- அண்ணாவின் பேச்சு பாணியானது திராவிட இயக்கப் பேச்சுக் கலாச்சாரம் என்ற ஒன்றையே தமிழ்நாட்டில் உருவாக்கியது. அடுக்குமொழியும் சொல்லணியும் மிகுந்த அந்த அலங்கார மொழியே பிற்பாடு உள்ளடக்கம் இல்லாமல் பலராலும் பிரயோகிக்கப்பட்டபோது ‘ரிடரிக்’ என்று விமர்சிக்கப்படலாயிற்று. மக்கள் மொழியில் நேரடியாகப் பேசியவர் பெரியார்.
- ஆனால், எளிமையான அண்ணா ஏன் அலங்காரமான மொழியைத் தேர்ந்தெடுத்தார்? தமிழர்களைத் தாழ்வுமனப்பான்மையிலிருந்தும் அச்சத்திலிருந்தும் விடுவிக்க தமிழையே ஒரு ஆயுதமாக்கிய அண்ணா, தமிழின் செழிப்பை உணர்த்த அதை ஆபரணமாகக் கையாள்வதை ஓர் உத்தியாக்கினார். பெரும் பணக்காரர்களும், ஆதிக்கச் சாதியினரும், ஆங்கிலமும் கோலோச்சிவந்த அரசியல் மேடைகளில் ஒரு சாமானியன் அண்ணாவின் புதிய நடையைப் பின்பற்றி தமிழில் பேசியபோது அது கவனிக்கப்படலாயிற்று. இதுவே பிற்பாடு ‘திராவிட இயக்க பாணி பேச்சு’ என்றாயிற்று!
திராவிடர் கழகத்தின் மூளை!
- இந்து மகாசபையின் தலைவர் ஷியாம் பிரசாத் முகர்ஜி பெரியாரைச் சந்திக்க திருச்சிக்கு வந்திருந்தார். உடனிருந்தவர்களை முகர்ஜிக்கு அறிமுகம் செய்துவைக்கிறார் பெரியாரின் நண்பரும் அப்போது இந்து மகாசபையின் தமிழ்நாட்டுத் தலைவருமான வரதராஜுலு நாயுடு. அண்ணாவை அறிமுகப்படுத்தும்போது சொன்னார், “இவர்தான் திரு.அண்ணாதுரை - இயக்கத்தின் மூளை.” சுற்றியிருந்தோர் திடுக்கிடுகின்றனர், பெரியார் எப்படி எதிர்வினை ஆற்றுவாரோ என்று! பெரியாரோ புன்னகைத்து ஆமோதித்துக்கொண்டிருந்தார். திராவிடர் கழகத்தில் அண்ணா எவ்வளவு செல்வாக்கோடு இருந்தார் என்பதோடு, பெரியார் அவருக்கு அளித்திருந்த இடத்தையும் சுட்டுவது இது.
- தன்னுடைய பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே அண்ணா சொந்தமாக ‘திராவிட நாடு’ பத்திரிகை நடத்த அனுமதி அளித்ததோடு, அதற்கு அடையாள நிமித்தமாக சிறு தொகையையும் அளித்தவர் பெரியார். அண்ணாவின் ஆகிருதியை முழுமையாக அவர் உணர்ந்திருந்தார்.
வீதியில் கைத்தறித் துணி; அமர்ந்து விற்ற அண்ணா
- காந்தியார் கதரைக் கையில் எடுத்ததுபோல, அண்ணா கைத்தறியைக் கையில் எடுத்தார். 1952 டிசம்பரில் கூடிய தஞ்சை பொதுக்குழு, 4.1.1953-யைக் கைத்தறியாளர் ஆதரவு நாளாகக் கொண்டாடும்படி தென்னாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டது. அந்த மாநாட்டில் நிறைவேறிய தீர்மானங்களிலேயே மிகப் பெரிய தீர்மானம், நிறைய வழிமுறைகளைச் சொன்ன தீர்மானமும் இதுதான். இதன்படி, கைத்தறி நெசவாளர்களுக்கு உதவுகிற வகையில் ஒலி முழக்கம், பொதுக்கூட்டம், தேங்கியுள்ள கைத்தறிகளை வீதிவீதியாகச் சென்று விற்பது போன்ற பணிகளில் கழகத் தோழர்களே ஈடுபட்டனர். சிதம்பரம் ஜெயராமன், நாகூர் ஹனீபா, நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் ஊர் ஊராகப் போய்ப் பாடல் பாடினார்கள்.
- இதற்காக உடுமலை நாராயண கவி, “செந்தமிழ் நாட்டுக் கைத்தறி வேட்டிகள் - சேலைகள் வாங்குவீர்” என்று ஒரு பாடலையே திமுகவுக்காக எழுதிக்கொடுத்தார். திருச்சியில் வீதி வீதியாகச் சென்று அண்ணாவே கைத்தறி ஆடைகளை விற்றார். இதுபற்றி ‘திராவிட நாடு’ இதழில் நீண்ட தலையங்கம் எழுதியும் மக்களை அந்நிய ஆடை பயன்பாட்டிலிருந்து கைத்தறிப் பக்கம் திருப்பினார் அண்ணா.
நன்றி: இந்து தமிழ் திசை (19-06-2019)