TNPSC Thervupettagam

அறிஞர் பெருமான் ஆறுமுக நாவலர்

July 16 , 2023 545 days 2097 0
  • யாழ்ப்பாணம் தமிழரசுக் கட்சி தலைவரும் நீண்டகாலம் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவருமான மாவை சேனாதிராஜா, ஆறுமுக நாவலருடைய சிலையை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, திருக்கேதீச்சரம், சம்பூர், யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபை வளாகம் ஆகிய இடங்களில் அண்மையில் நிறுவியுள்ளதாகத் தெரிவித்தார்.
  • யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயில் அருகே உள்ள ஆறுமுக நாவலர் பூர்விக வீட்டிற்கு நான் சென்ற போது, இடிபாடான முட்டுச் சுவராகவே அது காட்சியளித்தது. அங்கே ஆறுமுக நாவலர் உருவப் படம் கூட இல்லதது வேதனையை ஏற்படுத்தியது.
  • சைவமும் தமிழும் வளர்ந்த மண் ஈழம். அங்கு இருந்த 360 சைவக்கோயில்கள் அழிக்கப்பட்டுள்ளன என்பதை நான் நேரில் சென்றபோது அறிந்தேன்.
  • நாவலர் என்று சொன்னால், அது யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரைத்தான் குறிக்கும். இலங்கையும், இந்தியாவும் ஐரோப்பியர் ஆட்சியின் கீழ் இருந்தபோது சைவமும் தமிழும் பெரும் ஆபத்துகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இலங்கையில் சைவ சமயம் அந்நிய ஆட்சியின்போது சிறிது நலிவுற்றிருந்தது. அந்த காலகட்டத்தில் தோன்றியவர்தான் ஆறுமுக நாவலர்.
  • இலங்கைக்கு வணிக நோக்கோடு வந்த அந்நிய ஆட்சியாளகள், தமது அரசியலாதிக்கத்தை ஏற்படுத்தவும், தமது சமயக் கொள்கையை பரப்பவும் எண்ணம் கொண்டனர். அதற்காக அவர்கள் கல்வி வழி பிரசாரம் செய்தனர். அதில் ஈடுபாடு கொண்ட மக்கள் தங்களுடைய சமய, கலாசார வழிகளை மறந்து வாழத் தலைப்பட்டனர்.
  • இந்த நிலையில் சைவத்தையும் தமிழ்க் கல்வியையும் மீட்டு எடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உழைத்தவர்தான் ஆறுமுக நாவலர்.
  • கிறித்துவ பாதிரிகளின் கல்விக் கொள்கையில் கிறித்துவத்துக்கும் கல்விக்குமிருந்த தொடர்பைப் போலவே, சைவத்தையும் கல்வியையும் இணைக்க வேண்டும் என்று ஆறுமுக நாவலர் முயற்சி செய்தார். இதுவே அவருடைய வாழ்வின் முக்கிய நோக்கமாக இருந்தது.
  • யாழ்ப்பாணம், நல்லூர் என்னும் ஊரில் 1822 டிசம்பர் 18 - இல் கந்தப்பிள்ளை சிவகாமி அம்மையார் தம்பதிக்குப் பிறந்தார். இயற்பெயர் ஆறுமுகம் பிள்ளை. அவருடைய முன்னோர் அனைவருமே தமிழ் அறிஞர்கள். எல்லாருமே அரசுப் பணியாளர்கள். நாவலரின் நான்கு மூத்த சகோதரர்களும் அரசுப் பணியாளர்களே.
  • ஆறுமுக நாவலரின் தொடக்கக் கல்வி அவருடைய ஐந்தாவது வயதில் வீட்டிலேயே தொடங்கியது. நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் நீதி நூல்களையும் தமிழையும் கற்றார். ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தார். அவருடைய மூத்த தமையனாரால் முதலில் சரவணமுத்துப் புலவரிடமும் பின்னர் அவரது குருவாகிய சேனாதிராச முதலியாரிடமும் உயர்கல்வி கற்க அனுப்பப்பட்டார்.
  • தமிழ் இலக்கியம், இலக்கணம், சாத்திரங்கள், சிவாகமங்களைக் கற்றார். பன்னிரண்டாவது வயதிலேயே தமிழ், சம்ஸ்கிருத மொழிகளைக் கற்று அவற்றில் புலமை பெற்றார்.
  • யாழ்ப்பாணத்தில் அக்காலத்திலிருந்த வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலையில் (இன்று அது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி) கற்று ஆங்கிலத்திலும் திறமை பெற்றார். 1841-ஆம் ஆண்டு தனது 19-ஆம் வயதில் அப்பாடசாலையில் ஆசிரியராகப் பணியேற்றார்.
  • சைவத் தமிழ்ப் பண்பாட்டுக்கு இசைவான கல்வி, சைவ சமய வளர்ச்சி, தமிழ் வளர்ச்சி ஆகிய நோக்கங்களுக்காகப் பணிபுரிய வேண்டும் என்ற எண்ணமே ஆறுமுக நாவலருக்குள் முதன்மை பெற்று இருந்தது.
  • இவரது முதல் சொற்பொழிவு வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயிலில் 1847-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சொற்பொழிவு ஆற்றினார். இவரது சொற்பொழிவைக் கேட்டு நிறைய பேர் மது அருந்தும் பழக்கத்தைக் கைவிட்டனர். கிறிஸ்தவ மதத்திற்கு மாறிச் சென்றிருந்தவர்கள் மீண்டும் சைவ சமயத்திற்கே திரும்பினர்.
  • அப்படி மாறி வந்தவர்களுள் ஒருவர்தான் கிங்ஸ்பரி என்பவர். பின்னாளில் அவர் சி.வை. தாமோதரம் பிள்ளை என்னும் புகழ்வாய்ந்த தமிழறிஞர் ஆனார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டதாரி என்னும் பெருமைக்குரியவர் சி.வை. தாமோதரம் பிள்ளை. இவர் மாநிலக் கல்லூரியின் தமிழ்ப் பேராசியராகப் பணிபுரிந்தார். பின்னர், நாவலரைப் போல் பதிப்புப் பணியிலும் ஈடுபட்டார்.
  • சைவ சமயத்தவர் ஒரு சிலரிடம் காணப்பட்ட தவறான பழக்க வழக்கங்களை நீக்க முயன்றார் நாவலர். அதற்காக அவர் 1848-ஆம் ஆண்டில் வண்ணார்பண்ணையில் "சைவப்பிரகாச வித்தியாசாலை' என்ற பெயரில் ஒரு சைவப் பாடசாலையைத் தொடங்கினார். சமய வளர்ச்சிக்குத் தமது முழு நேரத்தையும் செலவிடத் தீர்மானித்தார். அதற்காக செப்டம்பர் 1848-இல் தமது மத்திய கல்லூரி ஆசிரியப் பணியைத் துறந்தார்.
  • சைவ மாணவர்களுக்குப் பாடநூல்கள் அச்சிடுவதற்கு அச்சு இயந்திரம் வாங்குவதற்காக நல்லூர் சதாசிவம் பிள்ளையுடன் 1849-இல் சென்னை வந்தார். சென்னையில் சில காலமிருந்து சூடாமணி நிகண்டு உரையையும் செளந்தரியலகரி உரையையும் அச்சில் பதிப்பித்தார். ஓர் அச்சு இயந்திரத்துடன் யாழ்ப்பாணம் திரும்பினார்.
  • தமது இல்லத்தில் "வித்தியானுபாலன இயந்திரசாலை' என்னும் பெயரில் ஓர் அச்சுக்கூடம் நிறுவி, பாலபாடம், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் உரை, சிவாலய தரிசன விதி, சைவசமய சாரம், கொலை மறுத்தல், திருச்செந்திநீரோட்டக யமகவந்தாதியுரை, திருமுருகாற்றுப்படையுரை போன்ற நூல்களை அச்சிட்டார். பெரியபுராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். ஞானக்கும்மி, யேசுமதபரிகாரம், வச்சிரதண்டம் ஆகிய நூல்களையும் வெளியிட்டார்.
  • தமிழ் நூல்களை முதல் முறையாகச் செவ்வையான வகையில் பதிப்பித்தவர் ஆறுமுக நாவலரே. திருக்குறள் பரிமேலழகர் உரை, திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் போன்ற நூல்களையும் பிழையின்றிப் பதிப்பித்தார்.
  • சென்னையில் திருவாசகம், திருக்கோவையார் நூல்களை 1859-ஆம் ஆண்டு வெளியிட்டார். பெரிய அச்சு இயந்திரம் ஒன்றை வாங்கி, சென்னை தங்கசாலைத் தெருவில் அச்சகம் நிறுவினார். அங்கே பல நூல்களையும் அச்சிட்டார்.
  • சென்னை, திருவாவடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய இடங்களிலும் தங்கி சைவப் பிரசங்கங்கள் செய்தார். அதற்குப் பிறகு 1862 பங்குனி மாதம் யாழ்ப்பாணம் திரும்பினார்.
  • இவரின் புலமையையும், நாவன்மையையும், சைவத் தமிழ் பணிகளையும் பாராட்டி திருவாடுதுறை ஆதீனம் இவருக்கு "நாவலர்' என்ற பட்டத்தை வழங்கியது. சைவம் காத்த நாவலர் பெருமானை சைவ மக்கள் "ஐந்தாம் சைவசமயக்குரவர்' எனப் போற்றுகின்றனர்.
  • 1863-இல் மீண்டும் தமிழகம் வந்து இராமநாதபுர சமஸ்தானத்தில் பிரசங்கம் செய்தார். தமிழ்நாட்டில் நான்கு வருடங்கள் தங்கினார்.
  • குன்றக்குடியிலுள்ள திருவண்ணாமலை ஆதீனத்தில் அவர் செய்த பிரசங்கத்தைப் பாராட்டி, தம்பிரான்கள், ஓதுவார்கள் சூழ்ந்து வர ஆறுமுக நாவலரைப் பல்லக்கில் ஏற்றி பட்டண பிரவேசம் செய்வித்தார்கள். அங்கிருந்து திருப்பெருந்துறை, வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி ஆகிய தலங்களை வணங்கி சிதம்பரம் சேர்ந்தார். 1864-ஆம் ஆண்டு சிதம்பரத்தில் சைவப் பிரகாச வித்தியாசாலை எனும் பெயரில் பாடசாலையொன்றை நிறுவினார். சிதம்பரம் நடராஜரை தினமும் வழிபட்டு வந்தார்.
  • 1866-இல் சிதம்பரத்திலிருந்து சென்னைக்குத் திரும்பி சைவ பிரசங்கங்கள் செய்வதிலும் நூல்கள் அச்சிட்டு வெளியிடுவதிலும் நாவலர் ஈடுபட்டார்.
  • ஆங்கிலேயர் நிறுவிய கல்விக்கூடங்களுக்கு மாற்றாக 1870-இல் நாவலர் தமது செலவில் கோப்பாயில் ஒரு தமிழ்ப் பாடசாலையைத் தொடங்கி நடத்தினார். ஆனால் மக்கள், ஆங்கில ஆட்சிப் பணிகளுக்கு தமிழ்ப் பாடசாலையில் படித்தால் வாய்ப்புக் கிடைக்காது என்று நினைத்ததால், தங்களுடைய பிள்ளைகளைத் தமிழ்ப் பாடசாலைக்கு அனுப்பவில்லை.
  • ஆறுமுக நாவலருக்கும் வள்ளலாருக்கும் சிக்கல் ஏற்பட்டு அது வழக்குமன்றம் வரை போன பிறகும் கூட, நாவலர் அதைப் பொருட்படுத்தாமல், வள்ளலாரின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார்.
  • 1871-இல் வண்ணார்பண்ணையில் ஜோன் கில்னர் என்பவர் நடத்திய வெசுலியன் ஆங்கில பாடசாலையில் சைவ மாணவர்கள் விபூதி அணிந்து சென்றதற்காகப் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அப்பிள்ளைகளின் நன்மை கருதிய நாவலர், சைவ ஆங்கில பாடசாலை ஒன்றை வண்ணர்பண்ணையில் 1872-இல் தொடங்கி நடத்தினார்.
  • ஆனால் அந்த ஆங்கில பாடசாலைக்கும் தங்கள் பிள்ளைகளை மக்கள் அனுப்பவில்லை. எனவே 1876-இல் அதை முட வேண்டியதாயிற்று.
  • நாவலர் 1872-ஆம் ஆண்டு யாழ்ப்பாண சமய நிலை என்ற நூலை எழுதி வெளியிட்டார். அவர் 1874-ஆம் ஆண்டு வெளியிட்ட "இலங்கை பூமி சரித்திரம்' என்ற நூலில், சகல பாவங்களுக்கும் பிறப்பிடம் மதுபானம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
  • 1875-1878 காலகட்டத்தில் நன்னூல் விருத்தியுரை, நைடதவுரை, திருவிளையாடல் புராணம், நன்னூல் காண்டிகையுரை, சிவபூசா விதி, மூன்றாம் அனுட்டான விதி, குரு சிஷ்ய கிரமம், பூசைக்கு இடம் பண்ணும் விதி, சிராத்த விதி, தருப்பண விதி, போசன விதி, தமிழ் அகராதி, தமிழ்-சமக்கிருத அகராதி, தமிழ்-ஆங்கில அகராதி முதலிய நூல்களை எழுதுவதிலும் சைவ சமய பிரசங்கங்கள் செய்வதிலும் நாவலர் ஈடுபட்டார்.
  • நாவலருக்கு முன்னர், தமிழ் உரைநடை மிகக் கடினமாக இருந்தது. நிறுத்தக் குறிகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் ஆறுமுக நாவலரே. இவரை "புதிய தமிழ் உரைநடையின் தந்தை' என்று தமிழறிஞர் மு. வரதராசனார் போற்றியுள்ளார்.
  • நாவலர், இலக்கணம் தொடர்பாகவும் சைவசமயத்திற்கு விளக்கமாகவும் 24 நூல்கள் எழுதியுள்ளார். இலக்கணம், சமயநூல்கள், காப்பியங்கள் என 44 நூல்களைப் பதிப்பித்தார். பதிப்புப்பணியில் இன்று ஈடுபடுவோருக்குக் கூட வழிகாட்டும் வகையில் இவரது பதிப்புகள் அமைந்துள்ளன.
  • இலங்கையில் பராமரிப்பு இன்றி இருந்த ஆலயங்களை புனரமைக்கும் பணிகளை மேற்கொண்டார். போர்த்துக்கீசியரால் அழிக்கப்பட்ட, யாழ்ப்பாணம் நகுலேஸ்வரம் கோயிலை மீண்டும் உருவாக்க முனைந்தார்.
  • நாவலர், பேர்சிவல் பாதிரியார் விவிலியத்தைத் தமிழில் மொழி பெயர்க்கும் வேலைக்கு உதவியாக இருந்து பணியாற்றினார். பேர்சிவல் பாதிரியாருடன் சென்னை வந்து அதனை அச்சிட்டு யாழ்ப்பாணம் கொண்டு சென்றார்.
  • தம் வாழ்நாள் பூராவும் தமிழுக்கும் சைவத்துக்கும் சேவையாற்றி வந்த நாவலர் பெருமான் 1879-இல் தனது 57-ஆவது வயதில் மறைந்தார்.
  • ஆறுமுக நாவலரின் நினைவாக இலங்கை அரசு 1971-ஆம் ஆண்டு அக்டோபர் 29-இல் நினைவு அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது.
  • ஆறுமுக நாவலரின் நினைவைப் போற்றும் வகையில் தமிழகத்தில் உரிய பணிகளை மேற் கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

நன்றி: தினமணி (16  – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories