- நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தவும், பருப்புக்கான ஆதரவு விலையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தவும் மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள், இயல்பாகவே மனதில் உவகையை ஏற்படுத்தியிருக்கின்றன. நாணயத்தின் மறுபக்கமாக ஒரு சந்தேகமும் கூடவே எழுந்தது. மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராடியபோதும் 700 பேருக்கு மேல் களத்திலேயே உயிர் நீத்தபோதும் ஆதரவு விலையை அதிகரிப்பது குறித்து வாயே திறக்காத அரசுக் கட்டில், இப்போது விவசாயிகளுக்கு அள்ளிக் கொடுத்திருப்பதாகக் கூறுவதை அப்படியே நம்ப முடியுமா?
பரிந்துரையும் நிதர்சனமும்:
- வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரையின்படி விவசாயிகளின் விளைபொருள்களுக்கு, இடுபொருள்கள் உள்பட விவசாயிகளுக்கு ஆகும் மொத்த உற்பத்திச் செலவுடன் 50% கூடுதலாக வைத்து, மொத்தத்தில் ஒன்றரை மடங்கு குறைந்த பட்ச ஆதரவு விலையாக நிர்ணயிக்க வேண்டும் என்று கோரி விவசாயிகள் நீண்ட காலமாகப் போராடிவருகிறார்கள்.
- இப்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை இந்தக் கோரிக்கையைக் கணக்கில் கொள்ளவில்லை. எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரையின் படி, நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,707.50 அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். இப்போதைய முடிவின்படி ரூ.2,183 மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. நிலக்கடலைக்கு ரூ.7,411.50 அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்; ரூ.6,377 மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.
- தவிர, இந்த அறிவிப்பு 2022-23 ஆண்டுக்கான விலைதான். இந்தக் காலகட்டத்தில் உரங்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. பாசனச் செலவுகளும் அதிகரித்துள்ளன. அரசு இவற்றைக் கணக்கில் கொள்ளவில்லை. ஆகவே, ‘எங்கள் குரலைச் செவிமடுக்காத அறிவிப்பு இது’ என விவசாயச் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
- வரலாறு நெடுகிலும் விவசாயிகள்/ விவசாயத் தொழிலாளர்களின் நிலையில் நின்று விவசாயப் பிரச்சினைகளை ஆட்சியாளர்கள் அணுகியதில்லை. ஆள்பவர்களின் வர்க்க சார்பும்நாட்டின் தேவைகள் என அவர்கள் கருதுவதுமே விவசாயக் கொள்கைகளைத் தீர்மானிக்கும் காரணிகளாக இருந்துவந்துள்ளன.
பசுமைப் புரட்சியின் பாதிப்புகள்:
- பின்னோக்கிப் பார்க்கும்போது, காங்கிரஸ் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சி குறித்துப் பேசுவது அவசியம். உற்பத்தியில் தன்னிறைவு கண்டு உணவுத் தட்டுப்பாடு முற்றிலும் நீக்கப்பட பசுமைப் புரட்சி உதவியதாகக் கூறப்பட்டது; அது உண்மையும்கூட. ஆனால், பசுமைப் புரட்சியின் விளைவுகள் நேரடியாக நம் விவசாயிகளைத்தான் பாதித்தன.
- உணவுத் தட்டுப்பாடு என்னும் உடனடிப் பிரச்சினையில் கவனம் குவித்த அளவுக்கு, விவசாயிகள் வாழ்க்கையின்மீது அரசு தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருக்கவில்லை என்கிற விமர்சனம் எழுந்தது. ‘பசுமைப் புரட்சியின் வன்முறை’ நூலில் விஞ்ஞானி வந்தனா சிவா இது குறித்து எழுதியிருக்கிறார்; அந்நூலின் சாரம் இதுதான்:
- தொன்மையான இந்தியாவின் பருவநிலைக்கு உகந்த நமது பாரம்பரிய நெல் வகைகள் பயன்பாடு இல்லாது ஒழிந்துவிட்டன. வீரிய ஒட்டுரகப் பயிர்கள் எனச் சொல்லப்படும் - தரம் குறைந்த பயிர்கள் பல்கிப் பெருகிவிட்டன. இயற்கை வேளாண்மை மறைந்து வேதி உரங்கள், பூச்சி மருந்துகளின் பயன்பாடு அதிகரித்தது. மேலைநாடுகளில் தடைசெய்யப்பட்ட ரசாயன உரம், பூச்சிமருந்துகள் எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் இந்தியாவில் பயன்படுத்தப் படுகின்றன.
- இதனால் மண்புழு, பூச்சி, மண்வாழ் நுண்ணுயிர்கள் முதலியவை முற்றிலும் அழிக்கப் பட்டுள்ளன. விளைநிலங்கள் இனி பயிரிட முடியாத களர்நிலமாகிப் போயின. நீர்நிலைகள் மாசடைந்துள்ளன. தீவனங்களில் ரசாயனம் மிகுந்து, கால்நடைகளிடமிருந்து கிடைக்கும் பாலின் தன்மை விஷம்மிக்கதாக மாறியிருக்கிறது. உண்ணும் உணவு விஷமாகிவிட்டது. பருவகாலங்களுக்குப் பொருத்தமான, மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தாத பாரம்பரியப் பயிரினங்கள் வியாபார நோக்கத்தால் பின்தள்ளப்பட்டுள்ளன. உணவே மருந்து என வாழ்ந்த நம் மக்கள், ஆரோக்கியமின்மையால் அவதியுறலாயினர்.
- வந்தனா சிவாவின் இந்தக் கருத்துகள் நாம் விவாதிக்க வேண்டியவை. பசுமைப் புரட்சியின் நீட்சிதான் மராட்டிய விவசாயிகளின் கொத்துக்கொத்தான தற்கொலைகள் என்பதை ஆய்வுகள் எடுத்துக்காட்டியுள்ளன. அரசின் உடனடித் தேவைகளை மட்டும் முன்னிறுத்திக் கொள்கை வகுத்ததால் வந்த வினை இது.
ஆள்வோரின் கவனம்:
- இன்னும் பின்னோக்கிப் பயணித்தால் சோழர் ஆட்சிக் காலத்தில் உழுதுண்போர், உழுவித்துண் போர் என்கிற இரண்டு வகை மக்களைப் பார்க்கிறோம். இதில் உழுதுண்போராகிய உழைப்பாளிகளைக் கணக்கில் கொள்ளாமல் உழுவித்துண்ணும் நில உடைமையாளர்களையே அரசு கணக்கில் கொண்டதை, ‘தமிழகத்தில் காலனியமும் வேளாண் குடிகளும்’ என்கிற தன் நூலில் பேராசிரியர் ஏ.கே.காளிமுத்து விளக்குகிறார். காலனி ஆட்சிக் காலத்திலும் சோழர் காலத்திலும் பல போர்முனைகளுக்கு உள்நாட்டு வீரர்கள் அனுப்பப்பட்டனர்.
- அப்படையினருக்கு உணவளிக்க நெல் உற்பத்தியைப் பன்மடங்கு அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டது. அதற்காகவே புதிய அணைகள் கட்டப்பட்டன. புதிய ஆறுகள் வெட்டப்பட்டன. கால்வாய்கள் அமைக்கப்பட்டன. வேளாண் நடவடிக்கைகள் விரிவாக்கப் பட்டன. அப்போதும் ஆக்கிரமிப்புப் போர்கள்தான் இவற்றுக்கெல்லாம் உந்து விசையாக இருந்தனவே அன்றி, விவசாயக் குடிகளின் வாழ்நிலை ஆட்சியர் கவனத்தின் மையமாக இருந்திருக்கவில்லை.
- தஞ்சைத் தரணியின் செங்கொடி விவசாயிகள் போராட்டத்தின் தொடக்கமாகக் குறிக்கப்படும் தென்பரை விவசாயிகளின் போராட்டம் 1943இல் நடைபெற்றது. அப்போது கடுமையான உணவுப் பஞ்சம் நிலவியது. உத்திராபதி மடத்துக்குச் சொந்தமான நிலத்தில் பாடுபட்ட குத்தகை விவசாயிகள், குத்தகை பாக்கி கொடுக்க முடியாமல் திணறியபோதுதான் போராட்டம் வெடித்தது. விவசாயிகளின் குரலை மடம் ஏற்கவில்லை.
- அவர்களை வெளியேற்றி விவசாய நடவடிக்கைகளையே முடக்கியது. ஆங்கில அரசின் அதிகாரிகளிடம் மணலி கந்தசாமி தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தைக்குச் சென்ற போது, உணவுப் பஞ்ச நேரத்தில் மடம் இப்படிச் செய்வது உற்பத்தியைப் பாதிக்கும் என்பதை எடுத்துச் சொல்லியே அதிகாரிகளைத் தலையிடச் செய்துள்ளனர்.
- ஆம்; அப்போதும் விவசாயிகளின் நியாயத்தை உணர்ந்தல்ல, உணவுப் பெருக்கம் பாதிக்கப் படக் கூடாது என்றே ஆட்சியாளர்கள் தலையிட்டுள்ளனர். இப்படி வரலாறு நெடுகிலும், தங்கள் பக்கம் நின்று விவசாயப் பிரச்சினைகளை அணுகக்கூடிய ஓர் அரசுக்காக விவசாயிகளும் விவசாயத் தொழிலாளிகளும் ஏக்கத்துடன் காத்துக்கொண்டேயிருக்கிறார்கள்.
நன்றி: தி இந்து (12 – 06 – 2023)