TNPSC Thervupettagam

ஆட்சிச் சொல் அகராதிக்குத் தற்காலத் தமிழோடு வந்த ஒவ்வாமை

December 10 , 2024 2 days 44 0

ஆட்சிச் சொல் அகராதிக்குத் தற்காலத் தமிழோடு வந்த ஒவ்வாமை

  • தமிழ் வளர்ச்சித் துறையின் சொல்லாக்கப் பணிகள் பல தளங்களில் முனைப்பாக நடைபெறுகின்றன. அதைப் பாராட்டலாம். நாற்பத்து ஆறாயிரம் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை அகரமுதலித் திட்ட இயக்ககம் ஆட்சிச் சொல் அகராதியாகத் தொகுத்துள்ளது (2022). ​விமர்சனம் விரோத​மா​காது. இதைச் சொல்லி ஆட்சிச் சொல் அகராதி பற்றி என் கருத்துகளாக நான்கை மட்டும் தருகிறேன்:
  • அகராதி, ஆங்கிலச் சொற்களைச் சரியாகப் புரிந்​து​கொள்ள​வில்லை; அவற்றைத் துறை வல்லுநர்கள் பார்த்திருப்​பார்களா என்பது சந்தேகம். தமிழின் இணைச் சொற்களுக்கு அது தேர்ந்​து​கொண்ட தமிழும் மொழிநடையும் தற்காலத் தமிழை விலக்​கிவைக்​கிறது. அகராதிக் கோட்பாடுகள் பின்பற்​றப்​பட​வில்லை. இணைச் சொற்களுக்கான பயன் எவ்வளவு என்பதை அவதானித்​த​தாகத் தெரிய​வில்லை.

மொழி வளர்ச்​சிக்குப் பயன்படுமா?

  • அகராதியின் சொற்கள் மொழிக்கு என்ன பங்களிப்பு செய்யும்? ‘கைது செய்’ என்பதற்குப் பதிலாக அகராதி தருவதுபோல் ‘தளை செய்’ என்று எழுதி​னால், ‘கைதி’ என்கிற ஒற்றைச் சொல்லைத் தவிர்த்து ‘தளை செய்யப்​பட்​டவர்’ என்று எப்போதும் எழுத வேண்டிவரும். அது மற்ற சொற்களோடு பாந்தமாக இணையாது. ‘தளை செய்யப்​பட்டவர் விடுதலை செய்யப்​பட்​டார்’ என்று எழுத நீங்கள் தயங்க​மாட்​டீர்களா? அகராதியைப் பின்பற்றி ‘நிவாரணம்’ என்பதை விடுத்து ‘இடருதவி’ என்று சொல்கிறேன்.
  • ஆனால், ‘நிவாரணம்’ பயன்படு​வதுபோல் அல்லாமல் ‘இடருதவி வரவில்லை’, ‘இடருதவி இன்னும் செல்ல​வில்லை’, ‘பேரிடருக்கு இடருதவி கேட்டுள்​ளோம்’ என்று நிவாரணப் பொருள்​களைச் சொல்கிறேனா வேறெதையுமா எனத் தெளிவில்​லாமல் சொல்ல வேண்டி​யிருக்​கும். Conscience என்பதன் ‘உளச்​சான்று’, ‘மனச்​சான்று’ என்கிற அகராதி இணைகளை வைத்து ‘அவர் மனச்சான்றை விற்று​விட்​டார்’ என்று சொல்வோமா? அகராதி தரும் இணைச் சொற்கள் பல இப்படித் தொடர் ஆக்கும் திறன் குறைந்​தவையாக உள்ளன.
  • Agriculturists debt relief என்பதை, அகராதி தருவதுபோல் ‘உழவர் கடன் இடருதவி’ என்று கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் சொல்லுமா? வாக்காளர்​களுக்குப் புரிய வேண்டும் என்றால் ‘விவசா​யிகளுக்குக் கடன் நிவாரணம்’ என்றே எழுது​வார்கள். அகராதி, சொல் இல்லாத இடத்தில் புதுச் சொல் படைக்கும் முயற்​சி​யல்ல; வேறு வகை. எழுதுபவர்​களின் முதல் அக்கறை படிப்​பவர்கள் புரிந்​து​கொள்ள வேண்டும் என்பதா அல்லது மொழித் தூய்மையா?
  • தூய தமிழ் பனிப்பு​கைபோல் தன் பொருளை மறைக்​கும். ஊடகங்கள் தங்கள் மொழியின் பனிப்புகை அளவை (fog index) கவனமாகச் சோதிக்​கும். அகராதியின் சொற்கள் இந்தச் சோதனையில் தேறாது. புரியும்படி எழுத நினைக்கும் எல்லாருக்குமே இந்தப் பனிப்பு​கையின் அளவு கவனத்தில் இருக்​கும்.

பொருள் இளைக்​குமே!

  • தவறாகப் பொருள்​கொண்ட ஆங்கிலச் சொற்கள் அகராதியில் மலிந்து கிடக்​கின்றன. Hindsight ‘பிற்​காட்சி’ என்று வருகிறது; அது ‘பின்​புத்தி’. Commonwealth இரண்டு சொற்களாகிப் ‘பொது நலம்’ என்றாகிறது. Mock Parliament, mock test இரண்டும் ‘போலி நாடாளு​மன்​றம்’, ‘போலித் தேர்வுகள்’.
  • தற்காலத் தமிழில் ‘போலி’ என்பது ஏமாற்றும் நோக்கம் உடையது. Modernism ‘புதுமைப் பாங்கு’ என்றும் modernization ‘புது​மைப்​படுத்தல்’ என்றும் வழக்கமான ‘நவீனத்துவம்’ என்கிற சொல்லைத் தவிர்த்துத் தரப்பட்​டுள்ளன. தற்காலத் தமிழில் ‘புதுமை’ என்பது கிட்டத்தட்ட ‘அதிசயம்’ என்ற பொருளில் புழங்​கு​கிறது; நவீனத்​துக்கும் புதுமைக்கும் இடைவெளி அதிகம்.
  • Purse strings ‘சுருக்குக் கயிறு’ என்கிறது (அமைச்​சர​வையின் கையில் purse strings - நிதி வழங்கும் அதிகாரம் - இருப்​ப​தாகச் சொல்வார்​கள்). Bad blood என்பதற்கு அகராதி தரும் இணை ‘கெட்ட குருதி’. இப்படிச் சில உருவ வழக்குகள் நேர் சொற்களாகக் கையாளப்​பட்​டுள்ளன. Adviser என்ற சொல் ‘அறிவுரை​யாளர்’, ‘அறிவுரைஞர்’, ‘கருத்​துரை​யாளர்’. ஆளுநருக்கு ஒரு adviser இருந்தால் அவரை இப்படி அழைக்க முடியுமா? News story என்பது ‘செய்திக் கதை’ என்று வருவதால் இந்த அகராதிக்குச் செய்திகள் எல்லாம் கதைகள்​தானோ!

வல்லுநர்கள் உண்டா?

  • Competent court குறிப்​பிட்ட விசாரணைக்கு அதிகாரம் உள்ளது என்பதாக இல்லாமல், ‘தகுதியான நீதிமன்றம்’ என்று வருகிறது. Non-cognizable offence, ‘சாட்​சி​யில்லாக் குற்றம்’. அகராதியில் ordinance என்பது ‘நெருக்கடி நிலைச் சட்டம்’. சட்டப்​பேரவை கூடாதபோது தேவை கருதிப் பிறப்​பிக்​கப்​படுவது ordinance. ‘அவசரகால’ என்பதைத் தவிர்க்கும் ஆர்வத்தில் அகராதி பெரிய குளறு​படிக்கு வழிசெய்திருக்​கிறது. அகராதியில் prorogue ‘தள்ளிவைப்பது அல்லது ஒத்திவைப்​பது’. இதன்படி சபாநாயகரே சபையை prorogue செய்துவிட இயலும்!
  • Abatement of charges என்பது ‘கட்டணக் குறைப்பு’, ‘செலவுக் குறைப்பு’, ‘வரிக் குறைப்பு’ என்று வருகிறது. ஒருவர் மீது நடைபெறும் குற்ற விசாரணை அவர் இறந்து​விடும்​போது, அப்படியே இற்றுப்​போவதே இந்தத் தொடருக்கான பொருள். Ex-parte என்பதற்கு ‘ஒரு சார்பான’, ‘ஒரு தலையான’ என்று ஒரு தவறான தமிழ் இணை.
  • ஆங்கிலச் சொல்லின் அகராதிப் பொருளைத் தனித்​தனி​யாகக் கண்டு தமிழ் இணையைத் தனித்​தனியாக உருவாக்குவதை மொழியியல் அறிந்​தவர்கள் செய்ய மாட்டார்கள். சொற்கள், மற்ற சொற்களைத் தொட்டு நிற்கும் வலைப்​பின்னலில்தான் தங்கள் பொருளை உருவாக்​கிக்​கொள்​கின்றன. இவ்வகை அகராதி முயற்சி​களைப் பற்றி இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல வேண்டிய​தில்லை.

பழந்தமிழே தூய தமிழ்!

  • அகராதியில் கணிசமான இணைச் சொற்கள் உயர் வழக்கு, இலக்கிய வழக்கு, அருகிய வழக்கு அல்லது பழந்தமிழ்ச் சொற்கள். எடுத்​துக்​காட்டுகள்: Aggrieved person, உறுகுறைத் தரப்பினர், உறுகுறையர்; air hostess, வானூர்திப் பாங்கி; blonde, பொன் கூந்தலாள்; Miss. Universe, பேரண்டப் பேரழகி; blood, அரத்தம், குருதி; maintenance work, பேணுகைப் பணி; federalism கூட்டாட்சி மெய்மம்; railway accident, தொடரி நேர்ச்சி; terrorist, தீங்கியலர்; chain smoker, புகையறா வாயர்.
  • அகராதிக்குத் தற்காலத் தமிழைப் பொறுத்தவரை ஓர் ஒவ்வாமை. அநேகமாகத் தற்காலத் தமிழ் என்கிற கருத்​தாக்கமே அதற்கு அந்நியமாக உள்ளது. அகராதியின் ஆங்கிலத் தலைப்பு glossary என்றும், தமிழில் அதுவே ‘அகராதி’ என்று இருப்​பதும், உண்மையில் இந்த அகராதி இந்த இரண்டுமே இல்லாததான வேறு ஒரு வகையாக இருப்​பதும் (‘அகராதி’ சொற்களைத் தானே உருவாக்​கிக்​கொள்வது இல்லை), நோக்கத்தில் தெளிவின்​மையைக் காட்டு​கிறது. இந்த அகராதி dictionary, glossary என்கிற சொற்களுக்குத் தான் கொடுக்கும் தமிழ் இணைகளைத் தன் தலைப்பில் தானே மறுதலித்​திருக்​கிறது!
  • தமிழைத் தூய தமிழாக்கும் முயற்​சியும் நிர்வாகத்தில் தமிழின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்​சியும் ஒன்றேதான் என்பது இந்த அகராதியின் கொள்கை. இந்த அனுமானம் யதார்த்​தத்தைப் புறக்​கணிக்​கிறது. தற்காலத் தமிழை நீக்கிப் பழந்தமிழைக் கைக்கொள்​வதுதான் தூய தமிழ் என்பதும் இதன் கொள்கை. தன் Social Dimensions of Modern Tamil (2011) என்கிற நூலில், இ.அண்ணாமலை தூய தமிழ் அதீதமாகப் பழைய தமிழைச் சார்ந்​திருப்​பதைப் பற்றிப் பேசுகிறார்.
  • தமிழ் அடையாளம் பாதிக்​கப்​படுமோ என்கிற அச்சத்​தா​லும், தமிழர்​களின் உன்னதமான பழைய காலத்தோடு நம்மை அடையாளப்​படுத்​திக்​கொள்ளவும் தூய தமிழ் என்கிற ஒற்றைத் தமிழ் நடையை ஊக்கு​விக்​கிறோம் என்பது இ.அண்ணா​மலையின் கருத்து.
  • கூடவே, ஒரே மொழிநடையை வற்புறுத்துவது தமிழ் நவீனமாவதற்கு எதிர்ப்​போக்காக அமை​யும் என்​றும் சொல்​கிறார். தற்​காலத் தமிழ் இந்த ‘ஒற்றை மொழிநடை’ என்கிற ​போக்​கி​லிருந்து ​விலகி நிற்​பது. அது இலக்​கி​யத் தமிழைப் பேச்​சுத் தமிழுக்கு நெருக்​க​மாக்கு​வது. ஆட்​சிச் சொல் அக​ரா​திக்​குத் தற்​காலத் தமிழ் மீது வந்த ஒவ்​வாமைக்​கு வேறு என்​ன விளக்​கம்​ இருக்​கும்​?

நன்றி: இந்து தமிழ் திசை (10 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories