- தன் மீது குற்றம்சாட்டிய ஒரு பெண்மணியை வசைபாடிய ‘அதிபர்’, “அவர் என்ன அன்னை தெரசாவா, இல்லை அன்னி பெசன்டா... அவருக்கு முக்கியம் கொடுத்து நான் பதில் சொல்ல?” என்று கோபத்துடன் கேட்டார். இது நடந்தது சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில். அதைக் கேட்டதும் அதிர்ந்துபோனேன். அன்னை தெரசாவாவது இரண்டு பத்தாண்டுகளுக்கு முன்தான் மறைந்தார்.
- அதனால் பொது நினைவில், அவர் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அன்னி பெசன்ட் மறைந்து 90 ஆண்டுகள் ஆகின்றன. அவர் எப்படிப் பொது நினைவில் வாழ்கிறார் என்பதுதான் என் அதிர்ச்சிக்குக் காரணம். ‘அ’னாவுக்கு ‘அ’னா என்று அடுக்குமொழியாகவும் அன்னி பெசன்ட் வந்திருக்கலாம்!
- சரி, நினைவு வைத்துக்கொள்ள அன்னி பெசன்ட் (1 அக்டோபர் 1847 - 20 செப்டம்பர் 1933) அப்படி என்ன செய்தார் என்று இன்றைய தலைமுறை கேட்கலாம்; மறந்தும்கூடவிடலாம், அதனால் ஒன்றும் குடிமுழுகிவிடப் போவதில்லை. எனினும் இன்றைய வயிற்றுவலிக்கு நேற்று சாப்பிட்ட உணவு எது என்று தெரிந்துகொள்வது, வலிக்கான மருந்தைச் சாப்பிடப் பயன்படலாமே!
பெசன்ட் இட்ட அடித்தளம்
- ‘பிரிட்டிஷ் இம்பீரியலிசம்’ என்ற சொல்லே பெருமளவில் புழக்கத்தில் இருந்த காலத்தில், பெசன்ட்தான் ‘பிரிட்டிஷ் காமன்வெல்த்’ என்கிற பதத்தைப் பயன்படுத்தினார். இது ஏகாதிபத்தியத்தின் மீதிருந்த வெறுப்பைத் தணியவைத்தது என்று சுதேசியர்கள் கருதலாம். ஆனால், அதேவேளை அச்சொல் உருவாக்கியிருந்த அச்சத்தைக் குறைத்தது என்பதைச் சாதகமாகவும் கருதலாம்.
- பெசன்ட்டின் ‘ஹோம் ரூல்’ இயக்கம் வழியாகத்தான் பெரும்பாலான இந்தியத் தலைவர்கள் அரசியல் களத்துக்குள் வந்தனர். சுப்பிரமணிய ஐயர், ஜார்ஜ் ஜோசப், சி.பி.ராமசாமி ஐயர், மஞ்சேரி பி.வி.நரசிம்மையர் போன்றோர் இந்த இயக்கம் மூலமாகவே காங்கிரஸின் அரசியலுக்குள் வந்தார்கள். ஏன், காந்தியின் புகழ்பெற்ற முதல் இந்தியப் பேச்சு (4 பிப்ரவரி 1916) காசி இந்துப் பல்கலைக்கழகத்தில் பெசன்ட் உள்பட இந்திய அரசர்கள், பிரமுகர்கள் முன்னிலையிலும் முகச்சுளிப்புக்கு இடையிலும்தானே நிகழ்ந்தது.
- பெசன்ட் ஆரம்பித்ததுதான் காசி இந்துப் பல்கலைக்கழகம். பின்னால் அதை மதன் மோகன் மாளவியாவிடம் ஒப்படைத்தார். ராஜாஜியின் அரசியல் நுழைவின் தீவிரம் பெசன்ட்டை எதிர்த்து உருவானதுதான். பல வகையிலும் இந்தியர்களின் அரசியல் நுழைவுக்குக் காரணமாக இருந்தார் பெசன்ட். ஏன், நீதிக்கட்சியினரே தொடக்கத்தில் அவரை எதிர்த்துத்தான் அரசியல் செய்தனர். ஆக, பல வகையிலும் பலருக்கும் அரசியல் ஈர்ப்பாக இருந்தார் பெசன்ட்.
- அயல்நாட்டில் பிறந்து காங்கிரஸுக்குத் தலைவரான முதல் பெண் பெசன்ட்தான். லண்டனில் பிறந்த பிரிட்டிஷ் குடிமகள் அவர். இந்திய தேசியக் காங்கிரஸில் விடுதலைக்கு முன், ஆண்டுதோறும் டிசம்பர் மாத இறுதியில் நடைபெறும் மாநாட்டுக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் படுபவரே, அடுத்து வரும் ஆண்டு முழுவதும் கட்சியின் தலைவராகச் செயல்படுவார். அதுதான் விடுதலை அடையும்வரை இந்திய தேசியக் காங்கிரஸின் நடைமுறையாக நீடித்தது.
- அந்த முறையைத் தொடங்கிவைத்தவர், 1917 டிசம்பரில் மாநாட்டின் தலைவரான பெசன்ட்தான். அதே ஆண்டில், அவர் ஊட்டியில் வீட்டுச்சிறை வைக்கப்பட்டபோது தமிழ்நாடு கொந்தளித்தது என்று சொல்வார்கள். இந்திய விடுதலைக்கு உழைத்த - அயலில் பிறந்த தலைவர்களுள் முதலாவதாக பெசன்ட்டையே சொல்லலாம். அவருக்குப் பின்நிற்பவர்களே சி.எப்.ஆண்ட்ரூஸ், மீராபென், நிவேதிதா, காங்கிரஸையே தொடங்கிய வெட்டர்பர்ன், ஹியூம் போன்றோர்.
- நாம்தான் பெசன்ட் என்று அழைக்கிறோம். ஹைதராபாத்தின் தெலுங்கு நண்பர்கள் பீசன்ட் என்று அழைக்கிறார்கள். ‘அன்னை வசந்தை’ என்று அன்பொழுக திரு.வி.க. எழுதுவார். விஜயவாடாவில் ஒரு தெரு பீசன்ட் பெயரில் விளங்குகிறது. நம் சென்னையில் அவர் பெயரில் ஒரு நகரே இருக்கிறது. சென்னைக் கடற்கரை காமராசர் சாலையில் ஒரு சிலை இன்றும் நிற்கிறது. தவிர, அவர் நடத்திய தியசாபிகல் சங்கத்தின் பல கட்டிடங்கள் தமிழ்நாடு எங்கும் பல நகரங்களில் இன்றும் இருக்கின்றன.
- அவர்கள் நடத்தும் ‘அடையாறு நூலகம்’ இப்போதும் நன்கு பராமரிக்கப்படும் நூலகங்களில் ஒன்று. பாரதி முதல் பலர் எழுதிய பெசன்ட் நடத்திய ஆங்கிலப் பத்திரிகைகளை இன்றும் வாசிக்க முடிகிற பராமரிப்பில் அங்கு வைத்துள்ளனர். அவர் உருவாக்கிய ஜே.கிருஷ்ணமூர்த்தி இன்றும் கருதப்படும் ஒரு தத்துவப் பிரசாரகர் தானே. பெசன்ட் தொடங்கியது அனைத்தும் நூறாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து இயங்குகின்றன என்றால் அவர் போட்ட அடிப்படையின் திறன், உறுதி நம்மை வியக்க வைக்கிறது.
- உலகறிந்த நாத்திகரான சார்லஸ் பிராட்லாவுடன் இணைந்து இயங்கிய பெசன்ட் தியசாபிகல் சங்கத்துடன் பணியாற்றியதும் உலக குருவாக ஜே.கிருஷ்ணமூர்த்தியை அறிவித்ததும் முரண்களே.
‘ஆண்களுக்கு ஓர் அறிவுறுத்தல்’
- பாரதி அவரைக் கிண்டல் செய்து எழுதிய ‘பொன்வால் நரி’ என்கிற ஆங்கில நூலின் விற்பனை, அப்போதே பாரதியை ஆச்சரியப்பட வைத்தது. அந்த அளவுக்குப் புகழும் பெருமையும் ஆற்றலும் பெற்ற அரசியல்வாதியாக, எழுத்தாளராக, பேச்சாளராக, செயல்வீரராக பெசன்ட் திகழ்ந்தார்.
- அவர் காலமானபோது பெரியார் எழுதிய இரங்கல் குறிப்பு அவரது சாமர்த்தியத்தைப் பளிச்செனக் காட்டுவதாகும். குடும்பக் கட்டுப்பாட்டை அது அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலேயே இங்கிலாந்தில் ஆதரித்தவர் பெசன்ட். பெண்ணினத்தின் திருஉருவாகத் தன்னையும் அறியாமல் இயல்பாகவே விளங்கிய பெசன்ட், இன்றைக்கும் ஒரு பெண் போராடுகிறபோது எவ்வகையிலோ நினைவுகூரப்படுகிறார்.
- “அம்மையார் இந்த உலகம் முழுவதும் ஒரு ஆட்சிக்கு உட்படுத்தி அதன் தலைமை ஸ்தானத்தைக் கொடுத்தால் அதை ஒரு கையிலும், அதன் ராணுவ ஆட்சியை மற்றொரு கையிலும், உலக மதகுரு (போப்) வேலையை உபவேலையாகவும் பார்க்கத் தகுதியும் ஆற்றலும் உடையவர் என்றே சொல்லுவோம்.
- ஆகவே பெண்களுக்கு எவ்வளவு ஞானம், எவ்வளவு தைரியம், எவ்வளவு சக்தி இருக்கிறது என்று கணிப்பதற்கு அம்மையார் ஒரு ஒப்பற்ற சாதனம் ஆவார். அன்னி பெசன்ட் வாழ்க்கை பெண்களுக்கு ஒரு படிப்பினை; ஆண்களுக்கு ஒரு அறிவுறுத்தல்” (குடிஅரசு, 24.9.1933) என்றார் பெரியார்.
நன்றி: இந்து தமிழ் திசை (25 – 09 – 2023)