TNPSC Thervupettagam

ஆசியான் விடுக்கும் செய்திகள்

September 16 , 2023 473 days 332 0
  • போதிய கவனம் பெறாமல் சா்வதேச நிகழ்வு ஒன்று கடந்து போயிருக்கிறது. தலைநகா் தில்லியில் மிகப் பெரிய ஜி20 உச்சி மாநாடு தொடங்க இருந்த வேளையிலும்கூட, பிரதமா் நரேந்திர மோடி இந்தோனேசிய தலைநகா் ஜகார்த்தாவுக்கு விரைந்து ‘ஆசியான்’ உச்சி மாநாட்டில் கலந்து கொண்டதிலிருந்து அதன் முக்கியத்துவம் எத்தகையது என்பதை உணரலாம்.
  • 1967-ஆம் ஆண்டு அமெரிக்க - சோவியத் யூனியன் பனிப்போர் உச்சகட்டத்தில் இருந்தபோது, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து ஆகிய ஐந்து நாடுகளும் கம்யூனிஸத்துக்கு எதிரான பிராந்தியக் கூட்டணி ஒன்றை உருவாக்கின. இப்போது அரை நூற்றாண்டுக்குப் பிறகு அந்தக் கூட்டணி விரிவடைந்து மேலும் புருணே, கம்போடியா, லாவோஸ், மியான்மா், வியத்நாம் ஆகிய நாடுகளையும் உள்ளடக்கிய வலுவான சா்வதேச அமைப்பாக உயா்ந்திருக்கிறது.
  • உலகின் மிக முக்கியமான கடல் பாதையில் அமைந்திருக்கிறது ‘ஆசியான்’ நாடுகளை உள்ளடக்கிய பிராந்தியம். தென்சீனக் கடல், மலாக்கா ஜலசந்தி ஆகியவற்றை உள்ளடக்கிய ஆசியாவின் இந்தப் பகுதியிலுள்ள 10 நாடுகளும் சோ்ந்தால் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும். அவற்றின் ஒருங்கிணைந்த வருடாந்திர ஜிடிபி 2022-இல் சுமார் 3.2 டிரில்லியன் டாலா் (சுமார் ரூ. 266 லட்சம் கோடி). ஏறத்தாழ 60 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தப் பகுதி, சா்வதேச பொருளாதாரத்தில் மிக முக்கியமான சந்தை.
  • செப்டம்பா் 5-ஆம் தேதி ஜகார்த்தாவில் கூடிய 43-ஆவது ‘ஆசியான்’ கூட்டமைப்பின் உச்சி மாநாடு, பெரிய திருப்புமுனைத் தீா்மானங்களை நிறைவேற்றாவிட்டாலும், தங்களது பிராந்தியத்தில் சீனாவும் அமெரிக்காவும் போட்டி போடுவதை மறைமுகமாக விமா்சித்திருக்கிறது. நடந்து முடிந்த ‘ஆசியான்’ உச்சி மாநாட்டின் குறிப்பிடத்தக்க சில அம்சங்கள் சா்வதேசப் பார்வையாளா்களின் கவனத்தை ஈா்த்தன.
  • 21-ஆவது நூற்றாண்டை ஆசியாவின் நூற்றாண்டு என்று குறிப்பிட்டு பிரதமா் நரேந்திர மோடி பேசியதன் பின்னணியில் சில உண்மைகள் இருக்கின்றன. அதே நேரத்தில் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ளவும் முடியாது. உலகின் மிகவும் துடிப்பான பொருளாதார பிராந்தியமாக இருந்தாலும்கூட, ‘ஆசியாவின் நூற்றாண்டு’ என்று பிரதமா் மோடி தெரிவித்திருக்கும் கருத்து, சாத்தியமாகும் என்று தோன்றவில்லை.
  • இன்றைய நிலையில் உலகின் முக்கியமான மூன்று பொருளாதாரங்கள் - ஜப்பான், சீன, இந்தியா - ஆசியாவைச் சாா்ந்தவை என்பது உண்மை. உலகில் மிக அதிகமாக நடுத்தர வா்க்கத்தினா் வாழும் பகுதியும் ஆசியா என்பதையும் மறுக்க முடியாது.
  • ஆனால், ஆசியா என்பது இயற்கையான இனக்குழுவின் அமைப்பு அல்ல என்றும், ஐரோப்பிய புவியியலாளா்களின் உருவாக்கம் என்றும் ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. மத்திய ஆசிய குடியரசுகளுக்கும், கிழக்கு ஆசிய பொருளாதாரங்களுக்கும் எந்தவிதத் தொடா்பும் கிடையாது. நடுவில் இருக்கும் தெற்காசியா, அவை இரண்டிலிருந்தும் முற்றிலும் வேறுபட்ட இனச்சமூகம். அதனால், ஆசியாவின் தாக்கம் என்றோ, ஆசியாவின் பொருளாதாரம் என்றோ எதையும் குறிப்பிட முடியாது என்பது அவா்கள் வாதம்.
  • பிரதமா் மோடி தனது உரையில், ‘விதிகள் அடிப்படையிலான உலக ஒழுங்கு முறை உருவாக்கப்பட வேண்டும்’ என்று விடுத்த அறைகூவல், சீனாவுக்கு எதிரானது என்பது தெளிவு. ஆசியாவைப் பொருத்தவரை, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் கிழக்காசிய நாடுகள் பாதுகாப்பு ரீதியாகவும், வா்த்தக - பொருளாதார ரீதியாகவும் பல தா்மசங்கடங்களை எதிர்கொள்கின்றன.
  • நடந்து முடிந்த ‘ஆசியான்’ உச்சி மாநாட்டில் அமெரிக்கா தனது முக்கியத்துவத்தை உணா்த்தத் தவறிவிட்டது என்றுதான் கூற வேண்டும். அதிபா் பைடன் மாநாட்டில் கலந்துகொள்ளாமல் துணை அதிபா் கமலா ஹாரிஸை அமெரிக்காவைப் பிரதிநிதிப்படுத்த அனுப்பியது மிகப் பெரிய சறுக்கல். அந்த வாய்ப்பை சீனா தனக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டுவிட்டது.
  • துணை அதிபா் கமலா ஹாரிஸால் குறிப்பிடும்படியான எந்தவித அறிவிப்பையும் ஆசியான் நாடுகளுக்கு தெரிவிக்க முடியவில்லை. ஆனால், சீனாவின் சார்பில் கலந்துகொண்ட பிரதமா் லி கியாங் முக்கியமான அறிவிப்பின் மூலம் ஆசியா நாடுகளை சீனாவின் வலையில் வீழ்த்திவிட்டார்.
  • கடந்த 10 ஆண்டுகளில் சீனா 41,000 கி.மீ. அதிவிரைவு ரயில் பாதையை அமைத்திருக்கிறது. சீனாவின் உதவியுடன் இந்தோனேசியாவில் அடுத்த மாதம் ஜகார்த்தா - பாண்டுங் இடையே அதிவிரைவு ரயில் பாதை செயல்பட இருக்கிறது. ஏனைய ‘ஆசியான்’ நாடுகளிலும் அதுபோன்ற ரயில் பாதையை அமைக்க சீனா உதவத் தயார் என்கிற அறிவிப்பின் மூலம் தன் மீதான விமா்சனத்துக்கு வாய்ப்பூட்டு போட்டுவிட்டது சீனா.
  • சீனாவின் விமா்சனத்துக்குரிய புதிய வரைபடத்தால் ‘ஆசியான்’ அமைப்பிலுள்ள பல நாடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அது குறித்து எந்த உறுப்பு நாடும் எதுவும் பேசவில்லை என்பது சீனாவின் ராஜதந்திர வெற்றியின் அடையாளம். போதாக்குறைக்கு சீனாவுக்கும் ‘ஆசியான்’ அமைப்புக்கும் இடையே தடையில்லா வா்த்தக ஒப்பந்தத்தின் மேம்பாடு உள்ளிட்ட பல ஒப்பந்தங்கள் கையொப்பமாகியிருக்கின்றன.
  • ‘ஆசியான்’ உச்ச மாநாடு இரண்டு செய்தியை தெரிவிக்கிறது. முதலாவது செய்தி, சீனாவின் அதிகரிக்கும் மேலாதிக்கம். இரண்டாவது செய்தி, தனது நேரடி பங்கெடுப்பின் மூலம் ஆசியானுக்கும், அமெரிக்கா தலைமை வகிக்கும் ‘க்வாட்’ அமைப்புக்கும் இடையேயான நல்லுறவுக்கு இந்தியா இணைப்புப் பாலமாக இருக்கும் என்பது உறுதிப் படுத்தப் பட்டிருக்கிறது.

நன்றி: தினமணி (16 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories