TNPSC Thervupettagam

அவசர அவசிய‌ம்

November 27 , 2021 974 days 813 0
  • அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய கொவைட் கால இந்தியாவின் நிலை குறித்த ஆய்வின்படி, 23 கோடி இந்தியர்கள் அந்த காலகட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப் பட்டிருக்கிறார்கள்.
  • அக்டோபர் 2021 நிலவரப்படி, வேலைவாய்ப்பின்மை 7.7% அளவுக்கு அதிகரித்திருக்கிறது. தானியங்கி இயந்திரங்களின் உதவியுடன் நிறுவப்படும் பிரம்மாண்டமான தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பதற்கான இன்னொரு காரணம்.
  • இந்திய தொழில்துறையினரின் கூட்டமைப்பு (சிஐஐ) வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரப்படி, இந்தியாவில் 6.34 கோடி குறு, சிறு நடுத்தர தொழிற்சாலைகள் இருக்கின்றன.
  • ஏறத்தாழ 12 கோடி தொழிலாளர்கள் அவற்றில் பணியாற்றுகிறார்கள். மொத்த உற்பத்திப் பொருள்களில் 33.4% அங்குதான் தயாரிக்கப்படுகின்றன.
  • இந்திய உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஆய்வின்படி, அவற்றில் மூன்றில் ஒரு பங்கு தொழிற்சாலைகளும், சுயதொழில் செய்பவர்களும் பொதுமுடக்கத்தைத் தொடர்ந்து பாதிக்கப் பட்டு தொழில் இழந்திருக்கிறார்கள்.
  • அரசின் பல்வேறு திட்டங்களாலும், நிதியுதவிகளாலும்கூட அவர்களால் மீண்டெழ முடிய வில்லை.
  • உற்பத்தித் துறைக்கு அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தும்கூட கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜிடிபியில் உற்பத்தித் துறையின் பங்கு 17% என்பதைத் தாண்டி உயரவில்லை.
  • அதுமட்டுமல்லாமல், 2016-17- இல் உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பு பெற்றிருந்தோரின் எண்ணிக்கை 5.1 கோடி என்றால், 2020-21-இல் அது 2.73 கோடியாகக் குறைந்திருக்கிறது.
  • இந்தப் பின்னணியில் பார்க்கும்போது நமது பொருளாதார அணுகுமுறையை மாற்ற வேண்டிய அவசியம் தெரிகிறது.
  • அதிநவீன தொழிற்சாலைகளையும், மிகப்பெரிய இயந்திரமய அமைப்புகளையும் ஊக்குவிப்பதற்குப் பதிலாக, நம்முடைய கவனம் குறு, சிறு நடுத்தரத் தொழிற்சாலைகளையும், சுய தொழில்களையும் ஊக்குவிப்பதில்தான் இருக்க வேண்டும்.
  • தொழில்நுட்ப உதவி, போதுமான முதலீடு ஆகியவற்றை வழங்கி வேலையில்லா பொறியியல் பட்டதாரிகள் சுய தொழில் செய்வதற்கும், பலருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கும் வழிவகை செய்வது இப்போதைய அவசியத் தேவை.
  • அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மைக்கு தொழில்நுட்ப மாற்றங்கள் காரணமாக இருக்கும் என்பதை வரலாறு பலமுறை உணர்த்தியிருக்கிறது.
  • மோட்டார் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து குதிரை வண்டி, மாட்டு வண்டி ஓட்டியவர்கள் வேலைவாய்ப்பிழந்தார்கள். மோட்டார் வாகனங்கள் ஓடுவதற்காக சாலைகள் போடப் பட்டபோது அதன்மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாயின.
  • மோட்டார் வாகன பழுது பார்த்தல் தொழில் பலருக்கு வேலைவாய்ப்பை வழங்கியது. அவை அதிகரித்த வளர்ச்சியையும் வேலைவாய்ப்பையும் உருவாக்கியதுபோல, எல்லா தொழில்நுட்ப அறிமுகமும் முதலில் வேலைவாய்ப்பிழப்பையும், பிறகு புதிய வகையிலான அதிகரித்த வேலைவாய்ப்பையும் உருவாக்குவதை நாம் பார்க்கிறோம்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது

  • அதிகரித்த வளர்ச்சி விகிதம், குறைந்த அளவு வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு வழிகோலுகிறது என்கிற கருத்தை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள முடியாது.
  • கடந்த இருபது ஆண்டுகளில் கைப்பேசி பழுதுபார்த்தல், வாடகை கார் ஓட்டுதல், ஹோட்டல் தொழில், சுற்றுலா தொழில், சுய தொழில்கள் உள்ளிட்டவை பெரிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கியிருக்கின்றன.
  • வேலைவாய்ப்பு இழத்தலைவிட அதிக அளவில் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஏற்படுமேயானால் அது வளர்ச்சியின் அடையாளம்.
  • மத்திய அரசின் ஆய்வறிக்கை ஒன்றின்படி, 2012-2018-க்கு இடையே நகர்ப்புற வேலை வாய்ப்பின்மை மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது.
  • 2018-இல் 15 வயதுக்கும் 24 வயதுக்கும் இடையேயானவர்களில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 28.5%. அதே காலகட்டத்தில் 'ஊதிய விகிதம்' குறைந்திருக்கிறது.
  • அதிகரித்த ஊதியத்தைவிட விலைவாசி கூடுதலாக அதிகரிக்கும்போது அதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்களே தவிர பயனடைவதில்லை.
  • இப்போதைய நிலையில், ஆண்டுதோறும் 1.2 கோடி பேர் வேலைவாய்ப்பு தேடுபவர்கள் பட்டியலில் இணைகிறார்கள்.
  • அவர்களில் சுமார் 70 லட்சம் பேருக்குத்தான் வேலைவாய்ப்பு உருவாகிறது. இது ஆபத்தான போக்கு. உடனடியாக நாம் வேலைவாய்ப்பு குறித்து சிந்தித்தாக வேண்டும்.
  • அதற்கு நமது கல்வி முறையில் சீர்திருத்தம் அவசியத் தேவை. இப்போது பெரும்பாலான இளைஞர்களும் அரசுப் பணி கிடைப்பதற்காக படிப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
  • அரசுப் பணியாளர்களுக்குக் கிடைக்கும் ஊதியம், தனியார் துறையில் திறன் சார்ந்த செவிலியர்களுக்கோ கணினி தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கோ தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கோ கிடைப்பதில்லை.
  • நமது கல்வி முறை அரசுப் பணியை ஊக்குவிப்பதாக இருக்கும் நிலை மாற வேண்டும்.
  • அடுத்ததாக, தொழிலாளர் நலச் சட்டங்களில் மாற்றம் அவசியம். தொழிலாளர் நலச் சட்டங்கள் கடுமையாக இருப்பதால், ஒருவர் திறன் குறைந்தவராக இருந்தாலும், முறையாகச் செயல்படாமல் இருந்தாலும் அவரை எளிதில் பணி நீக்கம் செய்ய முடிவதில்லை.
  • எல்லா நிறுவனங்களும் மனித சக்தியைக் குறைத்து தானியங்கி இயந்திரங்களுக்கு முன்னுரிமை வழங்குகின்றன.
  • கூடுதல் மக்கள்தொகையுள்ள இந்தியா போன்ற நாடுகளில், வேலைவாய்ப்பை அதிகரித்தாக வேண்டும். அதேநேரத்தில், உற்பத்தித் துறையும் பலவீனப்பட்டுவிடக் கூடாது.
  • ஆண்டொன்றுக்கு 12 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவதுதான் மத்திய - மாநில அரசுகளின் இலக்காக இருக்க வேண்டும். அதற்கு நமது கல்வி முறையிலும், தொழிலாளர் நலச் சட்டங்களிலும் மாற்றம் அவசியம்!

நன்றி: தினமணி  (27 - 11 - 2021)s

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories