட்ட மாணவர்களின் கற்றல் இழப்பை ஈடுகட்ட, இல் லம் தேடி கல்வி திட்டம், குழந்தைகளின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் திட்டம், ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்திட அளிக்கப்படும் பயிற்சி உள்ளிட்ட பல வரவேற்கத்தக்க திட்டங்களை அரசு அமலாக்கி வருகிறது.
- கரோனா பரவல் காலத்தில் வருமா னத்தை இழந்த ஏழை எளிய குடும்பங்கள் தனியார் சுயநிதி பள்ளிகளில் கட்டணம் செலுத்தி தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க இயலாததால், பின்னர் அரசுப் பள் ளிகளில் சேர்த்தார்கள். மருத்துவ மாண வர் சேர்க்கையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதும், தற்போது அமலாக்கப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட மேற்கண்ட திட்டங்களால் அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
- மாநிலத்தில் அரசு ஆரம்பப் பள்ளிகளில் பெரும்பான்மையானவை ஈராசிரியர் பள்ளிகள்தான்; 1,000-க்கும் மேற்பட்ட ஓராசிரியர் பள்ளிகளும் உள்ளன. இத்த கையபள்ளிகள் துவங்கப்படுகின்றபோதே ஓராசிரியர் பள்ளிகளாக, ஈராசிரியர் பள்ளிகளாக இல்லை. ஒரு கட்டத்தில், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து தனியார் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமானபோதுதான் பல பள்ளிகள் ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளாகமாறின.
- பல மாவட்டங்களில் பல ஆசிரியர்கள் எடுத்த முயற்சியினால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது, பாராட்டத்தக்கது. உதாரணமாக, கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி நகரில் நகராட்சி முஸ்லிம் உருது துவக்கப்பள்ளி இயங்கிவருகிறது. இப்பள்ளியில் பாடமொழி தமிழ். உருது மொழிப்பாடமாக உள்ளது. இப்பள்ளி 1926-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. ஒருகட்டத்தில் இப்பள்ளியில் நான்கு ஆசிரியர்கள் பணியாற்றி னார்கள். மாணவர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 2014-ஆம் ஆண்டு இப்பள்ளியில் 5-ஆம் வகுப்பில் மட்டும் ஒரு மாணவர் இருந்தார்.
- இந்நிலையில் பிரேமலதா என்ற ஆசிரியர் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றார். 10 மாணவர்களுக்கு குறைவாக இருக்கும் பள்ளியை மூடக்கூடிய நிலைமை ஏற்பட்டுவிடும்; எனவே, மாணவர்கள் எண்ணிக்கையை அதிகப் படுத்த முயற்சி எடுக்க வேண்டுமென வட்டாரக்கல்வி அலுவலர் தலைமையாசிரியரிடம் அறிவுறுத்தியிருக்கிறார்.
- இதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பெற்றோர்களை தலைமையாசிரியர் சந்தித்து மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகளை மேற் கொண்டார். 2015-16-இல் 22, 2016-17- இல் 65, 2017-18-இல் 77, 2018-19-இல் 93, 2023-24-இல் 154 என படிப்படியாக மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித் தது. இவை அல்லாமல், எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் 60 குழந்தைகள் பயின்று வருகின்றனர். ஓராசிரியர் மட்டுமே இருந்த அப்பள்ளியில் தற்போது 5 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்; அத்துடன் பண் ருட்டி இஸ்லாமிக் பைத்துவ்மால் அறக் கட்டளை செயலாளர் ஜனாப் ஜாஹிர் உசேன் எல்கேஜி, யுகேஜி குழந்தைகளை பயிற்றுவிக்க மூன்று ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குகிறார்; இதே அறக்கட் டளை இப்பள்ளிக்கு கழிப்பிட கட்டடத்தையும் கட்டிக் கொடுத்துள்ளது.
- மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தநிலையில், இடநெருக்கடியைப் போக்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் அடிப்படையில் இரண்டு வகுப்பறைகள் கட்ட பண்ருட்டி நகர்மன்றம் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நடத்துவது அக்குழந்தைகள் அதே பள்ளியில் முதல் வகுப்பில் சேருவதற்கு வழிவகுக்கும். குழந்தைகளுக்கு எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் கல்வியின் நுழைவுவாயில்களாக இருக்கின்றன.
- எனவே, அரசுப் பள்ளிகளில் எல் கேஜி, யுகேஜி துவங்குவது அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை உயர்த்துவதற்கு வழிவ குக்கும். தனியார் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி பயிலும் குழந் தைகள் அரசுப் பள்ளிகளுக்கு வரமாட்டார்கள்.
- சென்னை அம்பத்தூர் நகராட்சி தொடக்கப் பள்ளி (மாநகராட்சியின் கீழ் அம்பத்தூர் இடம்பெற்றுள்ளதால் தற்போது சென்னை பள்ளி) முகப்பேர் பகுதியில் 1935-இல் தொடங்கப்பட்டது. 2009-இல் இப்பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை 45. அக்காலத்தில் பள்ளி நேரம் முடிவடைந்து ஆசிரியர்களும் மாணவர்களும் வெளியேறும் முன்பாகவே சிலர் மது பாட்டில்களுடன் பள்ளிக்குள் வருவது நடந்தது. ஆசிரியர் கள் அச்சத்தோடு வெளியேறினார்கள். அப்போது புதிதாகப் பொறுப்பேற்ற தலைமையாசிரியர் அப்பகுதி சமூக ஆர் வலர்களைச் சந்தித்து நிலைமையை எடுத்துக்கூறினார்.
- அவர்களது தலையீட்டைத் தொடர்ந்து குடிமகன்கள் பள்ளிக்குள் குடியேறுவது தடுக்கப்பட்டது. அடுத்து அப்பகுதி மக்களின் உதவியோடு பள்ளிக் குச் சுற்றுச்சுவரும் கட்டப்பட்டது.
- ஆசிரியர்களின் செலவில் காலைச் சிற்றுண்டியும் சீருடையும் வழங்கப்பட்டது. சில புரவலர்கள் மூலம் 100 நாற்காலிகளும் 12 மேஜைகளும் பெறப்பட்டன. பள்ளி யின் தோற்றம் மாற்றப்பட்டது. குழந்தைக ளுக்கு ஆங்கில மொழிப் பயிற்சி தனியாக அளிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் உள்ள ஆர்வலர்கள் மூலம் 6 மடிக்கணினிகள், 6 மேசைக் கணினிகள் பெற்று கணினிப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியரை அழைத்து பள்ளி ஆண்டு விழா நடத்தப்பட்டது.
- புளியமரப் பள்ளி என்று ஏளனமாகப் பார்க்கப்பட்ட காலம் போய், தலை நிமிர்ந்த புளியமரம் என முகப்பேரின் அடையாளமாக அனைவரும் தேடி வரும் பள்ளியாக திகழ்கிறது. இப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கை கரோனாவுக்கு முன்பு 109-ஆக இருந்தது. அதன் பிறகு 90 மாணவர்கள் சேர்ந்து தற்போது இப் பள்ளியில் 199-ஆக உயர்ந்துள்ளது. இப்பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்த மதுரவாயல் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.57 லட்சத்தில் நான்கு வகுப்பறைகள் கட்டப்பட்டன. நடப்பு கல்வியாண்டு துவங்கிய பிறகு தலைமையாசிரியர் வேறு பள்ளிக்கு இட மாற்றம் செய்யப்பட்டார். இடமாற்றத்தை அவர் ஏற்றுக் கொண்டார். ஆனால், பெற்றோர்களும், சம்பந்தப்பட்ட பகுதியைச் சார்ந்த மக்களும் மாநகராட்சி நிர்வாகத்திற்கும், மாவட்ட ஆட்சி நிர்வாகத்திற்கும் நிர்ப்பந்தம் கொடுத்ததால் மீண்டும் பழைய பள்ளிக்கே தலைமையாசிரியர் திரும்ப இடமாற்றம் செய்யப்பட்டார். தலைமையாசிரியர் கிருஷ்ணவேணியின் அர்ப்பணிப்பும், அவரின் மேம்பட்ட பணிக் கலாசாரமும், பெற்றோர்களின் ஒத் துழைப்பும்தான் அம்பத்தூர் நகராட்சி தொடக்கப் பள்ளியின் கல்வித் தரம் உயர் வதற்கும், மாணவர்கள் எண்ணிக்கை அதி கரிப்பதற்கும் காரணமாகும்.
- மாநிலத்தில் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 56.9 லட்சம் மாணவர்கள் பயின்று வருவதாக மானிய கோரிக்கை அறிக்கை யில்குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஓராசிரியர் பள்ளிகள், ஈராசிரியர் பள்ளிகள் உள்ளிட்ட அரசு ஆரம்பப் பள்ளிகளிலும், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி களிலும் பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை மானியக் கோரிக்கை அறிக்கையில் தரப்படவில்லை. முழு விவரத்தை யும் பரிசீலிப்பதன் மூலமே மேம்படுத்த சரி யான திட்டத்தை உருவாக்க முடியும்.
- அரசுப் பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் கல்வியியல் மேலாண்மை தகவல் முறைமை (இஎம்ஐஎஸ்) அமைப்புக்காக கணினியில் தகவல் பதிவேற்றம் செய்வதற் காக அதிக நேரம் செலவிட வேண்டியுள் ளது. இது மிக அவசியமான பணிதான். தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டால் மேலாண்மை எளிதாகும். ஆனால், ஆசி ரியர்கள் குறிப்பாக ஓராசிரியர், ஈராசிரி யர் பள்ளி ஆசிரியர்கள் இத்தகைய பணி யைச் செய்வது அவர்களுடைய ஆசிரி யர் பணியை பாதிக்கிறது. எனவே, இப்ப ணியை செய்வதற்கு குறுவள மைய அளவுகளில் அலுவலர்களை நியமிப்பதன் மூலம் ஆசிரியர்கள் தங்களதுகற்பித்தல் பணியில் கூடுதல் கவனம் செலுத்த முடியும்.
- அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை பாதுகாப்பது ஏழை குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வியைப் பாதுகாப்பதாகும். அரசின் அணுகுமுறை, ஆசிரியர்களின் பணிக் கலாசாரம், பள்ளி மேலாண்மை குழு உள்ளிட்ட பெற்றோர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பகுதி மக்களுடைய ஒத்துழைப்பு அனைத்தும் இணை கிறபோதுதான் அரசுப் பள்ளிகள் பாது காக்கப்படுவதோடு அவற்றின் தரத்தையும் உயர்த்த முடியும்.
நன்றி: தினமணி (20 – 07 – 2024)