TNPSC Thervupettagam

ஆடி மாதம்: சத்திய வாக்கல்ல, ஆடிவாக்கு!

July 25 , 2024 8 hrs 0 min 29 0
  • ஆடி மாதம் பிறந்துவிட்டது. எதையும் ஆட்டிப் பார்ப்பதற்கென்றே வருவதால் அதற்கு ‘ஆடி’ என்று பெயர் என்பதாக வேடிக்கையாகச் சொல்வர். ஏழை மக்களைப் பயங்காட்டும் மாதம் இது. ‘ஆடிக் காத்துக்கு அம்மியும் பறக்கும்’ என்கிற ஒரு சொலவடையும் உண்டு.
  • அம்மி மட்டுமல்ல, ஆடி மாதத்தில் கொடுக்கும் வாக்குறுதியும்கூட காற்றில் பறந்துவிடுவதுண்டு. இதிலிருந்து பிறந்ததே ‘ஆடிவாக்கு.’ ‘அவன் கொடுத்தது சத்திய வாக்கல்ல, ஆடிவாக்கு’ என்பர். ஆடி மாதத்தில் பிறக்கும் குழந்தை குடும்பத்தை அலைக்கழிக்கும் என்று இன்றைய செயற்கை நுண்ணறிவுக் காலத்திலும்கூட மக்கள் நம்பிவருகிறார்கள். இன்றும் ‘ஆடியிலே பிறந்தவன்’ என்கிற சொல் புழக்கத்தில் உண்டு.
  • ஆடி வந்தால் கூடவே ஜவுளிக்கடை தள்ளுபடி விளம்பரங்களும் வந்துவிடு கின்றன. ஆடி வறட்சியான மாதம் என்பதால் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் விலை சற்றே குறையும். சில பொருள்கள் ஆடி மாதத்தில்தான் விலை கட்டுக்குள் அடங்காமல் எகிறும். கோயில், நாட்டார் தெய்வங்கள், குலதெய்வ வழிபாடு போன்றவை ஆடியில் நடப்பதால் இம்மாதத்தில் ஊர்ச் சந்தைகளில் ஆட்டுக்கிடாக்கள் குதிரை விலையில் விற்கும்.
  • சாமானியர், விவசாயிகளின் வாழ்வில் ஆடி முக்கிய மாதமாக விளங்குகிறது. ஆடிப் பிறப்பைக் கொண்டும் ஆடியில் பெய்யும் மழையைக் கொண்டும் அந்த வருடத்தின் செழிப்பையும் வளத்தையும் கணிப்பார்கள். ஆடி வளர்பிறை பஞ்சமி ஞாயிற்றுக்கிழமைகளில் வந்தால் கொஞ்சம் மழை பெய்யும். திங்கள் கிழமை வந்தால் வெள்ளங்காணும்.
  • செவ்வாயில் வந்தால் பஞ்சம் விரித்தாடும். வியாழனில் வந்தால் நல்ல விளைச்சல் காணும். வெள்ளியில் வந்தால் பெருமழை. சனியில் வந்தால் விளைச்சல் பொய்க்கும் என்பது நம் முன்னோர்களின் கார்கணிப்பு. ஆடியின் பெயரால் பல சொற்கள் புழக்கத்தில் உள்ளன. ‘ஆடிச்சொல் அத்தோடு போச்சு.’ உறுதியற்ற சொல்லை ஆடிச்சொல்லோடு ஒப்பிட்டுச் சொல்வர். ஆடி மாதத்து மேகத்திற்கு ‘ஆடிக்கரு’ என்று பெயர். ‘ஆடிக்கரு ஏமாற்றாது’ என்பது வழக்கு.

ஆடிக்கு அழைத்தல்:

  • புதிதாகத் திருமணமான தம்பதியை வீட்டுக்கு அழைத்து, பெண்ணை வீட்டில் வைத்துக்கொண்டு, மாப்பிள்ளையை அவரது வீட்டுக்கு அனுப்பிவிடுவர். ஆடியில் தம்பதி கூடினால் சித்திரையில் குழந்தை பிறக்கும் என்பதால் இருவரையும் சற்றே பிரித்துவைக்க முன்னோர்கள் ஆடிக்கு அழைப்பதை முக்கிய நிகழ்வாகக் கொண்டார்கள்.
  • ‘ஆடிக்கால்’ வெற்றிலையோடு தொடர்பு கொள்ளும் சொல். வெற்றிலைக்கொடி படரும் நோக்கோடு வயலில் ஆடி மாதத்தில் நடும் அகத்திக் காலுக்கு ‘ஆடிக்கால்’ என்று பெயர். இந்த அகத்திக்கீரை ருசியில் மிகுந்ததாக இருக்கும்.
  • ஆடிக்காற்று மிக வேகமானது. இன்றைக்கும் கிராம வீடுகள் குடிசைகளாக இருக்கையில், ஆடி மாதத்தில் கூரையைக் கயிறுகொண்டு கட்டி, காற்றுக்குப் பறக்காமல் பார்த்துக்கொள்வர்.
  • ஆடியின் பெயரால் மூன்று நெல் வகைகள் உள்ளன. ‘ஆடிக்குறுவை’ குறுகிய காலத்தில் விளைந்து பஞ்சத்தைப் போக்கும் முக்கிய நெல்வகை. ‘ஆடிக்கோடை’ என்றொரு வகை நெல் இருக்கிறது. இந்நெல் ஆடி மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது. ‘ஆடிவாலான்’ என்று அபூர்வமான ஒரு வகை நெல் இருக்கிறது. ஆடி மாதத்தில் பயிராகும் நெல் இது.

ஆடிக்கூழ்:

  • ஆடி மாதத்தில் மாரியம்மனுக்கு வழிபாடு நடத்தி ஞாயிறு அன்று கூழ் காய்ச்சி ஊற்றுவார்கள். பல ஊர்களில் ஆவணியில் இந்தக் கூழ் ஊற்றினாலும் பெருநகரங்களில் ஆடியிலேயே ஊற்றுகிறார்கள். விவசாயப் பட்டத்தில் ‘ஆடிப்பட்டம்’ முக்கியமானது. ஆடி மாதத்தில் பயிரிடும் பருவம் ஆடிப்பட்டமாகும். ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பது பழமொழி. வீட்டில் வளர்க்கும் கோழிகளுக்கு ஆடியில் நோய் வருவதுண்டு. இதனை மக்கள் ‘ஆடிக்கழிச்சல்’ என்பர்.
  • ‘ஆடிப்பால்’ கிராமங்களில் முக்கியமான உணவு. தேங்காய்ப் பால் எடுத்து, வெல்லம் சேர்த்துக் காய்ச்சி ஆடி மாதத்து விருந்துகளில் பரிமாறுவார்கள். ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் நிகழும் அம்மன் வழிபாடு ‘ஆடிப்பூரம்’ என்று அழைக்கப்படுகிறது.
  • ‘புனல் நாடு’, ‘சீத நாடு’ என்று அழைக்கப்படும் காவிரி பாயும் ஊர்களில் ஆடிப்பெருக்கு முக்கிய விழாக்களில் ஒன்று. ஆடி 18 அன்று பெருக்கெடுக்கும் காவிரியை வழிபடும் பொருட்டு, புது மணமக்கள் தாலிக் கயிற்றை மாற்றி, புதிய கயிறு அணிந்து வழிபடுவர். ‘ஆடி அமாவாசை’ அன்று இறந்த முன்னோர் களுக்குப் படையல் வைத்து வழிபடுவர்.
  • ‘ஆடியற வெட்டை’ என்கிற சொல் சில ஊர்களில் மட்டும் புழக்கத்தில் உள்ளது. இச்சொல் தற்போது ‘ஆடிக்கழிவு’ என்கிற பொருளில் விளங்குகிறது. ஆடியுறுதி என்கிற சொல் குறிப்பிட்ட சில பகுதிகளில் புழக்கத்தில் உள்ளது. ஆண்டு வரவு செலவுக் கணக்குகளை இம்மாதத் தோடு முடித்துக்கொள்ளும் நாள் இது.
  • இதன் பொருட்டே ஆடிக்கழிவு கொண்டு வரப் பட்டது. இம்மாதத்தோடு பழைய சரக்குகளை விற்று, புதிய சரக்குகள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. ஆடிவெள்ளியை மக்கள் பெரும்பூஜை நாளாகக் கொண்டாடு கிறார்கள். ஆடிவெள்ளி அம்மன் வழிபாட்டிற்கு உகந்தது.

பழமொழிகள்:

  • ‘ஆடி விதை தேடிப் போடு’, ‘ஆடி மாதத்தில் குத்திய குத்து ஆவணி மாதத்தில் உளைப்பு எடுத்ததாம்’, ‘ஆடிக்கொரு தரம், அமாவாசைக்கு ஒரு தரம்’, ‘ஆடிக்கு அழைக்காத மாமியாரைத் தேடிப்பிடி’, ‘ஆடிக்காற்றில் இலவம்பஞ்சு பறந்தாற்போல’, ‘ஆடிக்காற்றிலே அம்மி பறக்கையிலே இலவம்பஞ்சு எம்மாத்திரம்’, ‘ஆடிக்கரு அழிந்தால் மழை குறையும்’, ‘ஆடியிலே காத்தடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும்’, ‘ஆடிக்குக் கூழும் அமுதம்’ போன்ற பழமொழிகள் இன்றும் புழக்கத்தில் உள்ளன.
  • ஆடிமாதம் கோடைக் காலத்திற்குப் பிறகு வருவதால் ஆடிக் காற்றுக்குத் தொற்றுநோய்களும் வெப்பநோய்களும் இம்மாதத்தில் உடலிலிருந்து சென்று விடும். கோடை நோய்களில் முக்கியமானது அம்மை. ‘ஆடிக் காற்றுக்கு அம்மையும் பறக்கும்’ என்கிற பழமொழியே ‘அம்மி’ என்றாகிவிட்டது. இப்படியாக ஆடி மாதம் மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (25 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories