TNPSC Thervupettagam

அறமே நமது அடையாளம்

October 28 , 2023 440 days 449 0
  • பாரத தேசமோ, தமிழ் மண்ணின் பெருமையோ எதனைப் பற்றிப் பேசினாலும் அது இந்த மண்ணின் மரபைப் பற்றிப் பேசுவதாகும். மண்ணின் பெருமை அந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இயல்பானது. மரபு என்று எதனைச் சொல்கிறோம்? மரபு என்பதை பாரம்பரியம் என்று சொல்லுகிறோம்.
  • மரபு என்ற சொல்லின் பொருள், நமது முன்னோர்கள் நமக்குத் தந்திருக்கும் இயல்பு, பழக்கம், அடையாளம் என விரியும். அதனால்தான் மகாகவி பாரதியார், இந்த மண்ணின் மீது, இந்த தேசத்தின் மீது தனக்குள்ள உரிமையைப் பற்றிச் சொல்வதற்கான ஆவணமாக,

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

இருந்ததும் இந்நாடே — அதன்

முந்தையா் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து

முடிந்ததும் இந்நாடே ...

இன்னுயிர் தந்தெமை ஈன்று வளா்த்து அருள்

ஈந்ததும் இந்நாடே - எங்கள்

அன்னையா் தோன்றி மழலைகள் கூறி

அறிந்ததும் இந்நாடே

  • என்று பாடினார். ஆக, நமது முன்னோர்களின் வாழ்வியல், அவா்கள் நமக்கு விட்டுச் சென்ற தனித்தன்மைகள்தான் நமது மரபு.
  • நமது இனம் என்றும் நாம் அதன் பிரதிநிதி என்றும் நம்மை இந்த உலகம் அடையாளம் காண்பதும் முன்னோர் தந்திருக்கும் அடையாளத்தைக் கொண்டே. நமது முன்னோா்களின் மொழி முதலாக நம்பிக்கைகள், சிந்தனைகள் அவா்கள் பின்பற்றியவை இவையே நமக்கான அடையாளம். அவா்களின் வழிபாட்டு முறைகள் மெய்யியல் சிந்தனைகள் நமது பரம்பரை சொத்து. அப்படியெனில் அவா்கள் பின்பற்றிய சமயம்?
  • சமயம் என்ற சொல்லே பின்னா் தோன்றியதுதான். தமிழருக்கு மதம் என்று எதுவும் இல்லை என்ற வாதங்கள் உண்டு. அதே நேரத்தில் நமது பண்பாட்டில், மொழியில் முதல் பொருள் தெய்வம்தான். தொல்காப்பியம் நமது ஆதி நூல். அதிலும் இறை கோட்பாடு இருக்கிறது. தெய்வங்கள் பல இருந்தமையை ஒப்புக்கொண்ட பிறகு அந்த தெய்வங்களை வணங்கிய மக்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள ஒரு முறைமையை ஏற்படுத்திக் கொள்வதும் இயல்பாக நடக்கக்கூடியதே.
  • அப்படியாயின் நமது சமயம் எது? சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம் என்பதற்கும் தமிழுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று ஒருசாரார் சொல்கிறார்கள். அவா்களின் கருத்தை எப்படி எடுத்துக் கொள்வது?
  • சைவம் போற்றும் சிவன் இந்த மண்ணின் ஆதித் தலைவன். முதல் தமிழ் சங்கத்தின் தலைவன் என்று கொண்டாடுகிறோம். வைணவம் வணங்கும் திருமால் எங்கள் முல்லை நிலத் தெய்வம். கெளமாரம் போற்றும் முருகனோ எங்கள் தமிழ்க்கடவுள். சாக்தம் ஏற்றுக் கொள்ளும் அம்பிகை எங்கள் சிவனாரின் ஒரு பாகத்தாள். குறிஞ்சிக்கடவுள் முருகனின் அன்னை. அதையும் நமது பழந்தமிழ் இலக்கியங்கள் உறுதிப்படுத்துகின்றன.
  • தெய்வங்கள் மக்கள் மனதில் அசைக்க முடியாத நம்பிக்கையாக உருப்பெற்ற பின்னா் மெய்யியல் கோட்பாடுகள் தோன்றுவதுதான் இயல்பு. எங்கள் தெய்வங்கள் என்றைக்குத் தோன்றினார்கள் என்றும் தெரியவில்லை; அவா்களை வழிபடுவதற்காக கோயில் அதாவது மன்றல் எப்போதிலிருந்து இந்த மண்ணில் இருக்கிறதென்று அறுதியிட்டுச் சொல்வதும் இயலாதது.
  • நம் முன்னோர்கள் மதக் கோட்பாடுகள் என்று தனியே வகுத்துக் கொண்டிருந்தார்களா? அதுவும் தெரியாது. ஆனால், ஒன்றை மிகத்தெளிவாகச் சொல்லிவிட முடியும். நமது முன்னோர்கள் தங்களின் வழிபாடு, வாழ்வியல் இரண்டையும் தனித்தனியே பார்க்கவில்லை. இரண்டையும் ஒன்றாகவே கண்டனா்.
  • அவா்களிடம் அறிவியல் இருந்தது; வானியல் இருந்தது; கடலோடிகளாக வாழும் அளவிற்கான தொழில்நுட்பம் இருந்தது; நிர்வாகம் இருந்தது; நீதி முதலான சாத்திரங்கள் இருந்தன. இத்தனை சிந்தித்தவனுக்கு மெய்யியல் இல்லாமல் போகுமா? மெய்யியல் இருந்ததெனில் அதனை மக்கள் எதனை அடிப்படையாகக் கொண்டு ஏற்றுக்கொண்டனா்?
  • வேதங்கள். ஆம், நால்வேதங்களும் நமது முன்னோர்களின் நம்பிக்கை. அவா்கள் வாழ்வியலின் சாராம்சம். எதனையும் விஞ்ஞானபூா்வமாக அணுகும் தன்மை கொண்ட நமது முன்னோர் தமது வாழ்வியலையும் வேதங்களின் அடிப்படையிலேயே அமைத்துக் கொண்டிருந்தனா்.
  • எல்லாவற்றிற்கும் மேலாக, அறம் எனும் கோட்பாடு. பிறா்கின்னா செய்யாத தன்மை அறம். அறம் என்ற சொல் மிக வலிமை மிக்கதாக நமது கலாசாரத்தில் நிலைபெற்றிருப்பதே நமது மூதாதையரின் சிந்தனையின் உயரத்தை நமக்கு விளக்கும். அதோடு, திருமணம் முதலான வாழ்வின் அனைத்து முக்கிய அம்சங்களிலும் வேத நெறியையோ பின்பற்றி வந்தனா்.
  • உலகம் முழுவதும் மதம் என்ற சொல் குறிக்கும் பொருளில் காணப்படும் மெய்யியல் கோட்பாடுகளுக்கும், பாரத தேசத்தில் காணப்படும் கோட்பாட்டுக்கும் ஒற்றுமை இல்லை. ஆனால், பாரத தேசம் முழுவதும் காணப்படும் வாழ்வியல் நெறிகள் ஒன்றுபோல காணப்படுகின்றன. அதற்குத் தமிழா் நெறியும் விதிவிலக்கல்ல.
  • குடும்பத்தில் விருந்தினரை உபசரிப்பது தொடங்கி, போர் முறைகள் வரை ஒற்றுமையையே காண்கிறோம். தமிழா் பண்பாட்டின் சிறப்பு விருந்தோம்பல். ‘செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத்தவா்க்கு’ என்று வள்ளுவம் கூறுகிறது. இதிகாசங்களும், புராணங்களும்கூட இதையே பேசுகின்றன.
  • போரில் ஆயுதம் இழந்தவனைத் தாக்குவதைத் தமிழ் கண்டிக்கிறது. அது முறையற்ற செயல் என்கிறது. இதிஹாசத்திலும் நாம் காண்பது இதுவே. ராவணனை ஆயுதம் இல்லாத நிலையில் ராமன் மாய்க்க விரும்பவில்லை. ‘இன்று போய் நாளை வா’ என்கிறார். இப்படி அறம் சார்ந்த ஒற்றுமைகள் நிறைந்திருக்கின்றன.
  • பாரத தேசத்தின் அறம் தமிழரின் அறத்தினின்று மாறுபட்டதன்று. நமது மன்னா்கள் வேதத்திற்கு மதிப்பளித்து ஆட்சி செய்ததாக இலக்கியங்கள் பேசுகின்றன. தேசத்தின் மேன்மைக்கும், வெற்றிக்கும் யாகங்கள் நடத்தியிருக்கிறார்கள். பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பெயரே நம் முன்னோர்களின் நிலைப்பாட்டை உறுதி செய்கிறது.
  • ‘தா்மம் நமது நாட்டின் உயிர் மூச்சு’ என்று சுவாமி விவேகானந்தா் மீண்டும் மீண்டும் நாடு முழுவதும் பிரசாரம் செய்தார். ‘ஆன்மிகம்தான் இந்த மண்ணின் ஆன்மா. ஆன்மிகத்தின் துணை கொண்டு அதனை நம் அடையாளமாகக் கொண்டு உலகை வெல்ல வேண்டும்’ என்றும் அறிவுறுத்தினார். அவரே, ‘தமிழகத்திலிருந்துதான் புதிய ஒளி இந்தியா எங்கும் பரவியாக வேண்டும். இந்த நோக்கத்துடன் நீங்கள் பணி செய்ய வேண்டும்’ என்று நமது இளைஞா்களைப் பார்த்துக் கூறினார்.
  • தெய்வம், அறம் என்பதைத் தாண்டி ஆன்மிக சிந்தனையிலும் தமிழா் வேதநெறியில் நிற்பதைக் கண்ட விவேகானந்தா், ஆன்மிகத்தை இந்த தேசம் மட்டுமல்ல உலகம் முழுமையும் கொண்டு சோ்க்கும் ஆற்றல் தமிழகத்திற்கு இருப்பதாக நம்பினாா். அதனாலேயே அவா் தான் நிர்மாணித்த ஸ்ரீராமகிருஷ்ண மடம் பேலூரை அடுத்து தமிழகத்தில் அமைந்தது.
  • வரலாற்றுபூா்வமாகவோ, இலக்கிய அடிப்படையிலோ, மக்களின் நம்பிக்கை வாயிலாகவோ எப்படிப் பார்த்தாலும் நமது மரபு அறம் சார்ந்தது. பாரதத்தின் தா்ம நெறியிலிருந்து மாறுபடாதது என்பது தெளிவு. அவ்வாறெனில், எவ்விடத்தில் பேதம் தோன்றியது? ஏன் தோன்றியது? இதனை சிந்திக்க வேண்டியது அவசியம்.
  • பாரத தேசம் தா்மம் என்ற சொல்லைப் பயன்படுத்துவதைப்போல நாமும் தமிழ்ச் சொல்லால் அதை அறம் என்று வழங்குகிறோம். ஆனால், ‘தா்மம் என்பது பேதங்களைக் கற்பிப்பது; தமிழா் வாழ்வியலில் அத்தகைய பேதம் ஒன்றும் கிடையாது’ என்கிறார்கள். ஜாதிய பேதங்களும், ஏற்றத்தாழ்வுகளும் உலகம் முழுவதும் இருக்கின்றன. தமிழா் நிலமும் அதற்கு விதிவிலக்கல்ல. அது மனித மன அழுக்கின் வெளிப்பாடு.
  • நமது முன்னோா்கள் தந்த பாரம்பரிய மரபு நமது அடையாளம் என்றால், அவா்கள் தங்களை எப்படி அடையாளப்படுத்திக் கொண்டார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். சேர நாட்டில் காலடியில் பிறந்து பாரத தேசத்தைத் தனது காலடியால் அளந்த ஆதிசங்கரா், தன்னை ‘திராவிட சிசு’ என்று அடையாளப்படுத்திக் கொண்டார். நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தா் திராவிட சிசுவாக அடையாளப்படுத்தப்பட்டார். அவா்கள் வழி நமது வழியாகும்.

வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்

பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலா்ந்தழுத

சீதவள வயற்புகலித் திருஞானசம்பந்தா்

  • என்றுதான் திராவிட சிசுவான ஞானசம்பந்தரின் பிறப்பு போற்றப்படுகிறது.
  • ஆக, தமிழ் வளா்த்த எங்கள் திராவிட சிசு, வேத நெறியை தமிழ் நெஞ்சங்களில் நிலைபெறச் செய்வதற்கு நாடு நகரமெல்லாம் சுற்றித் திரிந்துள்ளது.
  • இந்த தேசம் ஏன் ஆன்மிகத்தின் வழியில் தொடர வேண்டும் என்ற வினாவுக்கு சுவாமி விவேகானந்தரின் பதில் மிகத்தெளிவானது. அதுவே நமது மரபு எது என்பதை, நாம் பின்பற்ற வேண்டிய அறத்தை உணா்த்தி விடுகிறது. மலை மீதிருந்து புறப்பட்ட நதி பல்லாயிரம் மைல்கள் கடந்து வந்துவிட்டது. இப்போது அதனை மீண்டும் திரும்ப மலை ஏறச் செய்வது சாத்தியமா? இது நமது அடையாளம். இதனை மாற்றிக்கொள்வதோ மாற்றி அமைப்பதோ சாத்தியமில்லை. அப்படி மாற்றி அமைக்க முயன்றால் அடையாளம் தொலையக்கூடிய அபாயம் மட்டுமே சாத்தியம்.
  • இந்த மண்ணின் பாரம்பரியம் அறம். மெய்யியல் கோட்பாடு பிறா்கின்னா செய்யாமை. அப்படிச் செய்தால் அறம் கூற்றாகும் என்ற எச்சரிக்கை நமது மரபு. இதுவே பாரத தேசம் முழுவதும் நிறைந்திருக்கும் தா்மம். இந்த தா்மத்தை யாரிடமிருந்து யார் பெற்றார்கள் என்ற கேள்வி அபத்தமானது; அரசியலானது. ஆலயங்கள் நிறைந்த இந்த மண்ணின் மரபு நம்முடைய அடையாளம் என்பதை மறக்காத வரையில் நமக்கான அடையாளம் நிலைத்திருக்கும்.

நன்றி: தினமணி (28 – 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories