TNPSC Thervupettagam

ஆசிய பாரா விளையாட்டில் சாதித்த தமிழர்கள்

November 3 , 2023 435 days 312 0
  • சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியைத் தொடர்ந்து பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இந்தியா வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறது. முதல் முறையாக 29 தங்கம், 31 வெள்ளி, 51 வெண்கலம் என மொத்தம் 111 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் ஐந்தாம் இடத்தைப் பிடித்து அசத்தியிருக்கிறது.
  • இந்தியாவிலிருந்து 196 ஆடவர், 113 மகளிர் என 309 பேர் பங்கேற்ற நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்கள் கிடைத்துள்ளன. இதில் தடகளத்தில் மட்டும் 18 தங்கம், 17 வெள்ளி, 20 வெண்கலம் என 55 பதக்கங்களையும் பாட்மிண்டனில் 21 பதக்கங்களையும் இந்தியா அள்ளியிருக்கிறது. இந்த இரண்டு பிரிவுகளிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகளும் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள்.

உயரம் தாண்டுதல்

  • தமிழ்நாட்டில் சேலத்தைச் சேர்ந்த பாரா ஒலிம்பிக் நாயகன் மாரியப்பன் தங்கவேல் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் முத்திரைப் பதித்திருக்கிறார். தடகளத்தில் உயரம் தாண்டுதல் போட்டியில் டி63 பிரிவில் மாரியப்பன் பங்கேற்றார்.
  • இப்போட்டியில் 1.80 மீட்டர் உயரம் தாண்டிய மாரியப்பன் வெள்ளி பதக்கத்தை வசமாக்கினார். இதே பிரிவில் 1.82 மீட்டர் உயரம் தாண்டிய இந்தியாவின் சைலேஷ் குமார் தங்கப் பதக்கம் வென்றார். மாரியப்பன் ஏற்கெனவே 2016 பாரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கமும் 2020 பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும் வென்று சாதனை படைத்தவர்.

வட்டெறிதல்

  • தடகளப் பிரிவில் ஒன்றான குண்டெறிதலில் கோவையைச் சேர்ந்த கே. முத்துராஜா வெண்கலம் வென்று அசத்தினார். எஃப்-55 பிரிவில் பங்கேற்ற முத்துராஜா, 10.42 மீட்டர் தூரம் குண்டு எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். தற்போது 31 வயதாகும் முத்துராஜா, 2015இல் ஒரு விபத்தில் கால்களை இழந்தவர். முடநீக்கியல் நிபுணர்களால் ஊக்கப்படுத்தப்பட்டு குண்டெறிதல் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினார். 2018இல் மாநில அளவிலான குண்டெறிதல் போட்டியிலும் வெற்றி பெற்றவர் இவர்.

பாட்மிண்டன்

  • பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் இரட்டையர் எஸ்.ஹெச்6 பிரிவில் தமிழகத்தின் சிவராஜன் சோலைமலை, கிருஷ்ணா நாகருடன் இணைந்து களமிறங்கினார். இவர்கள் சுற்றுப் போட்டிகளைக் கடந்து அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றனர். அரையிறுதியில் ஹாங்காங்கின் சூ மன் கை-வோங் சுன்யிம் இணையை எதிர்த்து சிவராஜன் - கிருஷ்ணா இணை விளையாடியது.
  • இப்போட்டியில் 21-8, 21-5 என்ற புள்ளிகள் கணக்கில் சிவராஜன் - கிருஷ்ணா இணை தோல்வி அடைந்தது. இதனால், வெண்கலப் பதக்கத்துடன் வெளியேற நேர்ந்தது. இதேபோல கலப்பு இரட்டையர் போட்டியின் எஸ்.ஹெச்.6 பிரிவில் சிவராஜன் சோலைமலை - சிவன் சுமதி இணை வெண்கலப் பதக்கம் வென்றது.

பாட்மிண்டன்

  • பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கத்தையும் இரட்டையர் பிரிவில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் என மூன்று பதக்கங்களுடன் நாடு திரும்பியிருக்கிறார் துளசிமதி முருகேசன். பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் போட்டி எஸ்யு5 பிரிவின் இறுதிச் சுற்றில் இந்தியாவின் துளசிமதி முருகேன் சீனாவின் யாங் ஜியுஜியாவை எதிர்த்து விளையாடினார். பரபரப்பாக நீடித்த இந்தப் போட்டியில் 21-19, 21-19 எனற செட் கணக்கில் சீன வீராங்கனையை வீழ்த்தி துளசிமதி முருகேசன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
  • மகளிர் இரட்டையர் போட்டியின் எஸ்.எல்.3-எஸ்.யு.5 பிரிவில் மானசியுடன் இணைந்து துளதிமதி களம் கண்டார். இந்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். கலப்பு இரட்டையர் பிரிவில் நிதிஷ்குமாருடன் இணைந்து வெண்கலப் பதக்கம் வென்றார் துளசிமதி. கால்நடை மருத்துவப் படிப்பு படித்து வரும் துளசிமதி காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்.

நன்றி: இந்து தமிழ் திசை (03 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories