TNPSC Thervupettagam

அவதூறு வழக்குகள்: ஒரு பகுப்பாய்வு

June 9 , 2023 582 days 727 0
  • அரசியல் தலைவர்கள் மீது எதிர்க்கட்சியினர் ஊழல், முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைப்பது இயல்பு. பெரிய அளவிலான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப் படும் போது அரசியல் தலைவர்கள் அவற்றைச் சட்டபூர்வமாக எதிர்கொள்வதைப் பார்க்க முடிகிறது. சமீபத்தில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்மீதும் திமுக தலைவர்கள்மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளைத் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முன்வைத்தபோது, அவருக்கு எதிராக திமுகவினர் சார்பில் அவதூறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. சரி, அவதூறு என்பது எப்படி வரையறுக்கப்படுகிறது?
  • ஒரு சாதாரண மனிதரின் பார்வையில் ஒரு நபரின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் யாரேனும் அவரைப் பற்றிய தவறான கருத்துகளைத் தெரிவித்தால், அது அவதூறு எனக் கருதப்படுகிறது. ஒருவரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே, தெரிந்தே வெளியிடப்பட்ட அல்லது பேசப்படும் எந்தவொரு தவறான அறிக்கையும் அவதூறாகும். இந்த அவதூறு சிவில் சட்டம் அல்லதுகுற்றவியல் சட்டத்தின்கீழ் ஒரு குற்றமாகக் கருதப்படலாம்.
  • சிவில் சட்டத்தின்கீழ், தண்டனை அளிக்கக் கோருபவருக்கு இழப்பீடு வழங்கப்படும். இந்திய தண்டனைச் சட்டத்தின் 499ஆவது பிரிவின்கீழ், அவதூறு என்பது ஜாமீன் பெறக்கூடிய Non-cognizable, compoundable குற்றமாகும். Non-Cognizableஎன்றால் காவல் துறை வாரன்ட் இல்லாமல் கைதுசெய்ய முடியாது. Compoundable என்றால், குற்றம்சுமத்தியவரும் குற்றம்சாட்டப்பட்டவரும் தங்களுக்குள் சமாதானம் செய்துகொள்ள வழி உண்டு என்று பொருள்.

முக்கியக் கூறுகள்:

  • வெறுப்பு, அவமதிப்பு அல்லது கேலிக்கு ஆளாக்குவதன் மூலம் ஒரு நபரின் அல்லது ஒரு வகுப்பினரின் நற்பெயரைக் காயப்படுத்தும் வகையிலான அறிக்கைகள் அவதூறாகக் கருதப்படுகின்றன. அறிக்கை ஒரு நபர் பற்றியோ அல்லது சில வகுப்பினரைப் பற்றியோ குறிப்பிடுவதாக இருக்க வேண்டும். ‘அனைத்து அமைச்சர்களும் ஊழல்வாதிகள்’ என்பது போன்ற பொதுவான அறிக்கைகளை அவதூறாக எடுத்துக்கொள்ள முடியாது. அறிக்கை வாய்வழி அல்லது எழுத்து வடிவில் இருக்கலாம். அறிக்கையானது வேறு மூன்றாம் நபருக்குக் கிடைக்க வேண்டும்.

பிரதிவாதியின் உரிமைகள்:

  • அவதூறு வழக்கை எதிர்கொள்பவருக்குப் பின்வரும் பாதுகாப்புகள் கிடைக்கின்றன: தான் உண்மையான அறிக்கையை மட்டுமே கூறியுள்ளதாகவும் அவதூறு எதுவும் இல்லை என்றும் அவர் வாதிடலாம். உண்மைச் சம்பவங்களை மட்டுமே அடிப்படையாக வைத்து பொதுநலனுடன் நியாயமான கருத்துகளைத் தெரிவித்ததாக அவர் கூறலாம்.
  • குற்றவியல் சட்டத்தின்கீழ் அவதூறு: அவதூறு செய்வது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 499இன்கீழ், தண்டனைக்குரிய குற்றமாகும். அவதூறைக் குற்றமாகக் கருத இங்கு ‘மென்ஸ் ரியா’ (Mens Rea) என்று சொல்லப்படும் அவதூறு செய்யும் எண்ணம் அவசியம். மற்றொருவரின் நற்பெயரைக் கெடுப்பதற்காக இந்தச் செயல் செய்யப்பட்டது என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட வேண்டும்.
  • 499இன் பிரிவு பல்வேறு விதிவிலக்குகளையும் வழங்குகிறது. முன்னதாக, உச்ச நீதிமன்றம் அவதூறு குற்றவியல் விதிகள் அரசமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகும் என்றும் பேச்சுரிமையுடன் இவை முரண்படவில்லை என்றும் தீர்ப்பளித்துள்ளது. மோசமான நிர்வாகம், ஊழல் போன்ற பிரச்சினைகளைப் பொதுநலன் கருதி முன்னெடுக்கும் அரசியல் எதிரிகள் மற்றும் அதிருப்தியாளர்கள்மீது அரசு அவதூறு வழக்குகள் தொடர முடியாது என்று 2016இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நிரூபிப்பது கடினம்:

  • குற்றம்சாட்டப்பட்டவருக்குப் பல பாதுகாப்புகள் இருப்பதால், அவதூறு குற்றச்சாட்டை நிரூபிப்பது கடினமாக இருக்கும். அவமதிப்பு வழக்குகள் - அவதூறு வழக்குகளின் இறுதியில், குற்றம்சாட்டப்பட்டவர் மன்னிப்புக் கேட்கலாம். அது நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படலாம். 2018இல் உயர் நீதிமன்றங்களில் வழங்கப்பட்ட குற்றவியல் அவதூறுத் தீர்ப்புகள் தொடர்பான ஆய்வில், ஐபிசி பிரிவு 499 தொடர்பாக வழங்கப்பட்ட அனைத்துத் தீர்ப்புகளிலும், 14.29% மட்டுமே பிரதிவாதி குற்றவியல் அவதூறு குற்றவாளி என்று கண்டறியப்பட்டது குறிப்பிடத் தக்கது.

நன்றி: தி இந்து (09 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories