TNPSC Thervupettagam

அருகி வரும் கட்சி விசுவாசம்

February 29 , 2024 145 days 157 0
  • மாநிலங்களவைத் தேர்தலில் கட்சி மாறி வாக்களிப்பது என்பது புதிதொன்றும் அல்ல. அங்கொன்றும் இங்கொன்றுமாக எப்போதாவது சில மாநிலங்களில் கட்சி மாறி வாக்களிப்பது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. நடந்து முடிந்திருக்கும் மாநிலங்களவைக்கான தேர்தல் முடிவுகள் "இண்டியா' கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மட்டுமல்லாமல், சமாஜவாதி கட்சி உள்ளிட்டவையும் தலைமைக்கு விசுவாசமாக இருக்கும் வலுவான கட்சிகளாக இல்லை என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றன.
  • இப்போதைய சுற்று தேர்தலுக்குப் பிறகு மாநிலங்களவையின் பலம் 240-ஆக இருக்கும். ஜம்மு-காஷ்மீரின் நான்கு உறுப்பினர்கள், ஒரு நியமன உறுப்பினர் பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன. ஏற்கெனவே 20 பாஜக உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள். இப்போது மேலும் 10 பாஜக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆளும் கட்சியின் பலம் 97-ஆகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 117-ஆகவும் உயரும். பாஜக அதிக எண்ணிக்கையுடைய கட்சியாக மாநிலங்களவையில் இருக்கும். அதைத் தொடர்ந்து 29 உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ் பெரிய கட்சியாகத் தொடரும்.
  • சமீபத்தில், மூன்று மாநிலங்களில் நடந்து முடிந்திருக்கும் மாநிலங்களவையின் 15 இடங்களுக்கான தேர்தலில் பாஜக 10 இடங்களையும், காங்கிரஸ் 3 இடங்களையும், சமாஜவாதி கட்சி 2 இடங்களையும் வென்றிருக்கின்றன. உத்தர பிரதேசத்தில் கூடுதலாக ஓர் இடத்தையும், ஹிமாசல பிரதேசத்தில் போதிய உறுப்பினர்கள் இல்லாத நிலையிலும் ஓர் இடத்தை கைப்பற்றியும் பாஜக அடைந்திருக்கும் வெற்றி காங்கிரûஸ மட்டுமல்ல, "இண்டியா' கூட்டணியையே கலகலக்க வைத்திருக்கிறது.
  • நடந்து முடிந்திருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்திருப்பது ஹிமாசல பிரதேசத்தில் அதன் வேட்பாளர் அபிஷேக் மனு சிங்வியின் தோல்வி. 68 உறுப்பினர்களைக் கொண்ட ஹிமாசல பிரதேசத்தின் சட்டப் பேரவையில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 40 உறுப்பினர்களுடன், 3 சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவும் இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில், அக்கட்சியின் வேட்பாளர் அபிஷேக் மனு சிங்வி எந்தவித பிரச்னையும் இல்லாமல் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • 25 உறுப்பினர்கள் மட்டுமே உள்ள பாஜக, அபிஷேக் மனு சிங்வியை எதிர்த்து ஹர்ஷ் மகாஜனை வேட்பாளராக நிறுத்தியபோதே எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிக்கக்கூடும் என்கிற அச்சம் பரவலாக எழுந்தது. அதை உறுதிப்படுத்துவதுபோல 6 காங்கிரஸ் உறுப்பினர்களும், 3 சுயேச்சைகளும் எதிர்க்கட்சி வேட்பாளரான ஹர்ஷ் மகாஜனுக்கு வாக்களித்தனர்.
  • அபிஷேக் மனு சிங்வியும், ஹர்ஷ் மகாஜனும் தலா 34 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், சீட்டுக் குலுக்கிப்போட்டு முடிவெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. 75 (4) தேர்தல் நடத்தை விதி
  • 1961-இன்படி, நடத்தப்படும் சீட்டுக்குலுக்கல் முறையில் எந்த வேட்பாளர் பெயர் எடுக்கப் படுகிறதோ அவருக்கு ஒரு வாக்கு குறைந்ததாகக் கருதப்பட்டு அவர் தோல்வி அடைந்தவராகவும், இன்னொருவர் வெற்றி பெற்றவராகவும் அறிவிக்கப்படும். அந்த வகையில் அபிஷேக் மனு சிங்கிவியின் பெயர் குலுக்கல் முறையில் எடுக்கப்பட்டதால் பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
  • முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மகனும், அமைச்சர்களில் ஒருவருமான விக்ரமாதித்ய சிங் மாநிலங்களவைத் தேர்தலுக்கு முதல் நாள் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின் தலையீடு காரணமாக இப்போது விக்ரமாதித்ய சிங் தனது பதவி விலகலைத் திரும்பப் பெற்றிருக்கிறார் என்றாலும் பிரச்னை முற்றிலுமாக தீர்ந்து விட்டது என்று கூறிவிட முடியாது.
  • உத்தர பிரதேசத்திலும் கட்சி மாறி வாக்களித்ததன் காரணமாக பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார். உத்தர பிரதேச சட்டப்பேரவையில் 252 உறுப்பினர்களும், 33 கூட்டணிக் கட்சி உறுப்பினர்களும் கொண்ட பாஜக 7 இடங்களிலும், 108 உறுப்பினர்களும் கூட்டணி கட்சியான காங்கிரஸின் இரண்டு உறுப்பினர்களும் கொண்ட சமாஜவாதி கட்சி 3 இடங்களிலும் மாநிலங்களவைத் தேர்தலில் காலியாக உள்ள 10 இடங்களுக்கு பிரச்னை இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • ஆனால், சமாஜவாதி கட்சியின் தலைமை கொறடா உள்ளிட்ட 7 உறுப்பினர்கள் பாஜக வேட்பாளருக்கு கட்சி மாறி வாக்களித்ததைத் தொடர்ந்து பாஜக 8 இடங்களிலும், சமாஜவாதி கட்சி 2 இடங்களிலும்தான் வெற்றியடைய முடிந்திருக்கிறது. மாநிலங்களவைத் தேர்தல் முடிவு, சமீபத்தில் "இண்டியா' கூட்டணியை உறுதிப்படுத்திக் கொண்ட சமாஜவாதி கட்சியையும், காங்கிரûஸயும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
  • ஹிமாசல பிரதேசம், உத்தர பிரதேசம் மட்டுமல்லாமல் மாநிலங்களவைக்குத் தேர்தல் நடந்த கர்நாடகத்திலும் கட்சி மாறி வாக்களிப்பு நடந்திருக்கிறது. அங்கே இரண்டு பாஜக உறுப்பினர்கள் கட்சி மாறி வாக்களித்திருக்கிறார்கள். 3 காங்கிரஸ் உறுப்பினர்களும், ஒரு பாஜக உறுப்பினரும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.
  • கட்சி மாறி வாக்களித்திருப்பவர்கள் குறித்த பிரச்னை சட்டப்பேரவைத் தலைவர்களால் எப்படி கையாளப்படப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மாநிலங்களவைத் தேர்தல், தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுவதால் கொறடாவின் உத்தரவு செல்லுபடியாகாது. உறுப்பினர்கள் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க முடியும்.
  • ஆரோக்கியமான கொள்கைப்பிடிப்புள்ள அரசியல் விடைபெற்றுவிட்டது என்பதன் அடையாளமாகத் தான் கட்சி மாறி வாக்களிப்பதை வேதனையுடன் பார்க்க முடிகிறது.

நன்றி: தினமணி (29 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories