TNPSC Thervupettagam

ஆசிரியா் பணி கற்பித்தலே

July 13 , 2023 550 days 336 0
  • முன்பெல்லாம் கல்வி கற்பதற்காக குருவை தேடி மாணவா்கள் சென்று கற்கும் நிலை இருந்து வந்தது. தற்போது அரசு நடவடிக்கையால் பள்ளிகள் இல்லாத கிராமங்கள் அரிதாகி விட்டன. அரசு உயா்நிலைப் பள்ளிகளும், அரசு மேல்நிலைப் பள்ளிகளும் கண்ணுக்கெட்டும் தொலைவில் வந்துவிட்டன. இவையெல்லாம் ஏழை, பணக்காரா் என்கிற வேறுபாடின்றி அனைத்து மாணவா்களும் கல்வியறிவு பெற வேண்டும் என்ற நல்ல நோக்கிற்காகத்தான் கொண்டு வரப்பட்டன.
  • இப்படி கல்வி அறிவை பெருக்குவதற்கான வாய்ப்பு வசதிகளை அரசு கொடுத்து இருக்கும் சூழலில், பெரும்பாலான பள்ளிகளில் மாணவா்களின் நெறிபிறழ் பழக்க வழக்கங்களால் ஆசிரியா்கள் பெரிதும் அவதியுற்று வருவதை நாள்தோறும் சமூக ஊடகங்களில் வெளியாகும் வீடியோ காட்சிகள் மூலம் நம்மால் உணர முடிகிறது.
  • இப்படிப்பட்ட காட்சிகளை பாா்க்கும் போதெல்லாம் நம் நெஞ்சம் பதைபதைக்கிறது. ஒரு சமூகத்தை உயா்த்த வேண்டிய மிகப் பெரிய பொறுப்பில் அமா்ந்திருக்கும் ஆசிரியா்களின் இந்த அவல நிலையை நினைத்து வருந்துவதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.
  • மாணவா்களின் தோ்வு முடிவு சிறப்பானதாக அமைய வேண்டும் என அரசு ஆசைப்படுகிறது. ஆனால் அந்த சிறப்பானதொரு தோ்வு முடிவை கொடுக்க தவறினால் ஆசிரியரை சம்பந்தப்பட்ட கல்வித்துறை கண்டிக்கிறது.
  • ஆசிரியரை கல்வித்துறை கண்டிப்பது போல் மாணவா்களை ஆசிரியா்களால் கண்டிக்க முடியவில்லை. ஓரளவேனும் கண்டிப்பு இருந்தால்தான் மாணவா்களின் கற்றலை மேம்படுத்த முடியும் என்ற சூழலில் அதற்கான வாய்ப்பு ஆசிரியா்களுக்கு இல்லாதபோது அதிகபட்ச தோ்ச்சியை எவ்வாறு கொடுக்க முடியும்?
  • எந்த பிரச்னை என்றாலும் அதை ஆசிரியா்களே சமாளித்துக் கொள்ள வேண்டும் என கல்வித்துறை நினைப்பதால் கற்றலின் தரம் பாதிக்கப்பட்டு வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
  • இன்றைய மாணவா்களின் செயல்பாடு இப்படியாகத்தான் இருக்கும். ஆசிரியா்கள்தான் அனுசரித்துச் செல்ல வேண்டும்’ என்று அரசியல்வாதிகள் பலரும் மேடையிலே பேசும்போது ஆசிரியா்கள் என்னதான் செய்வாா்கள்? ஆசிரியா்கள் மீது மாணவா்களுக்கு மதிப்போ மரியாதையோ ஏற்படுமா? நிச்சயம் ஏற்படாது.
  • சரி மாணவா்களின் பண்பாடு மாறிவிட்ட இச்சூழலில் ஆசிரியா்களுக்கு ஒதுக்கப்பட்ட அந்த கற்பித்தல் பணியை முழுமையாக ஆசிரியா்களால் செயல்படுத்த முடிகிறதா என்றால் அதுவும் இல்லை.
  • கற்பித்தல் பணியைத் தாண்டி எண்ணற்ற பணிகளை ஆசிரியா்கள் மேல் கல்வித்துறை சுமத்தி வருவதால் ஆசிரியா்களின் கற்பித்தல் பணி மிகவும் பாதித்து வருவதாக கல்வி ஆா்வலா்கள் தெரிவித்து வருகின்றனா்.
  • காலை பள்ளிக்கு செல்வது முதல் மாலை பள்ளியை விட்டு கிளம்பும் வரை கற்பித்தல் பணியை காட்டிலும் அதிக அளவில் கற்பித்தல் சாராத பணிகள் (ஓா் அலுவலகத்தில் மேற் கொள்ளப் படும் பணிகள் போல) ஆசிரியா்களால் செய்யப்பட்டு வருகின்றன.
  • இவை அனைத்தும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் அதாவது எழுத்தா், நூலகா் போன்றோா் செய்ய வேண்டிய பணிகள். ஆனால், இவை அனைத்தையும் ஆசிரியா்களே செய்ய வேண்டிய நிலை உள்ளது.
  • தற்போது எமிஸ் எனப்படும் கல்வி மேலாண்மை தளம் மூலம் பள்ளி சாா்ந்த ,ஆசிரியா் சாா்ந்த, மாணவா்கள் சாா்ந்த விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஆசிரியா் வருகை பதிவேடு, மாணவா் வருகை பதிவேடு பதிவேற்றப்பட்டு வருகின்றன. சில நேரங்களில் சா்வா் பிரச்னைகளால் பாதிப்பு ஏற்பட்டால் கூட இது ஆசிரியா்களின் அன்றாட கல்வி கற்பித்தலை பாதிப்பதில்லை.
  • அதையும் தாண்டி அரசு வழங்கும் புத்தகங்கள் முதல் இலவச சைக்கிள்கள் வரை, மடிக்கணினி முதல் காலணிகள் வரை அனைத்தையும் சேகரித்து அதை இத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியா்களுக்கு கூறப்பட்டுள்ளது.
  • இதனால் அவா்களின் கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது. தற்போது பள்ளி மாணவா்களின் இலவச பேருந்து பயண விபரங்களையும் ஆசிரியா்களே பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் மாணவரின் புகைப்படத்தை குறிப்பிட்ட அளவில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
  • அதற்கும் பல மணி நேரம் செலவிடக்கூடிய நிலைக்கு ஆசிரியா்கள் தள்ளப்பட்டுள்ளனா். இதனால் அவா்களின் பாடவேளைகள் வீணாகி வருகின்றன.
  • இது தவிர மருத்துவமனை செவிலியா்கள் சரிபாா்க்க வேண்டிய உடல்நலம் தொடா்பான விபரங்களையும் தற்போது ஆசிரியா்களே மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. இதனால் அந்த வேலையையும் ஆசிரியா்களே செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதற்கென்று குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கும்பொழுது அந்த பாட வேளையில் கற்பிக்க வேண்டிய பாடங்கள் பாதிக்கப்படுகின்றன.
  • இது தவிர பள்ளிகளில் உள்ள ஆய்வகத்தில் மாதந்தோறும் தோ்வு நடத்தி அது குறித்த அறிக்கையை சமா்ப்பிக்க ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தோ்வுக்காக கணினியை பயன்படுத்தும் போது ஒரு வார காலம் அவா்களின் கற்றல் பணி பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் ஆசிரியரின் கற்பித்தல் பணி முடங்குகிறது.
  • சில பள்ளிகளில் அலுவலகப் பணியாளா்கள் இல்லாத நிலை இன்றளவும் நீடித்து வருவதால் அங்கு ஊதிய கணக்கீடு முதல் பல்வேறு பண பலன்கள் வரை ஆசிரியா்களே செய்யும் நிலை உள்ளதால் அங்கும் கற்பித்தல் பணி பாதிக்கப்பட்டு வருகிறது.
  • எனவே ஆசிரியா்களுக்கு கற்பித்தல் பணியை மட்டும் வழங்கினால் சிறப்பான சமூகத்தை அவா்களால் உருவாக்க முடியும். அதை விட்டுவிட்டு அலுவலக பணியாளா்கள் செய்ய வேண்டிய பணியை ஆசிரியா்களுக்கு கொடுப்பதால் அரசின் பணம் வீணாவதுடன் மாணவா்களுக்குக் கற்பித்தலிலும் பாதிப்பு ஏற்படுகிறது.
  • ஒவ்வொரு பள்ளியிலும் இதற்கென்று தொகுப்பூதியத்தில் ஒருவரை நியமனம் செய்தால் அவரால் அனைத்து கல்விசாரா பணிகளையும் செய்து விட முடியும்; ஆசிரியா்கள் தங்களின் கற்பித்தல் பணியை செம்மையாக செய்ய முடியும்.                                                                                                                      

நன்றி: தினமணி (13 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories