TNPSC Thervupettagam

அலெக்சாந்தர் துப்யான்ஸ்கியின் தமிழ்க் காதல்

January 28 , 2024 176 days 182 0
  • பேராசிரியர் துப்யான்ஸ்கி குறித்து அறிந்தவர்கள் அவரது தமிழார்வம், அவர் பிறந்த காலத்திலிருந்தே தோன்றிவிட்டதோ எனக் கருதுவர். 1960களின்இடைக்காலத்தில் ரஷ்யாவில் வாழ்ந்த மக்களுக்குத் தமிழ் மொழி பற்றிய எவ்வித எண்ணங்களும் இருக்கவில்லை. 1965ஆம் ஆண்டு மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புக்காகச் சேரும்வரை தமிழ் மொழி பற்றிய எண்ணம் ஏதும் அவருக்கு இருந்திருக்காது என்றே நான் கருதுகிறேன் என்கிறார் அவரது மகள் ததியானா.
  • அவர் அன்றைய, கீழைத்தேய மொழிகள் நிறுவனத்தில் இணைந்தபோது, அப்போதைய வாய்ப்பாக இருந்த ஜப்பானிய மொழியையே அவர் தேர்ந்தெடுப்பார் என அவரது நண்பர்கள் பலரும் கருதினர். ஆனால், அந்நிறுவனத்தின் அன்றைய துறைத் தலைவர், ஆர்வமுள்ள மாணவராக இருந்த துப்யான்ஸ்கியிடம் ரஷ்யாவில் புதிதாகக் கற்பிக்கப்படவிருந்த தமிழ் மொழி பற்றிக் குறிப்பிட்டதும் அவரது இதயத்தில் தமிழ்க் காதல் எனும் பொறி உண்டாக, அப்போது தமிழ் கற்ற குழுவில் இணைந்தார்.
  • அம்முடிவு தமிழ்மொழி, பண்பாடு என்னும் அழகிய உலகில் அவர் நுழைவதற்கு வழிவகுத்தது. தமிழ் கற்கும் காலத்திலேயே, இத்தமிழுலகம் கற்பனைசெய்ய முடியாத அளவுக்கு அழகானது என்பதையும்புதிய திறப்புகளை உடையது என்பதையும் உணர்ந்திருந்தார். இருப்பினும், தமிழ் கற்பதென்பது அவருக்கு அவ்வளவு எளிதானதாக அமைந்துவிடவில்லை. 1960, 70களில் உலகம் முற்றிலும் வேறு வகைப்பட்டதாக இருந்தது.
  • சோவியத் யூனியன், இந்தியா ஆகிய நாடுகளுக்குஇடையேயான நட்புறவினால், அக்காலகட்டத்தில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சிலர் மாஸ்கோவில் முன்னேற்றப் பதிப்பகம் முதலியவற்றில் பணிபுரிந்து வந்தனர். சிலர் மொழிபெயர்ப்பாளர்களாகவும், ஆசிரியர்களாகவும் பணியாற்றினர். இத்தகைய சூழலிலேயே, இந்தியாவுக்கு வருவதற்கான எவ்வித வாய்ப்பும் இன்றி 14 ஆண்டுகள் தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் அவர் கற்க வேண்டியிருந்தது. அக்காலகட்ட அரசியல் காரணங்களினால் இந்தியாவுக்கு வருவதற்கான அனுமதி அவருக்குப் பல முறை மறுக்கப்பட்டது. முனைவர் பட்ட ஆய்வை முடித்திருந்த நிலையில், முனைவர் பட்ட மேலாய்வு செய்வதற்காக தனது தந்தைக்கு இந்தியா வரும் வாய்ப்பு 1978ஆம் ஆண்டு முதன்முதலாக வழங்கப்பட்டது. ஒன்பது மாத கால ஆய்வுப் பயணமாக இது அமைந்தது என்கிறார் ததியானா.
  • ‘‘1978ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்,முதல் முறையாகத் தமிழ்நாட்டில் துப்யான்ஸ்கி காலடி எடுத்துவைத்தபோது ஏற்பட்ட அளவில்லா மகிழ்ச்சியை‘நான் எனது வீட்டில் இருப்பதாக உணர்கிறேன்’ என அப்போது எங்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அக்காலகட்டத்திலேயே சரளமாகத் தமிழ் பேசும் அளவுக்கு அவர் தேர்ச்சி பெற்றிருந்தாலும் எதிர்வரும் 9 மாதங்களையும் எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்னும் திட்டங்கள் ஏதும் அப்போது அவரிடம் இருக்கவில்லை. முனைவர் பட்ட மேலாய்வுக்கான இடமாகச் சென்னைப் பல்கலைக்கழகம் அமைந்தது. இப்பல்கலைக்கழகத்தின் விடுதியிலேயே தங்கியிருந்து ஆய்வு மேற்கொண்டார். இத்தமிழ் நிலம் பற்றிய செய்திகளைத் தனது ரஷ்யத் தமிழ் நண்பர்கள் வழியாக அவர் குறைவாகவே அறிந்திருந்தபோதும், தமிழ்நாடு பற்றியான தகவல்களுக்கும் அதன் மீதான அதீதக் காதலுக்கும் அடிப்படையாகச் சங்கஇலக்கியங்களும் இடைக்கால, நவீன இலக்கியங்களுமே அவருக்குத் துணைபுரிந்தன. முதன்முறையாகத் தமிழ்நாட்டில் இருந்தபோது தான் ஏற்கெனவே அறிந்திருந்த தகவல்களை அவர் மறுகண்டுபிடிப்புச் செய்துகொண்டார்.
  • இக்காலகட்டங்களில் அவர் எங்களுக்கு எழுதிய கடிதங்களில், தமிழ்நாடு பற்றிய ஏராளமான சுவையான தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார். இக்காலகட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களுக்கும் சென்று வந்துள்ளார். கல்விப்புலம் சார்ந்து பல்வேறு கருத்தரங்குகளில் பங்குபெற்றுள்ளார்’’ என்றும் ததியானா பகிர்ந்துகொள்கிறார். அவ்வகையில், 1978 டிசம்பரில் நடைபெற்ற உலக அளவிலான மானிடவியல் கருத்தரங்கம், 1979 ஜனவரியில் கும்பகோணத்தில் நடைபெற்றதிருவாசகம் தொடர்பான கருத்தரங்கம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவை, உலக அளவிலான ஆய்வுச்சூழல், மரபார்ந்த தமிழ்ச்சூழல் ஆகிய இரண்டுக்கும் தகுதியுடையவராகப் பேராசிரியர் துப்யான்ஸ்கி அக்காலகட்டத்தில் தன்னைத் தகவமைத்திருந்தார் என்பதை விளக்குபவையாக அமைகின்றன.
  • ஆய்வுக் காலம் முடிந்ததும் மீண்டும் எப்போது இந்தியாவுக்கு வருவோம் என்னும் வருத்தத்துடனேயே மாஸ்கோ திரும்பினார். அந்த ஆசை ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகே நிறைவேறியது. பாரதியார் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக மற்றுமொரு குறுகிய பயணமாக இந்தியாவுக்கு வந்தார். 1990களுக்குப் பிறகே இந்நிலை மாறியது. அப்போது தொடங்கி ஆண்டுதோறும் இந்தியாவுக்கு வருவதை அவர் வழக்கமாக்கிக் கொண்டார். கல்விப் பயணங்களைத் தொடர்ச்சியாக ஒருங்கிணைத்து, இந்தியாவுக்கு குறிப்பாகத் தமிழ்நாட்டுக்கு இளம் தலைமுறை மாணவர்களை அழைத்துவருதல், பல்வேறு கோயில்கள், சிற்றூர் முதல் பெருநகரங்கள் வரையிலான இடங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்துதல் முதலியவற்றை மேற்கொண்டார். இதன்வழி இந்நிலத்தின் மீதான காதலை அம்மாணவர்களுடன் அவர் பகிர்ந்துகொண்டார் எனக் குறிப்பிடலாம். இத்தமிழ்க் காதலின் பொறிகளே அவரது மாணவர்கள் பலரின் இதயங்களிலும் விழுந்து, வளர்ந்து கொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது.
  • இவ்வாறாகத் தனது வாழ்நாள் முழுவதும் தமிழின் மீது தீராக் காதல்கொண்டிருந்த பேராசிரியர் அலெக்சாந்தர் துப்யான்ஸ்கி, சங்க இலக்கியங்கள் தொடங்கி, நவீன இலக்கியம் வரை நுட்பமான புலமை வாய்ந்தவர். தமிழ்ச் செவ்விலக்கியங்களின் தனித்தன்மையாக விளங்கும் ‘திணைக் கோட்பாடு’ உருவாக்கத்துக்குச் சடங்குகளும் தொன்மங்களுமே பின்புலமாக அமைந்தன எனும் கருத்தை முன்வைத்து, 1989ஆம் ஆண்டு ரஷ்ய மொழியில் ஆய்வுநூல் ஒன்றை எழுதியுள்ளார். இந்நூல் 2000ஆம் ஆண்டு ‘Ritual and Mythological Sources of Early Tamil Poetry’ எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நூலின் தமிழாக்கம் ‘திணைக் கொள்கை உருவாக்கமும் சடங்கியல் தொன்மவியல் மூலங்களும்’ எனும் தலைப்பில் விரைவில் வெளிவரவுள்ளது.

நன்றி: தி இந்து (28 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories