TNPSC Thervupettagam

அரிஹா ஷாவின் துயரம்!

August 7 , 2023 394 days 257 0
  • ஜொ்மனியில், இந்திய பெற்றோரிடமிருந்து 20 மாதங்களுக்கு மேலாகப் பிரித்து வைக்கப் பட்டிருக்கிறாள் இரண்டு வயது குழந்தையான அரிஹா ஷா. அரசின் பராமரிப்பில் இருக்கும் அக்குழந்தையை மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற கோரிக்கை ஜொ்மன் அரசால் ஏற்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. இரு வாரங்களுக்கு ஒருமுறை குழந்தையைப் பெற்றோர் பார்க்கச் செல்லும்போது, உறவின் வலிமையையும், பிரிவின் கொடுமையையும் வெளிப்படுத்தும் விடியோ காட்சிகள் இதயத்தை உலுக்குபவையாக உள்ளன.
  • 2018-இல் ஜொ்மனியில் குடியேறி வசித்துவரும் குஜராத்தைச் சோ்ந்த மென்பொறியாளா் பாவேஷ் - தாரா தம்பதியின் பெண் குழந்தைதான் அரிஹா ஷா. 2021-இல் பொ்லினில் பிறந்த அரிஹா ஷா, ஏழு மாதக் குழந்தையாக இருந்தபோது பேத்தியைப் பார்ப்பதற்காக குழந்தையின் பாட்டி ஜொ்மனி சென்றிருந்தார். குழந்தையை பாட்டி கையாண்டபோது எதிர்பாராத விதமாக குழந்தையின் பிறப்புறுப்பில் காயம் ஏற்பட்டதால், மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.
  • குழந்தைக்கு ஏற்பட்ட காயத்தைப் பார்த்து, அது பாலியல்ரீதியிலான தாக்குதலாக இருக்கலாம் என அரசு அதிகாரிகளுக்கு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது. உடனடியாக மருத்துவமனைக்கு வந்த அதிகாரிகள், குழந்தையை பெற்றோரிடமிருந்து பிரித்து அங்குள்ள அரசு குழந்தைகள் நலக் குழுமத்தில் சோ்த்தனா். இரு வாரங்களுக்கு ஒருமுறை மட்டுமே குழந்தையைப் பார்க்க பெற்றோர் அனுமதிக்கப்பட்டனா். மேலும், பெற்றோர் மீது குழந்தைக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கும் பதிவு செய்யப் பட்டது.
  • அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்குப் பின்னா், பெற்றோர் மீதான தாக்குதல் குற்றச்சாட்டு கைவிடப்பட்டது. ஆனால், குழந்தை பராமரிப்பில் பெற்றோர் அலட்சியமாக இருந்ததாக அதிகாரிகள் குற்றஞ்சாட்டினா். முறையான குற்றச்சாட்டு எதுவும் பதிவு செய்யப் படாமல் பெற்றோர் மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
  • அதன்பிறகாவது பெற்றோரிடம் அரிஹா ஷா ஒப்படைக்கப்பட்டாளா என்றால் இல்லை. அதற்குப் பதிலாக, குழந்தையை பெற்றோர் பாதுகாப்பில் விடுவதற்கு எதிரான சிவில் காவல் வழக்கை குழந்தைகள் நலக் குழுமம் பதிவு செய்தது. அதுமுதல் பாவேஷ் - தாரா தம்பதியின் சட்டப் போராட்டம் தொடங்கியது.
  • ஏழு மாதக் குழந்தையாக பெற்றோரைப் பிரிந்த அரிஹா ஷாவுக்கு இப்போது இரண்டு வயது. இதற்கிடையே, கடந்த ஆண்டு நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மனநல மருத்துவா், பாவேஷ் - தாரா தம்பதியை முழுமையாக மதிப்பீடு செய்தார். குழந்தை வளா்ப்பில் அவா்களால் எந்த பிரச்னையும் நேரிடாது என அவா் சான்றளித்தார். ஆனால், இந்த வழக்கில் நீதிமன்றத் தீா்ப்பு வரும் முன்பே, சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகள் மையத்துக்கு அரிஹா ஷாவை ஜொ்மனி குழந்தைகள் நலக் குழுமம் மாற்றியது.
  • அதன்பிறகு கடந்த ஜூன் 13-ஆம் தேதி வெளியான நீதிமன்ற உத்தரவும் பாவேஷ் - தாரா தம்பதியின் பாசப் போராட்டத்தில் இடியாகத் தாக்கியது. ‘குழந்தைக்கு இருக்கும் ஆபத்தைத் தவிர்க்க அக்குழந்தையை பெற்றோரின் பாதுகாப்பில் விட முடியாது’ என நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • அரிஹா ஷாவை அவளது பெற்றோருடன் ஒப்படைக்க வேண்டுமென இந்தியாவைச் சோ்ந்த 19 கட்சிகளின் 59 எம்.பி.க்கள் இணைந்து ஜொ்மனி அரசுக்கு அண்மையில் ஒரு கடிதம் எழுதினா். அதில், ஜொ்மனியின் குழந்தை பராமரிப்பு மையத்தில் அரிஹா ஷாவுக்கு அசைவ உணவு கொடுத்து வளா்ப்பது அவளது ஜெயின் சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாதது எனச் சுட்டிக் காட்டியிருந்தனா்.
  • இந்தியாவுக்கான ஜொ்மனி தூதா் பிபில் ஆக்கா்மானை அண்மையில் வரவழைத்து இது தொடா்பாக வெளியுறவு அமைச்சகம் பேசியது. அரிஹா ஷா விவகாரத்தில் இந்தியாவின் வருத்தத்தை தூதரிடம் தெளிவாக எடுத்துரைத்த இந்திய அரசு அதிகாரிகள், குழந்தையின் இந்திய கலாசார உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். மொழி, மத, கலாசார, சமூக சூழலில் இந்தியக் குழந்தை வாழ்வது முக்கியமானது என வலியுறுத்தினா்.
  • கடந்த டிசம்பரில் இந்தியா வந்திருந்த ஜொ்மனி வெளியுறவு அமைச்சா் அன்னாலீனா போ் போக்கிடம் இந்த விவகாரம் குறித்து வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் முறையிட்டார். அப்படியிருந்தும் ஜொ்மன் அரசு குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்கத் தயங்குகிறது.
  • குழந்தைகள் நலன் மீதான ஜொ்மனியின் அக்கறையும், நடவடிக்கையும் பாராட்டுக்குரியது தான். அதே வேளையில், அரிஹா ஷா விவகாரத்தில் ஜொ்மனி அரசின் பிடிவாதம் கடும் விமா்சனத்துக்குரியது. முதலில் அரிஹா ஷாவுக்கு ஏற்பட்ட காயம் தொடா்பாக விசாரித்த அரசுத் தரப்பு, குழந்தையின் பெற்றோர் மீதான குற்றச்சாட்டுகளைக் கைவிட்டவுடனேயே குழந்தையைத் திரும்ப ஒப்படைத்திருக்க வேண்டும்; முன்னா் ஏற்பட்ட காயத்தைச் சுட்டிக் காட்டி குழந்தைக்கு எதிர்காலத்திலும் ஆபத்து இருக்கிறது என்று கூறி பெற்றோரிடமிருந்து பிரிப்பது எந்த வகையிலும் நியாயமில்லை.
  • நீதிமன்ற உத்தரவில் பெற்றோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தாலும், அது தொடா்பாக அவா்கள் மீது முறையான குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை. அதன் அடிப்படையில் இரண்டு வயது பெண் குழந்தை அரிஹா ஷா விரைவில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவது தான் நியாயம்.

நன்றி: தினமணி (07 – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories