அறிவு அற்றம் காக்கும் கருவி!
- ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு உலகத்தில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியிருக்கிறது சீனாவின் 'டீப்சீக் ஏஐ' செயலி. உலக அளவில் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஏஐ செயலியான ஓபன்ஏஐ-யின் 'சாட்ஜிபிடி'யைவிட கூகுள் பிளே ஸ்டோரிலும், ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் அதிக எண்ணிக்கையில் பதிவிறக்கம் என்கிற சாதனையுடன், தகவல்களில் துல்லியம், பயன்பாட்டில் எளிமை என தொழில் நுட்பப் பயனர்களின் பாராட்டு மழையிலும் நனைந்துகொண்டிருக்கிறது டீப்சீக்.
- டீப்சீக்கின் வரவையடுத்து அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான என்விடியா உள்பட பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் பங்குச்சந்தையில் பெரும் சரிவைச் சந்தித்தன. டீப்சீக்கின் எழுச்சி அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஓர் எச்சரிக்கை மணி எனவும், டீப்சீக்குடன் போட்டியிடும் அளவுக்கு தயாராக வேண்டும் எனவும் அதிபர் டிரம்ப் அறிவுறுத்தியிருக்கிறார். உச்சபட்சமாக அமெரிக்காவின் பல்வேறு அரசுத் துறைகளில் டீப்சீக் செயலியைப் பயன்படுத்த தடை விதிக்கும் அளவுக்கு போய்விட்டது.
- பயனர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பது என்கிற வகையில் கூகுள், குரோம் போன்ற தேடுபொறிகளின் பணியைத்தான் ஏஐ செயலி செய்கிறது என்றாலும் அதிலும் வித்தியாசம் இருக்கிறது. கூகுள் தேடுபொறியில் நாம் எதையாவது தேடினால், அதற்கான பதில்களைக் கொண்ட பல்வேறு இணையதளங்களை அது காண்பிக்கும். நாம் அந்த இணையதளத்தினுள் சென்று பதில்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால், ஏஐ செயலி நேரடியாக அந்தப் பதிலை அதன் திரையில் காண்பிக்கும்.
- எடுத்துக்காட்டாக. சென்னையிலிருந்து கொல்கத்தாவுக்கு எப்படிச் செல்வது என ஏஐ செயலியில் சரியான ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்திக் கேட்டால், சாலை மார்க்கமாக, விமானம் மூலமாக, ரயில் மூலமாக எவ்வாறு செல்வது, எவ்வளவு நேரம் ஆகும். எந்த வழியாகச் செல்வது சிறந்தது என்பது முதற்கொண்டு ஒரு வழிகாட்டி போல நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்களைத் தருகிறது. ஏற்கெனவே வெவ்வேறு இணையதளங்களில் உள்ள தகவல்கள்தான் என்றாலும், அந்தத் தரவுகளில் இருந்து நாம் கேட்கும் கேள்விகளுக்குப் பொருத்தமான பதிலை நொடியில் தருவதுதான் செயற்கை நுண்ணறிவின் சிறப்பு.
- அமெரிக்காவின் ஓபன் ஏஐ நிறுவனம் 2022 டிசம்பரில் அதன் சாட் ஜிபிடி செயலியை அறிமுகப்படுத்தியது. 38 வயதேயான ஆல்ட்மேன் என்பவர்தான் ஓபன் ஏஐ செயலியை உருவாக்கியவர். கல்லூரிப் படிப்பைக்கூட நிறைவு செய்யாத ஆல்ட்மேன் முதலில் 'லூப்ட்' எனும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத்தான் நடத்திவந்தார். பின்னர், ஏஐ ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டு, பல்வேறு நிறுவனங்கள், ஏஐ நிபுணர்களின் உதவியுடன் ஓபன் ஏஐ நிறுவனத்தை உருவாக்கினார். யாருமே எதிர்பாராத வகையில் ஏஐ உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றது ஓபன் ஏஐ. அந்தச் சாதனையை இப்போது விஞ்சியிருக்கிறது சீனாவின் டீப்சீக்
- டீப்சீக் நிறுவனத்தை உருவாக்கியவர் சீனாவைச் சேர்ந்த லியாங் வென்ஃபெங். 40 வயதேயான இவர், 2023 மே மாதமே இந்த நிறுவ னத்தைத் தொடங்கிவிட்டாலும் அதன் செயலி அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர்தான் அந்த நிறுவனம் ஏஐ உலகத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது. 56 லட்சம் டாலர் என்கிற குறைந்த செலவில் டீப்சீக் செயலி உருவாக்கப்பட்டிருப்பதுதான் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. ஓபன் ஏஐ உள்பட இப்போது பயன்பாட்டில் உள்ள ஏஐ செயலிகளின் உருவாக்கச் செலவைவிட இது மிகக் குறைவானது.
- 'டீப்சீக் ஆர்1' மாதிரியின் எழுச்சியைத் தொடர்ந்து பல ஏஐ நிறுவ னங்கள் தங்கள் செயலிகளின் மேம்பட்ட பிரிவை அறிமுகப்படுத்தி வருகின்றன. சீனாவின் அலிபாபா நிறுவனம் தனது 'க்வென் 2.5' என்கிற ஏஐ மாதிரியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது டீப்சீக், ஓபன் ஏஐ. மெட்டா ஏஐ-யின் 'லாமா' செயலிகளைவிடச் சிறந்தது என அலிபாபா நிறுவனம் கூறுகிறது. ஓபன் ஏஐயின் சாட்பாட் தனது சமீபத்திய ஓ3 ரீசனிங் மாதிரியில் 'டீப் ரிசர்ச்' என்கிற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. 'ஏஐ முகவர்' எனப்படும் இந்த வசதியின் மூலம் கேள்விகளுக்கான பதிலை மிகவும் தீர்க்கமாக ஆராய்ந்து விரிவாகத் தருகிறது ஓபன் ஏஐ-இப்போது பயன்பாட்டில் உள்ள ஏஐ செயலிகள் அனைத்துமே ஆரம்பகட்டத் திறன்களில் இயங்குபவைதான். அடுத்தடுத்து திறன் களை மேம்படுத்தும்போது ஏஐ செயலிகள் நிகழ்த்தும் மாயாஜாலம் கற்பனைக்கே எட்ட முடியாததாக இருக்கும். அவற்றால் கிடைக்கும் நன்மைகளைப் போல, தீமைகள் குறித்தும் சர்வதேச அளவில் தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் எச்சரித்து வருவதை கவனத்தில் கொள்வது நல்லது.
- இந்தியாவிலும் டீப்சீக் செயலியின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. சீனாவின் தயாரிப்பு என்பதால் அதன் நம்பகத்தன்மை குறித்து இயல்பாகவே சந்தேகம் எழுவதைத் தவிர்க்க இயலாது. ஆனால், டீப்சீக் செயலியைப் பயன்படுத்துவதால் இந்திய பயனர்களின் தகவல் தரவுகள் சீனாவுக்கு பகிரப்படாது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. செயற்கை நுண்ணறிவு உலகில் அமெரிக்கா, சீனாவின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து, அதில் இந்தியாவுக்கும் வாய்ப்புகள் உள்ளன.
- 'உலகத் தரத்தில் அதிநவீன ஏஐ மாதிரிகள் இந்தியாவிலேயே உருவாக்கப்படவுள்ளன. இந்திய மக்களுக்காக, இந்தியாவினுடையதாக என்ற அடிப்படையில் இந்திய மொழிகள், கலாசாரம் உள்ளிட்ட அனைத்தும் அதில் உள்ளீடு செய்யப்படும்' என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருப்பதும், மத்திய பட்ஜெட்டில் இந்தியாவின் செயற்கை நுண்ணறிவுத் திட்டத்துக்காக ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளன. இந்தியாவின் பல்வேறு மொழிகளில் உள்ள தகவல் தரவுகளை ஒருங்கிணைத்து தரவுத் தளம் உருவாக்குவதுதான் பெரிய சவாலாக இருக்கும்.
நன்றி: தினமணி (04 – 02 – 2025)