TNPSC Thervupettagam

அறிவியல் ஆயிரம்: குயூப்பர் பட்டையின் பெயர்க்காரண விஞ்ஞானி ஜெரார்ட் குயூப்பர்!

December 8 , 2024 33 days 116 0

அறிவியல் ஆயிரம்: குயூப்பர் பட்டையின் பெயர்க்காரண விஞ்ஞானி ஜெரார்ட் குயூப்பர்!

சூரிய மண்டலம்

  • நமது சூரிய மண்டலத்தின் மையத்தில் மைய நாயகனாக சூரிய மண்டலத்தின் அனைத்துக்களுக்கும் ஆற்றல் தருவது சூரியன். சூரியன் என்பது சூரிய மண்டலத்தின் மையத்தில் உள்ள ஒரு விண்மீன் ஆகும். நமது சூரிய குடும்பம் அகன்ற விண்வெளியில் பால்வழி மண்டலத்தில் உள்ள ஒரு சிறிய விண்மீன். இது பால்வழி மண்டலத்தில் விண்மீனின் சிறிய பகுதியான ஓரியன் கையில் அமைந்துள்ளது.

சூரிய குடும்பத்தின் உண்மைகள்

  • சூரிய குடும்பம் பால்வீதியின் மையத்தை மணிக்கு சுமார் மணிக்கு 828,000 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது.
  • சூரிய குடும்பம் விண்மீன் மையத்தைச் சுற்றி ஒரு சுற்றுப்பாதையை முடிக்க சுமார் 23 கோடி ஆண்டுகள் ஆகும்.
  • சூரிய குடும்பம் விண்மீன் மையத்திலிருந்து சுமார் 27,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
  • பெரிய விண்மீன் கூட்டங்கள் மற்றும் சூப்பர்நோவாக்களிலிருந்து விலகி, ஓரியன் கையில் சூரியனின் இருப்பிடம், சூரிய குடும்பத்தை ஒப்பீட்டளவில் நிலையானதாக ஆக்குகிறது.
  • நமது சூரிய குடும்பத்திற்கு மிக நெருக்கமான விண்மீன் தொகுதி ஆல்பா சென்டாரி ஆகும். இது ப்ராக்ஸிமா சென்டாரி, ஆல்பா சென்டாரி ஏ மற்றும் ஆல்பா சென்டாரி பி ஆகிய இரட்டை விண்மீன்களால் ஆனது.
  • இது சுமார் 4.25 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.
  • சூரிய குடும்பத்தில், சூரியன், எட்டு கோள்கள், ஐந்து அதிகாரப்பூர்வமாகப் பெயரிடப்பட்ட குள்ள கோள்கள், நூற்றுக்கணக்கான நிலவுகள் மற்றும் ஆயிரக்கணக்கான சிறுகோள்கள் மற்றும் வால்மீன்கள் உள்ளன.
  • சூரியனின் நிறை 332,900 பூமியின் நிறைகள்.
  • சூரிய குடும்பத்தின் மொத்த நிறையில் 99.86% சூரியன் பெற்றுள்ளது.
  • இது தன் உள்ளகத்தில் இருக்கும் ஹைடிரஜன் அணுக்களை ஹீலியத்துடன் இணைப்பதன் மூலம் மாபெரும் ஆற்றலை வெளியிடுகிறது.
  • அந்த ஆற்றல் பெரும்பாலும் மின்காந்த கதிர்வீச்சு மூலம் விண்வெளிக்குள் கதிர்வீசப்படுகிறது.
  • இதுதான் சூரிய மண்டலத்தில் அதனை, புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் என்ற 8 கோள்கள் வலம் வருகின்றன.

நெப்டியூனுக்கு அப்பால்

  • நெப்டியூன் கோளைத்தாண்டி, ஒரு வளையம் போன்ற அமைப்பு உள்ளது. இதற்கு குயூப்பர் வளையம் என்று பெயர். இது நெப்டியூனுக்கு அப்பால் உள்ள பகுதியாகும்.
  • நெப்டியூனின் சுழற்சிப் பாதைக்கு அப்பால் உள்ள பகுதியில் கைப்பர் பட்டையும் புளூட்டோ உள்ளிட்ட பல்வேறு குறுங்கோள்களும் உள்ளன. சில நேரங்களில் இது சூரிய அமைப்பின் மூன்றாம் பகுதி என்றும் அழைக்கப்படுகிறது.

குயூப்பர் பட்டை

  • குயூப்பர் பட்டை என்பது பனிப்பொருள்களைக் கொண்ட ஒரு பகுதி ஆகும். இது சூரியனில் இருந்து 30 வானியல் அலகுகள் தொலைவிலிருந்து, 50 வானியல் அலகுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ளது (30AU-50AU). இது சூரிய மண்டலம் உருவாகியபின் மீதமான சிறு பொருள்களால் ஆனது. இப்பகுதியிலேயே  புளூட்டோ, ஹௌமியா மற்றும் மேக்மேக் போன்ற குறுங்கோள்கள் உள்ளன. இங்குள்ளவை அனைத்தும் நீர் மற்றும் உறைந்துள்ள எரியக்கூடிய மீதேன், அமோனியாவால் ஆனவை.

குயூப்பர் பட்டையின் பெயர்

  • இந்த குயூப்பர் பட்டைக்கு நவீன கோள்களின் அறிவியலாளர் விஞ்ஞானி ஜெரார்ட் கைப்பரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஜெரார்ட் குயூப்பர் யார்?

  • ஜெரார்ட் குயூப்பர் என்பவர் டச்சு நாட்டைச் சேர்ந்த ஒரு வானியலாளர் ஆவார். அவர் அவரது காலத்தில், சூரிய குடும்பத்தைப் பற்றி செய்த பரந்த ஆய்வுகளின் காரணமாக, ஜெரார்ட் குயூப்பர் நவீன கோள்களின் அறிவியல் தந்தையாகக் கருதப்படுகிறார். நெப்டியூனின் சுழற்சிப் பாதைக்கு அப்பால் உள்ள பகுதியில் இருக்கும் பட்டை, குயூப்பர் பட்டை என்று அவரது பெயரால் பெயரிடப்பட்டது.
  • குயூப்பர் வளையம் 1951-ஆம் ஆண்டு, குயூப்பரால் முன்மொழியப்பட்டது. மேலும் நெப்டியூனின் சுற்றுப்பாதைக்கு வெளியே உள்ள சிறிய கோள்களின் வட்டு வடிவ பகுதியை குறுகிய கால வால்மீன்களின் ஆதாரமாகக் கொண்டுள்ளது. குறுகிய கால வால்மீன்கள் ஆகும். அந்த வால்மீன்கள், 200 ஆண்டுகளுக்குள் சூரியனைச் சுற்றி வந்து முழுமையான சுற்றுப்பாதையை உருவாக்குகின்றன.

இளமை

  • ஜெரார்ட் குயூப்பர், வடக்கு ஹாலந்தில் உள்ள டூட்ஜெனஹார்ன் என்ற கிராமத்தில்,ஒரு தையல்காரரின் மகனாகப் பிறந்தார், அவரது அன்னை பற்றி ஏதும் பதிவில்லை. ஆனால் ஜெரார்ட் குயூப்பர், தனது இளவயது காலம் முதல், வானவியலில் அதீதமான ஆர்வம் கொண்டிருந்தார்.
  • மேலும் ஜெரார்ட் குயூப்பர், மிகவும் அசாதாரணமான கூர்மையான பார்வையைக் கொண்டிருந்தார். நமது சாதாரண கண்களுக்குத் தெரியும் அளவைவிட, நான்கு மடங்கு மங்கலான 7.5 ஒளிதரும் விண்மீன்களையும் கூட சாதாரணமாகக் கண்ணால் பார்க்கும் திறமை பெற்றிருந்தார்.

கல்லூரிக் கல்வி

  • ஜெரார்ட் குயூப்பர் 1923-ஆம் ஆண்டு, நெதர்லாந்தில் உள்ள லைடன் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் படிப்புக்காகச் சேர்ந்தார். அந்த காலகட்டத்தில் லைடன் பல்கலைக்கழகம், ஒரு வலுவான வானியல் துறையைக் கொண்டிருந்தது. மேலும் குயூப்பர் நன்கு அறியப்பட்ட வழிகாட்டிகளுடன் பணியாற்ற முடிந்தது. அவர் அங்கு எஜ்னார் ஹெர்ட்ஸ்பிரங், அன்டோனி பன்னெகோக், வில்லெம் டி சிட்டர், ஜான் வோல்ட்ஜெர், ஜான் ஊர்ட் போன்ற சிறந்த வானியலாளர்களாலும் மற்றும் இயற்பியலாளர் பால் எஹ்ரென்ஃபெஸ்ட் ஆகியோராலும் கற்பிக்கப்பட்டார். அதேபோல் பின்னர் வானியல் துறையில் நன்கு அறியப்பட்ட மாணவர்களுடனும் பணியாற்ற முடிந்தது. அவர் சக மாணவர்களான பார்ட் போக் மற்றும் பீட்டர் ஓஸ்டர்ஹாஃப் ஆகியோருடன் நட்பு கொண்டார். அவர் 1927ஆம் ஆண்டு, வானியல் துறையில் தனது இளநிலைப் பட்டம் பெற்றார் மற்றும் தனது பட்டதாரி படிப்பைத் தொடர்ந்தார்.

முனைவர் பட்டம்

  • ஜெரார்ட் குயூப்பர், நெதர்லாந்தில் அதே லைடன் பல்கலைக்கழகத்திலேயே, இயற்பியலாளர் மற்றும் அவரது முனைவர் பட்ட மேற்பார்வையாளர் எஜ்னார் ஹெர்ட்ஸ்பிரங்குடன் இணைந்து இரட்டை விண்மீன்கள் பற்றிய தனது ஆய்வறிக்கை சமர்ப்பித்தார். பின்னர், 1933-ஆம் ஆண்டு அவர் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார்.

அமெரிக்கக் குடியுரிமை மற்றும் பதவி

  • ஜெரார்ட் குயூப்பர் முனைவர் பட்டம் பெற்ற அதே 1933 ஆண்டில் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தார். அங்கு அவர் கலிபோர்னியாவில் உள்ள லிக் ஆய்வகத்தில் ராபர்ட் கிராண்ட் ஐட்கனுடன் பணிபுரிந்தார். 1935-ஆம் ஆண்டில் அவர் ஹார்வர்ட் கல்லூரி ஆய்வகத்தில் சேர்ந்தார்.
  • அங்கு அவர் 1937 ஆம் ஆண்டில் அமெரிக்கக் குடிமகனாக ஆனார். ஆனால் அதற்கு முன்னரே அங்கு அவர் 1936ஆம் ஆண்டு, சிகாகோ பல்கலைக்கழகத்தின் யெர்கெஸ் ஆய்வகத்தின் ஊழியராகச் சேர்ந்தார். அங்கு அவர் யெர்க்ஸ் ஆய்வகத்தில் 1947-49 ஆண்டுகளிலும் மற்றும் மெக்டொனால்டு ஆய்வகத்தில் 1957-60களிலும், இயக்குநராகப் பணியாற்றினார். ஜெரார்ட் குயூப்பர் 1960ஆம் ஆண்டு, அரிசோனா பல்கலைக்கழகத்தில் சந்திரன் மற்றும் கோள்களுக்கான ஆய்வகத்தை நிறுவினார். அங்கேயே அவர் இறக்கும் வரை அதன் இயக்குநராகப் பணியாற்றினார்.

ஜெரார்ட் குயூப்பரின் அதீத கண்டுபிடிப்புகள்

  • குயூப்பர் விண்மீன் வானியல் ஆராய்ச்சியை மேற்கொண்ட பிறகு, 1940 ஆம் ஆண்டுகளில் தனது கவனத்தைக் கோள்களின் ஆராய்ச்சிக்கு மாற்றினார். 1944ஆம் ஆண்டில், சனியின் சந்திரன் டைட்டனைச் சுற்றி மீத்தேன் வளிமண்டலம் இருப்பதை உறுதிப்படுத்தினார். 1947ஆம் ஆண்டு அவர் செவ்வாய் கோளின் வளிமண்டலத்தில் கரியுமில வாயு ஒரு முக்கிய அங்கமாகும் என்று (சரியாக) கணித்தார்.
  • மேலும் சனியின் வளையங்கள் பனிக்கட்டிகளின் துகள்களால் ஆனவை என்றும் அவரே துல்லியமாகவே கணித்தார். அதே ஆண்டில் அவர் யுரேனஸின் ஐந்தாவது நிலவான மிராண்டாவைக் கண்டுபிடித்தார். மேலும் 1949-ஆம் ஆண்டு அவர் நெப்டியூனின் இரண்டாவது நிலவான நெரீட்டைக் கண்டுபிடித்தார். 1950-இல் புளூட்டோவின் பார்வை விட்டத்தின் முதல் நம்பகமான அளவீட்டைப் பெற்றார்.
  • 1956-ஆம் ஆண்டில், செவ்வாய் கோளின் துருவ பனிக்கட்டிகள் உறைந்த நீரால் ஆனது என்றும், முன்பு கருதப்பட்டது போல கரியமில வாயுவால் ஆனது அல்ல என்பதையும் நிரூபித்தார். 1964-ஆம் ஆண்டு நிலவின் மேற்பரப்பு எப்படி இருக்கும் என்பது பற்றிய குயூப்பரின் கணிப்பு ("அது மொறுமொறுப்பான பனி போல் இருக்கும்") 1969-இல் விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்கால் சரிபார்க்கப்பட்டது.
  • 1951 ஆம் ஆண்டு, நெப்டியூனைச் சுற்றியுள்ள வளையத்திற்குப் பெயரை குயூப்பர் வளையம் என்று முன்மொழிந்தவரும் அவரே.

சந்திரனில் இறங்கும் திட்டம்

  • ஜெரார்ட் குயூப்பர் 1960ஆம் ஆண்டுகளின் போது, ​ரேஞ்சர் சந்திர ஆய்வு திட்டத்தின் தலைமை விஞ்ஞானியாக இருந்தார். மேலும் ரேஞ்சர் புகைப்படங்களின் பகுப்பாய்வு மூலம் நிலவில் தரையிறங்கும் இடங்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பிலும் அவர் இருந்தார். நிலவில் இறங்கும் திட்டத்தில் அவர் செய்த பணியின் மூலம், சர்வேயர் மற்றும் அப்பல்லோ திட்டங்களுக்கான தரையிறங்கும் தளங்களை அடையாளம் காண உதவினார்.

கலைக்களஞ்சிய ஆசிரியர்

  • ஜெரார்ட் குயூப்பர் வானியல் பற்றிய இரண்டு கலைக்களஞ்சிய படைப்புகளைத் தயாரிப்பதில் ஈடுபட்டதன் மூலம் ஒரு பாரம்பரியத்தை இந்த உலகத்துக்காக விட்டுச்சென்றிருக்கிறார். அவர் 1953-ஆம் ஆண்டு முதல் 1958-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் முடிக்கப்பட்ட "சூரிய குடும்பம்" என்ற நான்கு தொகுதி கலைக்களஞ்சியத்தின் ஆசிரியராக இருந்தார். பின்னர் 1960-ஆம் ஆண்டு முதல் 1968-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் முடிக்கப்பட்ட "விண்மீன்கள் மற்றும் விண்மீன் அமைப்புகள்" என்ற தலைப்பில் ஒன்பது தொகுதி கலைக் களஞ்சியத்தின் ஆசிரியராகவும் இருந்தார்.

ஜெரார்ட் குயூப்பரின் தனி வாழ்க்கையும் மரணிப்பும்

  • ஜெரார்ட் குயூப்பர், 1936-ஆம் ஆண்டு, ஜூன் 20 ஆம் நாள் அமெரிக்காவில் சாரா புல்லர் என்ற பெண்ணை மணந்தார். ஹார்வர்ட் கல்லூரி ஆய்வகத்தில் குயூப்பர் பணிபுரிந்தபோது இந்த ஜோடி சந்தித்தது. குயூப்பர் தனது மனைவியுடன் மெக்சிகோவில் விடுமுறையிலிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதில் அவர் 1973-ஆம் ஆண்டு, டிசம்பர் 23ல் உயிரிழந்தார்.

ஜெரார்ட் குயூப்பரின் பெருமைகள்

  • ஜெரார்ட் குயூப்பர் மேலும் பல வழிகளில் அவரது சாதனைகளுக்காகக் கௌரவிக்கப்பட்டார். 1959-ஆம் ஆண்டு, அவர் அமெரிக்க வானியல் சங்கத்தின் ஹென்றி நோரிஸ் ரஸ்ஸல் விரிவுரையை வென்றார். சந்திரன் மற்றும் பிற கோள்களில் உள்ள பல பள்ளங்களுக்கு அவரைப் பெருமைப்படுத்துவதற்காக அவரின் பெயர் வைக்கப்பட்டது. சந்திரன், செவ்வாய் மற்றும் புதன் ஆகியவற்றிலும்கூட அவரது பெயர் தாங்கிய குயூப்பர் பள்ளங்கள் உள்ளன. கூடுதலாக, குய் 79 போன்ற குயூப்பர் எண்களைப் பெற்ற பல இரட்டை விண்மீன்களை அடையாளம் காண உதவினார்.

இறப்புக்குப் பின்னர் மரியாதை

  • 1975 ஆம் ஆண்டில், அகச்சிவப்பு வானியல் வளர்ச்சியில் அவரது முன்னோடி பணிக்காக குயூப்பர் தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகத்தால் [NASA] மரணத்திற்குப் பின் கௌரவிக்கப்பட்டார். நாசா அதன் வான்வழி அகச்சிவப்பு தொலைநோக்கிக்கு "குயூப்பர் வான்வழி ஆய்வகம்" என்று பெயரிட்டது.

குயூப்பர் பரிசு

  • குயூப்பர் மரணத்திற்குப் பிறகு பெற்ற மற்றொரு அங்கீகாரம், தொழில்முறை கோள்களின் விஞ்ஞானிகளின் சர்வதேச சங்கமான, அமெரிக்க வானியல் சங்கப் பிரிவான கோள் அறிவியல் பிரிவால் குயூப்பர் பரிசை நிறுவியது. 1984 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்த பரிசு வழங்கப்பட்டது. அதன்பின்னர், ஆண்டுதோறும் குயூப்பர் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. குயூப்பர் பரிசு என்பது அமெரிக்க வானியல் சங்கம் வழங்கும் மிகச் சிறப்பு வாய்ந்த விருது ஆகும். இது அதன் சாதனைகள் கோள்களின் அமைப்புகளைப் பற்றிய புரிதலை மிக முன்னேறிய விஞ்ஞானிகளுக்குத்தான். பரிசு வென்றவர்களில் கார்ல் சாகன், ஜேம்ஸ் வான் ஆலன் மற்றும் யூஜின் ஷூமேக்கர் ஆகியோரும் அடங்குவர்.

சூரிய குடும்பம் பற்றி துல்லியமான கணிப்பு

  • ஜெரார்ட் குயூப்பர், 1949-ஆம் ஆண்டு சூரிய குடும்பத்தின் தோற்றம் பற்றிய ஒரு செல்வாக்குமிக்க கோட்பாட்டை முன்மொழிந்தார். சூரியனைச் சுற்றி ஒரு பெரிய வாயு மேகத்தின் ஒடுக்கத்தால் கோள்கள் உருவாகின்றன என்று பரிந்துரைத்தார். 30 முதல் 50 வானியல் அலகுகள் தொலைவில் சூரியனைச் சுற்றி வரும் வால்மீன்களின் அமைப்பு வட்டு வடிவ வளையத்தால் இருக்கலாம் என்றும் அவர் பரிந்துரைத்தார். மில்லியன் கணக்கான வால்மீன்களின் இந்த வளையத்தின் இருப்பு 1990-களில் சரிபார்க்கப்பட்டது. மேலும் இது குயூப்பர் பெல்ட் என்று பெயரிடப்பட்டது.

குயூப்பர் வான்வழி ஜெட் விமானங்கள்

  • வளிமண்டலத்தின் மறைக்கப்பட்ட அடுக்குகளுக்கு மேலே அகச்சிவப்பு அவதானிப்புகளுக்கு தொலைநோக்கிகளை எடுத்துச் செல்ல உயர் பறக்கும் ஜெட் விமானங்களைப் பயன்படுத்துவதையும் ஜெரார்ட் குயூப்பர் தொடங்கினார்.

நன்றி: தினமணி (07 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories