- இந்திய உணவுக் கழகத்தின் கையிருப்பில் உள்ள அரிசி, கோதுமை ஆகியதானியங்களை உள்நாட்டு வெளிச்சந்தை விற்பனைத் திட்டத்தின் (ஓ.எம்.எஸ்.எஸ்.) கீழ் ஏலத்தில் விடுவதிலிருந்து மாநிலங்களை விலக்கும் முடிவை அண்மையில் மத்திய அரசு எடுத்திருக்கிறது. மத்திய அரசின் இந்த முடிவுக்குக் கர்நாடக அரசு கடுமையாக எதிர்வினை ஆற்றி வருகிறது. மத்திய அரசின் இந்த முடிவு, ‘அரிசி அரசிய’லாக மாறிவருவதை உணர முடிகிறது.
மத்திய அரசு செய்த மாற்றம்:
- அண்மையில் நடந்துமுடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், ஆளுங்கட்சியாக இருந்த பாஜக தோல்வியடைந்து, காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துவிட்டது. முதல் பணிகளில் ஒன்றாக, வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு கூடுதலாக ஐந்து கிலோ இலவச அரிசி வழங்கும் ‘அன்ன பாக்யா’ திட்டத்தை ஜூலை 1 முதல் செயல்படுத்த கர்நாடக அரசு நாள் குறித்தது.
- இத்திட்டத்துக்காக இந்திய உணவுக் கழகத்தின் வெளிச்சந்தை விற்பனைத் திட்டத்தின்கீழ் 2.08 லட்சம் மெட்ரிக் டன் அரிசியைப் பெற மாநிலத்தில் உள்ள மண்டல இந்திய உணவுக் கழகத்தைக் காங்கிரஸ் அரசு அணுகியது; அதற்குச் சாதகமான உத்தரவையும் பெற்றது. ஆனால், அதற்கு அடுத்த நாளே வெளிச்சந்தையில் மாநிலங்களுக்கு அரிசி, கோதுமை விற்பனை செய்வது தொடர்பான உத்தரவை மத்திய உணவு-பொதுவிநியோகத் துறை திரும்பப் பெற்றது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
- தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டதால், ஏழை-எளிய மக்களுக்கான நலத்திட்டத்தில் கூட அரசியல் செய்வதாக மத்திய பாஜக அரசைச் சாடுகிறது காங்கிரஸ். ஆனால், இந்த உத்தரவுக்கு மத்திய அரசு பல்வேறு காரணங்களைப் பட்டியலிடுகிறது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013இன்படி, நாட்டிலுள்ள சுமார் 80 கோடிப் பயனாளிகளுக்கு மத்திய அரசு மாதந்தோறும் 5 கிலோ இலவச உணவுத் தானியங்களை விநியோகிக்க வேண்டும்.
- எனவே, திறந்தவெளிச் சந்தை விற்பனைத் திட்டத்தின்கீழ் கோதுமை, அரிசி விற்பனையை நிறுத்தும் அரசின் முடிவு, உணவுப் பொருள்கள் பணவீக்கத்திலிருந்து மீதமுள்ள நுகர்வோரைப் பாதுகாப்பதே நோக்கம் என்கிறது மத்திய அரசு.
வாதப் பிரதிவாதங்கள்:
- அதே நேரத்தில், சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்ட மாநிலங்கள், இயற்கைச் சீற்றங்களை எதிர் கொள்ளும் வடகிழக்கு மாநிலங்கள், மலைப்பாங்கான மாநிலங்கள் ஆகியவற்றுக்கு அரிசி விற்பனையைக் குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூ.3,400 விலையில் மத்திய அரசு தொடரவும் செய்கிறது.
- அந்த வகையில், கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு இதிலிருந்து விலக்கும் அளிக்கப் பட்டுள்ளது. மார்ச் மாதம் நிலவிய கடும் வெப்பம், காலநிலை மாற்றம், பொய்த்துப் போகும் விவசாயம் போன்ற காரணிகளை மனதில் வைத்து இந்த முடிவை எடுத்திருப்பதாக மத்திய அரசு கூறுவதை முற்றிலும் புறந்தள்ள முடியாது.
- ஆனால், இந்த உத்தரவில் தனியார் வர்த்தகர்களுக்கு அரிசியை வழங்குவதில் மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை என்று காங்கிரஸ் கூறுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தனியாருக்கு மட்டுமல்ல, மாநில அரசுகளின் பொது விநியோகத் திட்டத்துக்குக் கேட்கப்படும் உணவு தானியங்களை வழங்குவது இந்திய உணவுக் கழகத்தின் கடமை.
- 1964இல் இந்திய உணவுக் கழகம் தொடங்கப்பட்டபோது, விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களை லாபகரமான விலைகொடுத்துப் பெறுவது, அவற்றைச் சேமிப்பது, பொதுவிநியோகத் திட்டத்தின் மூலம் மக்களுக்கு மலிவானவிலையில் உணவுதானியங்களை வழங்குவது போன்றவை ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படைக் கொள்கைகள் ஆகும்.
தற்போதைய நிலவரம்:
- இந்திய உணவுக் கழக இணையதளத் தரவுப்படி, இந்த ஜூன் மாதத்தில் 262 லட்சம் மெட்ரிக் டன் அரிசி கையிருப்பில் உள்ளது. இந்தக் காலகட்டத்தில் மதிப்பிடப்பட்ட கையிருப்பு அரிசியைவிட இது 30 லட்சம் மெட்ரிக் டன் அதிகம். இப்போது உணவு சார்ந்த பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு பகுதியாக இந்த முடிவை மத்திய அரசு எடுத்திருப்பதாக அறிவித்திருக்கிறது. அதே நேரத்தில், 2017-2018 காலகட்டத்திலும் உணவு சார்ந்த பணவீக்கம் அதிகமாகவே இருந்தது.
- 2017இல் இந்திய உணவுக் கழகத்தின் கையிருப்பில் 221 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருந்தது; 2018இல் 242 டன் அரிசி கையிருப்பில் இருந்தது. 2023இல் கையிருப்பில் உள்ள அரிசியைவிட அப்போது இன்னும் குறைவாகவே அரிசி இருந்தது. அந்த நிலையிலும்கூட மாநிலங்களுக்கு உள்நாட்டு வெளிச்சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் அரிசி விற்பனை செய்வது நிறுத்தப்பட்டிருக்கவில்லை. எனில், இப்போது மட்டும் அரிசி விற்பனை நிறுத்தப்பட்டிருப்பது ஏன் என்ற கேள்வி அழுத்தமாக எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
- மத்திய அரசின் இந்த உத்தரவால் தற்போது கர்நாடகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் அரசு, தனது வாக்குறுதியை நிறைவேற்றுவதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. வேறு மாநிலங்களிடமிருந்து அரிசியை வாங்கி இத்திட்டத்தை நிறைவேற்ற அந்த மாநில அரசு முயல்கிறது. அதுவும் சாத்தியமாகவில்லை என்பதால் இப்போது 5 கிலோ அரிசிக்குப் பதிலாக மாதம் ரூ.170 கொடுக்க முடிவுசெய்துள்ளது. சொன்னபடி திட்டத்தைத் தொடங்காவிட்டால் போராட்டத்தில் இறங்குவோம் என்று கர்நாடக பாஜக கூறியிருக்கிறது.
- அதற்கு முன்பே மத்திய பாஜக அரசின் முடிவை எதிர்த்து கர்நாடக காங்கிரஸும் போராட்டம் நடத்தியிருக்கிறது. இப்படியாகப் பெருமளவு மக்கள் உண்ணும் அரிசியில் அரசியல் புகுந்து விட்டது. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், இது ஏற்படுத்தும் தாக்கம் தேர்தலில் எதிரொலிக்கும் சூழலும் ஏற்படலாம்.
தமிழ்நாட்டில் எப்படி?
- இந்தியாவிலேயே முதன்முதலில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ‘ஒரு ரூபாய்க்குக் கிலோ அரிசி’ என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்திய மாநிலம் தமிழ்நாடுதான். முந்தைய திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அத்திட்டத்தைத் தொடர்ந்து, பிந்தைய அதிமுக ஆட்சியில் ரேசன் அரிசி முழுவதும் இலவசமாகவே வழங்கப்படலானது.
- தற்போது நியாய விலைக் கடைகளில் ‘அந்தியோதயா அன்ன யோஜனா’ திட்டத்தின்கீழ், முன்னுரிமை பெற்ற அட்டைதாரர்களுக்கு இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டுக்கு 2.97 லட்சம் டன் அரிசி பொது விநியோகத் திட்டத்துக்காக ஒதுக்கப்படுகிறது. ஆனால், 2.2 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு அரிசி விநியோகிக்கப் படுவதால் மாதத்துக்குக் கூடுதலாகசுமார் 50,000 டன் அரிசித் தேவை இருக்கிறது.
- தற்போது உள்நாட்டு வெளிச்சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் அரிசி விற்பனை நிறுத்தப் பட்டுள்ள நிலையில், தமிழ்நாடும் சிக்கலை எதிர்கொள்ள நேரிடலாம். ஆகஸ்ட் மாதம் வரை இதில் தமிழ்நாட்டுக்குப் பிரச்சினை இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சத்தீஸ்கர், தெலங்கானா, ஆந்திரம், தேசியக் கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு எனப் பல தரப்பினரிடமிருந்து அரிசி பெறும் நடவடிக்கையைத் தமிழக அரசு தொடங்கியிருக்கிறது.
- இந்தத் தகவல்கள், இலவச அரிசி விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படும் என்பதை உணர்த்துகின்றன. பணப் பயிர்களை அதிகம் விளைவிக்கும் கேரளமும் இந்த உத்தரவால் வெவ்வேறு வகைகளில் பாதிக்கப்படலாம்.
- ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கு உணவு வழங்கும் இந்தத் திட்டத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் எந்த உத்தரவும் அரசியல்ரீதியாக விமர்சனங்களை எதிர்கொள்வதைத் தவிர்க்க முடியாது. எனவே, மத்திய அரசு இந்த உத்தரவைத் திரும்பப் பெறுவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும். ஏற்கெனவே மத்தியப் புலனாய்வு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதாக பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டிவரும் நிலையில், இந்திய உணவுக் கழகமும் அரசியல் சர்ச்சையில் சிக்குவது நல்ல சமிக்ஞை அல்ல.
நன்றி: தி இந்து (29 – 06 – 2023)