- கல்வி கொடுப்பதில் அடிப்படை ஆதாரமாக இருக்கக்கூடிய பள்ளி, கல்லூரி வளாகங்களில், ஆசிரியர்கள் இல்லை என்பதைக் கடந்து, இருக்கும்ஆசிரியர்களில் குறிப்பிட்ட சதவீதம் நிரந்தர ஆசிரியர்கள் இல்லை. வாழ்வாதாரத்துக்காகச் சுயமரியாதையை இழந்து பள்ளி - கல்லூரிகளில் பல ஆண்டுகளாக அடிமைகளைப் போல்வாழ்கிறோம் என்று வருந்தும் ஆசிரியர்களின் வேதனைக் குரல்களைக் கேட்க முடிகிறது.
- அரசுப் பள்ளிகளில் 16,540 ஆசிரியர்களை 2012இல் நியமித்த அரசு ஆணையானது, அவர்களைப் பகுதிநேர ஆசிரியர்களாக வரையறை செய்தது. ரூ.5,000இல்ஆரம்பித்த அவர்களது ஊதியம் 10 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றியும் இன்று ரூ.10,000 வரை மட்டுமே உயர்ந்துள்ளது. ஓவியம், உடற்கல்வி, கணினி, தையல்உள்ளிட்ட எட்டுப் பிரிவுகளில் இவர்கள் பணியாற்றுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் நடு நிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களாகப் பணியாற்றுகின்றனர்.
- 2013இலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தியும் தாங்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என்கின்றனர். இவர்களுக்கு மே மாதம் சம்பளமும் கிடையாது. எனில், அந்த ஒருமாதம் எங்களுக்குப் பசிக்காதா, வேறுதேவைகளே இருக்காதா என்ற குரலிலிருந்து அவர்களது வேதனையைப் புரிந்துகொள்ளலாம்.
- தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் எதிர்கொண்டிருக்கும் அவலத்தை அவர்களால் வெளியே சொல்லக்கூட முடியாது. லட்சக்கணக்கில் கல்விக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் சொற்பமான ஊதியத்தைத் தருவதையே பெருமையாக எண்ணிக்கொண்டுள்ளன.
- கல்லூரிகளிலும் இதே நிலைதான். ஒப்பந்த ஆசிரியர்கள், கௌரவ விரிவுரையாளர்கள் என்கிற பெயர்களில், அரசுக்கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களி லுமேகூட ஆசிரியர்களைத் தற்காலிகப் பணியாளர்களாக நியமித்துள்ள நடை முறையே பல ஆண்டுகளாக நீடிக்கிறது.
- இவர்களின் எண்ணிக்கை சுமார் 7,300. இவர்களுக்குப் பணிப் பாதுகாப்பு, பணி நிரந்தரம் எதுவும் இல்லை; நிரந்தர ஆசிரியர்களைப் போல எல்லாப் பணிகளையும் கொடுப்பது; மற்ற நேரங்களில் பகுதி நேர ஆசிரியர் என அவர்களை இழிவுபடுத்துவது என அவலங்கள் தொடர்கின்றன.
- தனியார் பள்ளிகளும் சுயநிதிக் கல்லூரிகளும் பல லட்சங்களையும் ஆயிரங்களையும் கல்விக் கட்டணமாகப் பெற்றாலும் ஆசிரியர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் வழங்கும் ஊதியம் சொற்பமாக இருக்கும்முறையற்ற நிலைக்கு யார் பொறுப்பேற்பது? தமிழ்நாட்டுக் கல்லூரிகளில்முதல்வரே ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம்.
- பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே நியமித்துக் கொள்ளலாம்.அரசுப் பள்ளிகளில் இப்போது பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாகநியமிக்கப்படுகின்றனர். ஏனென்றால்,இப்படி நியமிக்கப் படுபவர்கள் எல்லாம்தற்காலிகமாகப் பணி செய்யும் பிரிவினர். அரசு நியமித்தால் நிரந்தரமாக நியமிக்கும்.
- பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)வரையறுத்துள்ள ஊதியமான ரூ.57,500-ஐயும் வழங்காமல், நிரந்தர ஆசிரியர்களையும் நியமிக்காமல் பல்லாயிரம் பேரின்உழைப்பை இந்த உயர்கல்வி நிறுவனங்கள் சுரண்டுகின்றன. ஆனால், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கோ இவ்வளவு ஊதியம் வழங்க வேண்டும் என மானியக் குழு ஒன்றும் இல்லை. நிரந்தரமற்ற ஆசிரியர்களின் அவலக் குரல் அரசின்காதுகளை எட்ட வேண்டும்.
- தகுதியான ஆசிரியர்களைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் நிரந்தரமாக நியமித்து, சமமான கல்வியை வழங்கும் மாநிலமாகத் தமிழ்நாடு தன்னைச் செப்பனிட்டுக்கொள்ள வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (12 – 09 – 2023)