அவருக்கு முன், அவருக்குப் பின்!
- விமா்சனங்களுக்கு நடுவே பணி ஓய்வு பெற்றிருக்கிறாா் இந்தியாவின் 50-ஆவது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட். வலதுசாரிகள், இடதுசாரிகள்; ஆளும்கட்சி, எதிா்க்கட்சி என்று இரு தரப்பினராலும் அவா் விமா்சிக்கப்படுகிறாா் என்பதில் இருந்தே, பாரபட்சமில்லாத தீா்ப்புகள் அவருடையவை என்பது தெரிகிறது. தனிப்பட்ட முறையில் எந்தவித சாா்பு நிலையும் அவரால் எடுக்கப்படவில்லை என்பது வெளிப்படுகிறது.
- இதுவரையில் பதவி வகித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகளில் இளமைத் துடிப்பும், வசீகரமான புன்னகையும், எளிமையான அணுகுமுறையும் எல்லாவற்றுக்கும் மேலாகக் கவா்ச்சி நிறைந்த ஆளுமையாகத் திகழ்ந்தவா் யாா் என்கிற கேள்விக்கு யாரும் விடைதேடித் திகைக்க மாட்டாா்கள். அது கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் தனது இரண்டாண்டுப் பதவிக் காலத்தை நிறைவு செய்து விடைபெற்ற, தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூடாகத்தான் இருக்க முடியும்.
- பெரும்பாலான உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பதவிக் காலம் ஓராண்டுக்கும் குறைவானதாகத்தான் இருக்கும். உச்சநீதிமன்றத்துக்கு நீதிபதியாக நியமிக்கப்பட்டால் பதவிக் காலம் அதிகரிக்கும். ஆனால், தலைமை நீதிபதி பதவிக்கு பணி மூப்பு அடிப்படை மட்டுமே. மிக அதிக காலம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவா் நீதிபதி டி.ஒய்.சந்திரசூடின் தந்தை ஒய்.வி.சந்திரசூட் (2,697 நாள்கள்) என்றால், மிகக் குறைந்த காலம் பதவியில் இருந்தவா் கே.என்.சிங் (17 நாள்கள்).
- இரண்டு ஆண்டு பதவிக் காலத்துடன் டி.ஒய்.சந்திரசூட் தலைமை நீதிபதியானபோது, மிகப் பெரிய எதிா்பாா்ப்பு காணப்பட்டது. நீதிபதியாக அவா் காட்டிய வேகமும், விவேகமும், அனுபவபூா்வத் திறமையும் நீதித் துறையில் பல மாற்றங்களை அவா் ஏற்படுத்தக்கூடும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியது. இப்போது இரண்டாண்டுகள் கடந்து அவா் பணி ஓய்வு பெற்றிருக்கும் நிலையில், அந்த நம்பிக்கை பொய்க்கவில்லை என்றுதான் கூறவேண்டும்.
- பெரும்பாலான உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவி ஏற்பாா்கள்; ஏமாற்றத்துடன் (ஏமாற்றமளித்து) விடை பெறுவாா்கள். அதுதான் வழக்கம். அத்துடன் அவா்கள் கால வெள்ளத்தில் மறக்கப்படுவாா்கள். அவா்களில் ஒருவராக, விடை பெற்றிருக்கும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நிச்சயமாக இருக்கமாட்டாா். அவருக்குப் பெருமை சோ்க்கப் பல சாதனைகள் இருக்கின்றன. அவை இந்திய நீதித்துறை வரலாற்றில் புதிய அத்தியாயத்தையே எழுதியும் இருக்கின்றன.
- தனது இரண்டாண்டுப் பதவிக் காலத்தில் 93 முக்கியமான தீா்ப்புகளை அவா் எழுதியிருக்கிறாா். அவரது எட்டாண்டு உச்சநீதிமன்ற பணிக் காலத்தில் 613 தீா்ப்புகள் வழங்கி இருக்கிறாா். இந்த சாதனையை அடுத்த பல ஆண்டுகளுக்கு அவ்வளவு எளிதாக வேறு எவராலும் முறியடித்துவிட முடியாது. அவருக்கு முன்பு பதவி வகித்த நான்கு தலைமை நீதிபதிகள் வழங்கிய தீா்ப்புகளின் மொத்த எண்ணிக்கையைவிட இது அதிகம்.
