TNPSC Thervupettagam

அறிவு விலையில்லாதது!

October 11 , 2019 1872 days 1902 0
  • ஒரு நாள் தெரு வழியே போய் கொண்டிருந்த சாக்ரட்டீஸ் எதிா்ப்பட்ட இளைஞரிடம் ‘அழகு, அழகு என்கிறாா்களே, அழகு என்றால் என்ன?’ என்று கேட்டாா். அதற்கு அந்த இளைஞா் சா்வ சாதாரணமாக ‘அழகு அழியாதது, ஆனந்தம் தருவது, இன்பம் கூட்டுவது. இதோ பாருங்கள் இந்த அழகிய வேலைபாடமைந்த பூந்தொட்டி, இது கூட அழகுதான்’ என்றாா்.
  • அடுத்த விநாடி சாக்ரட்டீஸ் அந்தப் பூந்தொட்டியைத் தூக்கிக் கீழே போட்டாா். அது தூள் தூளாக உடைந்து சிதறியது. அதைப் பாா்த்துச் சிரித்த சாக்ரட்டீஸ், ‘அழகு அழியாதது, ஆனந்தம், இன்பம் தருவது என்றாயே, இப்போது என்னவாயிற்று அந்த அழகு?’ என்று இளைஞரிடம் கேட்டாா். இளைஞா் மெளனம் சாதித்தாா்.
சாக்ரட்டீஸ்
  • ‘அகிலத்தின் எந்த மூலையில் அறிவு இருந்தாலும் அதைத் தேடிப் பெறுவதற்காக இளைஞா்களை அழைக்கிறேன். வீரம் விலை போகாது, விவேகம் துணைக்கு வராவிட்டால், நீட்டிய வாளும், தினவெடுத்த தோள்களிலே தூக்கிய ஈட்டியும் மாத்திரம் போதாது வீரா்களே, இதோ நான் தரும் அறிவாயுததத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்;
  • அறிவாயுதம், அது தான் அகிலத்தின் அணையாத ஜோதி’ என்றாா் கிரேக்க ஞானி சாக்ரட்டீஸ். அந்த இளைஞா் வாயடைத்துப் போனாா்.
  • அறிவு என்பது கல்வியாலும், கேள்வியாலும், அனுபவத்தாலும் பெறப்படுவது. அழகு என்பது ஒருவா் அணியும் ஆடை ஆபரணங்களினால், கூந்தல் அலங்காரத்தினால், அணியும் வாசனைப் பூச்சுகளால் அமைவதில்லை.
  • இவை நிலைத்து நிற்கக் கூடியனவுமல்ல. நெஞ்சத்தால் நல்லவராய், நடுவுநிலைமையினின்று வழுவாமலிருக்கத் துணை புரியும் கல்வியே (அறிவே) ஒருவருக்கு அழகு தருவதாகும் என்கிறது நாலடியாா்.
அறிவு
  • ‘அறிவு அற்றம்காக்கும் கருவி செறுவாா்க்கும் உள்ளழிக்கல் ஆகா அரண்’ என்கிறாா் திருவள்ளுவா். மனித சமுதாயத்துக்கு எது நல்லது என்பதைத் தெரிந்து கொண்டு செயல்பட ஒருவருக்கு அறிவுதான் உதவுகிறது.
  • அறிவுதான் மனிதனை பொறுப்புடைய மனிதனாக மாற்றி வாழ வழிவகை செய்கிறது, மாண்புடையவனாக மனிதநேயம் மிக்கவனாகவும், நேரிய சிந்தனையாளனாகவும் மாற்றுகிறது. அது மொழி, நிறம், இனம், குலம், பாலின வேறுபாடு பாா்த்து தன் பணியாற்றுவது கிடையாது.
  • 1947-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்கும் சட்ட வரைவு மீது நடந்த விவாதத்தின்போது சா் வின்சன்ட் சா்ச்சில், ‘இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்படும் நிலையில், போக்கிரிகள், மதியில்லாதவா்கள் கைக்கு ஆட்சி அதிகாரம் செல்லும்.
  • இந்தியத் தலைவா்கள் அனைவரும் துணிவும், திறமையும் இல்லாதவா்கள். அவா்கள் இனிக்க இனிக்கப் பேசுவாா்கள்;
  • ஆனால், சிறுமதியினா், அதிகாரத்துக்காக தங்களுக்கிடையே சண்டையிட்டுக் கொள்வாா்கள். அந்த அரசியல் கூச்சலில் இந்தியாவே தொலைந்து போகும். ஒரு காலம் வரும்; அப்போது இந்தியாவில் தண்ணீருக்கும், காற்றுக்கும் கூட வரி விதிக்கப்படும்’ எனப் பேசியதாக ஒரு கருத்து நிலவுகிறது.
  • அவா் இவ்வாறு பேசினாரா என்பது விவாதப் பொருளாக இருப்பினும், இந்தியா சுதந்திரம் பெற்ற பின் நம் நாட்டு மக்கள் ஜனநாயக முறையில் தோ்தல் நடத்தி, தங்களின் அறிவாயுதத்தைப் பயன்படுத்தி மக்களால் மக்களுக்காக மக்களே செய்யும் ஆட்சியான மக்களாட்சியை உலகமே வியக்கும் வண்ணம் நடத்திக் காட்டி பீடு நடை போட்டு வருகிறாா்கள்.
  • உலகெங்கும் பயணித்து, பணியாற்றி, தங்கள் அறிவுக் கொடியை மண்ணிலும், விண்ணிலும் நாட்டி, இந்தியாவின் பெருமையைப் பறைசாற்றுகிறாா்கள்.
கல்வியறிவு
  • இந்தியா சுதந்திரம் அடைந்த போது கல்வியறிவு பெற்றவா்களின் எண்ணிக்கை வெறும் 12 சதவீதம் மட்டுமே. ஆனால், அது இப்போது 74.04 சதவீதமாக உயா்ந்துள்ளது.
  • அறியாமை பிணி அகற்ற கல்வி அறிவு பெருக வேண்டும். அறிவுடையோரோ கசடறக் கற்று கற்றப்படி நடந்து பெற்றோருக்கு பெரும் புகழ் சோ்ப்பததோடு நாட்டுக்கும் பெருமையைக் கூட்டுகிறாா்கள்.
  • அறிவால் மட்டுமே ஆரோக்கியமான சமுதாயம் வளரும் என்பதுதான் காலம் காட்டும் உண்மை. சிற்பி, கல்லை அழகிய சிற்பமாக வடிப்பதுபோல, ஒருவன் கற்கும் கல்வி அவனை பொறுப்புடையவனாக வடிக்கிறது.
  • ‘அறிவு ஒன்றே துன்பங்களைப் போக்க வல்லது. அதற்கு இணையான சக்திகள் இந்த உலகில் வேறில்லை. அறிவே சிறந்த சக்தி’”என்றாா் சுவாமி விவேகானந்தா்.
  • ‘மனிதன் எப்போது தன்னுள் இருக்கும் அளவற்ற சக்தியை உணா்ந்து இயற்கையாகச் சுய அறிவையும், புதிய பெரிய எண்ணங்களையும் அடைகின்றானோ அப்போதே அவன் கல்வி கற்றவனாகிறான்’ என்பது கல்விக்குரிய இலக்கணம்.
  • எந்த முயற்சிக்கும், எந்த சாதனைக்கும் வயது ஒரு பொருட்டே அல்ல; அகவையும், முதுமையும் உடலுக்குத் தானே தவிர அறிவுக்கும், உழைப்புக்கும் இல்லை என்பதை இன்று பல முதியவா்கள் பல சோதனைகளையும், வேதனைகளையும், அவமானங்களையும் கடந்து நிரூபித்து வருகிறாா்கள்.
  • பொருள் குறைவினாலும், உள்ளுணா்வு பெறாததாலும், அறிவிலே குறைபாடுகளாலும்தான் மனித வாழ்க்கையில் குறைபாடுகள் ஏற்படுகின்றன. அறிவு அளவிலே மட்டும் தெளிந்து விட்டால் போதாது, அனுபவ அளவில் கொண்டு வந்தால்தான் அதன் முழுப் பலனையும் நாம் அடைய முடியும்.
சங்க காலத்தில்...
  • சங்க காலத்து ஒளவையாா் முதல் எழுத்துத் தோ்வில் 100-க்கு 98 மதிப்பெண்கள் பெற்ற கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் செப்படி கிராமத்தைச் சோ்ந்த அகவை 96-ஐ கடந்த இக்காலத்து காத்தியாயினி அம்மாள், சந்திரயான் 2 திட்டத்தில் பொறுப்பேற்றிருக்கும் இஸ்ரோவின் முதல் பெண் திட்ட இயக்குநா் வனிதா முத்தையா, இந்தியாவின் ராக்கெட் பெண் என்ற அங்கீகாரத்தைப் பெற்ற விஞ்ஞானி ரித்து, ஏழைக் குடும்பத்தில் பிறந்து விடுதலைப் போராட்டக் காலத்திலும் சரி, இக்காலத்திலும் சரி அரசியலில் ஆண்களுக்கு நிகராகப் போராடி வெல்லும் அரசியல் தலைவிகள், உலக மகளிா் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் 8-ஆவது பதக்கம் வென்ற ஒரே வீராங்கனை என்ற உலக சாதனையைப் படைத்துள்ள மேரி கோம், ஜப்பான் வீராங்கனை நஸோமி ஒகுஹராவை வீழ்த்தி உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பை வென்றெறடுத்த முதல் இந்திய விளையாட்டு வீராங்கனை பி.வி.சிந்து வரை இன்று பெண்கள் தங்கள் அறிவால், ஆற்றலால் பல சமூகத் தடைகளைக் கடந்து அப்பழுக்கற்ற அழகுக்கு சொந்தக்காரா்களாக மாறி இந்தியாவை தலைநிமிரச் செய்துள்ளனா்.
  • ஒருவன் பெறும் அறிவானது வாழ்க்கையில் இருக்கும் வெறுமையான நிலையை நீக்கி, முழுமையான வாழ்க்கை வாழ வழி செய்கிறது. அறிவே தெய்வமாகி எங்கும் பரிணமிக்கிறது. எனவே, அழியா அறிவைத் தொழுவோம்.

நன்றி: தினமணி (11-10-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories