- ஏப்ரல் 6 அன்று மத்திய மின்னணு - தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள ‘தகவல் தொழில் நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் - டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) திருத்த விதிகள் - 2023’, குடிமக்களுக்கு அரசமைப்பு உறுதிசெய்துள்ள கருத்துச் சுதந்திரத்தையும் தகவல்களைப் பெறும் உரிமையையும் மறுப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
- இந்தப் புதிய விதிகளின்படி, உண்மைத்தன்மையைப் பரிசோதிக்கும் அமைப்பு ஒன்றை மத்திய அரசு உருவாக்கும். அந்த அமைப்பு சமூக ஊடகங்கள், இணைய ஊடகங்கள், காணொளிகளைப் பதிவேற்றும் தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ள மத்திய அரசு தொடர்பான பொய்யான அல்லது போலியான அல்லது தவறாக வழிநடத்தக்கூடிய உள்ளடக்கங்களைக் கண்டறிந்து, அவற்றை நீக்கும்படி சமூக ஊடகங்கள் உள்ளிட்ட இடைநிலை நிறுவனங்களுக்குத் தெரிவிக்கும்.
- உள்ளடக்கங்களை இடைநிலை நிறுவனங்கள் நீக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. ஆனால், இத்தகைய உள்ளடக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இடைநிலை நிறுவனங்கள்மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியும். தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79 இன்படி, வெளியாள்கள் அல்லது பயனர்களால் பதிவேற்றப்படும் உள்ளடக்கங்களுக்கு எதிராக இடைநிலை நிறுவனங்கள்மீது வழக்குத் தொடர முடியாது என்னும் பாதுகாப்பு ஏற்பாட்டை இடைநிலை நிறுவனங்கள் இழக்கின்றன.
- எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் ‘இணையச் சுதந்திர அறக்கட்டளை’, ‘எடிட்டர்ஸ் கில்டு’ உள்ளிட்ட அமைப்புகள் இந்தத் திருத்த விதிகள் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானவை என்று கூறியுள்ளன. அரசு தொடர்பான உள்ளடக்கங்களில் எது போலியானது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் அரசால் உருவாக்கப்படும் அமைப்புக்குக் கொடுக்கப்பட்டிருப்பது கேள்விக்கு உள்ளாகியிருக்கிறது.
- தவறாக வழிநடத்தும் தகவல் என்னும் பெயரில், அரசு மீதான நியாயமான விமர்சனக் கருத்துகள் நீக்கப்படுவதற்கும் இந்த ஏற்பாடு வழிவகுக்கும் என்கிற அச்சத்தைப் புறக்கணித்துவிட முடியாது. மத்திய அரசு தொடர்பான பொய்ச் செய்திகளுக்கு மட்டும் இப்படி ஒரு சிறப்பு ஏற்பாடு ஏன் என்கிற கேள்வியும் எழுகிறது.
- அச்சு ஊடகங்கள், கருத்துச் சுதந்திரம் என்கிற பெயரில் எல்லை மீறிவிடாமல் தடுப்பதற்கான எல்லா கட்டுப்பாடுகளும் பல ஆண்டுகளாகவே சட்டத்தில் உள்ளன. நன்கு அறியப்பட்ட ஊடக நிறுவனங்கள் நடத்தப்படும் இணையதளங்களும் இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு உள்பட்டே செயல்பட்டு வருகின்றன.
- ஆனால், சமூக ஊடகங்களிலும், அடையாளம் தெரியாதவர்களால் நடத்தப்படும் இணைய தளங்களிலும் எந்த ஒரு தனிநபரும், எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும், எந்த விதப் பொறுப்பும் இல்லாமல், எத்தகைய கருத்தையும் தெரிவித்துவிட முடியும் என்னும் சூழல் நிலவுகிறது.
- இது ஒருபுறம் சுதந்திரம் போலவே இருந்தாலும் இன்னொருபுறம் இதில் ஒருவிதமான கட்டற்ற அதிகாரத்தைக் கட்டமைக்கும் தன்மை இருப்பதையும் மறந்துவிட முடியாது. ஆகவே, இந்த இரண்டு விதமான சூழல்களையும் கருத்தில்கொண்டு அதற்கேற்பவே மத்திய அரசின் புதிய இணையக் கட்டுப்பாடுகள் இருக்க முடியும் என்பதையும் மறுக்க முடியாது.
- அதேநேரம், இந்தப் புதிய தகவல் தொழில்நுட்பத் திருத்த விதிகள் பொய்ச் செய்திகளைத் தடுக்கும் முயற்சியில் அரசு மீதான நியாயமான விமர்சனங்களை முடக்கும் தணிக்கை முறையாக மாறிவிடக் கூடாது. அரசை விமர்சிக்கும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.
நன்றி: தி இந்து (14 – 04 – 2023)