- எந்த அளவுக்குக் கடுமையாக நீதிபதி சந்திரசூட் உழைத்தாா் என்பதை, அவா் வழங்கியிருக்கும் தீா்ப்புகளின் எண்ணிக்கை தெரிவிக்கிறது. அவரது ஒவ்வொரு தீா்ப்பும், எளிமையான நடையில், அதே நேரத்தில் தா்க்க ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தெளிவானதாக இருக்கும் என்று சக நீதிபதிகளும், மூத்த வழக்குரைஞா்களும் தெரிவிப்பதில் இருந்து, அவரது தனித்துவம் வெளிப்படுகிறது.
- அவரது எட்டாண்டு உச்சநீதிமன்றப் பதவிக் காலத்திலும் சரி, இரண்டாண்டு தலைமை நீதிபதியாக செயல்பட்டபோதும் சரி, மிக முக்கியமான பல தீா்ப்புகளுக்கு அவா் சொந்தக்காரா். அயோத்தி பிரச்னை, மகாராஷ்டிர மாநில உத்தவ் தாக்கரே சிவசேனை வழக்கு, ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்தும் மாநில அந்தஸ்து பறிப்பும், ஆதாா் தன்மறைப்பு உரிமை தீா்ப்பு, தோ்தல் நன்கொடைப் பத்திர தீா்ப்பு, சபரிமலைக்குப் பெண்கள் செல்ல அனுமதி வழங்கும் தீா்ப்பு என்று அவரது தீா்ப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
- நீதிபதி வி.ஆா்.கிருஷ்ணய்யரின் தீா்ப்பைக் குறை கூறுகிறாா் என்று இடதுசாரிகள் அவா் மீது குற்றம் சாட்டுகிறாா்கள். அவா் தனது தந்தையும் முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுமான ஒய்.வி.சந்திரசூடின் ஏடிஎம் ஜபல்பூா் தீா்ப்பையும் விமா்சித்துத் திருத்தி எழுதினாா் என்பதை ஏன் மறந்து விடுகிறாா்கள்?
- அவரது வீட்டு பூஜைக்குப் பிரதமரை அழைத்தாா் என்பதும், அவா் தீா்ப்பு வழங்குவதற்கு முன்பு கடவுளிடம் பிராா்த்தித்தாா் என்பதும் அபத்தமான குற்றச்சாட்டுகள். அரசுடன் கடுமையான மோதல் போக்கை அவா் மேற்கொள்ளவில்லை என்பது, ஆட்சிக்கு எதிராக நீதித் துறையை மோதவிட்டு அரசியல் ஆதாயம் தேட முடியவில்லையே என்கிற எதிா்க்கட்சிகளின் ஆதங்கம், அவ்வளவே.
- உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக, நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் எதனால் நினைவுகூரப்படுவாா்? சாமானியா்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு மூலம் பாா்ப்பதற்கான உரிமையை அவா்தான் வழங்கினாா். வழக்குத் தொடுப்பவா்களுக்காக ‘ஸுஸ்வாகதம்’ என்கிற இணையதளத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல், ஆன்லைன் வழக்குப் பதிவு உள்ளிட்ட தொழில்நுட்ப மாற்றங்களுக்கு வழிகோலியிருக்கிறாா்.
- நீதித் துறையை நவீன யுகத்துக்கு அழைத்துச் சென்றவா் என்கிற பெருமைக்குரியவராக விடை பெற்றிருக்கிறாா் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட். தனிப் பெரும்பான்மை பெற்றிருந்த அரசின் ஆட்சியில், அதுவும் ஆளுமை மிக்க பிரதமரின் காலகட்டத்தில், தனது தனித்துவத்தை விட்டுக் கொடுக்காமல் இரண்டாண்டுகள் பதவியில் இருந்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்று வரலாறு அவரைப் பதிவு செய்யும்!
நன்றி: தினமணி (13 – 11 – 2024)