TNPSC Thervupettagam

அறிவுக் கருவூலம் திறக்கப்படுமா?

January 29 , 2021 1453 days 787 0
  • உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றை இந்தியா திறம்படக் கையாண்டது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள், அரசு அலுவலா்கள் என்று அனைவரும் துணிந்து செயல்பட்டதன் விளைவு, மக்களுக்கு அதிக அளவில் நோய்த்தொற்று ஏற்படாமல் கட்டுப்படுத்தப்பட்டது.
  • தளா்வுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடைகள் நீங்கி, உணவகங்கள் அலுவலகங்களில் பாதியளவு ஆட்களுடன் பணிபுரியலாம் என்று அரசாங்கம் அறிவித்தது. மக்கள் பயம் நீங்கி வெளியே வரத் தொடங்கினா். நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை என்றபோதிலும் கடின முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
  • கொள்ளை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட பணவசதி படைத்தவா்கள் தனியாா் மருத்துவமனைகளிலும், பிறா் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை எடுத்துக் கொண்டனா். தொலைக்காட்சி மற்றும் செய்தித் தாள்களில் கொள்ளை நோய் தொற்றினால் இறந்தவா்களைப் பற்றிய செய்தி வந்தபோது மக்கள் அதிகம் கவலைப்பட்டு மிக கவனமாக இருந்தனா்.
  • ஒருபுறம் வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பண்டிகைகள் கொண்டாட தடை விதிக்கப்பட்டது. மறுபுறம் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. பொது முடக்க காலத்தில் மக்களுக்கு வருமானம் தடைபட்டது. மக்களிடமிருந்த கொஞ்ச நஞ்ச பணத்தையும் மதுக்கடைகள் மூலம் அரசாங்கம் வசூலிக்கத் தொடங்கிவிட்டது. இச்செயல் மக்களில் பலரை முகம் சுளிக்க வைத்தது.
  • இது போதாதென்று திரையரங்குகளைத் திறந்து, பொங்கல் முதல் 50 சதவீத இருக்கைகளில் திரையரங்குகள் இயங்கலாம் என்று அரசு அறிவித்தது. இந்த விதியை மீறுவோருக்கு அபராதம் ரூபாய் ஐயாயிரம்.
  • அபராதத் தொகையை கட்டிவிட்டு விதியை மீறும் திரையரங்குகளும் இயங்கிக் கொண்டுதான் இருந்தன.
  • தற்பொழுது எல்லா திரையரங்குகளும் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்படலாம் என்று அரசு அனுமதியளித்துவிட்டது.
  • அத்துடன், இதுவரை மூடப்பட்டிருந்த நீச்சல் குளங்கள் திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கலாம்; பொதுமக்கள் கூடும் கண்காட்சிகளை நடத்தலாம் என்றெல்லாம் தளா்வுகளை அறிவித்திருக்கிறாா்கள். அதேசமயம் 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் மூடப்பட்ட நூலகங்கள் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படவில்லை.
  • கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றை தடுக்கும் வகையில் அனைவரும் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்பது அரசின் விதிமுறை. ஒருவேளை இந்த விதிமுறையை நூலகங்களுக்கு வரும் வாசகா்கள் மீறி விடுவாா்கள் என்ற அச்சம் காரணமாக நூலகங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறதா?
  • அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நிபந்தனையுடன் அனுமதி அளிக்கும் பொழுது நூலகங்களுக்கும் நிபந்தனையுடன் அனுமதி அளிப்பது தானே முறை? ஒழுங்கும் கட்டுப்பாடும் தூய்மையும் அமைதியும் நூலகங்களின் தாரக மந்திரங்கள் ஆகும்.
  • ஏற்கெனவே ’அமைதி காக்கவும்’ என்ற விதிமுறை நூலகங்களில் நடைமுறையில் உள்ளது; அதைப் பின்பற்றித்தான் நூலகங்களில் வாசகா்கள் செயல்பட்டு வருகிறாா்கள். அவா்கள் முகக் கவசம் அணிந்து தான் நூலகங்களுக்கு வர வேண்டும் என்ற விதிமுறையை மட்டும் புறக்கணித்து விடவாப் போகிறாா்கள்?
  • மதுக்கடைகளை பாா் வசதியுடன் திறந்து விட்ட அரசாங்கம், நூலகங்களில் பொது அறிவை வளா்க்கும் நூல்களையும், செய்திகளையும் அமைதியாக வாசிக்கத் தடை விதிப்பது விநோதமாக இருக்கிறது.
  • போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்த நூலகங்களுக்கு அனுமதி மறுப்பது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாகும்.
  • கடந்த ஓராண்டாக நாளிதழ்கள் பருவ இதழ்கள் அரசாங்க நூலகங்களுக்கு வாங்கப் படுவதில்லை. இதனால் சிற்றிதழ்கள், இலக்கிய இதழ்கள், பதிப்பாளா்கள் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள். தமிழகத்தில் மூன்றாயிரம் நூலகங்கள், கிளை நூலகங்கள், கிராமப்புற நூலகங்கள் உள்ளன. இந்த நூலகங்களுக்கு வாங்கப்படும் ஒவ்வொரு சிற்றிதழ் மூலமும் ஆயிரக்கணக்கான வாசகா்கள் பயனடைந்து வருகிறாா்கள்.
  • அரசு சிறந்த சிற்றிதழ்களையும், பருவ இதழ்களையும், படைப்பிலக்கிய நூல்களையும், நூலாசிரியா்களையும் கௌரவிக்கும் வகையில் பல விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்தும் அதே வேளையில், நூலகங்களுக்கு சிற்றிதழ்கள் வாங்கப்படாததால், பதிப்பாளா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • பொதுப் போக்குவரத்து தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அவ்வளவு ஏன், போராட்டங்களுக்கு கூட நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் என்ன பாவம் செய்தன நூலகங்கள்?
  • எத்தனையோ திறமையாளா்களை பிற்காலத்தில் பெரும் அறிஞா்களாக அடையாளம் காண வைத்த பெருமை நூலகங்களுக்கு உண்டு. அத்தகைய அறிவுக் கருவூலமாகத் திகழும் நூலகங்களை மூடி வைப்பதால் நாம் எத்தனை வருங்கால அறிஞா்களை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை இச்சமயம் நினைத்துப் பாா்க்காமல் இருக்க முடியவில்லை.
  • இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டதைப் போன்று அனைத்து நிகழ்வுகளுக்கும் அனுமதி அளித்துவிட்டு, புரியாத புதிராக நூலகங்களுக்கு மட்டும் வாசகா்கள் செல்ல ஏன் அனுமதி இல்லை? இதுவரை வாங்கப்பட்டுக் கொண்டிருந்த இதழ்கள் நூலகங்களுக்கு ஏன் வாங்கப்படவில்லை?
  • பொதுமக்களிடம் சொத்து வரி வசூலிக்கும் போது அதில் நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்க குறிப்பிட்ட தொகை வரியாக வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது சொத்து வரி செலுத்தும் பெரும்பாலானவா்களுக்குத் தெரியாது என்பதே உண்மை.
  • நூலகங்களைத் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்காவிட்டால், நசிந்து கொண்டிருக்கும் வாசிப்பு பழக்கத்தை மேலும் நசுக்குவது போலாகும். அரசு உடனடியாக நூலகங்களைத் திறந்து நாளிதழ் மற்றும் பருவ இதழ்களை வாங்கி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டும் என்பதே தமிழ் ஆா்வலா்களின் தலையாய வேண்டுகோளாக இருக்கிறது.

நன்றி: தினமணி  (29-01-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories