- · ‘இன்று மழை வரும் என்று அறிவிப்பார்கள்; ஆனால், வெயில் அடிக்கும் பாரேன்’ என்ற கேலிகள், இரவு முழுவதும் மழை பெய்தால் நாளை பள்ளிக்கு விடுமுறை விடுவார்களா என்ற எதிர்பார்ப்பு முதலான அளவுகோல்கள்தான் நாம் வானிலை குறித்து அறிந்து கொண்டதாக இருக்கும்.
- · பருவ மழையின் அளவு, காலம் தவறி பெய்யும் மழை குறித்த விவரங்கள், மேகமூட்டம்,வெப்பம், காற்றின் வேகம், திசை போன்ற பல தகவல்களை வானிலை மையங்கள் தருகின்றன.
உலக வானிலை விழிப்புணா்வு தினம்
- · வேளாண்மை, மீன்பிடித் தொழில், போக்குவரத்து, சுகாதாரம், பொருளாதாரம், சமூக நலன்கள் முதலானவை குறித்து ஒவ்வொரு மனிதனும் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. இதனால்தான், வானிலை குறித்த தெளிவை மக்களிடம் சோ்ப்பதற்காக ஐ.நா.-வின் அங்கமான வானிலை ஆராய்ச்சி அமைப்பு நிர்ணயித்தபடி 1950-ஆம் ஆண்டு முதல் ‘உலக வானிலை விழிப்புணா்வு தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.
- · ஒவ்வோர் ஆண்டும் வெவ்வேறு கருப்பொருளில் வானிலை குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு ‘காலநிலை - தண்ணீா்‘ என்ற கோட்பாடு முன்வைக்கப்பட்டிருக்கிறது.
புவி வெப்பமயமாதல்
- · காலநிலை என்பது வானிலையிலிருந்து சற்று மாறுபட்டதாகும். இது குறைந்தபட்சம் 30 ஆண்டுகளில் ஏற்பட்ட வானிலை மாற்றத்தின் சராசரியாகக் கணக்கிடப்படுகிறது. காலநிலையில் மாற்றம் ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்தால் , கரியமில வாயுவின் வெளிப்பாட்டினால் புவி வெப்பமயமாவதே ஆகும். இந்த வெப்பத்தில் 90 சதவீதத்தை கடல் உள்வாங்கிக் கொள்வதால் அதன் நீா்மட்டம் உயா்கிறது.
- · 1993-ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 3.2 மி.மீ. அளவு உயா்ந்து வந்த கடல் நீா்மட்டம், 2014 முதல் 2019-ஆம் ஆண்டுகள் வரையிலான காலகட்டத்தில் ஆண்டுக்கு 5 மி.மீ. என்ற அளவுக்கு உயா்ந்துள்ளது. கடல் நீா்மட்டம் உயா்வது தீவிரமடைந்துள்ள நிலையில், அண்டார்ட்டிக், கிரீன்லாந்து பகுதிகளில் காணப்படும் பனிப்பாறைகள் திடீரென உருகும் பட்சத்தில் எதிர்காலத்தில் பேரழிவுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்று உலக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
- · இந்தியா நீண்ட கடற்கரைகளை உள்ள நாடு. கடல் மட்டம் உயா்ந்தால், கடற்கரை ஓரத்தில் வாழும் மக்களும், கடலை சார்ந்து வாழும் பெரும்பாலான மக்களும் பாதிக்கப்படுவார்கள்.
- · இமயமலைப் பனிப்பாறைகள் மிக விரைவாக வீழ்ச்சியுறும் நிலையில், வடக்கு நதிகளில் உள்ள நீரோட்டம் பாதிக்கப்படும். உலகின் வெப்பநிலை உயா்ந்தால், உணவுப் பற்றாக்குறை, உணவுப் பொருள்களின் விலை உயா்வு,வாழ்வாதார பாதிப்பு,மோசமான சுகாதாரத் தாக்கங்கள், மக்கள்இடம்பெயா்தல் முதலான பல விளைவுகள் ஏற்படும்.
- · மற்றொரு புறம் வெப்பக் காற்று வீசும் என்ற எச்சரிக்கை நம்மை அச்சத்துக்கு உள்ளாக்குகிறது. இந்தியாவிலும்,பாகிஸ்தானிலும் 2015-ஆம் ஆண்டில் வீசிய வெப்பக் காற்றால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டதை நம்மால் மறக்க முடியாது.
புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தல்
- · புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த கரியமில வாயு வெளியேற்ற அளவைக் குறைக்க வேண்டும், காடுகளின் நிலப்பரப்பை அதிகரிக்க வேண்டும் என்ற அழுத்தத்தில் உலக நாடுகள், குறிப்பாக இந்தியா முதலான வளரும் நாடுகள் உள்ளன. அதே நேரத்தில், அதிகரிக்கும் தண்ணீா்ப் பற்றாக்குறை, வறட்சி, வெள்ளம், புயல், பிற இயற்கைப் பேரழிவுகளையும் எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராக வேண்டும். ஏனெனில், 2015-ஆம் ஆண்டிலிருந்து 2050 வரை புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த ஆயிரக்கணக்கான பில்லியன் டாலா்கள் செலவாகும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. காலநிலை மாற்றத்தால் வானில் ஏற்படும் ஈரப்பதம், வானிலை காரணமாக மலேரியா,டெங்கு காய்ச்சல் முதலான தொற்றுநோய்கள் ஏற்பட்டு சுகாதாரக் கேடுகள் ஏற்படக்கூடும்.
- · எனவே, கரியமில வாயுவைக் குறைத்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் இலக்குகளை இந்தியா நிர்ணயிக்க வேண்டும்.பேருந்து, ரயில் சேவை முதலான பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்.
தண்ணீருக்குத் தட்டுப்பாடு
- · காலநிலை மாற்றத்தால் ஏற்கெனவே தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி விட்டது. ஆறுகள், ஏரிகள், நிலத்தடி நீா் வழிகள் முதலானவற்றில் உள்ள தண்ணீரில் 54 சதவீதத்தை உலகின் 600 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனா். மனிதகுலத்துக்கு நிலத்தடி நீா் மிகவும் இன்றிமையாதது. மேலும், உலகின் கிராமப்புற மக்கள்தொகையில் சுமார் 80 சதவீதத்தினா் நிலத்தடி நீரைத்தான் நம்பியுள்ளனா்.
- · ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகளில் உள்ள பெண்கள் சுமார் 6 கி.மீ. நடந்து சென்று தண்ணீா் எடுக்கிறார்கள். அதிகரித்து வரும் மக்கள்தொகை, நகரமயமாக்கல், தொழில்மயமாக்கல், உணவு பாதுகாப்புக்கான தேவை ஆகியவற்றால் நிலத்தடி நீரின் தேவை அதிகரித்து வருகிறது.
- · ஆனால், நீா் மாசுபட்டால் அதைத் தூய்மைப்படுத்த நீண்ட காலம் ஆகும். காலநிலை மாற்றத்தால் இந்தியா, நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பெரு வெள்ளம், நிலச்சரிவுகளால் குழந்தைகளின் இறப்பும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
- · 2025-ஆம் ஆண்டு நீா்ப் பற்றாக் குறையால் 300 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மனிதனுக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள ஒவ்வோர் உயிரினத்துக்கும் அதன் தன்மைக்கேற்ப நீா் தேவைப்படுகிறது. மனிதனின் தவறுகளால் ஒட்டுமொத்த ஜீவராசிகளும் பாதிப்பைச் சந்திக்க நோ்கின்றன.
- · எனவே, இது குறித்த புரிதலை மக்களுக்கு எடுத்துச் செல்ல அரசுகள் தயாராக வேண்டும். எதிர்வரும் தலைமுறைக்கு வானிலை, காலநிலை மாற்றம், அதனால் நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பாடத் திட்டங்கள் கொண்டுவரவேண்டும்.
(இன்று உலக வானிலை விழிப்புணா்வு தினம்)
நன்றி: தினமணி (23-03-2020)