TNPSC Thervupettagam

அரிசி, பருப்பு விலை தொடர்ந்து உயர்வது ஏன்

January 29 , 2024 175 days 204 0
  • கடந்த ஓராண்டாகவே சர்வதேச சந்தையில் அரிசி விலை உயர்ந்து வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் 8%வரை உயர்ந்துள்ளது. இதற்கு உற்பத்தி குறைவு, தேவை அதிகரிப்பு ஆகியவை காரணம். ஜூன் மாதத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பருவமழை பெய்யாதது மற்றும் எல்நினோவால் கடந்த ஆகஸ்ட் மாதம் நிலவிய கடும் வறட்சியால் அரிசி உற்பத்தி குறைந்தது.
  • அரிசி அதிகம் உற்பத்தியாகும் தாய்லாந்து, இந்தோனேசியாவிலும் எல்நினோ விளையாடி உள்ளது. இந்நிலையில் இந்தோனேசியா தனது உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய 20 லட்சம் டன் அரிசியை வாங்க முயற்சி செய்து வருகிறது. உலக அளவில் அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 40% ஆக உள்ளது.
  • இந்நிலையில், பண்டிகை காலத்தில் அரிசியின் தேவை அதிகரிக்கும் என்பதால் விலை உயர்வை தவிர்க்க பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதி செய்ய இந்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தடை விதித்தது. அதைத் தொடர்ந்து உடைந்த அரிசி ஏற்றுமதி செய்வதற்கும் மத்திய அரசு தடை விதித்தது.
  • அதேநேரம் கடந்த செப்டம்பர் மாதம் வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கான வரியை 20 சதவீதமாக உயர்த்தியது. இதுவும் சர்வதேச சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட காரணமாக அமைந்தது. அரிசியைத் தொடர்ந்து கோதுமை, பருப்பு, வெங்காயம், பூண்டு, மஞ்சள் மற்றும் ஒரு சில வாசனைப் பொருட்களின் விலையும் ஏறுமுகமாகவே இருக்கிறது.
  • அதிலும் கடந்த ஆண்டு துவரம் பருப்பின் சில்லறை விலை முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் கிலோவுக்கு ரூ.60அதிகரித்துள்ளது. அதனால் உணவில் அதன் தேவையை 15% முதல் 20%வரை நுகர்வோர் குறைத்துக்கொண்டதாக உணவுத் தொழில் நிறுவனத்தின் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
  • மேலும் துவரம் பருப்புக்கு மாற்றாக நுகர்வோர்கள் இறக்குமதி செய்யப்பட்ட பச்சைப் பயிரை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. மத்திய அரசும் துவரம் பருப்புக்கு மாற்றாக கடலை பருப்பு ஆரோக்கியமானது என நுகர்வோர் இடத்தில் கூறிவருகிறது.

பணவீக்கத்தின் எதிரொலி

  • ஒரு பக்கம் காலநிலை மாற்றம் உற்பத்தியில் விளையாடுகிறது என்றால் மற்றொரு புறம் உணவுப் பணவீக்கம் மற்றும் சில்லறை பணவீக்கம் நுகர்வோரிடையே விளையாடி வருகிறது.ஆம், சில்லறை விற்பனை சந்தையில் அரிசியின் வருடாந்திர விலையேற்ற விகிதம் மட்டுமே 13 சதவீதமாக உள்ளது.
  • குறிப்பாக ஊரக மற்றும் வேளாண் தொழிலாளர்கள் இடையே கடந்த நவம்பர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் என்பது முறையே 7.13% மற்றும் 7.37% அளவிலும் உணவுப் பணவீக்கம் என்பது முறையே 9.14% மற்றும் 9.38% அளவிலும் இருந்தன.

சைவ உணவு விலையேற்றம்

  • 2022 டிசம்பர் மாதத் தோடு ஒப்பிடுகையில் 2023டிசம்பரில் சைவ உணவுத் தட்டின் விலை 12%வரை அதிகரித்துள்ளது. 2022 டிசம்பரில் ரூ.26.6 ஆக இருந்த ஒரு சைவ உணவுத் தட்டின்விலை, 2023 டிசம்பரில் ரூ.29.7 ஆக அதிகரித்தது. வெங்காயம் 82%, தக்காளி 42%, பருப்பு வகைகள் 24%விலைஉயர்ந்ததே இதற்குக் காரணம்.
  • ஆனால் அசைவ உணவுத் தட்டின் விலை முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு 4%வரை குறைந்துள்ளது. 2022 டிசம்பரில் ரூ.60.1 ஆக இருந்த அசைவ உணவு தட்டின் விலை, 2023 டிசம்பரில் ரூ.57.6ஆக குறைந்துள்ளது. போதிய அளவிலான பிராய்லர் கோழிகளின் வரவே இதற்கு முக்கிய காரணம்.

மத்திய அரசின் முன்னெடுப்பு

  • தற்போதைய நிலையில் பொது சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் மின்-ஏலத்தில் இந்திய உணவுக் கழகத்தின் அரிசியை விற்பனை செய்வதன் மூலம் உள்நாட்டு இருப்பை அதிகரித்து, சில்லறை அரிசி விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்ற உணவு அமைச்சகத்தின் முயற்சி பலனளிக்கவில்லை.
  • இந்நிலையில், ‘பாரத் அரிசிஎன்ற பெயரில் மலிவு விலையில் சில்லறை அரிசி விற்பனை செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. பொது சந்தை விற்பனை திட்டத்தின் கீழ், ஒரு கிலோ அரிசியின் இருப்பு விலையாக ரூ.29-க்கு இந்திய உணவுக் கழகம் விற்று வருகிறது.
  • அதே விலையில் பாரத் அரிசி விற்பனை செய்யப்படுமா அல்லது அதைவிட குறைவான விலையில் விற்பனை செய்யப்படுமா என்பது தெரியவில்லை. மத்திய அரசு ஏற்கெனவே இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு, தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு மற்றும் கேந்திரிய பந்தா் ஆகியவற்றால் நிா்வகிக்கப்படும் விற்பனை நிலையங்கள் மூலம்பாரத்என்ற பெயரில் ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.27.50-க்கும், கிலோ கடலை பருப்பு ரூ.60-க்கும் விற்று வருகிறது.
  • கடந்த ஆண்டு மட்டும் பொது சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் 3.04 லட்சம் டன் அரிசி மற்றும் 82.89 லட்சம் டன் கோதுமையை இந்திய உணவுக் கழகம் விற்பனை செய்துள்ளது. இந்திய மதிப்பீட்டின் தலைமைப் பொருளாதார வல்லுநரான தேவேந்திர பந்த், மானிய விலையில் வழங் கப்படும் உணவு தானியம் அடித்தட்டு மக்களிடம் எந்த அளவுக்கு பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் என்பதை உறுதியாகக் கூறிவிட முடியாது என்கிறார்.
  • எது எப்படி இருந்தாலும் மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் என்பது மத்திய அரசுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. அதனை கட்டுக்குள் வைக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு அதற்கான முன்னெடுப்பை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (29 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories