- சீனாவின் ஹாங்சோ நகரில் நடந்து முடிந்த19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் பதக்கங் களை அள்ளினர். இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியா அதிகப் பதக்கங்களை (107) வென்ற இந்த வரலாற்றுத் தருணத்தில் வீரர்களோடு வீராங்கனைகளின் பங்கும் அளப்பரியது. ஆசிய விளையாட்டில் சாதனை புரிந்த இந்தியப் பெண்களில் சிலர் இவர்கள்:
ஜோஷ்னா சின்னப்பா
- எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் திருமணமான, தாயான பெண்களுக்கு ஓய்வைப் பரிசளிக்கவே பொதுச் சமூகம் விரும்புகிறது. ஆனால், ‘என்னுடைய ஓய்வை நான்தான் தீர்மானிப்பேன்’ என அடித்துச் சொல்லியிருக்கிறார் ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா. 37 வயதாகும் அவர் ஆசிய விளையாட்டுப் போட்டி ஸ்குவாஷ் மகளிர் அணிப் பிரிவில் வெண்கலம் வென்றார். தனது விளையாட்டுப் பயணத்தில் ஆறு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்காகப் பங்கேற்று விளையாடியிருக்கும் அவர், தான் முழு உடல்தகுதியோடு இருக்கும் வரை தொடர்ந்து விளையாடப்போவதாகத் தெரிவித்திருக்கிறார்.
ஸ்கேட்டிங்கில் தமிழ்ப் பெண்கள்
- மகளிர் ஸ்பீட் ஸ்கேட்டிங் 3,000 மீட்டர் போட்டியில் இந்தியாவின் கார்த்திகா ஜெகதீஸ்வரன், ஆரத்தி கஸ்தூரி ராஜ், ஹீரல் சத்து ஆகியோரைக் கொண்ட அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இவர்களில் கார்த்திகா ஜெகதீஸ்வரன், ஆரத்தி கஸ்தூரி ராஜ் ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் ஸ்பீட் ஸ்கேட்டிங் விளையாட்டில் இந்தியாவுக்குக் கிடைத்த முதல் பதக்கம் இது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
- 2010, 2014ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டது. இதில் சிறப்பாக விளையாடிய இந்திய மகளிர் அணி, இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி முதல் முறையாகத் தங்கப் பதக்கம் வென்றது. இந்திய அணி சார்பில் இளம் வீராங்கனைகளான டிடாஸ் சாது, ஷஃபாலி ஆகியோரும் மூத்த வீராங்கனைகளான ஜெமிமா, ஸ்மிருதி மந்தனா ஆகியோரும் சிறப்பாக விளையாடினர்.
தீபிகா பள்ளிகல்
- 32 வயதான தீபிகா பள்ளிக்கல் ஸ்குவாஷ் விளையாட்டில் இந்தியாவுக்காகப் பல பதக்கங்களை வென்றவர். கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கை மணந்துகொண்ட பிறகு 2021இல் இவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இதனால் விளையாட்டிலிருந்து ஓராண்டு ஓய்வு எடுத்துக்கொண்டு 2022இல் ‘கம்-பேக்’ கொடுத்தார் தீபிகா. தீவிரப் பயிற்சி மேற்கொண்ட அவர், ஆசிய விளையாட்டுப் போட்டி ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில், ஹரிந்தர் பால் சிங் சந்துவுடன் இணைந்து தங்கமும் மகளிர் அணிப் பிரிவில் வெண்கலமும் வென்றார். சாதிக்கத் தாய்மை ஒரு தடையல்ல என்பதை தீபிகா நிரூபித்திருக்கிறார்.
கிரண் பலியான்
- ஆசிய விளையாட்டுப் போட்டி குண்டு எறிதலில் கிரண் பலியான் வெண்கலப் பதக்கம் வென்றார். மகளிர் குண்டு எறிதல் போட்டியில் 72 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்குக் கிடைத்த பதக்கம் இது. உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த கிரண், போக்குவரத்துத் தலைமைக் காவலரின் மகள். முதலில் ஈட்டி எறிதல் விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்த கிரண், தனது பயிற்சியாளரின் உந்துதலால் குண்டு எறிதலில் கவனம் செலுத்தத் தொடங்கினார். கடும் பயிற்சி மேற்கொண்ட அவர், தான் பங்கேற்ற முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்று அசத்தியிருக்கிறார்.
மகளிர் துப்பாக்கிச் சுடுதல்
- இந்தியத் துப்பாக்கிச் சுடுதல் அணி ஆசிய விளையாட்டுப் போட்டியில் மொத்தம் 22 பதக்கங்களுடன் நாடு திரும்பியது. இதில் 3 தங்கம், 7 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களை வென்றவர்கள் வீராங்கனைகள். வெவ்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீராங்கனைகள் பலக் குலியா, சிஃப்ட் கவுர் சாம்ரா, மனு பாகர், ஈஷா சிங், ரிதம் சங்வான், ஆஷி, மெஹுலி கோஷ், ரமிதா ஜிண்டால், மனினி கௌசிக், மனிஷா கீர், பிரீத்தி ரஜக், ராஜேஷ்வரி குமாரி, திவ்யா டி.எஸ் ஆகியோர் பதக்கங்களை வென்றனர்.
திரும்பிய வரலாறு
- 2002இல் நடைபெற்ற ஆசிய விளையாட்டு மகளிர் 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார் மாதுரி சக்சேனா. 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு மகளிர் 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார் மாதுரியின் மகள் ஹர்மிலன் பெய்ன்ஸ். இதோடு 1500 மீட்டர் ஓட்டத்திலும் வெள்ளிப் பதக்கம் வென்று சாதித்தார் ஹர்மிலன். தொடக்கத்தில் தடகளத்தின் மீது அதிக ஆர்வம் இல்லாத ஹர்மிலனுக்கு அவருடைய தாய் மாதுரிதான் ஊக்கம் அளித்துப் பயிற்சி அளித்துள்ளார். தடகளத்தில் பெண்களும் சாதிக்கலாம் என்பதைச் சொல்லி ஹர்மிலனை வளர்த்ததாகப் பெருமிதத்தோடு சொல்லியிருக்கிறார் மாதுரி.
தடகள வேகப்புயல்கள்
- கோவையைச் சேர்ந்த வேகப்புயலான வித்யா ராம்ராஜ், ஆசிய விளையாட்டுப் போட்டியில் மூன்று பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில், 55:68 விநாடிகளில் பந்தயத் தொலைவைக் கடந்து வெண்கலப் பதக்கத்தைத் தன்வசப்படுத்தினார். இதைத் தவிர மகளிர் 4x100 மீட்டர் தொடர் ஓட்டம், கலப்பு 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கங்களை வென்ற அணியில் இடம் பிடித்துத் தனது பங்குக்குச் சிறப்பாக ஓடினார். இதே அணிகளில் திருச்சியைச் சேர்ந்த சுபா வெங்கடேசனும் இடம்பிடித்திருந்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர்கள் தேசிய, சர்வதேசத் தடகளப் போட்டிகளில் இன்னும் பல சாதனைகளைப் படைக்கக் காத்திருக்கின்றனர்.
- இவர்கள் மட்டுமின்றி வில்வித்தை, டென்னிஸ், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம், குத்துச்சண்டை, கோல்ஃப், பாய்மரப் படகுப் போட்டி போன்ற விளையாட்டுகளிலும் இந்திய மகளிர் பதக்கங்களை வென்றனர். பல்வேறு தடைகளைத் தாண்டி விளையாட்டில் சாதித்துக் கொண்டிருக்கும் இந்திய வீராங்கனைகள் இன்னும் பல உயரங்களைத் தொடுவார்கள்.
நன்றி: தி இந்து (15 – 10 – 2023)