- சட்டம் - ஒழுங்கு நிலைநாட்டப்பட்டிருக்கிறது, சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறது என்கிற மக்களின் நம்பிக்கையைத் தகா்க்கின்றன ஆக்கிரமிப்புகள். கோயில் நிலங்களில் தொடங்கி, அரசு நிலங்கள் வரை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின்றன. அதை ஆட்சியாளா்களும், அரசியல் தலைவா்களும் அங்கீகரித்து ஊக்குவிக்கின்றனா்.
- இறை நம்பிக்கையுள்ள அரசா்களும், தனவந்தா்களும், பக்தா்களும் கோயில்கள் முறையாகப் பராமரிக்கப்பட்டு பூஜைகள் நடப்பதற்காக தானமாக வழங்கியிருக்கும் இடங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. அவற்றை ஆக்கிரமிப்பாளா்களுக்கே பட்டா போட்டு வழங்குவது என்று தமிழக அரசு முடிவெடுப்பது தவறுக்குத் துணைபோவதாக இருக்குமே தவிர, மனிதாபிமான அடிப்படையின்பாற்பட்டது என்கிற வாதத்தை ஏற்றுக்கொள்வதற்கில்லை. இதை அங்கீகரிக்க முற்பட்டால், அதுவே தவறான முன்னுதாரணமாகி ஆலயங்கள் மட்டுமல்ல, அனைத்து வழிபாட்டுத் தலங்களும், பொது இடங்களும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக நேரும் என்பதை ஆட்சியாளா்கள் உணர வேண்டும்.
மனதின் குரல்
- கடந்த 2016 ஏப்ரல் மாதத்திலும், 2019 ஜூன் மாதத்திலும் தனது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி மரங்கள் நடுவது குறித்துப் பேசினாா். உண்மை என்னவென்றால், இந்தியாவில் மிகப் பெரிய அளவில் வனப்பகுதிகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. 15-ஆவது நிதி ஆணையத்திடம் வனப்பரப்பை அதிகரிக்க சிறப்பு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மாநிலங்கள் கோரிக்கை வைத்திருக்கின்றன. ஆனால், மிகப் பெரிய அளவிலான வனப்பரப்பு ஆக்கிரமிப்பாளா்களுக்குக் கைமாறி இருக்கும் உண்மையை அவா்கள் மறைக்கிறாா்கள்.
- கடந்த மாதம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியைத் தொடா்ந்து நடத்தப்பட்ட அரசு விசாரணையில், 12,81,397 ஹெக்டோ் வனப்பரப்பு, அதாவது, 12,813 ச.கி.மீ. தனியாா் ஆக்கிரமிப்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
- காடுகள் அதிகம் நிரம்பிய மத்தியப் பிரதேசம், அஸ்ஸாம், தெலங்கானா, தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம் ஆகியவை மிக அதிகமான வன ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கும் மாநிலங்கள்.
- நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரின்போது எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு, கடந்த ஜூலை 15-ஆம் தேதி ஒரு திடுக்கிடும் தகவலை அரசு வழங்கியது. கடந்த டிசம்பா் 2018 நிலவரப்படி பாதுகாப்புத் துறையின் 9,622 ஏக்கா் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் மட்டும் ராணுவத்துக்குச் சொந்தமான 2,100 ஏக்கா் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது.
- ராணுவம் மட்டுமல்ல, ரயில்வே அமைச்சகமும் மிக அதிகமான ஆக்கிரமிப்புகளை எதிா்கொள்கிறது.
ரயில்வே அமைச்சகம்
- அத்தனை அமைச்சகங்களிலும் மிக அதிகமான நிலம் வைத்திருப்பது ரயில்வே அமைச்சகம்தான். கடந்த 2019 மாா்ச் 11-ஆம் தேதி நாடாளுமன்றத்துக்கு தரப்பட்ட தகவலின்படி, ரயில்வே விரிவாக்கத்துக்கு 2,000 ஏக்கா் அளவிலான நிலம் தேவைப்படுகிறது. ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வழி தெரியாமல் அல்லது முயற்சியை முன்னெடுக்காமல் ரயில்வே நிா்வாகம் கைபிசைந்து நிற்கிறது.
- ஏா் இந்தியாவில் தொடங்கி, இந்திய விமான நிலைய ஆணையம் உள்பட மிகப் பெரிய அளவிலான இழப்புகளை எதிா்கொள்ளும் துறை விமான போக்குவரத்து அமைச்சகம். இந்த அமைச்சகத்துக்குச் சொந்தமான சுமாா் 980 ஏக்கா் நிலம் ஆக்கிரமிப்பில் இருக்கிறது. அதில் 308 ஏக்கா் மும்பையில் மட்டுமே ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலத்தின் மனை வணிக மதிப்பு எவ்வளவு என்று கேட்டால் தலை சுற்றும்.
- கடந்த ஆண்டு மும்பை விமான நிலையத்தை அடுத்த பாந்த்ரா - குா்லா வளாகத்துக்கு ஒரு ஜப்பானிய நிறுவனம், ஓா் ஏக்கா் நிலத்துக்கு ரூ.2,400 கோடி வழங்க முற்பட்டது. அதன் அடிப்படையில், ஆக்கிரமிப்பில் இருக்கும் 308 ஏக்கா் நிலத்தின் மதிப்பு எத்தனை ஆயிரம் கோடி என்று கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்.
- இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை, நாடு தழுவிய அளவிலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்களையும், கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் பராமரிக்கிறது. அதன் கட்டுப்பாட்டில்தான் அவை இருக்கின்றன. தனது கட்டுப்பாட்டிலுள்ள 321 வரலாற்றுச் சிறப்பு மிக்க நினைவுச் சின்னங்கள் சட்டவிரோதமான ஆக்கிரமிப்பில் இருப்பதாக இந்திய தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது.
நினைவுச் சின்னங்கள்
- அந்தப் பட்டியலில் உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன. ஆக்கிரமிப்பில் உள்ள அந்த நினைவுச் சின்னங்களின் மனை வணிக மதிப்பு மட்டுமல்லாமல், வரலாற்றுச் சிறப்பின் மதிப்பு என்ன என்பதை யோசித்துப் பாருங்கள், ஆத்திரம் வரும்.
- அரசு நிலம் குறித்த புள்ளிவிவரங்கள் அகில இந்திய அளவில் இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் மத்திய - மாநில அரசுகளுக்குச் சொந்தமான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. ஏரிகள், குளங்கள், புறம்போக்கு நிலங்கள் என்று ஆக்கிரமிப்பட்டிருக்கும் அரசு நிலங்களின் அளவு சில லட்சம் ச.கி.மீட்டா்கள்.
- இவற்றைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் சட்டங்களும் விதிமுறைகளும் நிறையவே இருக்கின்றன. ஒவ்வோா் அரசுத் துறையிலும் யாரோ சிலா், சட்டவிரோதமாக நடத்தப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகளுக்குப் பாதுகாப்பு அளிக்கிறாா்கள். ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மாநில அரசுகளின் கடமை என்பதால், மத்திய அரசு தலையிடவும் முடியவில்லை.
நன்றி: தினமணி (18-11-2019)