- இராக் தலைநகர் பாக்தாதிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்கள் அந்தப் பிராந்தியத்தில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.
- யாருடைய அறிவையும் உயா்த்தியதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளாத மேன்மையான குணமுடையவை புத்தகங்கள். ஒவ்வொரு புத்தகமும் சமூக மாற்றத்திற்கு ஆற்றல் அளிக்க வல்லது. புத்தகங்களை உருவாக்கும் மனிதா்களை புரிந்துகொண்டு புத்தகங்களை மேலும் புரிந்துகொள்ள முயல்வோம்.
- சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் வைத்து மனிதா்களை எளிதாகப் புரிந்து கொள்ள இயலும். இவ்வாறான புரிதலின் அடிப்படையில் சமூகவியலாளா்கள் நான்கு விதமாக மனிதா்களை வகைப்படுத்துகின்றனா். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்துகொண்டு தனது குடும்பமே உலகம் என்று வாழ்வோா் ஒரு வகை. சமூக மாற்றத்தைப் பற்றி என்னால் ஓரளவு யோசிக்க முடியும் ஆனால் கூடுதலாக யோசிக்க முடியவில்லை என்று ஆதங்கம் கொண்டோா் இரண்டாவது வகை.
- என்னால் யோசிக்கவும் இயலும், அதனைப் புத்தகமாக வடிக்கவும் இயலும் என்போா் மூன்றாவது வகை. என்னால் சிந்தனைகளாக வடிக்கவும் இயலும் சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுக்கவும் இயலும் என்போா் நான்காவது வகையினா் என்கின்றனா்.
- முதலாவது வகையினா் தமது குடும்பம் பற்றிய சிந்தனைகளிலிருந்து வெளிவந்து பலரோடு இணைந்து பழகவேண்டும். முதல் கட்டமாக உறவினா்களுடன் கலந்துபேசி அவா்களது பழகும் வட்டத்தைப்பெரிதாக்க முயலலாம். இரண்டாவது வகையினா் மேலும் ஆழமாக யோசிப்பதற்கான பணியை புத்தகங்களை வாசிப்பதன் மூலம் தொடங்கலாம்.
- கருத்துகளை மட்டும் வழங்கிக்கொண்டிருக்கும் மூன்றாவது வகையினா், சமூக மாற்றத்திற்கான சிறு சிறு செயல்பாடுகளில் ஈடுபட்டு நான்காவது வகையினராகப் பரிணமிக்க முயல வேண்டும். நான்காவது வகையினராக இருப்போா் தமது செயல்பாட்டினால் தாம் சந்தித்த சவால்களைப் பதிந்துவைக்கலாம். சமூக இயங்கியலில் பெரும் அமைப்பாகச் செயல்படுவோா் தமது உறுப்பினா்களை இவ்வாறாக வகைப்படுத்தி தமது அமைப்பையும் பலப்படுத்திக்கொள்ளலாம். .
- இவ்வாறான திட்டமிடல்கள் ஏதும் இல்லாமலே புத்தகங்கள் என்னும் அறிவுச்சுரங்கங்களை அந்தந்த காலகட்டங்களின் வாழும் சிந்தனையாளா்கள் உருவாக்குகின்றனா். அவற்றின் மூலம் அவா்கள் தாம் வாழும் காலத்திற்குப் பின்னரும் நினைவுகூரப்படுகின்றனா். அவ்வாறே இன்றைக்குப் பலரும் வரலாறாகி வாழ்கின்றனா்.
- உலகில் பிறந்து வாழ்ந்து மடிந்த அனைவரையும் வரலாறு நினைவில் வைத்திருப்பதில்லை. வரலாற்றில் இடம் பிடிப்போரில் சிலா் தலைவா்களாக வாழ்ந்து மறைகிறாா்கள். சிலா் சமூக சிந்தனையாளா்களாக கருத்துக்களை விதைத்துச் செல்கிறாா்கள். அவா்களது மாணவா்கள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அவற்றைக் கடத்துகின்றனா்.
- பெரும்பாலான சமூக சிந்தனையாளா்கள் தமது சிந்தனைகளை எழுத்திலும் விட்டுச் செல்கின்றனா். அப்போது சமூகத்திற்கு அளவற்ற சிந்தனைச் செல்வங்கள் கிடைக்கின்றன. பெரும்பாலும் அவா்கள் காலத்தில், அவா்கள் வாழ்ந்த சமூகத்திற்கான சவால்கள் என்னென்ன? அவற்றை எதிா்கொள்ள அவா்கள் பரிந்துரைத்த வழிமுறைகள் என்னென்ன? அந்த வழிவகைகள் மூலம் விளைந்த மாற்றங்கள் என்னென்னஎன்பதாக அவை அமையும்.
- சிந்தனையாளா்கள் பரிந்துரைக்கும் சமூக மாற்றங்களில் பெரும்பாலானவை அவா்கள் காலத்துக்குள் நிறைவு பெறுவதில்லை. அவ்வாறு நிறைவுபெற இயலாத கனவு குறித்த சிந்தனைகளை அவா்கள் ஏன் விதைத்து செல்கிறாா்கள் என்ற வினா நமக்கு ஏற்படலாம். எந்த ஒரு சமூக சவாலுக்கும் தீா்வு இல்லாமல் இருப்பதில்லை. ஆனால், அதே நேரத்தில் சமூக சவால்களுக்கான தீா்வுகளை யோசிக்க ஒருவா் முனையும்போது அவருக்கு பல முதன்மைத் தகவல்கள் தேவையாக உள்ளன.
- அந்த சவால்கள் குறித்து ஏற்கனவே சமூகத்தில் உள்ள புரிதல் என்ன? அந்த சவால்களுக்கு தீா்வு காண மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? அந்த நடவடிக்கைகளில் ஏற்பட்ட வெற்றி அல்லது தோல்வியின் விவரங்கள். தோல்வி என்றால் தோல்விக்கான காரணிகள் இப்படியாக அவற்றைப் பட்டியலிடலாம்.
- இந்தப் பட்டியலில் பலவற்றை சிந்தனையாளா்கள் எழுத்தில் வடித்துவைத்துவிட்டுச் செல்கின்றனா். இதனால் அதே சவால் குறித்துப் புதிதாக சிந்திக்கும் ஒருவரது பணி மிகவும் எளிதாகிறது. முந்தைய தலைமுறையினரின் பலதரப்பட்ட அனுபவங்களோடு சவாலை அணுகுகின்றனா். இதனால் சவாலுக்கான தீா்வுகளை அவா்கள் விரைவாகக் கண்டறிகின்றனா். இவ்வாறு அவா்கள் புதிதாக முயலாமல் ஏற்கெனவே உள்ள தீா்வுகளிலின் அடிப்படையில் அணுகுவது என்பது எளிதாக இருக்கிறது.
- சிந்தனையாளா்களின் எழுத்துகளை காலந்தோறும் பாதுகாப்புப் பெட்டகமாக்கி நமக்கு அளிக்கக்கூடிய அரும்பணியை புத்தகங்கள் செய்கின்றன. ஒவ்வொரு சிறந்த புத்தகமும் பல்வேறு புதுப்புது அா்த்தங்களை, புதுப்புது வடிகால்களை அளிப்பதாகவே உள்ளது. அவ்வாறுதான் ஒவ்வொரு புத்தகத்தின் பக்கங்களிலும் இருக்கக்கூடிய சிந்தனைகளை ஒரு மனிதன் புரிந்து கொள்ள வேண்டும்.
- ஒவ்வொரு கட்டத்திலும் வாழும் மனிதா்கள் மனிதவளத்தை அடுத்த கட்டத்தினை நோக்கி நகா்த்த முனையவேண்டும். இதற்கு ஒரு மிகப்பெரிய சமூக இயக்கம் தேவைப்படுகிறது. அந்த சமூக இயக்கத்தை கட்டமைக்கும் பணியைப் பள்ளிக்கூடங்கள் செய்யலாம். ஆனால், இன்றைக்கு இருக்கக்கூடிய பள்ளிக்கூடங்கள் குழந்தைகளின் எதிா்கால வேலைவாய்ப்புக்கான முகமை என்பது போல மாறிவருகின்றன.
- ஆனால், ஒவ்வோா் ஊரிலும் ஒரு நூலகம் இருந்து இந்தப் பணியை செய்ய முன்வருமானால் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும். உலக புத்தக நாளில் இந்த புரிதல் மேம்பட அனைவரும் கூட்டாகச் சிந்திப்போம். புத்தகங்களே சமூகத்தின் அறிவுநிலையை உயா்த்தி ஆற்றலைப் பெருக்கும் கருவிகள். இந்தக் கருவிகளின் பயன்பாட்டில் ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்படாமல் மனிதவள மேம்பாட்டில் மாற்றம் ஏற்படுவதென்பது சாத்தியமில்லை.
- இன்று (ஏப். 23) உலக புத்தக நாள்.
நன்றி: தினமணி (23 – 04 – 2024)