TNPSC Thervupettagam

அர்ச்சகர் நியமனம்: வழிகாட்டும் தீர்ப்பு

July 3 , 2023 569 days 356 0
  • கோயில் ஆகமம், பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்ற எந்தச் சாதியினரை வேண்டுமானாலும் அர்ச்சகர்களாக நியமிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது வரவேற்கத் தக்கது. அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிப்பதற்கான தமிழக அரசின் முயற்சிகளுக்கு வலுசேர்க்கும் முக்கியமான தீர்ப்பாக இது அமைந்துள்ளது.
  • அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு, 1970இல் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியதிலிருந்தே அதற்குப் பல்வேறு தடைகள் நீடித்துவருகின்றன. இந்தச் சட்டம் தொடர்பான வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதும், அரசு சட்டப் போராட்டம் நடத்துவதுமாகவும் சிக்கல்கள் நீடிக்கின்றன. இந்தச் சூழலில் 2018இல், சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் நியமனத்துக்கான விண்ணப்பங்களை வரவேற்று, கோயில் செயல் அலுவலர் வெளியிட்ட அறிவிக்கை விளம்பரத்தை எதிர்த்து, அக்கோயிலில் பணியாற்றிய அர்ச்சகர் முத்து சுப்ரமணிய குருக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
  • அந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். ‘கோயில் ஆகம விதிகளின்படியே அர்ச்சகர் நியமனங்கள் நடைபெற வேண்டும்’ என்பதை உச்ச நீதிமன்றம் பல்வேறு தருணங்களில் தெளிவுபடுத்தியிருக்கிறது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்களை இனம் கண்டு அறிக்கை அளிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில் அறநிலையத் துறை ஒரு குழுவை அமைத்தது. ஆனால், இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் குழுவின் செயல்பாடுகளுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
  • சேலம் சுகவனேஸ்வரர் கோயில் தொடர்பான வழக்கில், சொக்கலிங்கம் குழுவின் அறிக்கை வரும்வரை காத்திருக்காமல் கோயில்களின் சொத்துப் பதிவேட்டில் என்ன ஆகமம் பின்பற்றப் படுவதாகக் கூறப்பட்டுள்ளதோ, அதன் அடிப்படையில் கோயில்களில் அர்ச்சர்களை நியமிக்கலாம் என்கிற அரசுத் தரப்பின் வாதத்தைச் சென்னை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. இதன்மூலம் கோயில் சொத்துப் பதிவேட்டில் குறிப்பிட்டுள்ள ஆகமத்தில் தேர்ச்சி பெற்ற எந்தச் சாதியினரும் அர்ச்சகராகும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
  • இந்த வழக்கில், 1972இல் உச்ச நீதிமன்றத்தில் ‘சேஷம்மாள் எதிர் தமிழ்நாடு அரசு’க்கு இடையேயான வழக்கின் தீர்ப்பையும் மேற்கோள் காட்டியிருக்கும் நீதிபதி வெங்கடேஷ், ‘கோயிலில் அர்ச்சகர் நியமனத்தைப் பரம்பரை உரிமையாகக் கோர முடியாது’ என்பதையும் தீர்ப்பில் பதிவுசெய்திருக்கிறார். அறங்காவலர்கள் மட்டுமே அர்ச்சகரை நியமிக்க முடியும் என்ற எதிர்த்தரப்பின் வாதத்தை ஏற்க மறுத்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், கோயில் தக்காருக்கும் (ஃபிட் பர்சன்) அந்த உரிமை உள்ளது என்று தீர்ப்பளித்திருக்கிறது.
  • இதன்மூலம் அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் படித்துவிட்டு பணிக்காகக் காத்திருப்பவர்களுக்கு அர்ச்சகர் பணி கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே, இனியும் தாமதிக்காமல் அர்ச்சகர் பணியிடங்கள் காலியாக இருக்கும் கோயில்களில் அந்தந்தக் கோயில்களின் ஆகமங்களில் தேர்ச்சி பெற்ற அனைத்துச் சாதி அர்ச்சகர்களை நியமிக்கும் பணிகளை அரசு முடுக்கிவிட வேண்டும். இது அரசு புதிதாகத் தொடங்கிய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் சேருபவர்களுக்கும் நம்பிக்கை அளிப்பதாக அமையும்.

நன்றி: இந்து தமிழ் திசை (03  – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories